Sms ch 59 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 59
நந்தனும் சத்யாவும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை. சத்யா அவனுக்கு coffee கொடுப்பது, டிபன் எடுத்து கொடுப்பது என்று அக்கறையாக ஏதாவது செய்வாள். அவன் thanks என்று முடித்து கொள்வான். தினமும் காலை நந்தன் ஆபீஸ் சென்றதும் தருணுடன் நேரம் செலவழித்து விட்டு சத்யா படிக்க உட்கார்ந்து விடுவாள். மறுபடியும் மாலையில் கொஞ்ச நேரம் தருணுடன் நேரம் செலவழிப்பாள். நந்தனும் வீட்டிற்கு சீக்கிரமாக வந்து தருணுடன் நேரம் செலவழிப்பான். நந்தனும் சத்யாவும் சந்தோஷமாக இருப்பது போலவே மற்றவர்கள் முன்னிலையில் காட்டி கொண்டார்கள். சத்யா IAS க்கு படிக்கும் விஷயத்தை பற்றி நந்தனிடம் சொல்லவில்லை, நீ IAS படிக்க தகுதி இல்லை என்பது போல் நந்தன் அந்த இரவு பேசியது அவளை கொஞ்சம் காயப்படுத்தியது. அதற்காகவே படித்து காட்ட வேண்டும் என்ற வேகத்தை அவளுக்குள் எழுப்பியது. அவள் படிக்கும் விஷயம் நந்தனுக்கும் தெரியவில்லை. ஏதோ கதை புத்தகங்கள் படிக்க தான் கேலரி செல்கிறாள் என்று அவன் நினைத்தான்.
சத்யா தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மேக் அப் எதுவும் இல்லாமல் எளிமையாக கீழே செல்வதும், இரவு ஆனால் மேக் அப் போட்டுக்கொண்டு படுப்பதும் நந்தனுக்கு ஏனோ எரிச்சலை கிளப்பியது. அமைந்தகரையில் இருந்த வரை மேக் அப் இல்லாத சத்யாவை தான் அவன் பார்த்துள்ளான், பழகி உள்ளான், இது என்ன புதிதாக, நம் சத்யா போலவே இல்லை என்று எரிச்சல் அடைந்தான். ஆனால் அவளிடம் அவன் எதுவும் சொல்லவில்லை. ஒருநாள் காலை பொறுக்க மாட்டாமல் சத்யாவை நிறுத்தி கேட்டான்.
“சத்யா…” என்று அவன் அழைக்க “அப்பாடா ஒரு வாரம் கழித்து பேசுகிறார், என் பெயர் சொல்லி அழைக்கிறார்” என்று பரவசமடைந்தவள் “சொல்லுங்க” என்றாள் புன்னகையுடன். நந்தன் “என்ன இது?” என்று கேட்க “எது?” என்றாள் புரியாமல்.
“மேக் அப் போட மறந்துட்டு கீழ போறியே” என்று சொல்லி அவளை ஆழமாக பார்க்க அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். “சொல்லு அதென்ன இரவில் மட்டும் மேக் அப், பகலிலும் போட்டுக்கொள்ள வேண்டியது தானே” என்று அவன் கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள். அவனே மீண்டும் பேசினான். “அமைந்தகரையில் இருந்த வரை மேக் அப் போட்டு நான் பார்த்ததே இல்லையே, அவ்வளவு ஏன் கௌஷிக்குடன் இருக்கும் உன் திருமண போட்டோக்களில் கூட மேக் அப் போடாமல் எளிமையாக தானே இருந்தாய், இப்போது என்ன இந்த திடீர் மாற்றம்?” என்று கேட்க “இதென்ன பெரிய கொலை குற்றமா? எனக்கு பிடித்திருக்கிறது, போட்டு கொள்கிறேன், ஏன் போட்டு கொள்ளக்கூடாதா?” என்று அவனையே திருப்பி கேட்டாள்.
“போட்டுக்கொள்ள கூடாது என்று ஒன்றும் இல்லை, உனக்கு பிடித்திருந்தால் போட்டுக்கொள், உன் இயல்புக்கு மாறாக இருக்கிறதே என்று தான் கேட்கிறேன், சரி திடீர் பழக்கமாக இருந்தால் ஏன் இரவில் மட்டும் போட்டுக்கொள்கிறாய்?” என்று கேட்க “ச்ச இவருக்கு பிடிக்கும் என்று நினைத்து மேக் அப் போட்டால் இவருக்கு பிடிக்காது போலவே, நிற்க வைத்து இப்படி கேள்வி கேட்கிறார், உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து போட்டேன் என்று சொன்னால் அசிங்கமாகி விடும், இப்படியே அமைதியாக இருக்க முயற்சிக்கலாம்” என்று நினைத்து அமைதியாக நின்றாள்.
“நான் ஏதாவது கேட்டால் பதில் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாயா? சரி இனிமேல் உன்கிட்ட எதுவும் கேக்கல, பேசல, நான் ஆபீஸ் கிளம்புறேன்” என்று சொல்லி அவன் திரும்ப “உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து தான் இரவில் மட்டும் மேக் அப் போட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லி தலையை குனிந்து லேசாக நிமிர்ந்து பார்த்தாள். “எனக்கு மேக் அப் போட்டால் பிடிக்கும் என்று யார் சொன்னது?” என்று கேட்க மீண்டும் அவள் அமைதியாய் இருந்தாள். மறுபடியும் அவன் திரும்ப “தீபிகா எப்போதும் நெறைய மேக் அப் போட்டிருப்பாள், ஒருவேளை நானும் போட்டுக்கொண்டால் என்மீது உங்களுக்கு இருக்கும் கோபம் குறைந்து பேசுவீர்களோ என்று நினைத்தேன்” என்று தயங்கியபடியே சொன்னாள்.
நந்தன் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “நீ நீயாகவே இரு, அது தான் எனக்கு பிடிக்கும், மற்றவர்களை பார்த்து உன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்காதே, தீபிகா மேக் அப் போட்டிருந்தாளாம், அதனால் இவளும் போட்டுக்கொண்டாளாம், அவளுடன் ஒரு இரவு தான் ஒன்றாக இருந்தேன், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள தாலி கட்டியது உனக்கு தான், அவளுக்கு அல்ல, நீ எப்போது தான் உண்மையாகவே என்னை புரிந்து கொள்ளப்போகிறாயோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட சத்யாவிற்கு முகம் சுருங்கிவிட்டது. “இவரை impress பண்ணலான்னு நினச்சேன் இல்லை, என்னை எதனால் அடித்து கொள்வது? ச்ச இந்த பல்பு எனக்கு தேவை தான், சொல்வது போல மேக் அப் இல்லாத என்னை பார்த்து தானே அவர் விரும்பினார், திருமணம் செய்தார், எனக்கு ஏன் தான் புத்தி தப்பு தப்பாக யோசிக்க வைக்கிறதோ?” என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
அன்று மாலை சத்யா மேக் அப் எதுவும் போடாமல் எளிமையாகவே இருந்தாள். அவன் முன்பு இனிமேல் சிரித்த முகத்துடன் தான் இருக்க வேண்டும் என்று கடந்த நான்கைந்து நாளாக இருந்த புன்னகை இன்று அவள் முகத்தில் இல்லை. அவனை பார்த்து படுக்கும் பழக்கமும் மாறி திரும்பி படுத்து கொண்டாள். “எப்படியும் நான் எது செய்தாலும் இவருக்கு பிடிக்காது, பிறகு எதற்கு என் முகத்தை பார்த்து அவர் கஷ்டப்பட வேண்டும், நான் இப்படியே திரும்பி படுத்துக்கொள்கிறேன்” என்று திரும்பி படுத்து கொண்டு தூக்கம் வராமல் தவித்தாள். நந்தனுக்கு அவளை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. “நாலைஞ்சு நாளா பயப்படாம தூங்குவதற்கு முன் நம்மளை பார்த்துக்கொண்டே படுத்து இருப்பாள், நாம் தான் கண்டு கொள்ளாதது போல் இருப்போம், இன்று மேக் அப் பற்றி சொல்லவும் சோர்ந்து விட்டாள் போலிருக்கிறது, அப்படியே இழுத்து அணைத்து கொண்டாள் என்ன?” என்ற தன் ஆசையை கட்டுப்படுத்தி கொண்டான்.
சத்தியமூர்த்தி, கமலா அம்மா ஒருமுறை நந்தனிடம் பேசும் போது “சத்யா IAS க்கு படிப்பதால் இப்போதைக்கு பெரிய கோயில் ட்ரிப் எதுவும் வேண்டாம், அதுவும் இல்லாமல் அந்த ஷ்யாம் வேறு எங்கு இருக்கிறானோ என்னமோ?” என்று எதார்த்தமாக சொல்ல நந்தன் கேள்விக்குறியாய் அவர்களை பார்த்து “சத்யா IAS க்கு படிக்கிறாளா?” என்று ஆச்சர்யமாக கேட்டான். “என்னப்பா தெரியாத மாதிரி ஆச்சர்யமா கேக்குற, நீ படிக்க சொன்னதாக அல்லவா சத்யா சொன்னாள், அதனால் தான் நாங்களும் படி என்று சொன்னோம்” என்றார்கள். நந்தன் உடனே சுதாரித்து கொண்டு “ஆமாம் அம்மா, நான் தான் சொன்னேன், அவள் மறுபடியும் IAS க்கு படிக்க வேண்டும் என்று, ஆனால் நிஜமாகவே படிக்கும் அளவிற்கு அவளுக்கு வேகம் இருந்ததை நான் உணரவில்லை, அதை வேறு அவளிடமே சொல்லிவிட்டேன், நீயாவது IAS படிப்பதாவது என்று கிண்டலாக சொல்லிவிட்டேன், அதை மனதில் வைத்துக்கொண்டு தான் என்னிடம் கூட சொல்லாமல் ரோஷத்துடன் படிக்கிறாள் போல” என்றான். “அவளுக்கு போய் வேகம் இல்லை என்று சொல்லிவிட்டாயே, காலையில் நீ இப்படி ஆபீஸ் போனதும் கொஞ்ச நேரம் தருணுடன் விளையாடுவாள், பிறகு படிக்க சென்றால் படிப்பை தவிர அந்த பக்கம் இந்த பக்கம் திரும்ப மாட்டாள்” என்றார்கள்.
நந்தனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. அன்று நான் சொன்னது அவளை காயப்படுத்தி இருக்க வேண்டும், அதனால் தான் என்னிடம் கூட சொல்லாமல் படிக்கிறாள் போல, படிக்கட்டும், நல்லது தான், ஆனால் இரவானால் நேராக மாடிக்கு வந்து அலுப்பில் உடனே தூங்காமல் நாம் பேசமாட்டோமா என்பது போல் நம்மையே பார்த்துக்கொண்டு காத்திருக்கிக்கிறாளே, ஒருபக்கம் படிப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் எனக்கு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் போல என்று யோசித்தவனுக்கு சத்யாவை நினைத்து கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நாம் ரொம்ப கடுமையாக அவளை புறக்கணிக்கிறோமோ என்று கூட குற்ற உணர்ச்சியாக இருந்தது.
மறுபுறம் சத்யா நந்தன் இவ்வளவு நாட்களாகியும் சரியாக பேசாமல் இருப்பதை நினைத்து வருந்தினாள். நான் செய்த தவறை மன்னித்து பேசக்கூடாதா? என்று சில சமயம் அழுதாள். இருந்தாலும் அவன் ஆசைப்பட்ட படி படிக்கவாவது செய்யலாம் என்று தன் சோகம் படிப்பை பாதிக்காதது போல் பார்த்துக்கொண்டாள்.
எப்போதும் போல ஒருநாள் காலை கேலரி சென்றவள் அங்கே புதிதாக சத்யா என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாக்ஸ் இருப்பதை பார்த்து அதை திறந்து பார்த்தாள். அதில் நவீன அதிக வேகமுடைய processor கொண்ட லேப்டாப், சில புத்தகங்கள், ஆன்லைன் கோர்ஸ்ஸ் க்கான details, ஒரு credit கார்டு, notebook, pen என்று எல்லாம் இருந்தன. “நல்லா படி” என்று எழுதி இருந்தது. நந்தனின் கை எழுத்து தான்.
சத்யாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது. நேரில் பேசாவிட்டாலும் எழுத்தின் மூலமாக நன்றாக படி என்று அவன் சொன்னது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கேலரியில் இருந்த கம்ப்யூட்டர் பழைய கம்ப்யூட்டர், அதில் ஒவ்வொரு வெப்சைட்டும் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும், சில ஆன்லைன் கோர்ஸ்ஸ் க்கு பதிவு செய்ய சத்யாவிடம் பணம் இல்லை, நந்தனும் பேச மாட்டேன் என்கிறார், எப்படி கேட்பது என்று தயங்கி தயங்கி இருந்தாள். அத்தை மாமாவிடம் கேட்டால் ஏன் நந்தனிடம் கேட்காமல் நம்மிடம் கேட்கிறாள் என்று நினைப்பார்கள்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு நந்தன் பார்த்து பார்த்து செய்துள்ளாரே, லேப்டாப், credit card, அதிக அளவில் பயன்படும் புத்தகங்கள் என்று நான் சொல்லாமலே கேட்காமலே எப்படி வாங்கி கொடுத்துள்ளார் என்று அவளுக்கு பூரிப்பு அதிகம் ஆகியது. கோபம் இருந்தாலும் மனைவிக்காக இவ்வளவு செய்கிறாரே என்று நினைத்து கண்கள் ஆனந்த கண்ணீரில் திளைத்தது. மனைவி ஆகும் முன்பு கூட தனக்கானவள் என்று அவர் எப்போதுமே எனக்காக பார்த்து பார்த்து தான் செய்திருக்கிறார், நான் தான் அவரை ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் சின்ன தனமாக பேசிவிட்டேன் என்று வருத்தப்பட்டாள். ஆனால் இப்படியே வருத்தப்பட்டு கொண்டிருந்தால் படிக்க முடியாது என்று படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
அன்றிரவு நந்தன் பால்கனியில் நிற்கும் போது சத்யா நேராக அவனை சென்று அணைத்துக்கொள்ள நந்தன் புரியாமல் மெதுவாக தன் கைகளை எடுத்து அவளை அணைத்தான். சிறிது நேரம் கழித்து அவள் விலகி “thanks, பேனா நல்லா இருந்துச்சு” என்று லேசான புன்முருவலுடன் சொல்லிவிட்டு சென்று படுத்து கொண்டாள். நந்தனும் ஒரு புன்னகையுடன் புதிதாக வீசிய தென்றலை கண்களை மூடி சுவாசித்த படியே தன் கேசத்தை கோதி விட்டுவிட்டு பால்கனியில் சிறிது நேரம் செலவழித்து விட்டு வந்து படுத்தான்.
மறுநாள் எப்போதும் இருக்கும் இறுக்கம் இல்லாமல் சத்யா coffee, டிபன் எல்லாம் தரும் போது இயல்பாகவே அவளை பார்த்து புன்னகைத்தான் நந்தன். அவன் ஒவ்வொரு முறை புன்னகைக்கும் போதும் “இவர் சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார், அப்படியே இவரை……” என்று சத்யாவின் எண்ணங்கள் தாறுமாறாக ஓட எல்லா எண்ணங்களுக்கும் ஒரு கடிவாளத்தை போட்டாள் சத்யா.
அன்று மாலை நந்தன் சீக்கிரமே வர “அம்மா, நான், சத்யாவையும், தருணையும் அழைத்து கொண்டு கோயிலுக்கு போய்ட்டு வரலான்னு நினைக்கிறேன்” என்று சொல்ல “தாராளமா போய்ட்டு வாங்கப்பா, கோயிலுக்கு போய்ட்டு அப்படியே வேறு எங்காவது வேண்டுமானாலும் சென்று வாருங்கள்” என்று சொல்ல நந்தன் ஒரு புன்னகையுடன் சரி என்று தலை அசைத்து கேலரி உள்ளே சென்றான். சத்யா மும்முரமாக படிப்பதை பார்த்துவிட்டு “சத்யா வா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்” என்று சொல்ல அப்போது தான் அவனை கவனித்தவள் “என்ன திடீர்னு சொல்றாரே, என்ன செய்வது, என்னிடமா பேசுகிறார், கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா, எந்த saree கட்டிக்கொள்ளலாம், தருணை கிளப்ப வேண்டுமே” என்று மனதிற்குள் படபடக்க கைகள் புத்தகங்களை மூடுவதும் திறப்பதுமாக, லேப்டாப்பை மூடி வைப்பதும் திறப்பதும் என்று தடுமாறினாள். “அதெல்லாம் அப்படியே வைத்துவிட்டு வா, யாரும் தூக்கிக்க மாட்டாங்க” என்று சொல்ல சத்யா லேசான வழிசலான புன்னகையுடன் சரி என்று தலை அசைத்துவிட்டு அவன் முன் மெதுவாக நடப்பது போல் நடந்து மாடிக்கு சென்றதும் வேகவேகமாக ஓடி அறைக்கு சென்று சாரீயை தேடினாள்.
“இதை கட்டிக்கலாமா, இல்லை இதை” என்று ஒவ்வொன்றாக எடுத்து போட்டுக்கொண்டிருந்தாள். தருணுடன் மாடிக்கு வந்த நந்தன் அவள் பதட்டத்தை பார்த்து உள்ளுக்குள் ரசித்தவண்ணம் தருணை அழைத்து சென்று முகம் கை கால் எல்லாம் கழுவி அழைத்து வந்து புது dress ஒன்றை அவனுக்கு போட்டுவிட்டு “நீ கீழ போய் விளையாடு தருண், அம்மாவும் அப்பாவும் ready ஆகிவிட்டு கீழே வருகிறோம்” என்று சொல்லி அனுப்பி வைத்தான். தருணை எதற்கு கீழே அனுப்புகிறான் என்று சத்யாவிற்கு கொஞ்சம் படபடவென்றது.
“ஆசை தோசை, கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி ரொமான்ஸ் எல்லாம் பண்ண மாட்டாரு, கொஞ்சம் சிரிச்சு பேசிட்டா ஓவரா expect பண்ணி ஏமாந்து போகாதே சத்யா, நீ இன்னும் முறையாக மன்னிப்பு கேட்கவில்லை என்று அவர் எப்படியும் கோபமாக தான் இருப்பார்” என்று அவள் இரண்டு மூன்று சேலைகளை எடுத்து குழம்பி கொண்டிருக்க “இது நல்லா இருக்கும்னு தோணுது, but உன் விருப்பம், ரொம்ப நேரம் எடுத்துக்காத, time ஆகுது” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று அவனும் refresh ஆகி casual shirt, jeans என்று மாற்றிக்கொண்டு வந்து நின்றான்.
“இன்னும் கிளம்பலையா?” என்று அவன் கேட்க “நீங்க தான் பாத்ரூமை பிடித்து கொண்டீர்களே, அப்புறம் நான் எப்படி கிளம்புவது?” என்று கோபமாக அவள் கேட்க “ஏன் இங்கயே சேலையை கட்ட வேண்டியது தானே” என்று அவனும் கோபமாக பதில் சொல்ல “அதெல்லாம் முடியாது, அங்க ஈர தரைல சேலை மாத்தறது கஷ்டம் தான், ஆனா பரவாயில்ல, அங்கேயே மாத்திக்கிறேன், இங்க நான் பாதி மாத்திக்கிட்டு இருக்கும் போது நீங்க பாட்டுக்கு வந்துட்டா என் மானம் போய் விடாதா?” என்று கோபமாக பேசுவது போல் பேசிவிட்டு அவனை பார்த்து குறும்பாக புன்னகைத்து விட்டு பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
“கொழுப்பு ரொம்ப அதிகம் ஆகிடுச்சு, ஒரு ஒரு சமயம் பயந்து பயந்து வாயில் வார்த்தைகள் வராமல் தவிக்கும் அப்பாவி பெண் போல் இருப்பது, ஒவ்வொரு சமயம் வாயாடி மாதிரி பேசுவது, ஒருநாள் எல்லாவற்றையும் அடக்குகிறேன் இரு” என்று தனக்கு தானே நந்தன் சொல்லிக்கொள்ள பாத்ரூம் கதவை திறந்து “நீங்க அடக்குற வரைக்கும் நாங்க பயந்து போய் இருப்போமா என்ன? யார் யாரை அடக்குகிறார்கள்? என்று இன்னும் கொஞ்ச நாட்களில் பார்ப்போம்” என்று சொல்லி கண்ணடித்து விட்டு எங்கே வந்து நம்மை பிடித்து விடுவானோ என்று பயந்து கதவை மூடிக்கொண்டாள் சத்யா. “காதுல விழுந்துடுச்சா? அவ்வளவு திமிரா பதில் பேசுறவ எதற்கு பிறகு பயந்து கொண்டு கதவை சாத்திக்கொள்கிறாய்?” என்று அவளுக்கு கேட்கும் படியாக கேட்டுவிட்டு “சும்மா சும்மா சீண்டுகிறாளே, இதற்கெல்லாம் விழுந்து விடக்கூடாது” என்று சங்கல்பம் செய்து கொண்டான்.
சத்யா பயந்து கொண்டு பாத்ரூம் குள்ளேயே தயங்கி நின்றாள். “ஹேய் சீக்கிரம் வா” என்றான் நந்தன் கோபமாக. “நான் வரமாட்டேன், நீங்கள் என்னிடம் வம்பு செய்ய மாட்டேன் என்று சொல்லுங்கள், அப்போது தான் வருவேன்” என்று சொல்ல “நீ செய்த தவறுக்கு என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உன்னிடம் வம்பு பண்ற ஐடியா எதுவும் இல்லை, தைரியமாக வெளியே வா” என்று சொல்ல சத்யாவும் வெளியே வந்தாள். அவளை அப்படியே இடுப்பை வளைத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்து “என்ன வர வர ரொம்ப வாயாடுற? யார் யாரை அடக்குகிறார்கள் என்று பார்ப்போம் என்று சவால் விடுகிறாய், பார்ப்போமா? ஏதோ படிக்கிறாயே என்று பார்த்தால் too much ஆ இருக்கே உன் சீண்டல்கள்” என்று கேட்க “காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை வம்பு பண்ணமாட்டேன் என்று சொன்னீர்களே” என்று அவன் சட்டை பட்டனை பிடித்து விளையாடி கொண்டே அவனை பார்த்து கேட்டாள். “ஆமாம் இல்லை, காலுல விழுந்து மன்னிப்பு கேளு” என்று அவளை விடுவித்தான்.
அவள் அவனை பாவமாக பார்த்துக்கொண்டே கீழே குனிய “வேண்டாம் வேண்டாம், உன் தவறை நீ உணர்ந்தால் போதும், முதலில் படி, பிறகு பார்த்து கொள்ளலாம்” என்று அவள் தலையில் கை வைத்து சொல்லிவிட்டு “நான் கீழ வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு கீழே சென்றான்.
Comments
Post a Comment