Sms ch 18 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 18

சத்யா கௌஷிக் வீட்டிலிருந்து புறப்பட்டாள். கௌஷிக் துணைக்கு சென்றான். “பயமா இருக்கு கௌஷிக்” என்றாள் சத்யா.


“எனக்கும் தான், யோசிக்காமல் உன்மீது இருந்த காதலில் இப்படி செய்துவிட்டேன், என்னை மன்னித்து விடு சத்யா”

சத்யாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் தான் வெளியே போகலாம் என்று சொன்னவனை வேண்டாம் என்று அருகில் அழைத்தாள். ஆனால் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று சத்யா குழம்பினாள். எப்போதும் கவனமாக இருப்பேனே, கௌஷிக் மேல் இருந்த காதலில், ச்ச என்ன செய்வது? ஏதாவது விபரீதம் ஆனால் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்” என்று பலவாறு குழம்பினாள். தடுமாறி விழப்போனாள். 


“சத்யா உனக்கு என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியாவே இருக்க, டாக்டர்கிட்ட போகலாமா?” என்று கௌஷிக் கவலையுடன் கேட்டான்.


“வேண்டாம் கௌஷிக், எனக்கு இப்போது வீட்டுக்கு போய் தூங்கினால் போதும் என்று இருக்கிறது”


வீட்டிற்கு சென்ற சத்யா அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் நேராக தன் அறைக்கு போய் கதவை சாத்தி கொண்டாள். இரவு சாப்பிட அழைத்தும் வரவில்லை. “என்ன ஆயிற்று இவளுக்கு?” என்று கவிதா போய் கதவை தட்ட “கொஞ்சம் tireda இருக்குமா, நான் தூங்க போறேன், நீ சாப்டுட்டு தூங்கு” என்று சொல்லி படுத்து கொண்டாள்.


சத்யாவிற்கு தலைவலியும் வாந்தியுமாக இருந்தது மறுநாள். “என்னாச்சு” என்று கவிதா, பாட்டி, வள்ளி எல்லோரும் பரபரக்க தனக்கு ஒன்றும் இல்லை என்று சத்யா மழுப்பினாள். ஒரு வாரம் இப்படியே தலைவலி, வாந்தி, மயக்கம் என்று கழிந்தது. டாக்டரிடம் அழைத்த கவிதவையும் கண்விழித்து படித்ததால் இப்படி இருக்கிறது, ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகி விடும் என்று மழுப்பி சமாளித்து விட்டாள். தனக்கு என்ன ஆயிற்று என்று குழம்பினாள். 


நடந்ததை மறந்து படிப்பில் கவனம் செலுத்த முயற்சித்தாள். இரண்டாம் வருடம் தேர்வுக்காக அல்லும் பகலும் படித்தாள். கௌஷிக்கை முடிந்த அளவு நினைக்காமல் இருக்க முயற்சித்தாள். நன்றாக படித்து வேலைக்கு போய்விட்டால் வாழ்நாள் முழுக்க கௌஷிக்குடன் தானே செலவழிக்க போகிறோம் என்று மனதை தேற்றிக்கொள்வாள். கௌஷிக் “are you fine?” என்று அவ்வப்போது மெசேஜ் அனுப்புவான். “yes I am fine, let’s talk after my exams” என்று பதில் அனுப்புவாள். அதன் பிறகு ஒரு 10 நாளைக்காவது கௌஷிக் அவளை தொல்லை செய்ய வேண்டாம் என்று அவளுக்கு மெசேஜ் எதுவும் அனுப்பாமல் இருப்பான். ஆனால் அவளுடன் பேசாமல் அவனால் இருக்க முடியாது, 10 நாட்கள் கழித்து மீண்டும் மெசேஜ் செய்வான். இப்படியே மூன்று மாதங்கள் ஓடின. இரண்டாம் ஆண்டு தேர்வும் சத்யா ஒரு வழியாக எழுதி முடித்தாள். 


மீண்டும் மயக்கம், வாந்தி என்று வரவும் சத்யா எதற்காக பயந்தாளோ அது நிஜம் ஆனது. சத்யா கர்பம் தரித்திருந்தாள். கவிதா, பாட்டி, வள்ளி, அப்போது தான் கர்பம் தரித்து 5 மாதங்கள் ஆகி இருந்த ஷெண்பகம் என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. “சத்யா நீயா இப்படி? ஏன் இப்படி செய்தாய்? யார் அவன்?” என்று பல கேள்விகள். கவிதா அதிர்ச்சியில் உறைந்தாள். செய்வதறியாமல் தவித்தாள். சத்யா கவிதாவிடம் மன்னிப்பு கேட்டாள். கௌஷிக் பற்றி கூறினாள். கௌஷிக்கை சபிக்க ஆரம்பித்த கவிதாவை சத்யா தடுத்தாள். தானும் தான் குற்றவாளி அவனை மட்டும் ஏன் திட்ட வேண்டும் என்று அவனுக்காக வாதாடினாள். என்ன செய்வது என்று புரியாமல் இருந்த கவிதாவிடம் சத்யா தைரியத்தை வரவைத்து கொண்டு பேசினாள். “நான் கௌஷிக்கை திருமணம் செய்து கொள்கிறேன்”


“கல்யாணம் பண்ணிட்டு, படிப்ப எல்லாம் விட்டுட்டு குழந்தையை பெற்றுக்கொள்ள போகிறாயாக்கும்?” என்று விரக்தியோடு கவிதா கேட்டாள்.


“படிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் படிப்பிற்காக குழந்தையை எதுவும் செய்ய மாட்டேன், இப்படியே படிக்க முடிந்தால் படிக்கிறேன், அப்படி இல்லை என்றால் பிறகு படித்து கொள்கிறேன்”


கவிதா “ஹ்ம்ம் ஒருத்தன் வந்ததும் இவ்வளவு நாள் எதற்காக கஷ்டப்பட்டாயோ அதை எல்லாம் ஒரு நிமிடத்தில் தூக்கி போட முடிவு செய்துவிட்டாய் அப்படி தானே?”


“செய்த தவறுக்கு பரிகாரம் செய்து தானே ஆக வேண்டும், இதற்கு பிறகு உட்கார்ந்து அழுவதால் ஏதாவது மாறி விடப்போகிறதா?”


“அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம் கவிதா கண்ணு” என்று பாட்டி சொன்னாள்.


“அவன் யாரு எப்படி பட்டவன்னே தெரியாதே பாட்டி”


“வசதியான பையன் தானாம், முன்னாடி கொஞ்சம் அப்படி இப்படி என்று இருந்திருப்பான் போல, ஆனால் இப்போது அவன் அண்ணனுடன் சேர்ந்து ஏதோ travels பிசினஸ் செய்கிறானாம், முருகன் விசாரிச்சிட்டு வந்து சொன்னான்”


“அவனை வீட்டிற்கு வர சொல், பேசுவோம்” என்று கவிதா சத்யாவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.


சத்யாவும் மெசேஜ் செய்தாள். “முக்கியமான விஷயம், அம்மா உன்னை வீட்டிற்கு வர சொன்னார்கள், மற்றவை நேரில் சொல்கிறேன்”


கௌஷிக் பயத்துடன் எதிர்பார்த்த விஷயம் தான், கவிதா, சத்யா முன் நின்று கொண்டிருந்தான்.


கவிதா கோபம் வந்து வார்த்தைகளை கொட்டினாள். “ஏன் என் மகளை இப்படி செய்தாய், காதலித்தால் இப்படி செய்வதா? பெரியவர்களை பார்த்து உங்கள் காதல், திருமணம் பற்றிய விருப்பத்தை சொல்லி இருக்கலாம் இல்லையா?” சொல்லிவிட்டு கவிதா யோசித்தாள். “அன்று நான் காதலித்து ஓடி வந்ததற்கு கர்மா எனக்கு கொடுத்த பிரதிபலன் இது என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.”


கவிதா “இப்போது அவள் கருவுற்றிருக்கிறாள், என்ன செய்ய போகிறீர்கள்?”


கௌஷிக் சத்யாவை நோக்கினான். “ஆமாம்” என்பது போல் அவள் கண்ணீருடன் தலை ஆட்டினாள்.


“அவள் கனவே IAS ஆவது தான், எல்லாத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாய், உன்னை சொல்லி குற்றம் இல்லை, ஆசை அவளுக்கு கண்ணை மறைத்து விட்டது”


கௌஷிக் கண்களை துடைத்துக்கொண்டு சொன்னான். “சத்யா மீது எந்த தவறும் இல்லை, நான் தான் தவறு செய்தேன், சத்யாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன், ஓரளவிற்கு சம்பாதிக்கிறேன், அவளையும் குழந்தையையும் என்னால் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும், அவளை படிக்க வைப்பேன், அவள் கனவு நிறைவேற துணையாக இருப்பேன்”


கவிதா கொஞ்சம் அமைதியானாள். “திருமணத்திற்கு பின் இங்கு தான் இருக்க வேண்டும்” என்றாள்.


“மன்னிக்கவும், அது என்னால் முடியாது, என்னை தூக்கி வளர்த்தவர்களை, எனக்கு சகோதரனாகவும், நண்பனாகவும் இத்தனை வருடங்கள் என்னுடன் சேர்ந்து வளர்ந்த ஷ்யாமையும் என்னால் பிரிய முடியாது”


“ஆனால் சத்யாவிற்கு இப்போது தான் 18 வயது தொடங்கி உள்ளது, அவள் கர்ப காலம், பிரசவம் சிரமங்கள் இல்லாமல் இருக்க அவள் இங்கிருப்பது தான் நல்லது”


“அது வேண்டுமானால் டெலிவரியின் போது அவளை இங்கே விட்டு விடுகிறேன்”


“ஆனால்...” என்று கவிதா ஏதோ மறுப்பு தெரிவிக்க அதற்குள் பாட்டி “அதான் தம்பி சொல்லுது இல்லை கவிதாம்மா, முதல்ல கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும், அப்புறம் மாசகணக்கு வரும் போது வளையகாப்பு எல்லாம் செஞ்சு கூட்டிட்டு வரலாம்”


ஆடம்பரமாகவே செய்யலாமே என்று ஷ்யாம் பெற்றோர் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து கௌஷிக்கும் சத்யாவும் எளிமையாகவே திருமணம் செய்து கொண்டார்கள். கவிதாவும் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் மனதார தான் ஆசீர்வதித்தாள். இரண்டாம் ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை காலம் என்பதால் சத்யாவும் கொஞ்சம் படிப்பை பற்றி டென்ஷன் இல்லாமல் இருந்தாள்.


முதலிரவுக்கு bedroom அலங்காரம் எல்லாம் ஷ்யாம, சுனிதா கைவண்ணத்தில் அழகாகவே இருந்தது. 


சத்யா கௌஷிக் முதலிரவு தனிமையில், சத்யா கௌஷிக்கின் தோள் மீது சாய்ந்து இருந்தாள். 


“நான் இப்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா சத்யா? நீ, நான், நம்ம குட்டி பொண்ணு, எனக்குன்னு ஒரு சின்ன குருவி கூடு மாதிரி ஒரு குடும்பம், இது போதும் எனக்கு” என்று சத்யாவின் விரல்களை கோதிக்கொண்டே பேசிகொண்டிருந்தான் கௌஷிக். 


“ரொம்ப பயந்து இருந்திருப்ப இல்லை? அம்மா ரொம்ப திட்டிட்டாங்களா?” என்றான் கௌஷிக்.


“பயம் இருந்தது உண்மை தான், அம்மா திட்டியதும் கஷ்டமாக தான் இருந்தது, ஆனால் உப்பை தின்னால் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும், அழுது என்ன ஆகப்போகிறது, இனி நம் வாழ்க்கையை நல்ல படியாக நடத்துவத்தில் தான் எல்லாம் இருக்கிறது”


“ம்ம்ம் ஆமாம்” என்ற கௌஷிக், “உனக்கு தான் இன்று நெறைய சிரமம், அடிக்கடி வாந்தி எடுத்துவிட்டாய், பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை, இரு இந்த பழங்களை நறுக்கி தருகிறேன்”


கௌஷிக் பழங்களை போதும் போதும் என்ற சத்யாவிற்கு ஊட்டிவிட்டான். 


“ஆமாம் பெண்குழந்தை என்று முடிவே செய்து விட்டீர்களா?” கேட்டாள் சத்யா ஒரு புன்னகையுடன்.


“ஆமாம் உன்னை மாதிரி அழகாக பிறக்கும்”


“பையன் என்றால் பிடிக்காதா?”


“பையன்னாலும் பிடிக்கும், but செகண்ட் பையன் பெத்துக்கலாம்”


பழங்கள் சாப்பிட்டதும் சத்யா மீண்டும் கௌஷிக் தோளில் சாய்ந்து சொன்னாள். “எனக்கு கொஞ்சம் complications இருக்கு, careful a இருக்கனும்னு டாக்டர் சொன்னதா சொன்னேன் இல்லை...” என்று சத்யா தயங்கி நிறுத்தினாள்.”


“டாக்டர் சொல்லவில்லை என்றாலும் உன்னையும் பாப்பாவையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அதனால் மற்ற சந்தோஷத்திற்கு இன்னும் ஒரு வருடம் ஆனாலும் பரவாயில்லை, எனக்கு நீ என் அருகில் இருந்தாலே போதும்” என்று சத்யாவின் தலையை கோதி விட்டான் கௌஷிக். அவன் வாழ்க்கையில் இதுவே பொன்னான காலமாக உணர்ந்தான்.


சுனிதா நல்ல தோழியாக இருந்தாள் சத்யாவிற்கு. வேலைகாரர்கள் இருந்தாலும் சத்யாவிற்கு அவ்வப்போது சூப், சாலட் என்று ஏதாவது செய்து கொடுப்பாள். கௌஷிக் அவ்வப்போது தொழிலில் பிஸியாக இருந்தால் சுனிதாவும், சத்யாவும் எங்காவது வெளியே சென்று வருவார்கள். துரைசாமி டிரைவராக இருந்து அவர்களை காரில் அழைத்து சென்று வருவான்.


7 மாதங்கள் ஆனதும் சத்யாவை வளையகாப்பு செய்து கவிதா தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள். கௌஷிகிற்கு அவளை அனுப்ப மனமில்லை. கவிதா கூட மனம் மாறி இருந்தாள். “மாப்பிள்ளையை ரெண்டு நாள் இங்க இருக்க சொல்லு” என்று சில உபச்சாரங்களும் நடந்தன. குழந்தையின் ஒரு கால் இருக்க வேண்டிய நீளம் இல்லை என்று ஸ்கேனில் சொல்லி இருந்தார்கள். அது வருத்தமாக இருந்தாலும் மற்ற படி குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை நினைத்து எல்லோரும் கொஞ்சம் ஆறுதல் அடைந்து கொண்டார்கள். 


ஷெண்பகம் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள் என்பது எங்கே சத்யாவை பாதித்து விடுமோ என்று முடிந்த அளவு அந்த துக்கத்தை காட்டிகொள்ளாமல் சத்யாவை பேணி பாதுகாத்தார்கள். சத்யாவும் நல்லபடியாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். கௌஷிக் முதன் முதலாக குழந்தையை தூக்கும் போது அவன் கண்கள் கலங்கின, குழந்தையை உச்சி முகர்ந்து சத்யாவிடம் கொடுத்தான். சத்யா மூன்றாம் வருட படிப்பை தொடர முடியவில்லை என்று கவலை பட்டதெல்லாம் குழந்தையின் முகத்தை பார்த்ததும் பறந்துவிட்டது. குழந்தை தான் முதலிடம் என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். 


கௌஷிக்கும் சத்யாவும் சேர்ந்து தருண் என்று பெயரிட்டார்கள் குழந்தைக்கு. இதற்கு மேல் என்னால் உன்னையும் குழந்தையையும் பிரிந்து இருக்க முடியாது, சீக்கிரம் நம் வீட்டிற்கு போகலாம் என்றான் கௌஷிக். கவிதாவிற்கு அனுப்ப மனமில்லை. “உள்ளூரிலே தானே அத்தை இருக்கோம், எப்போ வேணா உங்க பேரனை வந்து பார்த்துவிட்டு போங்க” என்றான் கௌஷிக். தருண் வரவிற்கு தகுந்தாற்போல அறையை மாற்றி வைத்திருந்தான் கௌஷிக். தொட்டில், டிரஸ், பொம்மைகள் என்று ஏராளமாக இருந்தன.  “சத்யா அடுத்து உன் exams தான், அத்தைக்கு நான் வாக்களித்து இருக்கிறேன், உன் கனவு மெய்யாக துணையாக இருப்பேன் என்று. அதனால் நீ படிக்க ஆரம்பிக்க வேண்டும், குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன், வேண்டுமானால் பணிப்பெண் கூட வைத்துக்கொள்ளலாம், ஆனால் நீ தாமதிக்காமல் எல்லா exams ம் clear செய்ய வேண்டும்” என்றான்.


சத்யா பதில் சொல்லாமல் தருணுக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே புன்னகைத்தாள்.


“ஏன் எதுவும் பதில் சொல்லாமல் சிரிக்கிறாய்?”


“ஒன்றும் இல்லை, என்னுடைய சிறுவயதில் அம்மா என்னை சரியாக கவனிக்கவில்லை, அவர்களுக்கு அவர்கள் குறிக்கோள் தான் முக்கியமா என்று நான் சண்டை போடாத நாளில்லை, அதற்காக உள்ளுக்குள் அழாத நாளில்லை, இன்று என் கையில் குழந்தை, இப்போது என்ன செய்யப்போகிறாய் என்று என் மனசாட்சி என்னை பார்த்து சிரிப்பது போல் உள்ளது, காலமும் கர்மாவும் எப்படி சுழற்சி போல் மாறிக்கொண்டே இருக்கின்றன, எப்போதுமே நமக்கு கிடைக்காதது நம் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எல்லா பெற்றோர்களும் ஆசைப்படுவார்கள், என் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது”


“அப்படியானால் உன் IAS கனவை கை விட்டுவிடுவதாக முடிவு செய்து விட்டாயா சத்யா?”


“இப்போது முடியாது என்று தான் சொல்கிறேன், மூன்று மாத குழந்தையை, தாய்ப் பால் குடிக்கும் குழந்தையை வேறு யாரிடமும் விட எனக்கு மனமில்லை, அதற்காக நான் படிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறேன், மீதி இருக்கும் பேப்பர்சை clear செய்கிறேன், பணிப்பெண்ணிடம் விட்டுட்டு படிக்க விருப்பமில்லை என்று தான் சொல்கிறேன்”


“ம்ம்ம் சரி உன் விருப்பம்” என்று சொல்லி சத்யாவையும் தருணையும் கௌஷிக் அணைத்து கொண்டே உறங்கினான்.


கௌஷிக், சத்யா, தருண் என்ற அந்த அழகான சின்னஞ்சிறு குருவி கூட்டின் மேல் கருமேக நிறத்தில் கழுகு ஒன்று பறக்க போவதை அங்கிருந்த யாரும் அறிந்ததாக தெரியவில்லை. அது விதி வகுக்கும் விளையாட்டா? இல்லை சதி எழுதப் போகும் சரித்திரமா? என்று காலமே பதில் சொல்லும்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018