Sms ch 72 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 72
நந்தன் கண்களில் கண்ணீர் வழிய சத்யா செய்வதறியாமல் திகைத்தாள். அவன் கண்களை துடைத்துவிட துடைத்துவிட மீண்டும் மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் மௌனமாக அழுவதை பொறுக்க முடியாமல் நந்தனிடம் அவன் பெற்றோரை பற்றி விசாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
“அத்தையும் மாமாவும் எப்போ எப்படி இறந்தார்கள்?” என்றாள் அவன் கேசத்தை கோதி விட்டபடியே.
நந்தனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“உங்களுக்கு உங்க அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” என்று வேறு கேள்வியை கேட்டாள். ஒருவேளை வாய் விட்டு பேசினால் நந்தனுக்கு பாரம் குறைய வாய்ப்புள்ளது என்று எண்ணினாள்.
“ரெண்டு பேரையும் பிடிக்கும், ஆனா அம்மா தான் ரொம்ப நெருக்கம், அவங்க கூட தான் நெறைய time spend பண்ணிருக்கேன்” என்றான்.
சத்யா மனதிற்குள் “நல்லவேளை கொஞ்சம் பேச ஆரம்பித்துள்ளார்” என்று நினைத்தவள் “அப்பா என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாங்க?” என்றாள்.
“என்னென்னவோ பிசினஸ் பண்ணினாங்க, என்ன நேரமோ தெரியவில்லை, முதல் தொழிலை தவிர வேறு எதுவும் சரியாக வரவில்லை, அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணினதால குடும்ப ஆதரவு இல்லை, கரூர் பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்தோம், கிராமம் கூட இல்ல, ரெண்டு கிராமங்களுக்கு நடுவுல வீடுகளே அவ்வளவாக இல்லாத ஒரு வயல்காட்டிற்கு நடுவில் இருந்த வீட்டில் குடி இருந்தோம்”
“ஓஹ் அப்படின்னா உங்களுக்கு அக்கம் பக்கத்துல friends யாரும் இல்லையா?” என்று கொஞ்சம் இலகுவான கேள்விகளாய் கேட்டாள்.
“கொஞ்ச தூரம் நடந்து போனா இன்னொரு வீடு இருக்கும், அங்க ஒரு பையன் என்னோட friend, நானும் அவனும் கிட்ட தட்ட 3 km நடப்போம் தினமும் பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு செல்ல”
“3 km ஆ? பஸ் எதுவும் இல்லையா?”
“ம்ஹ்ம்ம் இல்லை, ஒரு 2 km நடந்து போனா ஒரு train ஸ்டேஷன் வரும், அங்க இருந்து முக்கியமான ஊருக்கு எல்லாம் போகலாம்”
“ம்ம்ம் சரி நீங்க அங்க எத்தனாவது வர படிச்சீங்க?”
“இரண்டாம் வகுப்பு வரை, அதன் பிறகு சென்னை வந்து விட்டேன்”
அவன் பெற்றோர் இறந்த பிறகு தான் சென்னை வந்துள்ளான் என்று சத்யாவிற்கு தெரியும், இருந்தாலும் நேரடியாக அவன் பெற்றோர் மறைவை பற்றி கேட்டால் பதில் வராது அல்லது மீண்டும் அவன் கண் கலங்க வாய்ப்புள்ளது என்று எண்ணி சுற்றி வளைத்து அவன் சிறு வயது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள முற்பட்டாள்.
“எப்படி நீங்கள் அங்கிருந்து அந்த வயதில் தனியாக சென்னை வந்தீர்கள்? உங்களுக்கு பயமாக இல்லையா?”
“கொஞ்சம் பயமாக தான் இருந்தது சத்யா, ஆனால் வேறு வழி இல்லை, முதலில் நீ போய் train station ல் காத்திரு, பின்னாலயே நான் வந்து விடுகிறேன் என்று சொன்ன அம்மா என்னை ஏமாற்றிவிட்டு……” என்று தன் கண்ணீரை சத்யாவிடம் இருந்து மறைக்கும் பொருட்டு வேகமாக அவள் மடியில் இருந்து எழுந்து அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நின்றான். Curtain ஐ லேசாக ஒதுக்கி மின்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் வெளியே பார்த்தான், அவன் கண்களில் இருந்த கண்ணீர் அந்த வெளிச்சத்தில் பளபளத்தது.
சத்யா அவன் தோள்களில் கை வைத்தாள்.
“நீங்கள் உங்கள் கண்ணீரை என்னிடம் மறைக்க வேண்டியதில்லையே” என்று சத்யா சொன்னாள். “இல்லை சத்யா இந்த பேச்சை எடுத்தாலே நான் உடைந்து விடுவேன், பிறகு எழுந்திரிக்க எனக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும், அதுவும் சிரமப்பட்டு தான் மீண்டு வருவேன், அதனால் தான் இதை பற்றி பேசாமல் இருக்க முயற்சிக்கிறேன்”
“எத்தனை நாட்கள் உங்களுக்குள்ளேயே இந்த துன்பங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள்? இனி நம் வலிகளை நாம் தானே ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து ஆறுதல் சொல்லி தேற்றி கொள்ள வேண்டும்”
“ம்ம்ம் நீ சொல்வதும் சரி தான், இந்த வலியை எதிர்கொள்ள முடியாமல் தப்பிக்கும் முயற்சி தான் மற்ற பெண்களிடம் நான் கொண்ட உறவு எல்லாம், ஆனால் அவர்களுடன் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர வலி மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கும், ஆனால் உன்னை முதன் முதலாக சந்தித்த அன்று எந்த உடலுறவும் இல்லாமலேயே நிம்மதியாக தூங்கினேன், இனி நீ எனக்கு துணையாக இருப்பாய் என்பதின் அறிகுறியா அது என்று தெரியவில்லை”
“அதில் சந்தேகம் என்ன? கண்டிப்பாக நான் இருக்கும் போது எந்த வலியோ, மன அழுத்தமோ உங்களை நெருங்க விட மாட்டேன், உடனே நீயே எனக்கு ஒரு மன அழுத்தம் தான் என்று சொல்லி விடாதீர்கள்” என்று சத்யா பாவமாக சொல்லி புன்னகைக்க நந்தன் தன் இறுக்கம் மறந்து வாய்விட்டு சிரித்தான்.
சத்யாவை இழுத்து அணைத்து கொண்டான். “என் செல்லம் டா நீ, அது ஏன்னு தெரியல, மற்ற பெண்களுடன் sex வைத்தால் கூட கிடைக்காத நிம்மதி உன்னை பார்த்தாலே எனக்கு கிடைத்துவிடும், ஒருவேளை அது தான் காதல் என்ற உணர்வு போல, இன்று நீ என் கைகளுக்குள் இருக்கிறாய், கண்டிப்பாக என் மனதில் உள்ள காயங்கள் எல்லாம் நீ ஆற வைத்துவிடுவாய் என்று தோன்றுகிறது” என்று நந்தன் அவளின் இடுப்பை இரு கைகளாலும் பிடித்தபடி சொல்ல சத்யா கொஞ்சம் எக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். “கண்டிப்பா உங்கள் காயங்களை ஆற்றி விடுவேன்” என்று மீண்டும் முத்தமிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
நந்தன் அவளை அணைத்தவாறே ஒரு பெருமூச்சு எடுத்துவிட்டு சொன்னான். “நீ சொன்ன இல்ல, நீங்க ரொம்ப perfect, யாரையும் சந்தேகப்பட மாட்டீர்கள், judge செய்ய மாட்டீர்கள் என்று, நான் perfect எல்லாம் இல்ல டா, நானும் சந்தேகப்பட்டுள்ளேன், அதற்கான பெரிய விலை ஒன்றையும் கொடுத்துள்ளேன், அதனால் தான் யாரையும் எந்த சூழ்நிலையிலும் சந்தேகப்படாமல் இருக்க முயற்சி செய்கிறேன்” என்று சொல்ல சத்யா அவனை கேள்வியாக பார்த்தாள். நந்தன் மீண்டும் அவளை கட்டிலில் அமர வைத்து அவள் மடியில் படுத்துக்கொண்டு தன் சிறு வயது வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தான்.
நந்தனின் அப்பா குருமூர்த்தி, அம்மா ராதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வந்து நிற்க குருமூர்த்தியின் அப்பா ராமலிங்கமும் அதை ஏற்கவில்லை, ராதா குடும்பத்தினரும் அவர்களை ஏற்கவில்லை. சென்னையில் இருந்து எங்கே செல்வதென்று தெரியாமல் தவித்த அந்த தம்பதியினர் கால் போன போக்கில் முதலில் சென்றது திருச்சி.
அங்கே குருமூர்த்தி தன் அண்ணன் சத்தியமூர்த்தி அப்பாவிற்கு தெரியாமல் கொடுத்த பணத்தில் ஒரு சிறு பகுதியை எடுத்து வாழ்வாதாரத்திற்கு என்று ஒதுக்கி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து புது மனைவியுடன் தங்கினார். இருவரும் குடும்பம் நடத்த கொஞ்சம் பொருட்களையும் வாங்கி கொண்டனர். சத்தியமூர்த்தி கொடுத்த பணத்தில் பெரும் பகுதியை எடுத்து குருமூர்த்தி மொத்த விலைக்கு துணிமணிகள் வாங்கி வீதி வீதியாக சென்று விற்கும் சின்ன வியாபாரத்தை தொடங்கினார்.
ஓரளவிற்கு வருமானம் வர தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற
ஆரம்பித்தனர். குருமூர்த்தி தனக்கென்று ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கி கொண்டார். அதில் துணிகளை எடுத்து கொண்டு ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு சென்று விற்று வருவார். குருமூர்த்தியும் ராதாவும் இல்லற வாழ்க்கையிலும் மகிழ்வாகவும் ஒருவர் துவண்டால் மற்றவர் தூக்கி நிறுத்துபவராகவும் ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்தார்கள்.
ராதா பொதுவாக யாரோடும் அதிகமாக பழக மாட்டார்கள். அவர்கள் உலகம் எல்லாம் குருமூர்த்தியை சுற்றி தான். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் அவர்கள் உலகம் அழகான ஆண் குழந்தையாக பிறந்த நந்தனையும் சுற்றி வர ஆரம்பித்தது.
நந்தனும் வளர ஆரம்பித்தான். அதிகமான சுட்டி தனமும் இல்லாமல் அதே சமயம் தன் பெற்றோரிடம் மட்டும் கொஞ்சம் குறும்பு தனம் செய்யும் குழந்தையாகவும், நல்ல புத்தி கூர்மையுள்ள குழந்தையாகவும் வளர்ந்தான். அவ்வப்போது தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா சொந்தங்கள் நமக்கு இல்லையா என்று தன் பெற்றோரிடம் கேட்பான். எல்லோரும் சென்னையில் இருக்கிறார்கள். நாம் சொந்த வீடு கட்டி, ஓரளவிற்கு வசதி வாய்ப்பு வந்ததும் அவர்களை சென்று பார்க்கலாம். உன்னை தாத்தாவிற்கு, உன் பெரியம்மா பெரியப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியே ராதாவும், குருமூர்த்தியும் அவனை வளர்த்தார்கள்.
நன்றாக உழைத்து சம்பாரித்து ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் அப்பா, அண்ணன், அண்ணி, உடன் பிறந்தவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வைராக்கியமும் குருமூர்த்தியையும், ராதாவையும் ஓயாமல் உழைக்க வைத்தது. ஓரளவிற்கு வந்த வருமானத்தில் ஒரு பகுதியை மீண்டும் தொழிலை விரிவு படுத்த எண்ணி ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு பகுதியில் வயல் நிலத்துடன் கூடிய இடம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டனர்.
குருமூர்த்தி ராதா இருவருமே கொஞ்சம் அமைதியான சூழ்நிலையை விரும்பி கரூருக்கு வெளியே அதே சமயம் திரிச்சிக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று வரும் படியாக வயல்வெளியுடன் கூடிய இடம் ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார்கள். அங்கே சொந்த பந்தங்கள் வந்தால் தங்க வசதியாக பெரிய அளவிலான திட்டத்துடன் வீட்டிற்கு திட்டமிட்டு அடிக்கல் போட்டு அறைகளை கட்டி முடித்தாலும் ஒரே அடியாக இதில் பணத்தை இப்போதே இறக்க வேண்டாம் என்று சுதாரித்து அறைகளின் மேல் குடிசை போட்டு கொண்டார்கள்.
நந்தன் அங்கிருந்து நடந்து சென்று பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் படித்துவிட்டு திரும்புவான். குருமூர்த்தியும் ராதாவும் அவனை சிறு வயதில் இருந்தே தற்சார்புடையவனாக வளர்த்தார்கள்.
சந்தோஷமாக அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது தான் கரூரில் இருந்து திரிச்சி செல்லும் வழியில் குருமூர்த்திக்கு விபத்து நடந்தது. நல்லபடியாக உயிர் பிழைத்தாலும் சில அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொழில் நஷ்டம் அடைந்தது. அதன் பிறகு பக்கத்து கிராமத்தில் பெரிய பணக்காரர் ஒருவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி மீண்டும் தொழிலை முன்னேற்ற நினைத்தார் குருமூர்த்தி.
ஆனால் அவர் நினைத்ததுபோல் தொழில் முன்னேற்றம் காணவில்லை. வெவ்வேறு தொழில்கள் முயற்சி செய்து பார்த்தார். சரியாக வரவில்லை. தங்கள் நிலத்தில் விவசாயம் செய்தனர். அது சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லாமல் கொண்டு சென்றது. ஆனால் சீக்கிரமாக முன்னேறி உருப்பட மாட்டாய் என்று சொன்னா தன் தந்தை முன்பு முன்னேறி நிற்க வேண்டும், மீண்டும் சொந்த பந்தங்களுடன் சேர வேண்டும் என்ற அவரது விருப்பம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது குருமூர்த்திக்கு மன உளைச்சளை ஏற்படுத்தியது.
யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு மீண்டும் கொஞ்சம் கடன் வாங்கி ஒரு வருடம் வெளிநாட்டுக்கு சென்று சம்பாரித்து வருவதாக சொல்லி குருமூர்த்தி மலேஷியா புறப்பட்டார். ராதாவும் நந்தனும் தடுத்தும் கேட்காமல் புறப்பட்டார்.
சென்றவரிடம் இருந்து பணமோ கடிதமோ தகவலோ எதுவும் வரவில்லை. அவர் இல்லாமல் கொஞ்ச நாட்கள் விவசாயம் பார்த்த ராதா மழை வந்து பயிர் எல்லாம் அடித்து செல்லவும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள். இருக்கும் சேமிப்பை வைத்து நந்தனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு தான் பல நாள் பட்டினி கிடப்பாள். கடன் கொடுத்த பணக்காரர் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மிரட்டி விட்டு செல்வார். ராதாவும் தன் கணவன் கொடுத்த முகவரிக்கு கடிதம் எழுதி கொண்டே இருந்தாள். ஒரு பதிலோ பலனோ இல்லை.
சரி தானே வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தவள் அந்த கிராமத்தில் பெரிதாக வேலை கிடைக்காத காரணத்தினால் பல கிலோமீட்டர் நடந்து சென்று train station சென்று அங்கிருந்து பக்கத்து ஊருக்கு சென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து இரவு வர மணி 8 ஆகி விடும். நந்தன் பள்ளி முடித்ததும் train station மேலே இருக்கும் பாலத்தில் தெரு விளக்கில் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு தன் அம்மாவிற்காக காத்திருப்பான்.
வரும் போதே நந்தனுக்காக அவன் அம்மா ஏதாவது சாப்பிட வாங்கி வருவார்கள்.
“நந்து நீ ஏன் இவ்வளவு நேரம் எனக்காக காத்திருக்கிறாய், நீயும் உன் நண்பனுடன் சேர்ந்தே நம் வீட்டிற்கு செல்லலாம், இல்லை என்றால் நான் வரும் வரை அவன் வீட்டில் அவனோடு விளையாடி கொண்டிருக்கலாம் அல்லவா?” என்று ராதா கேட்க,
“இல்லம்மா, இங்க இருந்து night நீ தனியா வரறது கஷ்டமா இருக்கும் இல்ல, நான் வந்தா உனக்கு துணையா இருக்கும் இல்ல?” என்பான் நந்தன்.
ராதா அவனை தூக்கி அணைத்து கொண்டு நடப்பாள். “அம்மா நான் நடந்தே வரேன்” என்று நந்தன் சொன்னாலும், எவ்வளவு உடல் அலுப்பு இருந்தாலும் ராதா அவனை தூக்கி கொண்டே அந்த 2km ம் நடப்பாள்.
ஞாயிறு மட்டும் விடுமுறை, அன்று நந்தனும் ராதாவும் சேர்ந்து தோட்டத்தில் காய்கறி போடுவது, வேறு வீட்டு வேலைகள் செய்வது என்று செய்வார்கள். நந்தன் எவ்வளவு மறுத்தாலும் கொஞ்ச நேரம் உன் நண்பனுடன் சென்று விளையாடி வா என்று ராதா அவனை தள்ளி இருந்த அந்த ஒரே வீட்டிற்கு நந்தனை அனுப்பி வைப்பாள்.
அப்போது தான் நந்தனின் நண்பன் அந்த சிறுவன் ஒரு விஷயத்தை நந்தனுக்கு சொன்னான்.
“டேய் நந்தா, உன் அம்மா நல்லவங்க இல்லன்னு என் அண்ணன் சொன்னான் டா” என்று சொல்ல நந்தனுக்கு கோபம் மூக்குக்கு மேல் வந்தது. அவன் நண்பனை அடிக்கவே ஆரம்பித்து விட்டான்.
அந்த சிறுவனின் அண்ணன் வந்து “ஏன் டா என் தம்பியை அடிக்கிற? உன் அம்மா கெட்டவங்க தான், எல்லா ஞாயித்து கிழமையும் உன்னை இங்க விளையாட அனுப்பிட்டு அவங்க அங்க அந்த பக்கத்து கிராமத்துல இருந்து வருவானே ஒரு பணக்காரன், அவனோட தப்பு பண்றாங்க, உனக்கு தைரியம் இருந்தா உன் அம்மாவை போய் ஏன் இப்படி தப்பு பண்றீங்கன்னு கேளு” என்று சொல்ல நந்தன் அவனையும் அடித்தான். ஆனால் அவன் கொஞ்சம் வயதில் பெரியவன் என்பதால் நந்தனை திருப்பி அடித்து உதைத்தான். நந்தனும் விடாமல் அவனுடன் சண்டை போட அப்போது அந்த சிறுவர்களின் அம்மா வந்து “கருமம் கருமம் உன் அம்மாவை பார்க்க அவன் அங்க போயிருக்கான், உன் அம்மா உன்னை இங்கே அனுப்பி விட்டு அவனோடு கூத்தடிக்கிறாளா? நீ என் பிள்ளைகளை அடிக்க வரியா?” என்று அந்த அம்மாவும் நந்தனின் கன்னத்தில் அறைந்து அனுப்பினார்கள்.
நந்தன் அழுகையும் கோபமுமாக வீட்டிற்கு வர அந்த பணக்காரனின் புல்லட் வண்டி அவர்கள் வீட்டின் வாசலில் நின்றது.
சற்று நேரத்திற்கு முன் அங்கே நடந்த உரையாடல். “எப்போ தான் காச திருப்பி தரப்போற, போனவன் உன்னை விட்டுட்டு போய்ட்டான், அவன் எங்கயாவது போய் வேற கல்யாணம் பண்ணிட்டு கூட நிம்மதியா இருப்பான், நீ இங்க ஒரு பையனை வச்சுக்கிட்டு வாயுக்கும் வயித்துக்கும் கஷ்ட பட்டுட்டு இருக்க, நான் சொல்றத கேளு, என் இஷ்டப்படி நடந்துக்கோ, உன்னையும் உன் பிள்ளையையும் நான் பாத்துக்கிறேன்” என்று சொல்ல ராதா சொன்னாள்.
“எப்படியாவது கஷ்டப்பட்டு மாசா மாசம் வட்டியை குடுத்துடுறேன், அவர் எங்க எப்படி மாட்டிகிட்டு கஷ்டப்படுறாரோ, ஆனால் எப்படியும் என்னையும் அவர் மகனையும் பார்க்க திரும்பி வருவார், தயவு செய்து நீங்கள் தவறாக பேச வேண்டாம், நீங்கள் இப்போது புறப்படலாம்”
“ம்ம்ம் நானும் வாரா வாரம் வந்து சொல்லி பாக்குறேன், கேக்க மாட்டேங்குற, மயிலே மயிலேன்னா இறகு போடாதாம், என்னை பத்தி உனக்கு தெரியல, வலுக்கட்டாயாமாக…”
“ஐயா மன்னிக்கவும், இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், போலீசிடம் செல்வேன்”
“இந்த ஊருக்கு ரெண்டு பக்கம் இருக்க போலீசும் எனக்கு அடி பணிஞ்சவங்க, அவங்க கிட்ட போய் சொல்றதுக்கு பதிலா நான் சொன்னதை நீ ஏற்று ஒழுங்காக நடந்து கொள்ளலாம், அது தான் உனக்கும் உன் மகனுக்கும் நல்லது, ஏற்கனவே நான் தான் உன்னை வைத்திருக்கிறேன் என்பது போல் இரண்டு பக்க கிராமங்களிலும் பேச்சை பரவ விட்டுள்ளேன், நீ தினமும் வேலைக்கு செல்வது கூட என் பண்ணை வீட்டிற்கு வந்து என்னை சல்லாபிக்க தான் என்ற வதந்தியும் கிளப்பி விட்டுள்ளேன், இனி நீ என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது”
இதற்கு மேல் இவரோடு வாதிடுவது ஆபத்தானது. கெளரவம் பார்க்காமல் முடிந்த அளவு சீக்கிரமாக சென்னைக்கு சென்று அக்கா, அத்தானிடம் சரணடைய வேண்டியது தான் என்று ராதா முடிவுக்கு வந்தாள். இந்த நாயிடம் மானத்தை இழப்பதற்கு மாமனாரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தாள்.
“ஐயா எனக்கு கொஞ்சம் யோசிக்க கால அவகாசம் வேண்டும், அடுத்த வாரம் நீங்கள் வரும் போது ஒன்று உங்கள் கடனை பணம் கொடுத்து அடைக்கிறேன், இல்லை என்றால் என்று தயங்க…..”
“பரவால்லையே புத்திசாலி பெண்ணாக தான் இருக்கிறாய், சரி அடுத்த வாரம் வரை தானே, காத்திருக்கிறேன், எனக்கும் தானாக கனிந்தால் தான் பழத்தை ருசிக்க பிடிக்கும்” என்று சொல்லி இழிசலாக ஒரு சிரிப்பை சிரித்து விட்டு வெளியே வர நந்தன் அழுகையும் ஆத்திரமுமாக தொலைவில் வந்து கொண்டிருந்தான். அந்த பணக்காரன் வண்டியை பார்த்து அவன் கால்கள் தயங்க அதே சமயம் அந்த பணக்காரனும் வாய் நெறைய புன்னகையுடன் வெளியே வந்தான்.
நந்தனுக்கு அவனை பார்த்ததும் ஆத்திரம் பொங்கி கொண்டு வந்தது. “நீ ஏன் இங்க வர?” என்று நேரடியாக அவனை பார்த்து கேள்வி கேட்டான்.
அந்த பணக்காரன் சிரித்து கொண்டே “உன் அம்மாவிற்காக தான் வருகிறேன், இனிமேல் அடிக்கடி வருவேன்” என்று சொல்லி புல்லட்டில் ஏறி புறப்பட நந்தன் கோபத்தில் எரிந்த கல் அவன் வண்டியை அடித்து கீழே விழுந்தது. அதற்கும் திரும்பி பார்த்து ஒரு புன்னகையோடே அந்த பணக்காரன் வண்டியை ஓட்டி சென்றான்.
நந்தன் கோபமாக வீட்டிற்குள் சென்று “அம்மா இந்த ஆள் ஏன் இங்க வரான், இனிமேல் அடிக்கடி வருவேன் சொல்றான், உன்னை பற்றி எல்லோரும் தவறாக பேசுகிறார்கள்” என்று ஆவேசமாக கேட்டான்.
“நந்து என்னப்பா இது, கன்னம் எல்லாம் விரல் பதிஞ்சு இருக்கு, யார் உன்னை அடிச்சா?” என்று ராதா பதறினாள்.
“உன்னால தான், உன்னை பத்தி தப்பா பேசுனாங்கன்னு அடிச்சேன், பதிலுக்கு அடிச்சு திருப்பி அனுப்பிட்டாங்க” என்றான்.
ராதா கண்ணீருடன் நந்தனை அணைக்க முயல நந்தன் அவளிடம் இருந்து விலகி நின்றான்.
“உன்னை பத்தி ஏன் எல்லாரும் தப்பா பேசுறாங்க?”
“நந்து உலகம் எப்படி வேண்டுமானாலும் பேசும், அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளக்கூடாது, நம் வாழ்க்கை, நம் கஷ்டங்கள் நமக்கு மட்டும் தான் தெரியும், அம்மாவை சந்தேகப்படாதே, வா உனக்கு மருந்து போட்டு விடுறேன், நமக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன” என்று நந்தனின் கைகளை பிடித்து இழுக்க முயல நந்தன் “போ மா, உன்னால எனக்கு இன்னைக்கு எவ்வளவு அசிங்கம் தெரியுமா? என்கிட்ட பேசாத” என்று பின்வாசல் வழியாக ஓடி விட்டான்.
மிஞ்சி போனால் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் ஏறி படுத்து கொள்வான், துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு அவனை அழைத்து வரலாம் என்று எண்ணி ராதா பயணத்திற்கு தேவையான உடைகள், நந்தனின் பிறப்பு சான்றிதழ், புத்தகங்கள், சேமிப்பில் வைத்திருந்த பணம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். இரவில் ஒரே ஒரு சென்னை செல்லும் train வரும். இன்று இரவே அந்த train ஐ பிடித்து சென்னை சென்று விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்று மாமரத்தில், மற்ற எல்லா இடங்களிலும் நந்தனை தேட அவனை காணவில்லை.
நந்தனை தேடி களைத்து போய் வீடு வந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவள் கணவன் குருமூர்த்தி காத்திருந்தார். கண்கள் கலங்க அவரை சென்று அணைக்க அவரும் தன் மனைவியை ஆரத்தழுவினார்.
நடந்த எல்லாவற்றையும் ராதா அவருக்கு சொல்லி உடனே சென்னை சென்றுவிடலாம் என்று வலியுறுத்தினாள். தான் செல்ல இருந்த இடத்தில் கடைசி நிமிடத்தில் வேலை இல்லை என்று சொல்லி வேறு இடத்திற்கு வேலை செய்ய நேரிட்டதாகவும் அங்கே கடித போக்கு வரத்திற்கு தடை வித்திதாகவும் அதனால் தான் கடிதம் எழுத முடியவில்லை என்றும் கூறியவர், மற்றபடி நல்ல வேலையும் சம்பளமும் கிடைத்ததால் நன்றாக வேலை செய்து தான் சேமித்து கொண்டு வந்த பணத்தில் கடனை அடைத்துவிடலாம், மீண்டும் முன்னேறி தான் தன் தந்தையை பார்க்க செல்ல வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்.
ஊர் உலகம் தன்னை தவறாக பேச ஆரம்பித்து விட்டது, அது நந்தனையும் பாதிக்கிறது என்று ராதா கவலைப்பட ஊர் உலகத்திற்கு பயப்பட கூடாது, நந்தனுக்கு நான் புரிய வைக்கிறேன் என்று அவரும் நந்தனை தேடி சென்றார்.
Comments
Post a Comment