Sms ch 23 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 23

முருகனுக்கு சில வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்து விட்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட திட்டமிட்டார்கள். ஷ்யாம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக சத்யா வேறு ஒரு சிம் கார்டு வாங்கி கொண்டாள். யாரும் எங்கேயும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். முருகன் ஒரு வேலை விஷயமாக அகமதாபாத் சென்றிருந்தான். அங்கே தான் பாதி கிழிந்து கிடந்த நோட்டீஸ் ஒன்றில் கவிதாவின் புகைப்படத்தை பார்த்தான். தொடர்புக்கு என்ற இடம் கிழிந்து இருந்தது. ஹாஸ்பிடல் பெயர் மட்டும் கொஞ்சம் தெரிந்தது. 


அந்த புகைப்படத்துடன் ஹாஸ்பிடலில் சென்று விசாரித்தான். அவர்கள் கவிதா ரயிலில் வரும் போது நெஞ்சு வலியில் துடித்ததாகவும் ஒரு ஆணும் பெண்ணும் அட்மிட் செய்தார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்களிடம் கைபேசியோ, bag எதுவும் இல்லை, நல்லவேளையாக டாக்டருக்கு அவர்களை தெரியும் என்பதால் அவர்கள் சொந்தக்காரர்களுக்கு call செய்து உடலை ஒப்படைத்தோம் என்று கூறினார்கள். எந்த உறவினர் என்று முருகன் கேட்டதற்கு patient ன் உடன்பிறந்த அண்ணன் பெயர் சத்தியமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களும் யாராவது வந்து விசாரித்தால் தர சொல்லி கைபேசி எண்ணை கொடுத்தார்கள். நீங்கள் கவிதாவிற்கு எந்த வகையில் சொந்தம் என்று விசாரித்து சத்தியமூர்த்தியின் கைபேசி எண்ணை கொடுத்தார்கள். 


முருகன் அதை வாங்கிக்கொண்டு புறப்படும் முன் கவிதா அம்மாவிடம் documents, பணம் என்று ஏதாவது இருந்ததா? என்று விசாரித்தான். அவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் முன்பே சொன்னது போல் ஹாஸ்பிடலில் அவர்கள் பொருட்கள் எதுவும் இல்லை. ஆனால் கவிதாவை அட்மிட் செய்தவன் கையில் ஒரு bag ம், சூட்கேசும் வைத்திருந்தாவும் அதை அவன் எடுத்து சென்றுவிட்டதாக பேசிக்கொண்டார்கள். அவன் பெயர் ஏதாவது தெரியுமா என்று கேட்டதற்கு துரைசாமியாக இருக்க கூடும் என்று உடனிருந்த பெண்மணி குறிப்பிட்டார்கள் என்று சொன்னார்கள். 


முருகன் கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். சத்யாவிடம் இந்த செய்தியை எப்படி சொல்லப்போகிறோம் என்று பயந்து கூறினான். சத்யா தலையில் அடித்து கொண்டு அழுதாள். “பார்த்தீர்களா பாட்டி? என்னை போன்ற அதிர்ஷ்டகட்டையை பார்த்து இருக்கிறீர்களா? முதலில் அப்பாவை இழந்தேன், பிறகு கௌஷிக், இப்போது என் அம்மா, இவர்கள் மூவரிடமும் கடைசியாக ஒரு நல்ல வார்த்தை கூட பேச முடியாமல் இழந்து விட்டேன், அப்படி ஒரு அதிர்ஷ்டம் செய்தவள் நான், என் மானம் காற்றில் பறக்க போவதை பார்க்க வேண்டாம் என்று தான் மும்பை வருவதற்குள் என் அம்மா இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்கள்” என்று உடைந்து அழுதாள். பாட்டி, வள்ளி, முருகன் என்று எல்லோருமே அழுதனர். அவர்கள் அழுவதை பார்த்து தருணும் சின்னுவும் கூட சேர்ந்து அழவும் பெரியவர்கள் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டனர்.


முருகன் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி கவிதா அம்மாவின் அண்ணன் வந்து உடலை வாங்கிக்கொண்டு சென்றாராம். தொடர்புக்கு கைபேசி எண்ணும் கொடுத்துள்ளார் என்று கூறி சத்யாவிடம் கொடுத்தான். அதை வாங்கி பார்க்கும் முன் “என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், நான் ஓடி வந்து திருமணம் செய்ததால் என் குடும்பத்திற்கு பெரிய அவமானம் ஆகி இருக்கும், நான் அவர்களை திரும்ப பார்க்கும் சக்தி இல்லை என்று சொல்வார்கள், இன்று நான் இப்படி மானத்தை காற்றில் பறக்க விட்டுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை பார்க்கவோ பேசவோ விரும்பவில்லை, ஒருவேளை என்ன பெண்ணை பெற்று வளர்த்தாளோ என்று அவர்கள் யாராவது அம்மாவை ஒரு வார்த்தை சொன்னால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது, குறைந்த பட்சம் என் அம்மா அனாதையாக இல்லாமல் அவர்கள் உடன் பிறந்த அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள், உரிய முறையில் அவர்கள் ஈமச்சடங்குகள் செய்திருப்பார்கள், எனக்கு அது போதும்” என்று அந்த சீட்டை கிழித்து எரிந்தாள். அத்துடன் எல்லோரும் தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தார்கள்.


துரைசாமிக்கு ஒரு வீடியோ வந்தது. ஷ்யாம் தன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சத்யாவின் மும்பை வீடியோவை அனுப்பி வைத்திருந்தான். துரைசாமி செய்த துரோகம் தெரியாததால் துரைசாமிக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தான். அதை பாதி வரை பார்த்த துரைசாமி “ச்ச இவன் யாரு? இவளையா நான் ஷ்யாமிடம் இருந்து காப்பாற்ற எண்ணினேன், நல்ல பெண் என்று நினைத்தேனே? இவள் அம்மாவை வேறு காப்பாற்ற சிரமப்பட்டோமே, இவளை இப்படி பார்ப்பதற்கு இவள் அம்மா உயிரையே விட்டுவிடலாம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு துரைசாமியும் சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான்.


சத்தியமூர்த்தி வீட்டில் கிரிஷின் திருமண ஏற்பாடுகள் விமர்சியாக நடந்து கொண்டிருந்தன. நந்தனும் ஒரு வாரம் office செல்வதில்லை என்று கமலா அம்மாவிற்கு வாக்கு கொடுத்து இருந்தான். திருமண வேலைகளை அவனும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான். சில பெண்ணை பெற்ற பெற்றோர் கமலா அம்மாவிடமும், சத்தியமூர்த்தியிடமும் நந்தனை பற்றி பேசினார்கள். பார்க்கலாம் என்று மட்டும் பதில் சொல்லி வைத்தார்கள். 


திருமணத்தன்று நந்தன் வேட்டி சட்டையில் கேசம் காற்றில் பறக்க அவன் கால்கள் தரையில் நிற்காமல் கமலா அம்மாவிற்கு உதவி செய்வதும் விருந்தினர்களை வரவேற்பதுமாக பிஸியாக சுழன்று கொண்டிருந்தான். அப்போது தான் தெரியாமல் அவள் மீது மோதினான். “sorry sorry” என்று சொல்லிக்கொண்டே அவன் தட்டிவிட்ட தாம்பால தட்டை எடுத்து அடுக்கி வைத்து அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே எழுந்து நின்று அவள் கையில் கொடுத்தான். “நீ......தீபிகா தானே?” என்றான். Lehenga அணிந்து பாப் cut முடியுடன், fancy பொட்டும், உதட்டில் சாயமுமாக செந்நிறத்தில் நந்தன் உயரத்திற்கு ஈடு கொடுத்தவளாய் இருந்த அந்த பெண் ஒரு புன்னகையுடன் “தீபிகாவே தான், பரவாயில்லையே ஞாபகம் வைத்துள்ளீர்களே” என்று தட்டை வாங்கி கொண்டாள். “என் இரவை அழகாக்கிய பெண்களை நான் அவ்வளவு எளிதாக மறப்பதில்லை” என்றான் கண்களில் குறும்புடன். “ஓஹ் பெண்கள்? ஹ்ம்ம் நான் கொஞ்சம் ஸ்பெஷல் என்று நினைத்தேன், பரவாயில்லை, குறைந்த பட்சம் அழகான இரவு என்று சொன்னீர்களே, அது வரை சந்தோஷம், ஏன் என்றால் ஒரு வேளை அந்த இரவு உங்களுக்கு அழகானதாக இல்லையோ என்று அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு” என்றாள் அந்த செந்நிற அழகி. 


“அந்த சந்தேகம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தான் வர வேண்டும், உனக்கு வர வேண்டிய அவசியம் என்ன? நீ confident girl என்று நினைத்தேன்” என்றான் நந்தன்.


“ஒரு இரவு ஒன்றாக இருந்த பின் எந்த தொடர்பும் இல்லை என்றால் confidence குறைவது இயல்பு தானே”


“அது....” என்று ஏதோ சொல்ல வந்தவன் வேண்டாம் என்று முடிவு செய்து “சரி அதை பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்? நீ எப்படி இங்கே? லண்டனில் இருந்து எப்போது இந்தியா வந்தாய்?”


“இன்று காலை தான் வந்தேன், வந்ததும் நேராக குளித்து புது ஆடை அணிந்து மண்டபத்திற்கு வந்துவிட்டேன்”


“good good, நீ மணப்பெண்ணிற்கு தோழியா?”


“ஹாஹா நான் மணப்பெண்னின் அக்கா மிஸ்டர்” என்றாள் கண்களை சிமிட்டிக்கொண்டே.


“What!? Reallyyy!?? எனக்கு எப்படி தெரியாமல் போனது? உன்னை நிச்சயதார்த்தத்தில் கூட பார்க்கவில்லையே?”


“நான் அப்போது லண்டனில் இருந்தேன், வர முடியவில்லை, ஆனால் நான் உங்களை போட்டோ வீடியோவில் பார்த்தேன், பிறகு தான் தெரிந்தது நீங்கள் மாப்பிள்ளைக்கு அண்ணன் என்று”


லேசாக புன்னகைத்துவிட்டு “so எப்போ return?”


“என்ன? சார் உடனே என்னை பேக் பண்ணி அனுப்பி விடுவீர்கள் போல் இருக்கிறதே”


“ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்லை, எதார்த்தமாக தான் கேட்டேன்”


அதற்குள் “தீபிகா.........அந்த தாம்பால தட்டு கேட்டேனே” என்ற குரல் கேட்க “இதோ வருகிறேன் அம்மா” என்று சொல்லிவிட்டு “ஓகே அப்புறம் பேசலாம்” என்று  ஒரு துள்ளல் நடையுடன் நகர்ந்தாள்.


நந்தன் அவள் போகும் திசையை பார்த்துவிட்டு “uffff..” என்று தலையை அசைத்து பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.


கிரிஷ்க்கும், ஸ்ரீதிகாவுக்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நடக்கும் விளையாட்டுக்களை எல்லோரும் கண்டு ரசித்துகொண்டிருந்தனர். பானைக்குள் மோதிரம் போட்டு எடுப்பதில் ஆரம்பித்து நந்தன் கிரிஷை encourage செய்தான், இப்பவே மனைவிகிட்ட தோற்றுவிடாதே என்று நந்தன் கிரிஷை tease செய்ய, இப்பவே மாப்பிள்ளையை இறுக்கி பிடி டி என்று தீபிகா மணப்பெண்ணை encourage செய்தாள். நந்தனும் தீபிகாவும் மணப்பெண்ணை மாப்பிள்ளையை சாக்காக வைத்து விளையாட்டாக சண்டையிடுவது எல்லோர்க்கும் அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 


கமலா அம்மா சம்மந்தி அம்மாவிடம் பேச்சு கொடுத்தார்கள். உங்கள் மூத்த பெண் தீபிகாவிற்கும் சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்ல ஆமாம் சம்மந்தி அம்மா பார்க்க வேண்டும், கிரிஷ் மாப்பிள்ளை வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொன்னதாலும் தீபிகாவும் படிப்பு வேலை என்று திருமணத்தை மறுத்ததாலும் அவளுக்கு முன்பு ஸ்ரீத்தீகாவிற்கு திருமணம் செய்யும் படி ஆகி விட்டது. சீக்கிரமே ஒரு நல்ல வரனாக பார்க்க வேண்டும், உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்ல கமலா அம்மா விளையாட்டாக முறைத்தார்கள். “ஏன் என் நந்துவை பார்த்தால் நல்ல வரனாக தோன்றவில்லையா?”  என்று விளையாட்டாக கோபித்து கொண்டார்கள். “எங்களுக்கு விருப்பம் தான், ஆனால் தம்பி தான் ஏதோ திருமணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்” என்று இழுத்தார்கள். “ஆனால் அவனுக்கு குரு பார்வை வந்துவிட்டதாம், இன்னும் 4, 5 மாதங்களில் அவனுக்கு திருமணம் செய்து விட வேண்டுமாம், நான் சொன்னால் மறுக்க மாட்டான், நான் அவனிடம் பேசுகிறேன், நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும், அங்கே பாருங்கள் அவனும் தீபிகாவும் விளையாடுவதை, எனக்கென்னவோ அவன் சீக்கிரமே சம்மதித்து விடுவான் என்றே தோன்றுகிறது” என்றார் கமலா அம்மா. “அப்படி நடந்தால் சந்தோஷம் தான் சம்மந்தி அம்மா” என்றார்கள் தீபிகாவின் தாயார்.


அக்காவும் தங்கையும் சேர்ந்து இருந்து பல வருடங்கள் ஆகி இருக்குமே, அதனால் தீபிகா சில நாட்கள் எங்கள் வீட்டில் இருக்கட்டுமே என்று கமலா அம்மா கேட்க சரி என்று தீபிகா பெற்றோரும் சம்மதித்தனர். மறுவீட்டுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று சொல்லி மறுவீட்டுக்கு அனைவரையும் அழைத்து விட்டு ஸ்ரீதிகா பெற்றோர் கோயம்பத்தூர் புறப்பட்டனர்.


அன்றிரவு சத்தியமூர்த்தி வீடு கோலாகலமாக இருந்தது. கிரிஷின் அறையை ரோஹித், நந்தன் அலங்கரித்து கொண்டிருந்தனர். “ஹேய் நந்தா உன்னுடைய அறையை எப்போது டா அலங்கரிக்க போகிறோம்?” என்று ரோஹித் கேட்க “ஹாஹா இந்த அலங்காரம் எல்லாம் முக்கியம் இல்லை டா, ஒரு வேளை எனக்கு திருமணம் நடந்தால் அவள் என் இதயத்தை அலங்கரிக்க வேண்டும், அது தான் முக்கியம்” என்றான் நந்தன்.


“அடேய் எல்லோருக்குமே அப்படி தான் டா, நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற அதை சொல்லு, இன்னும் எத்தனை நாள் எங்களை எல்லாம் இப்படி காக்க வைக்க போகிறாய், நீ பழகும் பெண்களில் ஒருத்தி கூடவா உன் இதயத்தை அலங்கரிக்கவில்லை, கண்டிப்பாக ஒரு பெண்ணுக்காவது அந்த தகுதியும் விருப்பமும் இருந்திருக்கும் உன் இதய ஆசனத்தில் அமர்ந்து உன்னை அலங்கரிக்க, ஆட்டுவிக்க”


“தகுதி இருந்ததா என்று தெரியவில்லை, சொல்லப்போனால் இதயத்தை அலங்கரிக்க என்ன தகுதி வேண்டும் என்று தெரியவில்லை ஆனால் சில பெண்களுக்கு விருப்பம் இருந்தது, எனக்கு தான் திருமணம் செய்யும் அளவிற்கு அவர்கள் மீது feelings இல்லை”


“யாராவது ஒரு பெண் மீது உனக்கும் feelings இருந்திருக்கும், ஆனால் உன் இதயத்தை அலங்கரிக்கும் உரிமையை நீ தான் பிடிவாதமாக அவளுக்கு கொடுக்காமல் இருந்திருப்பாய் ”


நந்தன் கொஞ்சம் யோசித்தான். லேசாக புன்னகைத்துவிட்டு சொன்னான் “ம்ம்ம் யோசித்து பார்த்தால் ஒருவேளை ஒருத்திக்கு அந்த உரிமையை கொடுக்கலாம் என்று தான் தோன்றுகிறது”


ரோஹித் “என்னடா சொன்ன? திரும்ப சொல்லு, இத்தனை வருஷமா எனக்கு பிடிக்கல, நம்பிக்கை இல்ல, அதை பத்தி பேசாதீங்கன்னு தான் சொல்லுவ, இன்னைக்கு தான் first time ஒருத்திக்கு உன் இதயத்தை அலங்கரிக்கும் உரிமையை தரலாம் என்று தோன்றுகிறது என்று சொல்கிறாய், இது கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் தான், இந்த திடீர் மாற்றம், முன்னேற்றத்திற்கு காரணமான அந்த பெண் யார்?” என்று ரோஹித் ஆர்வமாக கேட்டான். 


“ம்ம்ம் ஒருவேளை என்று தான் சொன்னேன், கண்டிப்பாக என்று சொல்லவில்லை”


“தெரியும் தெரியும் ஆனால் நீ இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் தான், சொல்லுடா யார் அந்த பெண்”


நந்தன் ஒரு புன்னகையுடன் உனக்கு வேறு வேலை இல்லை என்பது போல் தலையை அசைத்து மறுத்தான், படுக்கையில் பூக்களை கொண்டு அலங்கரித்துகொண்டே. 


“ஹேய் சிரிச்சு மழுப்பாத, யாருன்னு சொல்லு, ஒரு clue வாவது கொடு”


“ம்ம்ம்ம் நடக்கும் போது எப்படியும் உனக்கு தெரிய தானே போகிறது, அப்போது பார்த்துக்கொள்” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு போக எத்தனித்து திரும்பியவன் இனிப்பு தட்டுகளுடன் வந்த தீபிகாவின் மோத அவள் கீழே விழப்போனாள். “ஹேய் பார்த்து” என்று அவள் கையை பிடித்து விழாமல் தடுத்தான். பழ தட்டுடன் வந்த ஸ்ரீஜா இவர்களையும் ரோஹித்தையும் மாறி மாறி பார்த்து புன்னகைத்தாள்.


“sorry நான் வருகிறேன்” என்று தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த தீபிகாவின் கையை விடுவித்து தன் அறைக்கு சென்றான். 


நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை தன் கைகளால் துடைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தான் நந்தன். ஏனோ அவன் மனம் சஞ்சலம் அடைந்தது. நேரத்தை பார்த்தான். 7 மணி என்று காண்பித்தது. மொபைலை எடுத்து contacts சென்றான், ம்ஹ்ம்ம் என்று மறுப்பாய் தலை அசைத்துவிட்டு வேக வேகமாக கீழே இறங்கி கிடுகிடுவென்று காரை எடுத்துக்கொண்டு யாரும் கேள்வி கேட்பதற்குள் பறந்தே விட்டான். அவன் எப்போதும் செல்லும் சிவன் கோயிலுக்கு சென்று அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செலவழித்துவிட்டு வீடு திரும்பினான்.


இதற்கிடையில் ரோஹித் தன் பெரியம்மாவிடம் சென்று ரகசியமாக சொன்னான். “பெரியம்மா இன்னைக்கு நந்தன் என்ன சொன்னான் தெரியுமா?” “என்ன சொன்னான்?” என்று அவர்கள் கேட்க “ஒரு பெண்ணுக்கு ஒருவேளை அவன் இதயத்தில் இடம் கொடுப்பான் என்று தோன்றுகிறதாம், இதுவரை எனக்கு காதல் கல்யாணம் பிடிக்காது என்று சொன்னவன் இன்று இப்படி சொல்கிறான், அது மட்டுமல்ல தீபிகாவை பார்த்து கொஞ்ச நேரம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். ம்ம்ம் நீங்கள் இதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்” என்று கண்ணை சிமிட்டினான். “தெரியும்டா, நானும் காலையில் இருந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறேன், எல்லாம் சீக்கிரம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புகிறேன், பார்க்கலாம், அந்த கடவுள் கண் திறக்க வேண்டும்” என்றார் கமலா அம்மா.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018