Sms ch 61 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 61


சத்யா நந்தனின் அரவணைப்பில் அழுது ஓய்ந்து மீண்டும் பேசினாள். 


“துரைசாமி எப்படி உங்களுக்கு வீடியோ அனுப்பினார்?” 


“துரைசாமி உன்னை தொல்லை செய்யக்கூடாது என்பதற்காக ராகவனின் காவல் துறை நண்பர்களை வைத்து காரில் வேகமாக சென்றார் என்ற முறையில் அமைந்தகரை பக்கம் வரக்கூடாது என்று சொல்லி அவரை மிரட்டி இருந்தோம்”


“அதனால் தான் துரைசாமி அந்த பக்கமே வருவதில்லையா?” என்று அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து கேட்டாள். 


“ஆமாம், பிறகு ஒருநாள் உன்னுடைய வீடியோக்கள் சில இருப்பதாகவும், அதற்கு ஒரு தொகையை நான் தராவிட்டால் அவற்றை நெட்டில் பரவ விடுவதாகவும் என்னை மிரட்டினார், இது குறித்து போலீசிடம் நான் சென்றால் வேறு ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவேன் என்று சொன்னார், அந்த ஆயுதம் உன் இருப்பிடத்தை ஷ்யாமிடம் காட்டி கொடுப்பது தான் என்று ஊகித்து இருந்தேன், நான் அவருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வீடியோக்களை வாங்கி கொண்டது மட்டுமில்லாமல் அவர் மகளின் சிகிச்சைக்கும் உதவினேன், ஷ்யாம் இங்கே வந்து உனக்கு ஊசி போட்டு பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் துரைசாமியை விசாரிக்க அழைத்த போது உயிருக்கு பயந்து துரைசாமி வர மறுத்துவிட்டார், ஆனால் அவர் மகளின் சிகிச்சைக்கு நான் உதவிய நன்றி கடனுக்காக ஒரு வீடியோ தருவதாகவும், அதை வைத்து ஷ்யாமை பிடிக்க சொல்லியும் இந்த வீடியோவை அனுப்பினார்” என்று சொல்லிய நந்தன் திடீரென்று சத்யாவை தன் அணைப்பில் இருந்து விடுவித்து கட்டிலில் இருந்து கீழே இறங்கி ஏதோ யோசனையில் இங்கும் அங்கும் நடக்கலானான்.


சத்யா நந்தனின் திடீர் செய்கை புரியாமல் விழித்தாள். அவளுக்கு மனதில் வேறு ஒரு சஞ்சலம் உருவெடுத்தது. “நானும் கௌஷிக்கும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை பார்த்திருப்பாரா? தவறான எண்ணத்தில் பார்த்திருக்க மாட்டார், ஆனால் எங்கள் வீடியோக்கள் தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு வீடியோவை பார்த்திருந்தாலும்…..” என்று எண்ணி சத்யா கூனி குறுகினாள். நந்தன் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தான். சத்யாவின் சஞ்சலத்தை அவன் கவனிக்கவில்லை.


“மும்பை வீடியோவை கூட பார்த்திருப்பாரா? மற்றவர்கள் போல் அது நான் தான் என்று என்னை தாழ்வாக நினைத்து இருப்பாரா? அல்லது அது நான் இல்லை என்று கண்டுபிடித்து இருப்பாரா? நான் இல்லை என்று கண்டு பிடித்திருப்பார். அதனால் தான் என்னை திருமணம் செய்துள்ளார்” என்று ஆசுவாசப்பட்ட சத்யாவிற்கு மீண்டும் கௌஷிக் ஞாபகம் வந்து மனதை வதைத்தது. 


“இந்த ஷ்யாம் எவ்வளவு கொடுமைக்காரன், என்ன எல்லாம் சொல்லி கௌஷிக்கை மிரட்டினானோ, அதனால் தான் சுனிதாவுடன் தனக்கு உறவு இருந்தது என்று அவர் பொய் சொல்லி இருக்க வேண்டும், அந்த படுபாவிக்கு என்மீது அப்படி என்ன வெறி? பாவம் சுனிதா, அவளும் இப்படி கதியற்று போய் விட்டாளே, நான் மட்டும் அன்று கௌஷிக் சொன்ன பொய்யை நம்பாமல் கௌஷிக்கை நம்பி இருந்தால், சுதாரித்து ஏதாவது சாமர்த்தியமாக நடந்து கொண்டிருந்தால் ஒருவேளை கௌஷிக்கையும் சுனிதாவையும் காப்பாற்றி இருக்கலாம், சாகும் போது எனக்கு எத்தனை முறை call செய்துள்ளார், எடுக்காமல் விட்டு விட்டேனே, என்னை மன்னித்து விடுங்கள் கௌஷிக்” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.


நந்தன் அவள் மீண்டும் அழுவதை பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்து அவளை அணைத்து படுத்து கொண்டான். போர்வையை அவள் மீது போர்த்தி கண்ணீரை துடைத்தான். “போதும் டா, அழுதது போதும், தூங்கு” என்று தன் கைகளுக்குள் அவளை அணைத்து தூங்க வைக்க முயற்சி செய்தான். 


சத்யா மீண்டும் கௌஷிக்கையே நினைத்தாள். “நான் IAS படிக்க வேண்டும், நல்லவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரின் கடைசி நிமிடங்களில் கூட என் நலனை மனதில் கொண்டு எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறாரே, சாகும் போது நான் முதன்முதலாக அவரை அணைத்ததை நினைவு கூர்ந்து அந்த அணைப்புடன் உறங்கி விட்டாரே, நான் அவரை சந்தேகப்பட்டு விட்டேனே, அன்றும் சரி இன்றும் சரி, கௌஷிக்கின் அன்பிற்கோ நந்தனின் அன்பிற்கோ நான் சிறிதளவும் தகுதி இல்லாதவள், கௌஷிக்கை நந்தன் நேரில் பார்த்தது இல்லை, பேசியது இல்லை, ஆனால் அவருக்கு கௌஷிக் மேல் இருக்கும் நம்பிக்கை எனக்கு இல்லாமல் போய்விட்டதே” என்று தன்னை தானே நொந்து கொண்டவள் “ஆனால் கௌஷிக் ஆசைப்பட்டது போல் ஒரு நல்லவர் தான் என்னை திருமணம் செய்துள்ளார், கௌஷிக் ஆசைப்பட்டது போல் IAS க்கும் படிக்க வேண்டும்” என்ற தீர்க்கமான முடிவெடுத்தாள் சத்யா. 


“ஆனால் சாகும் போது கூட வளர்த்த வீட்டிற்கு துரோகம் செய்யக்கூடாது என்று ஷ்யாம் தான் விஷ ஊசி போட்டான் என்று எழுதவில்லையே, ஷ்யாமை நம்பாதே என்று என்னை எச்சரித்ததோடு நிறுத்தி கொண்டாரே, அவரை கொல்ல அந்த நாய்க்கு எப்படி மனம் வந்தது” இப்படி மாறி மாறி யோசித்து அழுது அழுது நந்தனின் அணைப்பில் கண் அயர்ந்தாள் சத்யா. 


நந்தன் இன்னும் தீவிர யோசனையில் இருந்தான். “நாளை முதல் வேலையாக துரைசாமிக்கு call செய்ய வேண்டும்” என்று முடிவெடுத்து விட்டு கண் அயர்ந்தான்.


மறுநாள் காலை எழுந்த நந்தன் சத்யா இன்னும் தூங்குவதை பார்த்துவிட்டு “பாவம் இரவெல்லாம் கௌஷிக்கை நினைத்து அழுது கொண்டே இருந்தாள், தூங்கட்டும்” என்று அவளை எழுப்பாமல் காலையே கம்பெனிக்கு புறப்பட்டு விட்டான். 


அம்பத்தூர் ஆபீஸ் சென்றதும் துரைசாமிக்கு call செய்தான். துரைசாமி எடுக்கவில்லை. தொடர்ந்து call செய்தும் துரைசாமி எடுக்கவில்லை. நந்தனுக்கு டென்ஷன் அதிகம் ஆனது. அதிலிருந்து மனதை கட்டுப்படுத்த கம்பெனியை ரௌண்ட்ஸ் வர புறப்பட்டான். மணிமாறனை கடந்த நந்தனுக்கு மணிமாறன் மீண்டும் தன்னிடம் ஏதோ சொல்ல தயங்குவதாக தோன்றியது. மணிமாறனை பார்த்து பொறுமை இழந்து “மணிமாறன் என் ஆபீஸ் வெளியே காத்திருங்கள், நான் ஒரு ரௌண்ட்ஸ் போய்ட்டு வந்து உங்களை சந்திக்கிறேன்” என்று பணித்து விட்டு ரௌண்ட்ஸ் சென்றான். எல்லா பிரிவுகளையும் வலம் வந்துவிட்டு ஆபீஸ் வெளியே காத்திருந்த மணிமாறனை உள்ளே அழைத்து சென்று “உட்காருங்கள்” என்றான். 


“இல்லை பரவாயில்லை சார்” என்றார் மணிமாறன்.


“சரி சொல்லுங்கள், என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் சொல்லாமல் தவிக்கிறீர்கள், என்ன விஷயம்?”


“நீங்கள் தவறாக நினைக்க கூடாது” என்று சொல்ல நந்தன் பொறுமை இழந்தான். “மணிமாறன் நானே காலையில் இருந்து டென்ஷனாக உள்ளேன், நீங்கள் வேறு என் டென்ஷனை அதிக படுத்தாதீர்கள்” என்று கடுப்பாக சொல்லவும் “சாரி சார், அப்படி என்றால் அதை இப்போது பேசுவது நன்றாக இருக்காது, நான் பிறகு வருகிறேன்” என்று சொல்ல “மணிமாறன் சொல்லிவிட்டே செல்லுங்கள்” என்றான் மணிமாறனை தீவிரமாக பார்த்தபடி.


“அது வந்து சார், சத்யா…. சத்யா மேடம் மும்பையில்….”


“மணிமாறன் நான் கூட நீங்கள் வேலை விஷயமாக ஏதோ பேசப்போகிறீர்கள் என்று நினைத்தேன், இனி சத்யாவை பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை, நீங்கள் செல்லலாம்”


“சார் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்….”


நந்தனின் மொபைல் கிணுகிணுத்தது. துரைசாமி தான். நந்தன் உடனே “மணிமாறன் நீங்கள் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு துரைசாமியின் call ஐ attend செய்தான். மணிமாறன் வெளியேறுவதை பார்த்துக்கொண்டே நந்தன் பேசினான்.


“மன்னிச்சிடுங்க தம்பி, நான் மனைவி பொண்ணு எல்லாம் ஒரு அருவிக்கு போய்க்கிட்டு இருக்கோம், கார் ஓட்டிட்டு இருந்தேன், அதான் உடனே எடுக்க முடியல, என்ன விஷயம் தம்பி?”


“ஒன்றுமில்லை துரைசாமி, ஷ்யாம் சென்னை வந்த போது நீங்கள் எனக்கு நெறைய முறை call செய்து இருந்தீர்கள், அது ஷ்யாமின் வருகை குறித்து என்னை எச்சரிக்க தானே?” என்றான்.


“ஆமாம் தம்பி, நீங்க செஞ்ச நல்லதுக்கு உங்களுக்கு இதையாவது தெரியப் படுத்த தான்”


“நன்றி, ஆனால் அப்போது நீங்கள் கேரளாவில் தானே இருந்தீர்கள்?”


“ஆமாம் தம்பி”


“அப்படி என்றால் ஷ்யாம் சென்னையில் இருக்கும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும், நான் இருந்த பிரச்சனையில் இதை பற்றி கேட்காமல் விட்டுவிட்டேன், நேற்று தான் திடீர் என்று தோன்றியது, சொல்லுங்கள் துரைசாமி”


“அது அது வந்து தம்பி….”


“சொல்லுங்கள் துரைசாமி, ஒருவேளை நீங்களே தான் ஷ்யாமிடம் சத்யாவின் இருப்பிடத்தை காண்பித்து கொடுத்து விட்டு இங்கே நல்லவர் போல் எனக்கு எச்சரிக்கை விடுத்தீர்களா?” என்று நந்தன் கோபமாக கேட்டான்.


“அச்சச்சோ இல்லைங்க தம்பி, நான் கொஞ்சம் கெட்டவன் தான், காசுக்காக நெறைய தப்பு பண்ணிருக்கேன், ஆனா உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் தம்பி”


“அப்புறம் எப்படி ஷ்யாம் சென்னையில் இருப்பது உங்களுக்கு தெரிந்தது?”


“அது அது வந்து எனக்கு ஒருத்தவங்க தகவல் குடுத்தாங்க தம்பி”


“யார் அது?”


“அது அப்புறம் அவங்களுக்கு பிரச்சனை ஆகும் தம்பி, அப்படி இப்படின்னு விஷயம் வெளிய போச்சுன்னா ஷ்யாம் அவங்கள கொன்னுடுவான்”


“விஷயம் வெளியே போகாது, என்னை நம்பி நீங்கள் சொல்லலாம்”


துரைசாமி தனக்கு துப்பு கொடுத்தவர்களை பற்றி சொல்ல நந்தன் ஆச்சர்யப்பட்டான். “உண்மையாகவா சொல்கிறீர்கள்?”


“ஆமாம் தம்பி, உண்மையை தான் சொல்கிறேன்”


“எனக்கு அவர்கள் நம்பர் வேண்டும்”


“இல்லை தம்பி அது….. அது சரியா வராது தம்பி, பிறகு அவர்களுக்கும் பிரச்சனை, அவர்களை நெருங்கினால் அதனால் உங்களுக்கும் பிரச்சனை தான், சொல்வதை கேளுங்கள் தம்பி, நான் அனுப்பிய வீடியோ வைத்து ஷ்யாமிற்கு தண்டனை வாங்கி கொடுக்க முடிந்தால் தண்டனை வாங்கி கொடுங்கள், பிறகு நாம் எல்லோருமே நிம்மதியாக இருக்கலாம்”


“துரைசாமி ப்ளீஸ் அவர்களின் நம்பர் எனக்கு வேண்டும்”


“அது அது சரிங்க தம்பி, தயவு செய்து அவர்களுக்கோ இல்லை எனக்கோ பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி துரைசாமி ஒரு நம்பரை கொடுத்தான்.


நந்தன் அதை குறித்து வைத்துக்கொண்டு ராகவனுக்கு call செய்தான். ராகவனிடம் சில விஷயங்களை கலந்தாலோசித்தான்.


மறுபுறம் வீட்டில் சத்யாவிற்கு தலை விங் விங்கென்று வலித்தது. கண்களை திறக்க முடியவில்லை. உடம்பு லேசாக சூடாக இருந்தது. ஆனால் படுத்தே இருந்தால் படிக்க முடியாது, கௌஷிக்கிற்காகவாவது படிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு கேலரி சென்று படிக்க ஆரம்பித்தாள். அவ்வப்போது தூங்க வேண்டும் போல் இருந்தது. மேஜையின் மீது தலையை வைத்து படுத்து கொண்டாள்.


நந்தன் ராகவனிடம் கலந்தாலோசித்து விட்டு துரைசாமி கொடுத்த நம்பருக்கு call செய்து பேசினான். இருவரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்கள். நந்தன் உடனே சில ரயில்வே டிபார்ட்மென்ட்களுக்கு call செய்தான். போன வருடம் ஒருவருக்கு அஹமதாபாத் அருகே ரயிலில் வரும் போது நெஞ்சு வலி வந்தது, அவர்களின் உடைமைகள் காணாமல் போய்விட்டது, அவற்றை யாராவது ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தார்களா? அவை கிடைக்க ஏதேனும் வழி உண்டா என்றெல்லாம் விசாரித்தான். “என்ன சார் பேசுறீங்க? இப்படி மொட்டையா கேட்டா எப்படி சார் கிடைக்கும்? அதுவும் போன வருஷம் நடந்தது, சான்சே இல்லை சார்” என்ற பதில் தான் திரும்ப திரும்ப கிடைத்தது. 


நந்தன் உடனே துரைசாமிக்கு call செய்தான். சத்யாவின் அம்மா உடைமைகள் எங்கே என்று தெரியுமா என்று கேட்டான். அவர் தனக்கு தெரியாது என்று சாதித்தார். “ச்ச எப்படி அந்த உடைமைகளை அடைவது?” என்று நந்தன் பலவாறு யோசனை செய்தான். நந்தனும் ராகவனும் மாறி மாறி சில call களை செய்தனர். ரயில்வே போலீஸ், cctv என்று தகவல்களை சேகரிக்க முயற்சி செய்தனர். ஆனால் எந்த வழியும் சிக்கவில்லை. எல்லாமே நெறைய காலநேரம் எடுக்க கூடிய விஷயங்களாக இருந்தன.


நந்தன் சிறிது நேரம் உட்கார்ந்தான். “நேற்று இந்த நேரம் நம்மிடம் எந்த தகவலும் இல்லாமல், வழியும் தெரியாமல் வெறும் கையாக இருந்தோம், இன்று இவ்வளவு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழியை காண்பித்த இறைவன் கண்டிப்பாக அத்தையின் உடைமைகள் கிடைக்கவும் உதவுவான், நாம் டென்ஷன் ஆகாமல் கொஞ்சம் நிதானமாக நடக்க வேண்டும்” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான்.


இரவு தாமதமாக வந்த நந்தன் சத்யா கேலரியை விட்டு சாப்பிட மட்டும் வெளியே வந்தாள் என்று கமலா அம்மா மூலமாக கேள்விப்பட்டு கேலரி உள்ளே சென்று பார்த்தான். அங்கே புத்தகத்தின் மேல் சத்யா படுத்திருப்பதை பார்த்தான். அவள் அப்படியே தூங்கி இருப்பதையும் பார்த்தான்.


மணி 11 ஆகிவிட்டது. அனைவரும் தூங்க சென்றிருந்தனர். நந்தன் சத்யாவை தூக்கி கொண்டு மாடிக்கு சென்றான். அவளை படுக்க வைத்துவிட்டு அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு தன் லேப்டாப்பை எடுத்து சில வெப்சைட்களை browse செய்தான்.


“காணாமல் போன அத்தையின் உடைமைகளை எப்படி மீட்பது?” என்று பலவாறு யோசித்தப்படியே தூங்கி போனான். 


மறுநாளும் சத்யா நன்றாக தூங்கி கொண்டிருக்க நந்தன் காலையிலேயே ஆபீஸ் கிளம்பினான். இரண்டு நாட்களாக ஆபீஸ் வேலையை விட ஷ்யாமை எப்படி பிடிப்பது, அவனுக்கு எதிராக எப்படி தகவல்கள் சேகரிப்பது என்று தான் அவன் எண்ணம் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.


நடுவே ஒருமுறை மணிமாறனை பார்த்த நந்தனுக்கு ஏதோ உறுத்தியது. மீண்டும் மணிமாறனை தன் அறைக்கு வர வைத்தான்.


“சத்யா நல்லவள் என்று எனக்கு தெரியும், மணிமாறன் சொல்லப்போகிற விஷயம் சத்யாவை பற்றி தவறாக இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது நமது கடமை, அவளும் இந்த கம்பெனியின் உரிமையாளர், நாளை அவள் இந்த கம்பெனிக்கு வரும் போது அவளை பற்றி தவறான செய்தி எதுவும் பரவி இருக்க கூடாது” என்று மனதிற்குள் நினைத்தப்படியே நந்தன் மணிமாறனிடம் பேசினான்.


“நேற்று ஏதோ ஒரு டென்ஷனில் உங்களை திருப்பி அனுப்பிவிட்டேன், நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள்?” என்று கேட்டான். 


“அது சார், சத்யா மேடம் மும்பையில் தானே பிறந்து வளர்ந்தது எல்லாம்?” என்றார் மணிமாறன்.


நந்தன் அவரை தீவிரமாக பார்த்தப்படி “ஏன் கேட்கிறீர்கள்?” என்று கேட்க “இல்லை சார், சத்யா மேடம் பஞ்சாப் எல்லாம் போனது இல்லை தானே?” என்று கேட்டார்.


நந்தன் ஆச்சர்யமாக “சத்யா பிறந்து வளர்ந்தது எல்லாமே பஞ்சாபில் தான், என்ன விஷயம்?” என்று கேட்க “சார் நான் இது நம்ம சத்யா மேடமாக இருக்க மாட்டார்களோ என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் அவர்கள் பஞ்சாப் என்று சொல்கிறீர்கள், அவர்களாக கூட இருக்க கூடும்” என்று கீழே குனிந்து ஏதோ யோசனையோடு சொன்னார்.


நந்தன் பொறுமை இழந்தான். “மணிமாறன் புரியுற மாதிரி விஷயத்தை சொல்லப்போறீங்களா இல்லையா?”


“சார் நான் மும்பை போயிருந்தேன் இல்லை?” என்று தலையை கீழே குனிந்தபடி சொன்னார்.


“ஆமாம் அதற்கென்ன இப்போது?”


“இல்லை சார், போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு அவங்க அரை நாள் எங்களை ஸ்டேஷனில் வைத்திருந்து விட்டு வெளியே விட்டு விட்டார்கள்”


“சரி”


“அப்புறம் நான் மும்பைல இருந்து train ல சென்னை வந்தேன், நான் உட்கார்ந்து இருந்த சீட்டின் அடியில் ஒரு பெரிய லேடீஸ் தோள் பை ஒன்று இருந்தது”


நந்தனின் கண்கள் பிரகாசம் அடைந்தன. தன் சீட்டை விட்டு எழுந்து மணிமாறன் அருகே சென்றான். “அது யாரோட பை? அதில் என்ன இருந்தன? யாராவது உரிமம் கொண்டாடினார்களா? எந்த போலீஸ் ஸ்டேஷனில் அதை ஒப்படைத்தீர்கள்?” என்று நந்தன் மாறி மாறி கேள்வி கேட்க மணிமாறன் தடுமாறினார்.


“இல்லை சார், என் மனைவி இருக்கிறாளே, அவளால் சந்தோஷம் இல்லை என்றாலும் ரொம்பவே சந்தேகப்படுவாள் சார்…” என்று மணிமாறன் சம்மந்தம் இல்லாமல் ஏதோ சொல்ல முயல நந்தன் கடுப்பாக சொன்னான் “உங்கள் மனைவி ஒன்றும் விதி விலக்கல்ல மணிமாறன், உலகத்தில் முக்கால்வாசி மனைவிகள் அப்படி தான் இருக்க வேண்டும்” என்று சொல்ல மணிமாறன் ஆச்சர்யமாக நந்தனை பார்க்க நந்தன் சுதாரித்து கொண்டு புன்னகையுடன் சொன்னான். “மனைவிகளின் இலக்கணம் அது, ஆனால் பேசி நம் அன்பை புரிய வைத்தால் கண்டிப்பாக அவர்கள் தரும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே இருக்காது, சரி அதை விடுங்கள், அந்த train ல் கிடைத்த பைக்கும் உங்கள் மனைவியின் சந்தேகத்திற்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018