Sms ch 36 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 36

சத்தியமூர்த்தி வீட்டில் எல்லோரும் காலை சிற்றுண்டி சாப்பிட கூடி இருந்தனர். மணி 8.30 ஆகியது. கமலா அம்மா மாடி படிகளையே நோட்டம் விட்டு கொண்டிருந்தார்.

“கமலா கொஞ்சம் கோசுமல்லி ஊத்தேன் இந்த இடியாப்ப சேவைக்கு” என்று கேட்டார் சத்தியமூர்த்தி.

கமலா அம்மா கவனித்த மாதிரி தெரியவில்லை. “இந்தாங்க அத்தான்” என்று சகுந்தலா பரிமாறினார்.

“இடியாப்பம் பண்ணிட்டா போதும், பையன் எப்போ வந்து சாப்பிடுவான்னு அவனையே தான் எதிர்பார்த்து கொண்டிருப்பாள், கமலா உன்னைத் தான், பார்க்கிறாளா பார்?” என்று அங்கலாய்த்து கொண்டார் சத்தியமூர்த்தி.

“அக்கா, அத்தான் உங்களை தான் ரொம்ப நேரமா கூப்டுட்டு இருக்கார்” என்று சகுந்தலா கமலா அம்மாவிடம் சென்று கூற “நந்தன் ஏன் இன்னும் இறங்கி வரவில்லை, இடியாப்பம் என்றால் ரொம்ப பிடிக்குமே, சூடாக சாப்பிட்டால் தானே நன்றாக இருக்கும்” என்றார் கமலா அம்மா.

“வேலை அலுப்புல தூங்கிட்டு இருப்பான், நான் போய் எழுப்பி கூட்டிட்டு வரவா?” என்றார் சகுந்தலா அம்மா.

“இல்லை பரவால்ல சகுந்தலா, நானே இடியாப்பம் எடுத்துட்டு போறேன் அவனுக்கு” என்று கொஞ்சம் இடியாப்பமும் தேங்காய் பாலும் எடுத்து கொண்டு கமலா அம்மா நந்தனின் அறைக்கு சென்றார். பொதுவாக நந்தன் அறைக் கதவை சாத்துவதோடு சரி, தாழிடுவதில்லை. கதவை தட்டி பார்த்துவிட்டு பதில் ஏதும் வராத காரணத்தால் கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றார் கமலா அம்மா.

“என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்குகிறான்? ஏதோ முக்கியமான மீட்டிங், சார் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சொல்லி தீபிகா கூட சீக்கிரம் கிளம்பிவிட்டாளே, மீட்டிங் பற்றி மறந்து தூங்குகிறானா?”

“நந்து.... நந்து...” என்று லேசாக போர்வையை இழுத்தார் கமலா அம்மா. நந்தன் அசைவானில்லை. தலைமாட்டிற்கு சென்று நந்தனின் தலையில் கை வைக்க அவன் தலை கொதித்தது. பதறிப்போன கமலா அம்மா அவன் நெற்றி, கைகளை தொட்டு பார்த்து “நந்து நந்து என்னப்பா உடம்பெல்லாம் இப்படி கொதிக்குது” என்று செய்வதறியாமல் விழித்தார்.

நந்தனின் அறையை விட்டு வெளியே வந்து மாடியில் இருந்து சத்தியமூர்த்தியை அழைத்தார் கமலா அம்மா. எல்லோருமே நிமிர்ந்து பார்க்க “நந்தனுக்கு ஜுரம் கொதிக்குது, மாடிக்கு வாங்க” என்று அழைத்தார்.

அனைவரும் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு மாடிக்கு ஓடி வந்தனர். சத்தியமூர்த்தி நந்தன் அருகில் அமர்ந்து “தம்பி தம்பி எந்திரிப்பா, இப்படி கொதிக்குதே, அந்த ac ய on பண்ணுப்பா ரோஹித், உடம்பெல்லாம் வேர்த்து போய் இருக்கே, டாக்டருக்கு call பண்ணுங்க” என்று சத்தியமூர்த்தி சொல்ல கமலா அம்மா நந்தனின் தலையை கோதி விட்டுக்கொண்டே கேட்டார். “என்னங்க இது? சுய நினைவே இல்லாத மாதிரி படுத்து இருக்கானே” என்று கண்கள் கலங்க கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ பயப்படாத, அப்பா ரோஹித் டாக்டருக்கு call பண்ணிட்டியாப்பா?”

“இதோ ரிங் போய்ட்டு இருக்கு பெரியப்பா”

அதற்குள் கணேஷ் தெர்மோமீட்டர் கொண்டு வர சகுந்தலா ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் ஐஸ் cubes, துணி எடுத்து வந்தார். Temperature check செய்து “105 டிகிரி இருக்கு அண்ணா” என்றார். சகுந்தலா ஐஸ் cubes ல் நனைந்த துணியை நந்தன் நெற்றியில் வைத்தார். கிரிஷ் ஜன்னல், curtain களை திறந்து விட்டான். கொஞ்ச நேரம் கழித்து நந்தன் முனக ஆரம்பித்தான்.

“நந்து நந்து....” என்று கமலா அம்மா அவன் தலையை கோதிவிட “அம்மா.... அம்மா....” என்று முனகினான்.

அதற்குள் டாக்டர் ஒரு செவிலியருடன் வர எல்லா check up களும் நடந்தன. சில டெஸ்ட்களுக்காக ரத்தம் எடுக்க பட்டது. ஒரு ஊசியும் போட்டுவிட்டு “24 hrs மானிட்டர் பண்ணுங்க, இந்த ஊசிக்கும் ஜுரம் குறையலைன்னா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணலாம், blood டெஸ்ட் reports வந்துவிட்டால் அதையும் பொறுத்து ஒரு முடிவு எடுக்கலாம், ஆனால் என்னை கேட்டால் he will be fine, அவர் எழுந்ததும் கஞ்சி போல ஏதாவது கொடுத்து இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ள சொல்லுங்கள், நான் நாளை வந்து பார்க்கிறேன், இடையில் ஏதாவது என்றால் call பண்ணுங்க”

கமலா அம்மா ஐஸ் cubes ஒத்தடம் தர ஆரம்பித்தார். “ரோஹித் ஏதோ முக்கியமான மீட்டிங் என்று தீபிகா சொல்லிக்கொண்டு இருந்தாள், அவளிடம் பேசி நீ அதை பார்த்துக்கொள், இல்லை என்றால் எழுந்ததும் அதை நினைத்து கவலைப்படுவான்” என்றார்.

“சரி பெரியம்மா நான் பாத்துக்கிறேன்”

சத்தியமூர்த்தி, கமலா அம்மா, சகுந்தலா என மாறி மாறி நந்தனை பார்த்துக்கொண்டனர். 11 மணி போல நந்தன் மீண்டும் முனக ஆரம்பித்தான். “அம்ம்மா.... அம்மா...” என்று. கமலா அம்மா கண்களை துடைத்துக்கொண்டு “அம்மா இங்க தான்ப்பா இருக்கேன், என்னடா கண்ணா பண்ணுது?” என்று தலையை தடவி கொடுத்து கொண்டே கேட்டார். நந்தன் லேசாக கண்களை திறந்து “தண்ணி” என்றான்.

அவன் கண் விழித்ததை பார்த்து கமலா அம்மா “இந்தாப்பா தண்ணி, இதோ இருக்கு குடி” என்று நிம்மதி பெருமூச்சுடன் அவன் உட்கார உதவி செய்தபடியே தண்ணீரை கொடுத்தார்.

நந்தன் அந்த பெரிய கட்டிலில் எழுந்து தலைப் பலகையில் தலையணை வைத்து சாய்ந்து உட்கார முயற்சி செய்தான். கமலா அம்மா அவனுக்காக தலையணைகளை அவன் சாய்ந்து உட்கார வசதியாக அடுக்கி வைத்து விட்டு அவனை பார்த்தப்படியே அமர்ந்தார்.

“என்னடா கண்ணா? இப்போ எப்படி இருக்கு?”

“ரொம்ப tired ஆ இருக்குமா, தலையெல்லாம் ஏதோ வெயிட்ட தூக்கி வச்ச மாதிரி கணக்கிறது”

“105 டிகிரி இருக்கேப்பா, அதான், சரி சித்தி உனக்கு கஞ்சி செய்றா, நீ எந்திரிச்சி நடக்க முடியுமா? போய் பிரஷ் பண்ணிட்டு வரியா? கஞ்சி சாப்டுட்டு டாக்டர் குடுத்த tablets போட்டுக்கலாம்”

நந்தன் கொஞ்சம் சிரமப்பட்டு எழுந்து பாத்ரூம் சென்று பிரஷ் செய்து, முகம் கழுவி விட்டு வந்து அப்படியே கமலா அம்மா மடியில் படுக்க கமலா அம்மா அவன் தலையை கோதி விட்டுக்கொண்டிருந்தார். சகுந்தலா கஞ்சியை கொடுக்க நந்தன் அதை சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை போட்டான்.

சத்தியமூர்த்தி வந்தார். “ஹேய் நந்து எந்திரிச்சிட்டியா? கஞ்சி சாப்பிட்டாயா? மாத்திரை போட்டாயா?”

நந்தன் புன்னகையுடன் “போட்டுட்டேன் அப்பா, சகுந்தலா சித்தி வச்ச கஞ்சிய குடிச்சதும் கொஞ்சம் தெம்பா இருக்கு” என்றான்.

“சரிப்பா படுத்துக்கோ”

“இல்லப்பா கொஞ்ச நேரம் பால்கனில உக்காரலாம், வாங்க அம்மா, சித்தி நீங்களும் வாங்க” என்று அவன் அறையின் விசாலமான பால்கனியில் இருந்த sit out ஏரியாவில் இருந்த சோஃபாக்களில் அமர்ந்தனர்.

ஆனால் சிறிது நேரத்திற்குள் நந்தனுக்கு படுக்க வேண்டும் போல் இருந்தது. அவன் tired ஆக இருப்பதை பார்த்துவிட்டு “நீ போய் படுப்பா” என்று சத்தியமூர்த்தி அவனை படுக்க வைத்தார்.

மூன்று நாட்களாக கொஞ்சம் ஜுரம் விடுவதும், மீண்டும் வருவதுமாக இருக்க நான்காம் நாளில் இருந்து படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சாதாரண ஜுரம் தான் என்று ரத்த பரிசோதனைகள் உறுதி செய்ய பயப்பட தேவை இல்லை என்று டாக்டர் சொல்லி இருந்தும் ஒரு வாரம் நந்தனை எந்த வேலையும் செய்யவிடாமல் கமலா அம்மா அவனை பரிவோடு கவனித்து கொண்டார்கள். நடுநடுவே யாரும் இல்லாத வேலைகளில் தீபிகாவும் நந்தனை கவனித்து கொள்ள சிரமம் மேற்கொண்டாள்.

“தீபிகா உனக்கு எதற்கு இந்த சிரமம் எல்லாம்?” என்று நந்தன் அவளை புறக்கணிக்க முயற்சித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக “அதனால என்ன அத்தான்? என்னைக்கா இருந்தாலும் நான் தானே பார்த்துக்கொள்ள போகிறேன்?” என்று சொல்ல நந்தன் வியப்பாய் அவளை பார்த்து “நீ இன்னும் இந்த நினைப்பை விடவில்லையா?” என்றான்.

“ஏன் விடணும்? எனக்கு பிடித்தவர் என்னை ஏற்றுக்கொள்ளும் வரை நான் முயற்சி செய்வேன்” என்றாள்.

“இதனால் எல்லாம் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறியா?”

“வேறு என்ன செய்தால் ஏற்று கொள்வீர்கள்?”

“நீ ஒன்றும் செய்ய வேண்டாம், என்னை கொஞ்ச நேரம் தனிமையில் இருக்க விட்டால் போதும்” என்று அவளை தன் அறையில் இருந்து வெளியே அனுப்பினான்.

இதற்கிடையில் சத்யா நன்றாக படித்துக்கொண்டிருந்தாள். முருகனுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைத்ததால் மும்பையில் இருந்து அமைந்தகரை வந்திருந்தான். பாட்டி வீட்டில் ஒரே கலகலப்பாக இருந்தது. முருகன் அனைவருக்கும் துணிமணிகள், சின்னுவிற்கும் தருணுக்கும் விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று நெறைய வாங்கி வந்திருந்தான். சத்யாவிற்கு இரண்டு சேலைகள் வாங்கி வந்திருந்தான்.

“எதுக்கு அண்ணா எனக்கு இரண்டு சேலைகள்?”

“எதுக்குன்னு கண்டுபிடி பாப்போம்” என்று அவர் கூற பாட்டியும் வள்ளியும் புன்னகையுடன் சத்யாவை பார்த்தனர்.

சத்யா புரியாமல் விழித்தாள். “உனக்கு பிறந்தநாள் வருது இல்ல, அதான் பாட்டியும் வள்ளியும் அவங்க சார்பாக உனக்கு ஒரு சேலை பரிசளிக்க எண்ணினார்கள்”

“ஆமாம் இப்போ என்னோட பிறந்த நாள் தான் ரொம்ப முக்கியம்” என்று சலிப்பு காட்டிக்கொண்டாலும் அந்த இரண்டு சேலைகளும் சத்யாவிற்கு மிகவும் பிடித்து இருந்தன. அதை வாங்கி கொடுத்த முருகன் அண்ணா, பாட்டி, வள்ளி அக்காவின் அன்பு அவளை பூரிக்க செய்தது.

முருகனின் வயதான தந்தை சேலத்தில் ஒரு கிராமத்தில் மற்ற உறவுகளுடன் வாழ்ந்து வந்தார். முருகனின் தந்தை பாட்டிக்கும் ஒரு வகையில் சொந்தம் தான், அவர்களும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட “எல்லோருமே செல்லலாமே, ஊர் திருவிழா வேறு வருகிறது” என்று முருகன் கூறினான். சின்னுவும் தருணும் “ஆமாம் ஜாலியா இருக்கும், எங்களுக்கும் ஸ்கூல் leave விடப்போறாங்க, அம்மா எல்லோரும் போகலாம்” என்று சந்தோஷத்தில் குதித்தார்கள். சத்யாவும் ஒப்புக்கொள்ள அவள் தேர்வு முடிந்ததும் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் சத்யா ஒரு விஷயத்தை யோசித்து “அண்ணனுக்கு ஒரு மாதம் தான் leave, என் தேர்வு முடிந்து செல்வதென்றால் அவர் leave ஏறத்தாழ முடிந்துவிடும், அவர் தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது, நீங்கள் எல்லாம் முதலில் புறப்படுங்கள், நான் தேர்வு முடிந்ததும் வருகிறேன்” என்று சொன்னாள்.

ஆனால் சத்யாவை தனியாக விட்டுவிட்டு செல்ல முடியாது என்று பெரியவர்கள் முடிவு எடுத்தனர். அவள் தேர்வு முடிந்த மறுநாள் புறப்படலாம் என்று முடிவு செய்தனர்.

வள்ளி வீட்டிலே விருந்தும் சிரிப்புமாக இருந்தன. தருண் முழுக்க முழுக்க அங்கேயே நேரம் செலவழித்தான். சத்யாவும் படிக்க வேண்டி இருந்ததால் தருண் அங்கேயே விளையாடுவது அவளுக்கு வசதியாக இருந்தது. திடீரென்று வள்ளி அக்கா சொன்ன ஒரு விஷயம் சத்யாவிற்கு நினைவு வந்தது. ஷெண்பகம் இறந்து கொஞ்ச நாட்களில் சின்னுவை வளர்க்க ஒரு தாய் வேண்டும் என்று பாட்டி விருப்பப்படி முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்திருந்தது. ஆனால் முருகன் வள்ளிகிடையே எந்த தாம்பத்தியமும் நடக்கவில்லை. முதலில் ஷெண்பகத்தின் இழப்பால் இருவருமே சந்தோஷமாக இருக்கும் மனநிலையில் இல்லை. பிறகு முருகன் வள்ளியிடம் நெருங்கி வந்தாலும் ஒரு காலத்தில் அக்கா கணவர் என்று அவருடன் நெருங்க வள்ளிக்கு தயக்கமாகவே இருந்தது. பிறகு சத்யாவின் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தலை தூக்க முருகன் மும்பையிலும் வள்ளி இங்கேயும் பிரிய நேரிட்டது.

சத்யாவிற்கு இது திடீரென்று நினைவு வர பாட்டி வீட்டிற்கு புறப்பட்டு சென்று பாட்டியை தனியாக அழைத்து வந்து பாட்டி “நல்ல முஹூர்த்தம் ஒன்னு பாருங்க, வள்ளி அக்கா, முருகன் அண்ணாவிற்கு ஏற்பாடு செய்வோம்” என்றாள்.

“நானே அவகிட்ட பேசினேன் மா, ஆனா அவள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்”

“ஏன்?”

“நீ தனியா இருக்கும் போது அவளால சந்தோஷமா இருக்க முடியாதாம், அவள் சொல்வதும் சரி தானே, உனக்கும் ஒரு நல்லது பண்ணிட்டு....”

“இதென்ன அபத்தமாக உள்ளது, பாட்டி நீங்கள் சாந்தி முஹூர்த்தத்திற்கு நேரம் மட்டும் பாருங்கள், அக்காவை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று உறுதியாக சொன்னாள்.

“வள்ளி சொல்ற மாதிரி உனக்கும் ஒரு நல்ல வழி பொறந்த பிறகு....” என்று பாட்டி இழுத்தார்கள்.

“என்ன பாட்டி? வள்ளி அக்கா தான் புரியாமல் பேசுகிறார்கள் என்றால் நீங்கள் பெரியவர்கள் ஆச்சே, நீங்களே இப்படி பேசலாமா? எனக்கு இப்போது என்ன குறை? திருமணத்திற்கு முன்பே தருண் உண்டாகி கௌஷிக்கை திருமணம் செய்து கொஞ்ச காலமேனும் தாம்பத்தியத்தின் பூரணத்துவத்தை அனுபவித்தவள் நான், வள்ளி அக்கா என்னைவிட இரண்டு வயது பெரியவர்கள் வேறு, இன்னமும் ஒரு சுகத்தையும் பார்க்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? அதெல்லாம் நான் பேசிக்கொள்கிறேன் வள்ளி அக்காவிடம், நீங்கள் நல்ல நேரத்தை குறித்து வாங்கி வாருங்கள்” என்றாள் உறுதியாக.

பாட்டியும் அருகில் ஒரு ஜோசியரை பார்த்து இரண்டு நாட்களில் நாள் நன்றாக இருப்பதாக நேரம் குறித்து தந்ததை சத்யாவிடம் கூறினார். சத்யா தன் வீட்டில் படுக்கை அறையை மல்லிகை சரங்களால் அலங்காரம் செய்தாள். வள்ளியை அழைத்து பேசினாள்.

“இல்லை சத்யா, எதுக்கு நீ இப்படி எல்லாம் பணத்தை வீணாக்குகிறாய்? எனக்கு இதில் விருப்பம் இல்லை”

“ஏன் அக்கா? முருகன் அண்ணாவை உங்களுக்கு பிடிக்கவில்லையா?”

“அப்படி எல்லாம் இல்லை, நல்லவர், நன்றாக பார்த்து கொள்கிறார், ஆனால் நீ இப்படி தனியாக இருக்கும் போது எங்களுக்கு எதற்கு இதெல்லாம்?”

“சும்மா இருங்க அக்கா, அங்க தனியா அறைன்னு இல்லை, அதான் இங்க ஏற்பாடு பண்ணிருக்கேன், நான் அங்க இருந்து படிச்சுக்கிறேன், நீங்களும் அண்ணாவும் இங்க சந்தோஷமா இருக்கணும், ஒரு வாரத்திற்கு வெளியே வரக்கூடாது” என்று கூறி வள்ளியை அங்கேயே குளிக்க சொல்லி புது சேலை ஒன்றை கட்டிவிட்டு எளிமையாக அலங்காரம் செய்து, பூ வைத்து வள்ளியை பார்த்து பூரித்து போனாள் சத்யா.

“இங்கயே இருங்க, நான் போய் அண்ணாவை அனுப்பி வைக்கிறேன்”

“சத்யா வேண்டாம்” என்று வள்ளி அவள் கையை பிடித்து நாணமாக இழுத்து தடுத்தாள்.

“சும்மா அடம் பிடிக்க கூடாது, இருங்க”

கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முருகனை குளித்து வர சொல்லி நல்ல வேட்டி சட்டை அணிய வைத்திருந்தார் பாட்டி.

சத்யா பாட்டி வீட்டிற்கு சென்று “அண்ணா என் வீட்டுல பீரோ மேல ஒரு பெட்டி, நானும் வள்ளி அக்காவும் எடுக்க முயற்சித்தோம் முடியவில்லை, கொஞ்சம் எடுத்து கொடுங்கள்” என்று முருகனை வீட்டிற்கு அழைத்து வந்து அவன் உள்ளே சென்றதும் கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாக கதவை உள்ள தாழ் போட்டுகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சத்யா ஒரு புன்னகையுடன் பாட்டி வீட்டிற்கு சென்றாள். முருகன் வள்ளியிடம் நெருங்கினான்.

நாளை முதல் வேலையாக காலைலயே சத்யா வீட்டிற்கு சென்று என்ன ஏது என்று சத்யாவிடம் சொல்லாமல் அந்த cardboard பாக்ஸில் ஷ்யாம் போட்டோ கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து 7, 8 நாட்கள் கழித்து நந்தன் வெளியே புறப்பட்டான். “நந்து இன்னும் உனக்கு முழு தெம்பு வரல, அதுக்குள்ள வேலைக்கு போக வேண்டாம், அதுவும் இவ்ளோ காலைலயே” என்று கமலா அம்மா தடுக்க “இல்லம்மா கோயிலுக்கு போய்ட்டு வரேன், ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லி அமைந்தகரை நோக்கி டிராபிக் அதிகமாகும் முன்பே புறப்பட்டான்.

சத்யா வீட்டின் வாசலில் காரை நிறுத்தி வீட்டிற்கு நடந்தவனை “ஒரு நிமிஷம், நில்லுங்கள், நந்தன்.... நந்தன்... நில்லுங்க...” என்று சொல்லிக்கொண்டே பாட்டி வீட்டில் இருந்து சத்யா தன் சேலை இடறிவிடாமல் ஒரு கையால் சேலையை பிடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடி வருவதும் கொஞ்ச தூரம் நடப்பதுமாய் வேகமாக வந்தாள்.

நந்தன் திரும்பி அவளை ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றான்.

சத்யா அவன் அருகில் வந்ததும் வேகமாக வந்த மூச்சை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு “காலைலயே.... எங்க.... வந்தீங்க?” என்று மூச்சு வாங்க கேட்டாள்.

“ஹ்ம்ம் போச்சுடா, என்னடா காலைலயே காதுல தேன் வந்து பாயுதேன்னு சந்தோஷ படுறதுக்குள்ள எங்க வந்தீங்க, ஏன் வந்தீங்க, ஹ்ம்ம்” என்று வருத்தப்படுவது போல் காட்டிக்கொண்டான்.

“என்ன காலைலயே தேன் அது இது என்று உளறுகிறான்” என்று மனதில் நினைத்தவளாய் “இல்லை காலைலயே வந்து இருக்கீங்களே, அதான் என்ன விஷயம்னு கேட்டேன்” என்றாள்.

“அதை வீட்டிற்குள் அழைத்து கேட்கலாமே?” என்று அவன் வேகமாக வீட்டை நோக்கி நடக்க “நில்லுங்க” என்று அவளையும் அறியாமல் நந்தனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் சத்யா. உடனே தான் செய்த தவறை உணர்ந்து “sorry” என்று கையை உதறினாள். வியப்பாக அவளை பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் “பரவால்ல உன்னை மாதிரி நான் ருத்ர தாண்டவம் எல்லாம் ஆட மாட்டேன்” என்று கையை கட்டிக்கொண்டு நின்று அவளை பார்த்து குனிந்து சொன்னான்.

“ஐயோ மானம் போகுதே” என்று தன்னை தானே நொந்து கொண்டவளாய் “இல்லை.... அது வந்து......வள்ளி அக்காவும் முருகன் அண்ணாவும் உள்ள இருக்காங்க, நேத்து தான் first night அவங்களுக்கு” என்று கீழே குனிந்தவாறே கூற “ஓஹோ அதான் மேடம் அவசர அவசரமா வந்து தடுத்தீர்களாக்கும், ஆமாம் அது என்ன இங்க arrange பண்ணிருக்கீங்க” என்று கேட்டான்.

“பாட்டி வீட்டுல தனியா ரூம்ன்னு இல்லை, அதான் நான் இங்க arrange பண்ணினேன்” என்றாள்.

மௌனமாக அவளை பார்த்து புன்னகைத்தவன் “தோழி சந்தோஷத்திற்காக இவ்வளவு யோசித்து இருக்கிறாயே” என்று பாராட்டினான்.

அவள் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையுடனே கீழே குனிந்தவாறே நின்று கொண்டிருந்தாள். “சரி exams ஆரம்பிச்சு இருக்குமே, படிக்க முடிகிறதா? எப்படி எழுதி இருக்கிறாய்?”

“ம்ம்ம் பாட்டி வீட்டு பின்னாடி அழகா குட்டி தோட்டம் இருக்கு, எந்த டிஸ்டர்ப்ன்ஸ்ம் இருக்காது, அங்கேயே உக்காந்து படிச்சிடுவேன், ரெண்டு exams முடிந்து விட்டது, நன்றாக எழுதி உள்ளேன்” என்றாள்.

“Good, தருண்....” என்று அவன் ஆரம்பிக்க “இன்னும் எந்திரிக்கல, சின்னுவோடு பாட்டி வீட்டில் தூங்குகிறான்” என்றாள். “சரி நான் வருகிறேன்” என்று அவன் புறப்பட “நீங்க ஏன் இளச்ச மாதிரி இருக்கீங்க?” என்றாள் அவசரமாய்.

“ஓஹ் தெரிகிறதா?”

“என்ன தெரிகிறதா?”

“உன் கண்களுக்கு நான் இளைத்தது போல் தெரிகிறதா?”

“ஆமாம் அப்படி தான் தெரிகிறது” என்றாள் குழப்பமாய்.

ஒரு புன்னகையுடன் “Good, thank you” என்று மீண்டும் திரும்பி நடந்தான்.

“இவனுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்க வேண்டும்” என்று சத்யா நினைத்து கொண்டாள்.

வள்ளி குளித்து முடித்து தலையில் துண்டை கட்டிக்கொண்டு அவசரமாக வெளியே வந்து “சார் நீங்க உள்ள போய் பேசுங்க” என்று சொல்லிவிட்டு சட்டை பட்டனை அவசரமாக மாட்டிகொண்டிருந்த முருகனை பார்த்து “வாங்க நாம போகலாம்” என்று அவசரமாய் கையை காட்டினாள்.

“No no வள்ளி, நீங்கள் இருவரும் இருங்கள், நான் புறப்படுகிறேன்” என்று காரின் கதவை திறந்து உட்கார போனான்.

“இல்லை சார், நீங்க சத்யாகிட்ட பேசிட்டு போங்க” என்றாள்.

அவன் காரில் அமர்ந்து இப்போது “நாங்கள் பேசிக்கொள்வதை விட நீங்களும் Mr. முருகனும் தான் பேச வேண்டும், வரேன், சத்யா bye” என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.


Comments

  1. Very nice writing.. waiting to know how the plots gonna get revealed.. keep it up❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018