Sms ch 51 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 51

நந்தன் கமலா அம்மா, சகுந்தலா அம்மா, வள்ளியிடம் சொன்னான். “தீபிகாவை பற்றி நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் உங்களை எல்லாம் இங்கே அழைத்து வந்தேன், ஆனால் நீங்கள் யாரும் இந்த விஷயத்தை சத்யாவிடம் சொல்லக்கூடாதுஎன்றான்.

 

எல்லோரும் குழப்பமாய் பார்க்கஏன் சார் அப்படி சொல்றீங்க? தீபிகாவை பற்றி தெரிந்தால் தானே சத்யா உங்களை தவறாக நினைக்காமல் இருப்பாள், கீழே தீபிகா சத்யாவிடம் நீங்களும் அவளும் ஒன்றாக இருந்ததாக சொன்னாளே, ஏற்கனவே...” என்று வள்ளி லேசாக தயங்கிவிட்டு சொன்னாள். “ஏற்கனவே சத்யா உங்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறாள் நெறைய விஷயத்தில், இப்போது இந்த குழப்பத்தினால் உங்களுடன் அவள் சுமூகமாக இருக்க மாட்டாளோ என்று தோன்றுகிறது”.

 

நீங்கள் சொல்வது சரி தான் வள்ளி, அவள் என்னை இன்னும் தவறாக தான் நினைப்பாள், ஆனால் ஒரு காரணத்திற்காக தான் நான் இதை சொல்கிறேன், நீங்கள் சத்யாவின் கஷ்ட நஷ்டங்களில் கூட இருந்து இருக்கிறீர்கள், இன்று நான் அவள் கழுத்தில் தாலி கட்டும் போது நீங்கள் எல்லோரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் உங்கள் எல்லோரையும் வர வைத்தேன், சத்யாவின் நல்லது கெட்டதில் கூட இருக்கும் நீங்கள் தீபிகா விஷயத்தில் என்னை தவறாக நினைத்து இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் உங்களை இங்கே அழைத்து உண்மையை தெரிந்து கொள்ள வைத்தேன், ஆனால் இப்போதைக்கு இந்த உண்மை உங்களுக்கு தெரிந்தால் போதும், பாட்டிக்கு தெரிந்தால் கண்டிப்பாக சத்யாவிடம் சொல்லிவிடுவார்கள், அதனால் தான் உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன்என்றான்.

 

ஆனால் சார், இதனால் சத்யா உங்களை வெறுப்பாள், திருமணம் செய்து சந்தோஷமாக வாழாமல் இதென்ன விபரீத விளையாட்டு?” என்று வள்ளி தலையை குனிந்து சொன்னாள்.

 

கமலா அம்மாவும்ஆமாம் நந்து, ஏன் இந்த விளையாட்டு? அதுவும் இல்லாமல் சத்யாவிற்கு உன்மீது விருப்பமில்லையா? இன்று ஏன் இவ்வளவு அவசரம்? தீபிகாவை பற்றிய உண்மையை சொல்லிவிட்டு சத்யா பற்றி பேசி இருந்தால் நிதானமாக சிறப்பாக உங்கள் திருமணத்தை நடத்தி இருக்கலாமே, இப்போது இப்படி வேறு சொல்கிறாய்? சத்யாவை நீ உண்மையாகவே விரும்பி தானே அவள் கழுத்தில் தாலி கட்டி உள்ளாய், இல்லை தீபிகாவிடம் இருந்து தப்பிக்க இந்த விபரீத விளையாட்டா?” என்று பதட்டமாக கேட்டார்கள்.

 

அம்மா நிஜமாகவே நான் சத்யாவை விரும்பி தான் தாலி கட்டினேன், அவளுக்கும் என்மீது விருப்பம் தான், ஆனால் அதை அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள், அவள் கடந்த வாழ்க்கையில் இருந்து சில ஆபத்துக்கள் அவளை சூழ்ந்துள்ளன, அவை என்னையும் பாதிக்குமோ என்று பயப்படுகிறாள், என் நடத்தை மீதும் அவளுக்கு சந்தேகம் உள்ளது, அதனால் அவள் என்னை விரும்பாதது போல் காட்டிக்கொள்கிறாள்

 

என்னப்பா என்னென்னவோ சொல்ற? நீ கையில் 6 வயது மதிக்கத்தக்க பையனை கொண்டுள்ள ஒரு விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளாய் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நீயும் அவளும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்வீர்கள் என்றால் தானே எங்களுக்கு மகிழ்ச்சி, அவள் உன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன் நீ அவள் கழுத்தில் இன்று தாலி கட்டினாய்?” என்றார்கள் கமலா அம்மா.

 

சகுந்தலாவும் ஆமாம் நந்து, அந்த பெண் உன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை நீ காத்திருக்க கூடாதா? நீ அவளை காதலிக்கிறாய் என்று சொல்லி இருந்தால் போதுமே, தீபிகா விஷயம் தவிர்த்து பார்த்தால் நாங்களும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய சொல்லி கேட்டு இருக்க மாட்டோம் நீ சத்யாவை விரும்புகிறாய் என்று தெரிந்து இருந்தால், பிறகு என்ன அவசரம்? இப்போது அந்த பெண் சத்யா உன்மீது என்ன கோபத்தில் இருப்பாளோ தெரியவில்லையே?” என்றார்கள்.

 

அம்மா, சித்தி நான் காத்திருந்து, அவள் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களை தீர்த்து, அவள் என்னை முழுமையாக ஏற்ற பிறகு ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன, ஆனால் இப்போது அவள் என் மனைவியாக இருப்பது தான் அவளுக்கு மிக சிறந்த பாதுகாப்பு, அவளுக்கு வள்ளி குடும்பம் அவளின் சிறு வயதில் இருந்தே நெறைய கஷ்ட நஷ்டங்களில் கூடவே இருந்துள்ளார்கள், ஆனால் அவர்கள் துணைக்கு இருந்தாலும் அமைந்தகரையில் அவளுக்கும், அவள் மகனுக்கும் ஏன் வள்ளி குடும்பத்திற்குமே ஆபத்து தான், நெறைய நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்க முடியாது.

 

இருக்கும் ஆபத்து புரியாமல் சில விஷயங்களை போட்டு குழப்பி கொண்டு என்னை வேண்டாம் என்கிறாள், ஆனால் அவள் மனதில் எனக்காக அழவும் செய்கிறாள் என்று எனக்கு தெரியும், அதனால் தான் தீவிர யோசனைக்கு பிறகு தான் இந்த முடிவு எடுத்தேன், அம்மா எப்போதும் வருத்தப்படுவார்கள், நாங்கள் வளர்த்தும் கவிதாவின் திருமணத்தை பார்க்க கொடுக்கவில்லை என்று, என் திருமணமாவது அவர்கள் முன்னிலையில் மிக விமர்சியாக இல்லாவிட்டாலும் எங்களுக்கு நெருங்கியவர்கள் பார்க்க நடக்க வேண்டும் என்று தான் இன்று தாலி கட்ட முடிவு செய்தேன்.

 

அவளை வள்ளி குடும்பத்துடன் நம் outhouse ல் தங்க வைக்க முடிவு செய்துள்ளேன். அப்போது தான் அவளை என்னால் இன்னும் நன்றாகவே பாதுகாக்க முடியும். அவர்களிடம் கூட நான் இது பற்றி இன்னும் பேசவில்லை. உங்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபனை இல்லையே அம்மா?” என்று கேட்டான்.

 

கமலா அம்மா கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு வள்ளி குடும்பம் சத்யாவிற்கு பல வகையில் துணை இருந்தவர்கள் என்று சொன்னாய், அவர்களுக்குமே ஆபத்து இருக்கிறது என்று சொன்னாய், அதனால் நம் outhouse ல் தங்க வைத்து அவர்களையும் பாதுகாக்க நினைப்பது மிக சரியான விஷயம், அதில் ஒரு ஆட்சேபனையும் இல்லை, ஆனால் சத்யா நம் வீட்டின் மருமகளாக இங்கே இருப்பது தானே சரி, முறை, அவளையும் outhouse ல் தங்க வைப்பது எந்த வகையில் சரி? அது மட்டுமல்லாமல் தீபிகா விஷயத்தையும் அவளிடம் சொல்ல வேண்டாம் என்கிறாய், அவள் இப்படி outhouse ல் உட்கார்ந்து கொண்டு உன்னை வெறுத்து கொண்டு பிரிந்து இருக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

 

கொஞ்ச நாட்கள் வெறுக்கட்டும், அம்மா உங்களிடம் எல்லாவற்றையும் எப்படி சொல்வது? என் வாழ்க்கையில் சில சுவராசியம் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், இதெல்லாம் உங்களுக்கு புரியாதுஎன்று புன்னகையாக அவன் சொல்ல கமலா அம்மா விளையாட்டாய் அவனை முறைத்துஎப்படி? இந்த மெகா சீரியல்களில் கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் கணவன் மனைவி தனி தனியாக சுற்றுவார்களே, அது போலவா?”

 

ஆஹ் எப்படி அம்மா இப்படி? கற்பூரம் மாதிரி பிடித்து கொண்டு விட்டீர்களே?” என்று புன்னகைத்தான்.

 

கமலா அம்மா சகுந்தலாவை பார்த்து ஏதோ கண் காட்ட இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் நந்தனின் காதை பிடித்து திருகினார்கள். “இந்த நாடகம் எல்லாம் நாங்கள் டிவியில் பார்ப்பது போதும், சத்யா இங்கே நம் வீட்டில் தான் இருக்க வேண்டும், தீபிகா விஷயத்திலும் அவள் தெளிவு பெற வேண்டும்என்று சொல்ல நந்தன் வலிப்பது போல் கத்தி அவர்களின் பிடியில் இருந்து விலகிஎன்ன அம்மா இது? நீங்கள் எல்லோரும் சொல்வீர்களே, நந்தன் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக தான் இருக்கும் என்று, இப்போது மட்டும் என்ன? தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் அம்மா, தீபிகா விஷயத்தை அவளிடம் சொல்லாதீர்கள், நானும் அவளும் எந்த வகையான புரிதலில் இருக்கிறோம் என்று உங்களிடம் எல்லாம் எப்படி விளக்கி சொல்வது? சில விஷயங்களை சொல்லி நம்ப வைப்பதை விட கூட இருந்து பழகி புரிந்து கொள்ளும் போது காதல் இன்னும் ஆழமாக இருக்கும், அதனால் தானே அம்மா கேட்கிறேன், please please சரியான நேரத்தில் நானே சத்யாவிற்கு தீபிகா விஷயம் சொல்லி புரிய வைத்து கொள்கிறேன், நீங்கள் கண்டிப்பாக அவளிடம் இதை பற்றி சொல்லக்கூடாது, இது என் மீது சத்தியம், வள்ளி நீங்களும் சொல்ல கூடாது, சத்தியம் சத்தியம் சத்தியம் என்று உறுதியாக அவன் சொல்ல கமலா அம்மா, சகுந்தலா, வள்ளி என்று அனைவரும் கலக்கமாக முகம் சுருங்கி நின்றார்கள்.

 

சரிப்பா என்ன காதலோ, என்ன ஆழமோ? தீபிகா விஷயத்தை நாங்கள் சொல்லவில்லை, நீங்களே கணவன் மனைவி இருவரும் சமாளித்து புரிந்து கொள்ளுங்கள், உங்கள் காதல் ஆழமாவதை நாங்கள் தடுக்க விரும்பவில்லை, ஆனால் அவளும் நீயும் பிரிந்து இருக்க கூடாது, அவள் இங்கே நம் வீட்டில் ஆளும் பேருமாக இருக்க வேண்டும், என்ன சகுந்தலா நான் சொல்வது?” என்று கேட்க சகுந்தலாவும்ஆமாம் அக்கா, நாம் போய் அவளை அழைத்து வந்து ஆக வேண்டிய வேலைகளை பார்ப்போம்என்றார்கள்.

 

நந்தன் என் திட்டத்தில் இப்படி ஓட்டை விழுகிறதே, அவள் என்னுடன் ஒரே அறையில் இருந்தால் அவள் என்னை முழுமையாக நம்பி ஏற்பதற்குள் அவளிடம் நான் எல்லை மீறிவிடுவேனோ என்று பயமாக உள்ளதே, இவர்களை எப்படி தடுப்பது?” என்று புரியாமல் தவித்து நின்றான்.

 

கீழே தீபிகாவின் அம்மா, தீபிகாவின் தந்தையையும் தங்கையையும் அழைத்து கொண்டு போய் நடந்த விவரங்களை சொல்லி ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பினார்கள். கமலா அம்மா, சகுந்தலா, வள்ளி, நந்தன் அனைவரும் பேசி முடித்து கீழே வரவும் தீபிகாவின் தந்தை நந்தனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சத்தியமூர்த்தி, கமலா அம்மா, சகுந்தலா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். சத்தியமூர்த்தி, கணேஷ், தாத்தா, ரோஹித், சுவேதா என்று அனைவரும் புரியாமல் விழிக்க உங்கள் மகன் மீது எந்த தவறும் இல்லை, எங்களை மன்னித்து விடுங்கள், மூன்று நாட்கள் மகள்களுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று வந்தோம், இப்படி நடந்துவிட்டது, ஆனால் இதை மனதில் வைத்து ஸ்ரீதிகாவை வேற்றுமையாக நடத்தாதீர்கள் சம்மந்திஎன்று அவர் கண்ணீருடன் கேட்க கமலா அம்மாஸ்ரீதிகா எங்கள் வீட்டு பெண் சம்மந்தி, அவளை நாங்கள் ஒரு போதும் வேற்றுமையாக நடத்த மாட்டோம், நீங்கள் கவலை பட வேண்டாம், தீபிகாவிடம் கூட கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள், சின்னவர்கள் தவறு செய்தால் நாம் தான் மன்னித்து அரவணைத்து செல்ல வேண்டும், சில நாட்கள் கழித்து அவளிடம் மனம் விட்டு பேசுங்கள்என்று சொன்னார்கள்.

 

நீங்க பெரிய மனசுகாரங்கன்னு நிரூபிச்சிடீங்க சம்மந்தி அம்மா, நாங்கள் வருகிறோம்என்று கூறி தீபிகாவை அழைத்து கொண்டு புறப்பட்டார்கள்.

 

கமலா அம்மா சத்தியமூர்த்தியிடமும், தாத்தாவிடமும் தனியாக பேச அடுத்து ஆக வேண்டியது என்ன என்று கலந்து ஆலோசித்தார்கள்.

 

சத்தியமூர்த்தி நந்தனிடம் வந்து மன்னித்து விடு நந்தாஎன்று கூறசரி வா மருமகளை அழைத்து வந்து விடலாம்என்று சொன்னார்.

 

நந்தன்அப்பா நான் அம்மாவிடம் எவ்வளவோ சொல்லியும் சத்யாவை இங்கே....” என்று சொல்லி முடிப்பதற்குள்ஷ்ஷ்ஷ்.... நந்தாநீ பேசி நாங்கள் கேட்டிருந்தது போதும், இனி நாங்கள் சொல்வதை நீ கேள்என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

 

இடையில் அப்படி இப்படி என்று தீபிகா விஷயம் குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்கும் பட்டும் படாமலும் தெரிந்து நந்தன் மேல் தவறு இல்லை என்று புரிந்து கொண்டார்கள்.

 

தாத்தா நந்தனை அழைத்துஎனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், அந்த பெண்ணுக்கு உன்னை பிடிக்கும் தானே, அவளின் இறந்து போன கணவன் நினைப்பில் உன்னை ஒதுக்கி விட மாட்டாளே? விரும்பி தானே திருமணம் செய்துள்ளாய்?” என்று கேட்கதாத்தா நான் என்ன சொன்னேன், நினைவுள்ளாதா? என் மனதிற்கு பிடித்த பெண்ணை பார்த்தால் தாமதிக்காமல் திருமணம் செய்து கொள்வேன் என்று, பாருங்கள் நான் தாமதிக்க நினைத்தால் கூட முடியாமல் இன்றே தாலி கட்டிவிட்டேன், அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் தாத்தாஎன்று சொல்லிவிட்டு மற்றவர்கள் கவனத்தை ஈரக்காத வண்ணம் தாத்தாவின் காதருகில் சொன்னான்சில பிரச்சனைகளினால் சாப்பிடாமல் ஒல்லியாக இருக்கிறாளா? நீங்கள் சொன்னது போல் நான் அணைத்தால் நொறுங்கி விடுவோம் என்று பயப்படுகிறாள், அதற்கு பயந்து தான் பெண்களுக்கே உரித்தான திமிருடன் என்னை பிடிக்காதது போல் நடந்து கொள்கிறாள்என்றான். “ஓஹோ இருக்கும் இருக்கும்என்று தாத்தா சிரிக்க நந்தனும் சேர்ந்து சிரித்தான். “ஆனால் ஒன்று அவள் இங்கு தான் இருக்க வேண்டும், நம் பண்ணையில் இருந்து வரும் காய்கறிகள், தானியங்களை கொடுத்து உனக்கு ஈடாக அவளை தேற்றி விடலாம்என்று சொல்லி கண்சிமிட்டி சிரித்தார். நந்தன்குடும்பமே எனக்கு எதிராக உள்ளதேஎன்று நினைத்து கொண்டு புன்னகைத்தான்.

 

பெரியவர்கள் எல்லோரும் சத்யாவிற்கு சில பட்டு புடவைகளை வரவைத்து காத்திருந்தார்கள். அவை வந்ததும் புடவை, நகைகளை கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்று பேசி முடிவு செய்தார்கள். மதிய விருந்திற்கான வேலைகளும் இப்போது தடபுடலாக நடக்க ஆரம்பித்தன.

 

நந்தன் முருகனை அழைத்து நீங்கள் எல்லோரும் இங்கேயே இருக்கலாமே, எப்படியும் வெளியே உங்களுக்கு பாதுகாப்பு இல்லைஎன்று கூற வள்ளியுடன் பேசிவிட்டு முடிவு சொல்வதாக முருகன் கூறினான். இதற்கிடையில் நந்தன் பாட்டியிடமும் ஆசிர்வாதம் வாங்கி அவர்களை இங்கேயே இருக்கும் படி வற்புறுத்தினான். சின்னுவும், தருணும் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் விளையாடி கொண்டிருக்க கண்ணப்பன் அவர்களுக்கு துணையாக இருந்தார்.

 

சத்யா outhouse ல் இருந்த ஒரு படுக்கை அறையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். ப்ரீத்தி ஏதேதோ அவளிடம் பேச முயற்சித்தும் எந்த பலனும் இல்லை. மாலினியும் அவள் அருகே உட்கார்ந்துநியாயமாக பார்த்தால் ப்ரீத்தியை தான் நந்தன் திருமணம் செய்து இருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு விருப்பம் இல்லை, அதனால் எனக்கு அவன் மீது கோபம் உண்டு, தீபிகாவை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, உன் மீதும் கோபப்பட்டிருப்பேன், ஆனால் ஏனோ தெரியவில்லை, உன்னை பார்த்தால் ப்ரீத்தியை பார்ப்பது போலவே தோன்றுகிறது, ஏதோ ஒரு பாசம் வருகிறது உன்மேல், அந்த தீபிகா விஷயத்தை எல்லாம் விட்டு தள்ளு, நந்தன் நல்லவன் தான், நீ கொடுத்து வைத்தவள் தான், காதிலும், கழுத்திலும் கொஞ்சம் நகைகளை போட்டால் இன்னும் அம்சமாக இருப்பாய், ஹேய் ப்ரீத்தி அக்காவிற்கு உன் கழுத்தில் இருக்கும் செயின் ஒன்றை எடுத்து போடுஎன்று சொல்ல ப்ரீத்திநம் அம்மாவா இது?” என்று வியப்பாக பார்த்துக்கொண்டே செயின் ஒன்றை கழட்டி போடப்போனாள். அப்போது தான் சத்யா முதல் முறையாக வாயை திறந்தாள். “இல்லை வேண்டாம்என்று மறுத்தாள். “அதென்ன நான் ஒன்று சொல்லி நீ அதை மறுப்பது, இங்கே ஆனானப்பட்ட அண்ணியே என் பேச்சை மீற மாட்டார்கள் தெரியுமா? நந்தன் கூட எனக்கு பயந்து அடங்கி போவான், நீ என் பேச்சை மீறுவதா? அதெல்லாம் இல்லை, நீ போட்டுவிடுஎன்ற மாலினியின் அதிகார தோரணையில் ஏற்கனவே குழப்பத்திலும் பயத்திலும் இருந்த சத்யா மேலும் பயந்து அமைதியாக இருந்தாள். ப்ரீத்தியும் அவளுக்கு அந்த செயின் போட்டுவிட்டாள்.

 

மாலினி சத்யாவின் முகத்தை பிடித்து வலது பக்கமும் இடது பக்கமுமாக திருப்பி திருப்பி பார்த்தாள். “ஏனோ தெரியவில்லை, உன்னை பார்த்தால் எங்கேயோ பார்த்தது போலவே உள்ளதுஎன்று சொல்லஅம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா? அக்காவே பாவம், ஏதேதோ குழப்பத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள், நீ அவர்களை படுத்துகிறாயேஎன்றாள் ப்ரீத்தி.

 

மாலினி ப்ரீத்தியை முறைத்துவிட்டுஇந்த அண்ணி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? வீட்டிற்கு வந்த மருமகளை இங்கே உட்கார வைத்துவிட்டு, நான் போனால் தான் அங்கே வேலை நடக்கும், நான் போய் என்னவென்று பார்த்து வருகிறேன்என்று சொல்லி மாலினி புறப்பட வள்ளி உள்ளே வந்தாள். சத்யா வள்ளியை பார்த்ததும் எழுந்து அவளை அணைத்து கொண்டாள். “என்ன அக்கா இது? இவர் இப்படி செய்துவிட்டாரே?” என்று சொல்ல வள்ளி தீபிகா விஷயம் பற்றி சொல்ல முடியாமல் நந்தன் வாயை கட்டிவிட்டாரே என்று தவித்தாள். அவள் தவிப்பை பார்த்த ப்ரீத்திநான் வெளிய இருக்கேன், நீங்கள் இருவரும் பேசுங்கள்என்று சொல்லி படுக்கை அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

வள்ளி சத்யாவின் கண்ணீரை துடைத்துவிட்டுஉனக்கு அவரை பிடிக்கும் தானே சத்யா, அப்புறம் என்ன?” என்று கேட்கபிடிக்கும் தான் அக்கா, ரொம்பவே பிடிக்கும், ஆனால் ஷ்யாம் சொன்னதை மறந்து விட்டீர்களா? இவர் யார் என்று அவனுக்கு தெரியாது, தெரிந்து இருந்தால் இந்நேரம் அவரையும் ஏதாவது செய்து இருப்பான், அதனாலயே நான் இவரை விட்டு விலகி இருக்க நினைத்தேன், ஆனால் இவர் இப்படி அவசரப்பட்டு தாலி கட்டிவிட்டாரேஎன்று புலம்பினாள்.

 

சத்யா அவர் செய்தது சரி தான், நீ அவரை பாதுகாக்க நினைத்து விலகி இருக்க நினைத்து உள்ளாய், அவர் உன்னை பாதுகாக்க நினைத்து மனைவி ஆக்கி கொண்டார், நீ எதையும் போட்டு குழப்பி கொள்ளாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்

 

சத்யா குழப்பத்துடன் கட்டிலில் அமர்ந்து தாலியை எடுத்து பார்த்து கண்ணீர் வடித்தாள். அப்போது சத்யாவை பார்க்க வந்த நந்தன் அவள் தாலியை கையில் எடுத்து அழுவதை பார்த்து வாசலில் மறைந்து நின்றான்.

 

அக்கா எனக்கு ஏதேதோ பயம் தோன்றுகிறது, என் ராசி அம்மா, அப்பாவை இழந்தேன், கௌஷிக்கையும் இழந்தேன், என்னால் உங்களுக்கு எல்லோருக்கும் கூட கஷ்டம் தான், என் வழக்கை விசாரிக்கும் காரணத்தினாலேயே ராகவன் அண்ணாவிற்கு ஆபத்து, எனக்கு பயமாக உள்ளது அக்கா, அவர் தாலி கட்ட ஆரம்பித்த போது நான் இந்த பயத்தினால் தான் விலக முயன்றேன், ஆனால் அவர் என்னை விலக விடவில்லை, அவர் தாலி கட்டி குங்குமம் வைத்த போது எப்படி இருந்தது தெரியுமா? இது தான் சரி, இனி உன் வாழ்க்கையின் சரியான அர்த்தம் இதில் தான் ஒளிந்துள்ளது என்றெல்லாம் தோன்றியது, ஆனால் அதன் பிறகு யோசித்து பார்த்தால் பயம் வருகிறது, என் வாழ்க்கையின் அர்த்தம் இனி இதுவாக இருக்கலாம், ஆனால் அதற்கு அவர் நல்லபடியாக வாழ வேண்டும் அல்லவா? இன்னொரு இழப்பை என்னால் ஏற்கவே முடியாது அக்காஎன்று அழ வள்ளி சத்யாவை அணைத்துபைத்தியமே இப்படி பயந்து குழம்பாதே, நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும், நந்தன் சார் எடுத்தோம் கவுத்தோம் என்று இந்த முடிவை எடுத்ததாக தெரியவில்லை, யோசித்து தான் எடுத்துள்ளார், அப்படி பட்டவர் அலட்சியமாக இருந்து எந்த ஆபத்திலும் மாட்டிக்கொள்ள மாட்டார், நீ பயப்படாமல் அவருடன் வாழ்க்கையை தொடங்குஎன்று சொல்லி சத்யாவை தேற்ற முயன்றாள் வள்ளி.

 

பிரீத்தி மெதுவாக நந்தனின் கையை பிடித்து ஹாலுக்கு அழைத்து சென்றுஒட்டு கேட்டது போதும், அத்தை உங்களை வர சொல்லி ஆள் அனுப்பி இருக்கிறார்கள், உங்கள் சத்யாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் அங்கே போய் என்னவென்று பாருங்கள்என்று துரத்தினாள்.

 

கமலா அம்மாநாங்கள் போய் அழைத்து வரும் வரை நீ அவளை பார்க்காமல் இருக்க வேண்டும், போய் ரோஹித், கிரிஷ் உடன் பேசிக்கொண்டிருஎன்று சொல்லஅம்மா இன்னும் எவ்வளவு நேரம் எடுத்து கொள்வீர்கள்?” என்று நந்தன் பொறுமை இழந்தவனாய் கேட்டான். “பார்த்தாயா சகுந்தலா, அந்த பெண்ணை outhouse ல் தங்க வைக்குற மூஞ்சியை பார், இப்போதே பொறுமை இல்லாமல் நம்மை விரட்டுகிறான்என்று கிண்டல் செய்ய நந்தனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. “அதற்காக சொல்லல அம்மா, எனக்கு ரொம்ப பசிக்குது, நீங்க எப்படியும் அவளை அழைத்து வரும் வரை சாப்பிட விட மாட்டீர்கள் போலஎன்று சொன்னான். உடனே கமலா அம்மா அமுதாவை அழைத்துநந்தனுக்கு சாப்பிட ஏதாவது குடும்மாஎன்று சொல்ல நந்தன் அவசரமாக மறுத்தான். நேற்றிலிருந்து சத்யா ஒன்றுமே சாப்பிடவில்லையே என்று யோசித்து ஐயோ அம்மா, நான் எனக்காக மட்டும் சொல்லவில்லை, இங்க பாருங்க, வயசான தாத்தா, உடம்பு சரி இல்லாத ராகவன், அவன் அப்பா, நீங்கள், மது, சத்யா என்று யாருமே சாப்பிடவில்லையே....” என்று இழுக்க கமலா அம்மா, சகுந்தலா இருவரும்ஓஹோ அதான் வருத்தமா? புரிகிறது இப்போது புரிகிறது, வா மா சீக்கிரமா போய் மருமகளை அழைத்து வந்துவிடலாம், இவர்களுக்கு பால், பழம் கொடுத்துவிட்டு எல்லோரும் சாப்பிடலாம்என்று சொல்லி அப்போது தான் வந்திருந்த பட்டு புடவைகள், கமலா அம்மா மருமகளுக்காக இது வரை சேர்த்து வைத்திருந்த நகைகள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு outhouse நோக்கி புறப்பட்டார்கள்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018