Sms ch 20 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 20
சத்யா உணர்ச்சிகள் எல்லாம் மறத்து போய் இருந்தாள். கவிதாவாலும் எதையும் நம்பமுடியவில்லை. ஆரம்பித்தில் கௌஷிக் மீது அவளுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை என்றாலும் நாளைடைவில் அவன் தன் மகளை நடத்திய விதம் கண்டு பூரித்து போயிருந்தாள். இனி சத்யா பற்றிய கவலை இல்லை, கௌஷிக் பார்த்து கொள்வான் என்று நம்பினாள். அவனா சுனிதாவுடன் தவறு செய்தான்? அவனா மனைவி, மகனை விட்டுவிட்டு சுனிதாவுடன் ஓடிப்போனான்? என்று கவிதா புலம்ப பாட்டி ஒரு பக்கம் நான் தானே கல்யாணம் செய்து வைக்க சொன்னேன் என்று புலம்பினார்கள்.
சத்யாவிற்கு உணர்ச்சிகள் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரியாக மாறிக்கொண்டிருந்தன. சில சமயம் என் கௌஷிக் இப்படி எல்லாம் செய்ய மாட்டான், எல்லாவற்றிற்கும் அந்த போதை பழக்கம் தான் காரணம் என்று போதை பொருளை குற்றம் சாட்டுவாள். சில சமயம் அந்த சுனிதா தான் என்னவோ செய்துவிட்டாள் என்று புலம்புவாள். வேறு சில சமயங்கள் கௌஷிக் கெட்டவன் தான், நான் தான் ஏமாந்துவிட்டேன் என்பாள். இப்படியே மாறி மாறி யோசித்து ஓரிரு மாதங்கள் ஓடி இருக்கும். ஆயிரம் இருந்தாலும் அவன் என் குழந்தையின் தந்தை ஆயிற்றே. அவன் எங்கிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமில்லையா? சுனிதாவுடன் இருந்தால் இருந்துட்டு போகட்டும், ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று தெரிந்து கொண்டால் போதும் என்று முடிவு செய்து எங்கிருந்து அவனை தேட ஆரம்பிப்பது என்று யோசித்த போது, வேறு எங்கிருந்து, அந்த பாழாப்போன வீட்டில் இருந்து தான் என்று புறப்பட்டாள்.
“எங்கம்மா போற? என்று கேட்டு சத்யாவை தடுத்தாள் கவிதா. “அது....” சில நொடிகள் யோசித்துவிட்டு “அவர் வீட்டிற்கு தான், என்னுடைய சில பொருட்கள் அங்கே தான் இருக்கின்றன. அதான் எடுத்துட்டு வரலாம்ன்னு”
“அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை” என்று கவிதா மறுக்க “இல்லம்மா என்னோட சில துணிமணிகள், books, notebooks, எல்லாம் அங்கே தான் இருக்கின்றன. நான் போய் எடுத்து வந்து விடுகிறேன்” என்று சத்யா கிளம்பினாள்.
“சரி முருகனை துணைக்கு கூட்டிட்டு போ” என்றாள் கவிதா.
முருகனும் சத்யாவும் ஷ்யாம் வீட்டிற்கு சென்றனர். பணியாட்கள் சத்யாவை பாவமாக பார்த்தனர். சத்யா யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் நடந்தாள். யாரும் அவளை தடுக்கவில்லை ஒருவனை தவிர. துரைசாமி அவளை தடுத்தான். “என்னம்மா வேணும்” என்று இடைமறித்து கேட்டான்.
“என்னுடைய சில பொருட்கள் எடுக்க வேண்டும்” என்று நடந்தாள்.
“என்னனு சொல்லுங்க, நான் போய் எடுத்துட்டு வரேன்”
“பரவால்ல நானே போய் எடுத்துக்கிறேன்”
வேகமாக நடந்து மாடியில் தன் அறைக்கு சென்றாள். அறை சுத்தமாக இருந்தது. கப்போர்டு, drawer எல்லாம் திறந்து தன்னுடைய எஞ்சி இருந்த துணிமணிகள், புத்தகம், நோட்புத்தகங்களை எடுத்தாள். கௌஷிக் ஓடிப்போகும் போது தனக்கென்று துணிகள் எதையும் எடுத்து வைத்துக்கொள்ளவில்லையா? எல்லாம் இங்கேயே இருக்கின்றனவே? ஹ்ம்ம் எனக்கும் ஷ்யாமிற்கும் அவர்கள் கள்ள உறவு தெரிந்து விட்டது. பிறகு எல்லாவற்றையும் பேக் செய்து ஓட நேரம் இருக்குமா என்ன? ஆனால் எங்கே சென்றிருப்பார்கள்? யோசித்து கொண்டே நின்றவளின் பின்னால் ஷ்யாம் வந்து நின்றான்.
“ஹலோ சத்யா” என்றான் அவளின் பின்புறத்தை முறைத்துக்கொண்டே.
அவள் திரும்பி “ஹலோ” என்றாள்.
“என்ன இந்த பக்கம்?” என்று ஷ்யாம் கேட்க அவள் விளக்கம் அளிக்க “நானே எடுத்துட்டு வந்து குடுக்கலாம்னு நினைப்பேன், ஆனா சரி நீயா வந்தா கரெக்டா எல்லாத்தையும் எடுத்துக்கலாம்னு அமைதியா இருந்துடுவேன்” என்று அவள் கவனியாத நேரம் அவளை ஏற இறங்க பார்த்துக்கொண்டே சொன்னான்.
“அவர்கள் ஓடிப்போறதுக்கு முன்னாடி என்ன சொன்னார்கள்? ஏதாவது சொன்னார்களா?” என்றாள்.
“ஏன் கேட்கிறாய்?” என்று அறையை துழாவி பார்த்துக்கொண்டிருந்தவளை அவன் ஊடுருவி பார்த்து கொண்டே கேட்டான்.
“இல்லை சும்மா தான் கேட்கிறேன், ஏதாவது எழுதி வைத்துவிட்டு....அல்லது உங்களிடம் சொல்லிவிட்டு....” என்று பாதியிலேயே நிறுத்தினாள்.
“என் மனைவி என் தம்பியுடன் ஓடிப்போவதை என்னிடம் சொல்லிவிட்டு எல்லாம் போகவில்லை சத்யா, உன்னிடம் கௌஷிக் கால் பண்ணி ஏதாவது சொன்னானா?”
“நான் இங்கிருந்து சென்றதும் சிறிது நேரத்தில் நெறைய முறை கால் செய்தார், ஆனால் நான் எடுக்கவில்லை”
“ஓஹ்.......சரி என்ன சாப்பிடுகிறாய்? போனவர்கள் போய்விட்டார்கள், அதை பற்றி பேசி நம் உறவை, நட்பை மறந்துவிட்டோமே, ஏதாவது குளிர்பானம் எடுத்து வர சொல்லவா?”
“இல்லை வேண்டாம், travels ல் ஏதாவது காசு எடுத்து கொண்டு சென்றாரா? கார் ஏதாவது எடுத்து சென்றாரா?”
சத்யா துருவுவது ஷ்யாமிற்கு இப்போது எரிச்சலை ஏற்படுத்தியது.
“ஏன் கேட்கிறேன் என்றால் எங்களுக்குள் இருக்கும் joint account ல் இருந்து எந்த பணமும் அவர் எடுக்கவில்லை. அவர் travels பிசினஸ்ஸில் சம்பாரிக்க ஆரம்பித்த பின் உங்கள் அம்மா, அப்பா தரும் பணத்தை ஒரு அக்கௌன்ட்யில் சேகரித்து வைத்தாரே தவிர அதை எடுத்ததேயில்லை. அந்த அக்கௌன்ட்யில் இருந்தும் எந்த பணமும் குறையவில்லை”
“என்ன சத்யா நீ? உன்னை ஏமாற்றி ஓடிப்போனவனுக்கு பணம் இருக்கிறதா என்று கவலைப்படுகிறாயே?”
“இல்லை, அப்படி இல்லை, ஏதாவது துப்பு கிடைத்தால் அவர் இருக்கும் இடம் தெரிந்தால் தருணுக்கு அவன் அப்பாவை பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்கும் இல்லையா?”
ஷ்யாம் ஒன்றும் சொல்லாமல் அவளையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தான். “இவளை எப்படி சமாளிப்பது?” என்று யோசித்தான்.
“எனக்கு தெரியாமல் travels ல் இருந்து நெறைய பணம் அவ்வப்போது எடுத்து இருக்கிறான் சத்யா, அந்த பணத்தில் தானே என் மனைவிக்கு வைர வளையல் அது இது என்று...என்னை விடு.....ச்ச உனக்கு துரோகம் பண்ண அவனுக்கு எப்படி மனம் வந்ததோ?” என்று அவன் கூற சத்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“சத்யா ப்ச் விடு, அழாதே, இப்படி உட்கார்” என்று அவளை பிடித்து கட்டிலில் அமர வைத்தான்.
வெளியே காத்திருந்த முருகன் துரைசாமியுடன் வந்து சேர்ந்தான். “சத்யா போலாமா?” என்றான். ஷ்யாமிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. யாரும் அறியாத வண்ணம் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்.
“ம்ம்ம் போகலாம் அண்ணா” என்று கூறி எழுந்தவள் ஒரு முறை அந்த அறையை கண்ணீருடன் சுற்றி பார்த்தாள். ஷ்யாம் “சத்யா நேரம் கிடைக்கும் பொழுது travels office வா, கௌஷிக்கிடம் இருந்து தகவல் வரும் வரை அவன் பங்கு வரவு செலவு முறைகளை நீ பார்த்துக்கொள். உனக்கும் தருணுக்கும் அது ஒரு விதத்தில் உதவும், அவன் என்னை ஏமாற்றி இருந்தாலும் உன்னையும் தருணையும் அப்படியே அனாதை போல விடுவதில் எனக்கு விருப்பமில்லை” என்றான்.
சத்யா பதில் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு கண்ணீருடன் வெளியேறினாள்.
“ஏன்மா அவனையே நினச்சு அழற?” என்றான் முருகன்.
“இல்லன்னா அந்த அறையை விட்டு வெளியே வர மனமில்லை, அவர் அங்கே இருப்பது போலவே ஒரு உணர்வு, ஏனோ அவர் என்னை ஏமாற்றி இருந்தாலும் அவருக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் என்னை தவிர அவருக்கு கேப்பாறில்லையே என்று மனம் தவிக்கிறது”
“ஹ்ம்ம் நான் கூட அவன் நல்லவன் என்று நினைத்து தானே உங்கள் திருமணத்திற்கு சிபாரிசு செய்தேன், எனக்கும் கஷ்டமாக தான் உள்ளது, சரி பார்ப்போம், என்றாவது என் கண்ணில் பட்டால் ஏன் இப்படி செய்தான் என்று கேட்காமல் விடமாட்டேன்”
சத்யாவால் அவன் சுனிதாவுடன் சென்று விட்டான், அவனை மறந்துவிடுவோம் என்று இருக்க முடியவில்லை. Travels office ல் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று புறப்பட்டாள். மீண்டும் அவளை தனியே அனுப்ப மனமின்றி கவிதா முருகனையும் துணைக்கு அனுப்பினாள். ஷ்யாமிற்கு ஒரு பக்கம் சத்யாவை பார்ப்பது சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கரடி மாதிரி முருகன் துணைக்கு வருவது எரிச்சலை கிளப்பியது. ஷ்யாம் கணக்கு பார்த்து லாபம் என்று பணம் தர சத்யா அதை வாங்க மறுத்து விட்டாள். வேறு ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று தேடிய சத்யாவிற்கு அங்கேயும் ஏமாற்றமே கிடைத்தது.
தன்னை ஏமாற்றி சென்றவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவளுக்கு சில சமயம் தோன்றும். ஆனால் வேறு சில சமயங்கள் சுனிதா விஷயம் தவிர்த்து பார்த்தால் அவன் நல்லவன் தானே, ஒரு நாளும் தன்னை வளர்த்தவர்களையோ, உடன் பிறவா ஷ்யாமையோ அவன் குறைவாக பேசியதில்லையே, அவர்கள் பணம் சொத்துக்கும் ஆசைப்படவில்லையே, இவ்வளவு ஏன் அம்மா அவர்கள் பிசினசை பார்த்துக்கொள்ள சொல்லியும் அவன் மறுத்துவிட்டானே, தன்னை அன்பாக தானே பார்த்துக்கொண்டான், நீ ஒருத்தி தான் எனக்கு எல்லாம் என்று சொல்வானே, அவன் தெரியாமல் சுனிதாவோடு தவறு செய்திருந்தாலும் அவன் நலமாக இருக்க வேண்டுமே என்று அவள் மனம் தவித்தது. மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சத்யா மனம் உடைந்து இருந்தாள்.
என் கணவர் கௌஷிக் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார், அவரை கண்டுபிடித்து அவர் நலமாக இருக்கிறாரா என்று தெரிய வேண்டும், அவர் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை, அவர் நலமாக தான் உள்ளாரா என்று தெரிந்தால் போதும். அவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று சத்யா போலிசில் புகார் அளித்தாள்.
போலீஸ் முதலில் அலட்சியம் காட்டினார்கள். “சொந்த அண்ணியை கூட்டிட்டு ஓடி போயிருக்கான், அவனை கண்டுபிடிக்கணுமா?” என்று சலித்துக்கொண்டார்கள். சத்யாவின் பிடிவாதத்தால் சரி என்னன்னு பார்க்கிறோம் என்று ஆரம்பித்தார்கள். அவன் புகைப்படம், கைபேசி எண், வங்கி தகவல்களை எழுதி தர சொன்னார்கள். கௌஷிக்கின் கைபேசி சிக்னலை வைத்து ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தார்கள். அவன் சத்யாவிற்கு கால் செய்து 6 மணி நேரம் கழித்து அவன் கைபேசி பஞ்சாப்-மும்பை வழியில் பிங் செய்துள்ளதாக அறிந்தார்கள். மும்பைக்கு அவன் போய்ட்டான் போல என்று கேஸை மூடப்பார்த்தார்கள். ஆனால் சத்யா பிடிவாதமாக பஞ்சாப் போலீசை மும்பை போலிசிடம் தொடர்பு கொண்டு கௌஷிக்கை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தினாள். மும்பை போலீசிடம் தகவல் சொல்லியாச்சு, இனி நம் அவசரத்துக்கு அவர்களை துரத்த முடியாது. நீ கொஞ்சம் பொறுத்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
மேலும் சில மாதங்கள் கழிந்தன. சத்யா கௌஷிக்கை கண்டுபிடிக்க போலீசை அணுகியதும், பிடிவாதமாக அவனை தேடும் முயற்சியில் மும்பை போலீஸ் வரை தேடுதல் பணி சென்று உள்ளது என்று அறிந்ததும் ஷ்யாமிற்கு கோபம் தலைக்கேறியது.
உன்னை இனியும் விட்டு வைப்பது தவறு” என்று ஷ்யாம் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அவளை ஒரு முறை அனுபவித்து விட்டு அவள் ஆசைப்படும் படியே அவளை கௌஷிக்கிடம் சேர்த்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.
சத்யாவிற்கு ஷ்யாம் கால் செய்தான். “சத்யா உன்னுடன் தனியாக பேச வேண்டும், கௌஷிக் பற்றி முக்கியமான துப்பு ஒன்று கிடைத்துள்ளது. கொஞ்சம் அதிர்ச்சியான தகவலும் கூட, travels office அல்லது வீட்டிற்கு வந்தால் மேற்கொண்டு நாம் என்ன செய்வது என்று பேசி முடிவுக்கு வரலாம்”.
சத்யா travels office வந்தாள். தனியாக பேச வேண்டும் என்று ஷ்யாம் சொன்னதால், கவிதா, பாட்டி என்று யாரிடமும் சொல்லாமல் வந்தாள். சத்யா வந்ததும் ஷ்யாம் அவளை அமர வைத்து சொன்னான் “சத்யா என் பிசினஸ் லிங்கில் உள்ள மும்பை நண்பர்களை வைத்து விசாரித்தேன், அவர்கள் கௌஷிக்கை மும்பையில் பார்த்தார்களாம், போதை பழக்கத்திற்கு மிகவும் அடிமையாகி விட்டானாம், சுனிதாவுடன் தான் இருக்கிறானா என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் அவன் இருந்த நிலையை பார்த்தால் எந்த பெண்ணும் அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாளாம், அதனால் சுனிதா அவனை விட்டு ஓடி போயிருப்பாள் என்று சொன்னார்கள்”.
“அவரை எங்கே பார்த்தார்களாம் ஷ்யாம்?”
“ஏதோ train ல் பார்த்தார்களாம், இந்தா கொஞ்சம் குளிர்ச்சியா ஏதாவது குடி” என்று ஒரு குளிர்பானத்தை நீட்டினான் ஷ்யாம். சத்யாவும் அதை வாங்கி குடிக்க போனாள்.
அப்போது துரைசாமி வேகமாக உள்ளே வந்து “சார் வீட்டிற்கு போலீஸ் ரெய்டு வந்துள்ளார்களாம்” என்று சொல்ல கதவை திறந்து வந்த துரைசாமியை முறைத்து கொண்டிருந்த ஷ்யாம் ரெய்டு என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்து “சத்யா மீதிய நாம அப்புறம் பேசலாம்” என்று எழுந்து தன் காருக்கு சென்று பறந்தேவிட்டான். “ரெய்டு எதற்காக?” என்று குழம்பிய சத்யா தொண்டை வரளவும் அந்த குளிர்பானத்தை குடிக்க போனாள். “அதை குடிக்காத மா” என்று தடுத்தான் துரைசாமி.
Comments
Post a Comment