Sms ch16 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 16
சத்யா 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக வெற்றி பெற்றாள். சத்யா அம்மா, அப்பா, பாட்டி, ஷெண்பகம், வள்ளி என்று அனைவரும் கொண்டாடினர். என்ன படிக்கலாம் என்று ஆளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டிருந்தனர். சத்யாவின் தாய் கவிதா டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று சொல்ல, நான் டாக்டருக்கு எல்லாம் படிக்க மாட்டேன் என்று சத்யா சொல்ல, அவள் இஷ்டத்திற்கு விட்டுவிடு கவி, நம் விருப்பத்தை திணிக்க வேண்டாம் என்று ரவிச்சந்திரன் அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். உனக்கு என்ன விருப்பம் சத்யா என்று கேட்க “இன்னும் decide பண்ணல அப்பா, ஆனா ஏதாவது government sector ல வேலைக்கு போற மாதிரி தான் படிப்பேன்”
“Government sector னு இப்படி பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி? அதிலே ஆயிரகணக்கான பிரிவுகள் உள்ளனவே” என்றார் ரவிச்சந்திரன்.
“எனக்கு IAS படிக்க தான் ஆசை, so ஏதாவது ஒரு டிகிரி படித்துவிட்டு side by side IAS கும் prepare பண்ணலான்னு பாக்குறேன் அப்பா”
கவிதாவும் ரவிச்சந்திரனும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
“இதே மாதிரி நல்லா score பண்ணுவ டா நீ, அம்மாவுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்றாள் கவிதா.
“no thanks to you, இவ்வளவு நாள் நான் எப்படி படிக்கிறேன்னு எட்டியாவது பாத்து இருப்பியா?”
கவிதாவின் முகம் வாட ரவிச்சந்திரன் சத்யாவை கண்டித்தார். “சத்யா ஏதோ சிறுவயதில் துடுக்காக புரிந்து கொள்ளாமல் ஏதாவது சொல்வாய், வளர வளர சரி ஆகி விடும் என்று நினைத்தோம், ஆனால் நீ மேலும் மேலும் அம்மாவை காயப்படுத்துகிறாயே” என்றார் ரவிச்சந்திரன் வருத்தமாக.
“நான் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே” என்றாள் சத்யா தலையை குனிந்தவாறே.
“அம்மாவிற்கு உன்மீது அக்கறை இல்லை என்று ஏன் நினைக்கிறாய்? அவளுக்கென்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு தொழிலை முன்னெடுத்து செய்தாள், அதில் ஏற்பட்ட நெருக்கடியால் உன்னுடன் சில சமயம் அவளால் நேரம் செலவழிக்க முடியவில்லை, அதற்காக உன்மீது அவளுக்கு அன்பும் அக்கறையும் இல்லை என்று ஆகி விடுமா?”
“அப்பா ஏன் எப்போதும் எனக்கே அறிவுரை கூறுகிறீர்கள்? அம்மா ஒரு வகையில் என்னை புரிந்து கொள்ளவில்லை என்றால் என் மீது அன்பும் பரிவும் பாசமும் காட்டும் நீங்களும் என்னை புரிந்து கொள்ளவில்லை”
“அப்படி இல்லை டா அம்மு, நீ சொந்தகாலில் நிற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லி தானே உன்னை வளர்க்கிறேன், அதே போல் அம்மாவும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்கு நாம் உறுதுணையாக தானே இருக்க வேண்டும், அந்த எண்ணத்தில் அம்மாவுக்கு துணையாக இருக்கிறேன்”
“அப்பா நீங்கள் பெரியவர்கள், உங்களுக்கு நான் சொல்லி புரிய வேண்டியதில்லை, ஆனால் என்ன தான் சொந்த காலில் நிற்பது, தொழில் செய்வது என்று இருந்தாலும் எல்லா அம்மாவுக்கும் குழந்தை தானே முதல் விஷயம், சிறு வயதில் என்னை உங்களிடமும் பாட்டியிடமும் கை மாற்றி விட்டார்கள், சரி விடுங்கள், நான் பெரியவளான போது கூட டெல்லியில் ஆடை வடிவமைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு மெதுவாக தானே வந்தார்கள், நான் எப்போது எல்லாம் என் அம்மா என் அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போதெல்லாம் அவர்கள் என் அருகில் இல்லையே, அவர்கள் செய்வது நியாயம், ஆனால் நான் குறைப்பட்டு கொள்வது தவறா அப்பா?” என்று கண்ணீருடன் சத்யா தன் அறைக்கு வேகமாக சென்றாள்.
ரவிச்சந்திரன் முகம் வாட கவிதா அவரை தேற்றினாள். “விடுங்கள் பொதுவாவே மகள்களுக்கு அப்பாவை தான் அதிகமாக பிடிக்கும், அதுவும் டீனேஜ் வயது, கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடை பெற வேண்டியது, நான் மூன்றாம் நாள் பேசுவதாக இருந்தது, ஆனால் எல்லாவற்றையும் நான் cancel செய்து வருவதற்கு ஒரு நாள் ஆகி விட்டது, ஆனால் சத்யா விஷயம் தெரிந்ததும் எனக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை, குழந்தை என்ன செய்கிறாளோ உடனே போய் அவளை பார்க்க வேண்டுமே என்று நான் தவித்தது எனக்கு தான் தெரியும், இந்த வயதில் யார் மீதாவது டீனேஜ் பிள்ளைகளுக்கு அவர்கள் கோபத்தை காண்பிக்க வேண்டும், அது நானாகவே இருந்து விட்டு போகிறேன், உங்களிடம் அவள் குறைகளை கொட்டி தீர்க்க முடிகிறதே, நீங்களும் அவளுடன் கோபித்து கொள்ள வேண்டாம்.”
“தெரியல மா, என்னவோ மனசே சரி இல்லை, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு அவளை விட்டா யாரும் இல்லை, அவளுக்கு உன்ன விட்டா யாரும் இல்லை”
“நீங்க ஏன் இப்போ இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“பெரிய குடும்பத்தில் வளர்ந்த உன்னை பிரித்து அழைத்து வந்துவிட்டேன், ஏனோ உன்னை தனியாக விடுவது போல் மனசு தவிக்கிறது”
“என்ன பேசுறீங்க நீங்க? நீங்கள் எங்கே பிரித்தீர்கள்? நானாக தானே வந்தேன், இப்போதும் கூட அவர்களை தொடர்பு கொள்ளத்தான் சொல்கிறீர்கள், நான் தான் வேண்டாம் என்கிறேன், என் அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு என் அப்பா சாபம் விட்டதை நான் மறக்கவில்லை, நாம் இப்படியே இருந்து விடுவோம்”
“அதற்கு இல்லை மா, எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உன்னையும், சத்யாவையும் யார் பார்த்து கொள்வார்கள்?”
“ஏன் இப்படியே பேசுகிறீர்கள், உடம்புக்கு ஏதாவது?” என்று கவிதா ரவிச்சந்திரனை அணுகினாள்.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, மகளை தைரியமாக வளர்க்கிறேன் என்று வளர்த்தேன், அவளுக்கு ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள், அறியாத வயது, நானும் இல்லை, உன்னிடமும் கோபம் என்றால் அவள் யாரிடம் தஞ்சம் அடைவாள் என்று ஒரு பயமும் கவலையும் வந்துவிட்டது”
“என்னங்க பேசுறீங்க? முதலில் டாக்டர்கிட்ட போவோம் வாங்க, உங்களுக்கு என்னவோ சரி இல்லை, வாங்க”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை மா, பல விஷயங்களையும் யோசித்து பார்க்கிறேன், பாட்டி இருக்கிறார்கள் சரி, ஆனால் நாம் தரும் சம்பளத்தில் வாழ்கிறார்கள், அவர்களால் எந்த அளவுக்கு சத்யாவை பார்த்துக்கொள்ள முடியும்?” எங்கோ பார்த்தப்படி ரவிச்சந்திரன் சொன்னார்.
“உன் குடும்பத்துடன் ஒரு தொடர்பு இருந்தால் ஒரு நல்லது கெட்டதில் துணை இருப்பார்கள், நமக்கு ஒன்று என்றாலும் சத்யாவிற்கு துணையாக இருப்பார்கள்”
“இந்த குட்டி கழுதை ஏதோ என்னை பேசிவிட்டாள் என்று ஏன் நீங்கள் இவ்வளவு feel பண்றீங்க? என் குடும்பத்தை பற்றி பேசாதீர்கள், கண்டிப்பாக அவர்கள் ஒரு கஷ்டம் என்றால் துணையாக இருப்பார்கள், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களை பார்க்க எனக்கு துணிவில்லை, சத்யாவிற்கு என்மேல் அன்பு இல்லை என்றா நினைக்கிறீர்கள்? அவள் டீனேஜ் வயது முடியட்டும், அவள் என் அன்பை புரிந்து கொள்வாள், பார்க்க தானே போகிறீர்கள், அதற்குள் ஏன் வீணாக ஏதேதோ பேசி மனசை போட்டு குழப்பிக்கொள்கிறீர்கள்”
மறுநாளும் சத்யா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவளுக்கு கோபம், வருத்தம் என்றால் இப்படி தான் சாப்பாடு தண்ணீர் என்று எதுவும் வேண்டாம் என்று ஒரு கூட்டிற்குள் அடைந்து கொள்ளும் கோழிகுஞ்சை போல் தன் அறையில் ஒடுங்கி கொள்வாள். சிறு வயதில் இருந்தே இப்படி தான். ரவிச்சந்திரனும் கவிதாவும் போய் இரண்டு மூன்று முறை அழைத்து பார்த்தார்கள். பாட்டியும் சென்று அழைத்து பார்த்தார்கள். இது ஒரு வழக்கம் தான் என்பதால் அவளாக கோபம் குறைந்து வரட்டும் என்று காத்திருந்தார்கள்.
ரவிச்சந்திரன் பணி நிமித்தமாக டெல்லி செல்ல வேண்டி இருந்தது. “சத்யா வெளில வா மா, அப்பா டெல்லிக்கு போறேன், ஒரு வாரம் கழிச்சு தான் வருவேன், உன் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு போகிறேன்” என்று ரவிச்சந்திரன் சத்யா அறையின் வெளியே நின்று கேட்டுகொண்டிருந்தார். “நான் வரமாட்டேன், எப்போ பாத்தாலும் நீங்க அம்மாவுக்கு தான் support பண்றீங்க” என்றாள் சத்யா.
“விடுங்க உங்களுக்கு நேரமாச்சு கிளம்புங்க, நானே உங்களை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விடுகிறேன்” என்று கவிதா ரவிச்சந்திரனை அழைத்து கொண்டு காரில் போனார்கள்.
கார் விபத்துக்குள்ளனாது. ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். கவிதா உயிருக்காக போராடினாள். “தானும் போய்விட்டால் சத்யா அனாதை ஆகிவிடுவாள்” என்று கவிதா உயிரை இறுக்கி பிடித்துக்கொண்டாள். சத்யா உடைந்து விட்டாள். “கடைசியாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அப்பாவிற்கு என் முகத்தை கூட காட்டாமல் அனுப்பிவிட்டேனே” என்று அழுது நொந்தாள். “அம்மாவாவது பிழைத்தார்களே” என்று கொஞ்சம் கொஞ்சமாக தன் தாயுடன் இசைந்து அன்பை காட்ட ஆரம்பித்தாள். கவிதா 6 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தாள். சத்யா அவளை தாய்க்கு தாயாக இருந்து பராமரித்தாள். கவிதாவின் தொழில் முடங்கியது. சிகிச்சைக்காக ஒரு சில சொத்தை விற்க வேண்டி வந்தது. இருந்தாலும் ஒரே அடியாக ஏழை ஆகாமல் கவிதா சம்பாரித்த சொத்து காப்பாற்றியது. ரவிச்சந்திரனின் பணியில் இருந்து கிடைக்க வேண்டிய பென்ஷன் வருமானமும் கை கொடுத்தது. சத்யாவிற்கு பல காலேஜ், யூனிவர்சிட்டிகளில் இருந்து சீட்டு கிடைத்தது. “நீ போய் join பண்ணிக்கோ அம்மு, நீ ஆசைப்பட்ட மாதிரி IAS ஆகணும் இல்லையா? டிகிரி படித்தால் தானே அதெல்லாம் நடக்கும்” என்று கவிதா சத்யாவை அட்மிஷன் போடும் படி வலியுறுத்தினாள்.
“இல்லை அம்மா, நீங்க இப்படி இருக்கும் போது நான் காலேஜ் போனா உங்களை யார் பார்த்துக்கொள்வார்கள்”
“நான் பாத்துக்கிறேன் கண்ணு, நீ போய் படி மா” என்று பாட்டி சொன்னார்கள்.
“இல்லை பாட்டி 24 மணி நேரமும் நீங்க பாத்துக்க முடியுமா? இப்பவே என்னை தூங்க அனுப்பும் நேரங்களில் நீங்கள் தான் அம்மாவை பார்த்துக்கொள்கிறீர்கள். வள்ளி அக்காவும் சமையல் அது இது என்று பார்த்துக்கொள்கிறார்கள், ஒரு பக்கம் அம்மாவின் தொழிலை விடவும் முடியவில்லை, விற்கவும் முடியவில்லை, இப்படி பல குழப்பங்கள் இருக்கும் போது நான் எப்படி படிக்க முடியும்?”
“அதற்காக படிக்காமல் இருந்து விட முடியுமா? நான் சீக்கிரமே எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவேன் டா, நீ போய் அட்மிஷன் போடு”
“இல்லமா அடுத்த வருஷம் போட்டுக்கலாம்” என்று சத்யா தீர்க்கமாக சொல்லிவிட்டாள். சத்யா, பாட்டியின் பராமரிப்பு, இன்னும் சில ஆபரேஷன்களின் பலன் 6 மாதத்திற்கு பிறகு கவிதா எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். தொழிலையும் மீட்டு எடுக்க ஆரம்பித்தார்கள்.
அதற்கு அடுத்த வருடம் சத்யாவை ஒரு நல்ல காலேஜில் சேர்த்து விட்டார்கள். தோல்வியின் விளிம்பில் இருந்த தொழிலை கவிதா கண்ணும் கருத்துமாக உழைத்து முன்னேற்றுவதை பார்க்க இப்போது சத்யாவிற்கு பெருமையாக இருந்தது. இத்தனை நாட்கள் அம்மாவை புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டு அழுவாள். கவிதா என் மீதும் தவறு இருக்கிறது என்று அவளை தேற்றுவார்கள். ரவிச்சந்திரன் இல்லாத குறையை தவிர மீண்டும் குடும்பம் பழைய நிலைக்கு வர தொடங்கியது. பாட்டியின் தூரத்து சொந்தக்கார பையன் முருகனைதமிழ்நாட்டில் இருந்து கடிதம் எழுதி வரவைத்து ஒரு வேலையும் குடுத்து ஷெண்பகத்தையும் கட்டி வைத்தார்கள். எவ்வளவோ வற்புறுத்தியும் வள்ளிக்கு 12 ம் வகுப்புக்கு மேல் படிக்க விருப்பம் இல்லாமல் போனது. அவளும் கவிதாவின் தொழிலில் உதவுவது வீட்டை பராமரிப்பது என்று ஏதாவது ஒரு வேலை செய்ய ஆரம்பித்தாள். ஊர் கூடி தேர் இழுப்பது போல் அனைவரது உழைப்பும் கவிதாவின் நிர்வாக திறமையும் சேர்ந்து தொழிலில் மீண்டும் வெற்றி பெற ஆரம்பித்தார்கள். சத்யாவும் முதல் வருடம் நன்றாக படித்து கொண்டிருந்தாள். அழகும் அறிவும் நிரம்ப பெற்ற சத்யாவை காதலிக்க என்று அவள் காலேஜில் சில ஆண்கள் வலம் வந்தார்கள். அவர்களின் முயற்சியை எல்லாம் சத்யா புறக்கணித்தாள். ஆனால் ஒருவன் அவன் முயற்சியில் வெற்றி பெற்றான், அவன் தான் கௌஷிக்.
Comments
Post a Comment