Sms ch 35 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 35
துரைசாமி சொன்ன விஷயங்களை நிதானமாக கேட்ட நந்தன் எதுவும் பேசாமல் கொஞ்ச நேரம் யோசித்தான்.
“என்ன தம்பி யோசிக்கிற? நெட்டில அந்த பொண்ணோட மானம் போக கூடாதுன்னு நினைச்சன்னா காச குடு, இல்லன்னா விட்டுடு, உன் போலீஸ் நண்பன்கிட்ட சொன்னா என்ன நடக்கும்னு சொல்லிட்டேன், நீ தான் என்ன முடிவுன்னு சொல்லனும்”
“அது என்ன துருப்பு சீட்டு என்று ஏதோ சொன்னீர்களே?”
“அது ஒரு விஷயம் தம்பி”
“அது தான் என்னவென்று கேட்கிறேன்”
“அதை உன்கிட்ட சொல்லிட்டா அப்புறம் எனக்கு எப்படி அது உதவும்?”
“ஆனால் நான் போலீசிடம் சென்றால் அதை பயன்படுத்துவீர்கள், அதனால் சத்யாவின் மானத்திற்கும் உயிருக்கும் ஆபத்து, உங்களின் உயிருக்கும் கூட ஆபத்து, நான் போலீசிடம் செல்லவில்லை என்றால் அதை பயன்படுத்த மாட்டீர்கள், அப்படி தானே?”
“ஆமாம்” என்றான் துரைசாமி நந்தனை கேள்வியாக பார்த்துக்கொண்டே.
“சரி என் போலீஸ் நண்பனால் உங்களுக்கு எந்த தொல்லையும் ஏற்படாது, சத்யாவின் வீடியோவிற்கு நீங்கள் கேட்ட தொகையை தருகிறேன், எனக்கு மேலும் சில விஷயங்களை சொன்னால் நீங்கள் கேட்டதை விட அதிகமாக தருகிறேன்”
துரைசாமி கண்கள் பளிச்சிட “என்ன விஷயம்? கேளு தம்பி, எனக்கு தெரிஞ்ச வரை சொல்றேன்?” என்றான் ஆர்வமாக.
“சத்யாவை உங்களுக்கு எப்படி தெரியும், எத்தனை வருடங்களாக தெரியும்?”
“சத்யாவோட கணவர் வீட்டுல தான் நான் டிரைவரா work பண்ணிட்டு இருந்தேன், அவள் திருமணம் செய்து அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளை எனக்கு தெரியும்”
“கௌஷிக்கின் அண்ணன் ஷ்யாமிடம் இருந்து நீங்கள் சத்யாவை காப்பாற்றினீர்களாமே, அவன் குளிர்பானத்தில் ஏதாவது கலந்து இருப்பான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அவன் நல்லவன் இல்லை தம்பி, ரொம்ப நாளாவே அவனுக்கு சத்யா மேல ஒரு கண்ணு, அவளை அடைந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டான்”
“ஆனால் அவனின் நோக்கம் சத்யாவிற்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று தான் கேட்கிறேன்?”
“அது.....அது நானும் ஒரு பொண்ணை பெத்தவன் தான தம்பி”
“இல்லை ஷ்யாமை பற்றி உங்களுக்கு வேறு ஏதோ விஷயம் தெரிந்து இருக்கிறது, அதனால் தான் அன்று ஷ்யாம் சத்யாவிற்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்திருப்பான் என்று முன்னமே யூகித்திருக்கிறீர்கள்”
“அது அது....”
“துரைசாமி எனக்கும் சில விஷயங்கள் தெரியும், சத்யா கௌஷிக் சம்மந்தப்பட்ட வீடியோக்கள் அந்த ஷ்யாமிடம் இருந்திருக்கின்றன, அவை உங்களிடம் இருந்தால் அவற்றையும் என்னிடம் கொடுத்து விடுங்கள், அதற்காக தான் அதிக பணம் தருகிறேன் என்று சொல்கிறேன், இனியும் நீங்கள் தயங்காமல் பேசினால் நன்றாக இருக்கும்”
“உனக்கு எப்படி கௌஷிக் சத்யா வீடியோக்கள் பற்றி தெரியும்?”
“எப்படியோ தெரியும், அவற்றை கொடுப்பதில் உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே”
“அதை வச்சுக்கிட்டு நான் என்ன தம்பி பண்ணப்போறேன்? குடுத்துடுறேன், இந்த வீடியோக்கள் ஷ்யாமிடம் தான் இருந்தன. ஒரு கணவன் மனைவி ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருக்கிறான் என்றதும் தான் எனக்கு புரிந்தது அவனுக்கு சத்யா மேல் ஆசை என்று, அப்போதெல்லாம் சத்யாவை நான் ஒரு நல்ல பெண்ணாக தான் பார்த்தேன், அதனால் தான் அவன் சத்யாவை கணக்கு காண்பிக்கும் சாக்கில் அழைத்து என்னவோ பண்ண திட்டமிடுகிறான் என்று சந்தேகித்தேன், அதனால் தான் நான் அவளை காப்பாற்றினேன், ஆனால் இதை எல்லாம் ஷ்யாமிடம் சொல்லாதே என்று சொல்லி இருந்தேன், ஆனால் ஷ்யாமிற்கு தெரிந்துவிட்டது, மும்பை விஷயமும் அவள் ஷ்யாமிடம் என்னை போட்டு கொடுத்த விஷயமும் சேர்ந்து தான் எனக்கு அவள் மீது கோபம்”
“கண்டிப்பாக காப்பாற்றிய உங்களை அவள் ஷ்யாமிடம் காண்பித்து கொடுத்து இருக்க மாட்டாள், அதே போல மும்பை விஷயத்தையும் மறந்து விடுங்கள், அவள் பாவம்”
“என்னமோ தம்பி, என் பொண்ணு டிரீட்மென்ட் க்கு எனக்கு காசு வேண்டும் அவ்வளவு தான்”
“நான் உங்கள் மகளை பார்க்க வேண்டும்”
“நீ எதுக்கு என் பொண்ணை பார்க்கணும்?”
“ஆமாம் உங்களுக்கு பணம் தருவதற்கு முன்னால் நான் உங்கள் மகளை பார்க்க வேண்டும்”
“நீ பணம் தரப்போவது சத்யாவின் வீடியோக்களுக்காக”
“சத்யாவின் வீடியோக்களுக்காகவும், உங்கள் மகளின் மருத்துவ செலவுக்காகவும் தான்”
துரைசாமி கொஞ்ச நேரம் யோசித்தான். “உன்னால எதுவும் பிரச்சனை வராதே?” என்றான்.
“துரைசாமி சில சமயம், சில விஷயங்களில் நாம் மனிதர்களை நம்ப வேண்டும், பாருங்கள் சத்யாவின் விஷயத்தில் நீங்கள் எல்லா வீடியோக்களையும் என்னிடம் தருவீர்கள், பிரதி உட்பட, பேச்சு மாற மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன், அதே போல என்னை நீங்கள் நம்பலாம்”
துரைசாமி மீண்டும் யோசித்தான். “சத்யாவை நாம் இவ்வளவு சொல்லியும் நம்புகிறான், அவள் நல்லவள், பாவம் என்று வாதிடுகிறான், தன்னை நம்பி இருக்கும் பெண்ணை இப்படி பாதுகாக்கும் ஒருவனை நம்பலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் கௌஷிக்கை ஷ்யாம் கொல்லும் வீடியோவை, அந்த நாள் நடக்கும் விஷயங்களை கொண்ட வீடியோவை மட்டும் கொடுக்க கூடாது. அதை கொடுத்தால் விசாரணைக்கு போகும், நாமும் சட்டத்திடம் மாட்டிக்கொள்வோம், இல்லை என்றால் பணமும் ஆள் பலமும் கொண்ட ஷ்யாமிடம் மாட்டிக்கொள்வோம். அதனால் அந்த வீடியோ தவிர மற்றவற்றை இவனிடம் கொடுத்துவிடலாம் என்றே தோன்றுகிறது”.
“சரி தம்பி, எப்போ பாக்கணும் என் மகளை?”
“இப்போதே கூட போகலாம்”
துரைசாமி முன்னாடி காரில் செல்ல நந்தன் அவனை பின் தொடர்ந்தான். புழல் பகுதியில் ஒரு தெருவில் நுழைந்தார்கள். ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தி சந்து வழியாக நடந்து பல வாசல் படிகளை கடந்த பின் துரைசாமி வீட்டின் வாசல்படி வந்தது. துரைசாமி உள்ளே அழைத்து சென்றான். அவன் மனைவி கேள்வியாய் பார்த்து பின் தொடர ஒரு அறையில் 13, 14 வயது மதிக்கத்தக்க பெண் நலிந்து போய் படுத்திருந்தாள்.
“இவள் தான் என் மகள் செல்வி, வயது 18 ஆகிறது, ஆனால் 13 வயதிற்கு மேல் இவள் உடல், மன நிலையில் வளர்ச்சி இல்லை”
“ஹலோ மா” என்றான்.
அந்த பெண் கையை தூக்கி ஏதோ சொல்ல முயன்று சொல்ல முடியாமல் கையை கீழே போட்டாள்.
“என்ன நோய் செல்விக்கு?” என்று கேட்டான்.
“12 வயசா இருக்கும் போது ஒரு accident ஆகிடுச்சு, உயிரை காப்பாத்திட்டோம், கொஞ்ச நாட்கள் அவள் உடல்நிலை முன்னேறுவது போல் தான் இருந்தது, பிறகு அடிக்கடி ஏதோ இழுப்பு மாதிரி வர ஆரம்பிச்சுது, டெல்லில தொடர்ந்து ஒரு டாக்டர்கிட்ட காமிச்சுட்டு வந்தோம், கொஞ்ச நாள் நல்லா இருப்பா, அப்புறம் கொஞ்ச நாள் நடுங்கி, இழுப்பு வந்து ஒரு 6 மாசம் படுத்த படுக்கை ஆகிவிடுவாள், சத்யா என்னை பற்றி ஷ்யாமிடம் போட்டு கொடுத்ததால் அவன் ஜெயிலில் இருக்கும் போதே ஆள் அனுப்பி என் குடும்பத்தை மிரட்டினான். அவர்கள் இங்கே புறப்பட்டு வரும் படி ஆகி விட்டது, இங்கே பல டாக்டர்களிடம் காண்பித்து விட்டோம், இன்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள்”
“சரி இங்க வாங்க” என்று அந்த அறையை விட்டு நந்தன் அவனை வெளியே அழைத்து வந்தான். யாருக்கோ call செய்தான். “ஹலோ மேடம், சார்கிட்ட appointment வேண்டும், 18 வயது பெண்ணிற்காக, என் பெயர் நந்தன், textiles தொழில் செய்யும் நந்தன் என்று சொல்லுங்கள், அவருக்கு தெரியும்”
ஒரு சிறு அமைதிக்கு பின் “thank you மேடம்” என்று இணைப்பை துண்டித்தான்.
அங்கே இருந்த நோட்டில் நந்தன் ஏதோ எழுதினான். “துரைசாமி நாளை மறுநாள் எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் appointment வாங்கி உள்ளேன், நீங்கள் உங்கள் மகளின் ஸ்கேன், மற்ற reports எல்லாம் எடுத்து கொண்டு நாளை மறுநாள் சென்று காண்பிக்கவும், அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள், நானும் அவரிடம் பேசுகிறேன்”
“ரொம்ப நன்றி தம்பி”
“அவரால் குணப்படுத்த முடியுமா என்று தெரியாது, ஆனால் என்ன ஏது என்று விளக்கமாக சொல்வார், நாம் அதிலிருந்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்”
“சரிங்க தம்பி”
நந்தன் cheque book ஒன்றை எடுத்து 20 லட்சங்களுக்கு கையெழுத்திட்டு கொடுத்தான்.
“நன்றி தம்பி, ஒரு நிமிஷம் இப்படி உக்காருங்க” என்று சொல்லிவிட்டு துரைசாமி ஒரு அறைக்கு சென்று சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தான். “இந்தாங்க தம்பி, இதுல எல்லாமே இருக்கு” என்று ஒரு பென் டிரைவ் ஒன்றை கொடுத்தான்.
“நன்றி” என்று சொல்லிவிட்டு நந்தன் எழுந்து வெளியே வர துரைசாமியும் பின் தொடர்ந்தான்.
“துரைசாமி, இன்று நாம் சந்தித்தது, பேசியது, நீங்கள் இந்த வீடியோக்களை என்னிடம் கை மாற்றியது, இது எதுவுமே சத்யாவிற்கு தெரிய வேண்டாம்”
“ஏன் தம்பி? அந்த பொண்ணுக்கு நீங்க நல்லது தானே பண்றீங்க? தெரிஞ்சா அந்த பொண்ணு சந்தோஷம் தானே படும்?”
“இப்போதைக்கு தெரிய வேண்டாம், நேரமும் காலமும் வரும் போது நான் சொல்லிக்கொள்கிறேன், அப்புறம் இன்னொரு விஷயம், நீங்கள் எல்லோரும் பஞ்சாபில் தான் இருந்தீர்களா?”
“ஆமாம் தம்பி, சத்யா அங்கேயே தான் பொறந்த வளந்த பொண்ணுன்னு நினைக்கிறேன், கௌஷிக் தம்பி, ஷ்யாம் வீடும் பஞ்சாப் தான், நாங்க பஞ்சாப்ல இருந்துட்டு அப்பப்போ டெல்லிலயும் இருப்போம் பொண்ணோட டிரீட்மென்ட் காக”
“அப்படி என்றால் கௌஷிக் இறந்த பிறகு சத்யா மும்பைக்கு move செய்திருக்க வேண்டும்”
“ஆமாம் தம்பி”
“துருப்பு சீட்டு என்று சொன்னீர்களே, அது ஷ்யாமாக தான் இருக்க வேண்டும், சத்யா இருக்கும் இடத்தை சொன்னால் உங்களுக்கு பணம் தருவேன் என்று அவன் சொல்லி இருக்க வேண்டும், சரியா?”
துரைசாமி பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.
“சத்யாவின் மானத்திற்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னீர்கள், நான் உங்கள் மகளின் சிகிச்சைக்கு உதவுவதில் என் சுயநலமும் அடங்கி உள்ளது, எக்காரணத்தினாலும் சத்யாவிற்கு அந்த துருப்பு சீட்டின் மூலமாக எந்த ஆபத்தும் வரக்கூடாது, வந்தால் நீங்கள் வேறு விதமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள், நினைவிருக்கட்டும்”
“என்னால கண்டிப்பா வராது தம்பி, என் பொண்ணுக்காக இவ்வளவு தூரம் செய்ற, இனிமேல் என்னால சத்யாவிற்கு ஆபத்து வராது”
நந்தன் “நன்றி, நான் வருகிறேன்” என்று திரும்பியவன் சற்று நேரம் ஏதோ யோசித்துவிட்டு “கௌஷிக்கை ஷ்யாம் தான் கொன்றானா?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி” என்று அந்த இரவு நேரத்திலும் வியர்வையை துடைத்தபடி துரைசாமி மழுப்பினான்.
“ஷ்யாமின் போட்டோ உங்களிடம் உள்ளதா?”
துரைசாமி மனதிற்குள் பயந்தான். “இது என்னடா வம்பா போச்சு, பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்சிடும் போலவே, இவன் அந்த ஷ்யாமை கண்டுபிடிக்காமல் விட மாட்டான் போல, அவனை இவன் கண்டுபிடித்தால் அவன் இவனையும் விட மாட்டான், என்னை, சத்யாவை யாரையும் விட மாட்டான்” என்று உள்ளுக்குள் பதறினான்.
“இல்லை தம்பி, என்கிட்ட அவன் போட்டோ இல்லை”
நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு “சரி நான் வருகிறேன்” என்று புறப்பட்டான்.
நந்தன் வீட்டிற்கு வந்ததும் அவன் அலமாரியை திறந்து நம்பர் லாக் கொண்ட லாக்கர் ஒன்றை திறந்து அந்த பென் டிரைவை ஒரு குட்டி பெட்டி ஒன்றில் வைத்து மூடி லாக்கரையும் நம்பர் கொண்டு மூடினான்.
இளைப்பாக மூச்சொன்றை எடுத்துவிட்டு ராகவனுக்கு call செய்தான்.
“sorry டா, வேற ஒரு வேலை வந்துடுச்சு, அதான் வர முடியல”
“எனக்கு முக்கியமான வேலை எல்லாம் இல்லையா டா? எவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கிறேன், சாவகாசமாக வேலை என்று சொல்கிறாய், முன்னாடியே ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் இல்லையா? அப்படி என்ன வேலை டா? நண்பனை விட முக்கியமான வேலை?”
“கோச்சிக்காத டா, அது என்ன வேலைன்னு இப்போ சொல்ல முடியாது, எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணனும்”
“சும்மா தான் கோச்சிக்கிட்டேன், சொல்லு என்ன செய்யனும்”
“I will email you, உடனே பாத்துட்டு, நல்லா புரிஞ்சுகிட்டு ரிப்ளை பண்ணு, ஓகேவா? போன்ல இதை பத்தி detaila பேச வேண்டாம்”
“ம்ம்ம் ok டா”
நந்தன் email அனுப்பினான்.
“கவனமாக கேட்டுக்கொள், நீ அவனை பற்றி விசாரிப்பது யாருக்கும் தெரிய கூடாது, தெரிந்தால் சத்யாவின் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும், பெயர் ஷ்யாம், பஞ்சாபில் drug dealing செய்றவன்னு தோணுது, ஆனா எவ்வளவு பெரிய drug டீலர் னு தெரியல, ஆனா சத்யா, கௌஷிக் விஷயங்களில் he used drugs, அவன் வெறுமனே வாங்குபவனாக கூட இருக்கலாம், ஆனால் நான் கேட்ட விஷயங்களை வைத்து பார்த்தால் அவன் ஒரு பெரிய கிரிமினலாக இருக்க வேண்டும், சத்யாவிற்கு ஒரு நாள் இரவு அவள் வீட்டில் புகுந்து drug ஐ ஊசியின் மூலம் போட முயன்று இருக்கிறான், அதற்காக ஜெயில் தண்டனை பெற்றுள்ளான், அதனால் ஜெயில் ரெக்கார்டஸ்ல் செக் செய்தாலே அவன் profile கிடைத்துவிடும், இப்போது எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் அவன் இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறானா? இல்லை விடுதலை ஆகி விட்டானா என்பது தான். இந்த விசாரணையை நீ narcotics பிரிவை சார்ந்த ஒரு போலீஸ் ஆபீசர் என்ற முறையில் மட்டுமே விசாரிக்க வேண்டும், சத்யாவின் பெயரை பயன்படுத்தாதே, இடையில் துரைசாமி வந்தால் தெரியாதது போலவே காட்டிக்கொள், நீ சென்னையில் இருக்கும் போலீஸ் officer என்று எந்த விதத்திலும் காட்டிக்கொள்ள கூடாது, ஒருவேளை அவன் பெரிய அளவிலான drug டீலர் என்றால் கண்டிப்பாக அவனுக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்ல் சில support இருக்கும், so நீ விசாரிப்பது எவ்விதத்திலும் அவனுக்கு தெரியக்கூடாது, இப்படி அவனுக்கு தெரியாமல், சத்யா, துரைசாமி பெயர் வராமல் விசாரிக்க முடியும் என்றால் மட்டுமே விசாரிக்க வேண்டும், இல்லை என்றால் விசாரிக்காதே, ஏன் என்று நான் உன்னை நேரில் காணும் போது சொல்கிறேன்”
“Ok டா, don’t worry, I will be careful”
நந்தன் மீண்டும் ராகவனுக்கு call செய்தான். “ஹேய் அப்பப்போ அமைந்தகரை night patrol கிட்ட சத்யா வீட்டை அவளுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாமல் கவனித்துக்கொள்ள சொல்ல முடியுமா? Extravaa எதுவும் செய்ய வேண்டாம், just ask them to keep an eye on
her for her safety? I will be always grateful டா”
“ஹேய் இதுக்கு எதுக்கு இவ்வளவு feel பண்ற, நீ எதையோ நினச்சு அனாவசியமா பயப்படுற, சத்யாவிற்கு ஒன்றும் ஆகாது, நீ சொன்ன விஷயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், கவலை படாமல் தூங்கு”
“சரி டா, good night”
நந்தன் தூங்க முடியாமல் புரண்டான். ஏதோ யோசனையில் எழுந்து உட்கார்ந்தான். “அன்று தருண் போட்டோ காண்பித்த போது அங்கு வேறு போட்டோக்களும் இருந்தன. அதில் எதிலாவது ஷ்யாம் இருப்பானா? சத்யாவிற்கு தேர்வு முடியும் வரை அவள் வீட்டிற்கு போக வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன், போனாலும் கூட ஷ்யாம் பற்றி விசாரித்தாலோ அவன் போட்டோவை கேட்டாலோ சத்யா என்ன ஏது என்று பதறுவாள், சின்ன சின்ன விஷயங்கள் கூட தன்னை அதிகமாக பாதித்து முடங்க செய்து விடுவதாக சொன்னாளே, இருந்து இருந்து இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் படிக்க நினைக்கிறாள், வீணாக அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்த கூடாது, ஒருவேளை ராகவன் சொன்னது போல் நான் அனாவசியமாக பயப்படுகிறேனா? இத்தனை நாட்களாக வராதவன் நான் இன்று துரைசாமியை பார்த்ததால் வந்து விட போகிறானா? எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான், ஆனால் பயப்படுவதால் என்ன பயன்? இதை பற்றி காலையில் யோசிக்கலாம், நல்ல தீர்வு ஒன்று கிடைக்கும்” என்று நினைத்தபடி தூங்கினான்.
Comments
Post a Comment