Sms ch 64 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 64

 

நந்தன், ராகவன், முருகன் மூவரும் பஞ்சாபில் தரை இறங்கிவிட்டு ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர். அன்று மாலையே AKIM குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரை சந்தித்து பேச வேண்டிய திட்டம் இருந்ததால் அவர்கள் அந்த சந்திப்பிற்கு தயாராகினர். சத்யாவிடம் இருந்து வந்த அழைப்புகளை நந்தன் பார்த்தும் அவனால் அப்போது அவளிடம் பேச முடியவில்லை. AKIM குழுவின் உறுப்பினர்களை சந்தித்து ஷ்யாம் பற்றியும், அந்த pen drive ல் இருந்த மற்ற போதை பொருட்கள் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், கடத்தல் காரர்கள் பற்றிய விஷயங்களையும் பற்றி ஆராய்ந்தார்கள். ஷ்யாம் கௌஷிக்கை கொல்லும் வீடியோவையும் அவர்கள் பார்த்தார்கள்.

 

ஒரே சமயத்தில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் கௌஷிக் கொலை வீடியோவையும், சில போதை பொருட்கள் கைமாற்றும் வீடியோக்களையும் பரவ விடுவது என்று தீர்மானித்தார்கள். ஒருவேளை இந்தியாவில் அந்த வீடியோக்கள் முடக்கப்பட்டால் அவற்றை வெளிநாடுகளில் இருக்கும் குழுவின் நண்பர்களை வைத்து ட்ரெண்ட் செய்வது என்று முடிவு செய்தார்கள். முதலில் அரசியவாதிகளின் மேல் கைவைக்க கூடாது, ஏன் என்றால் அவர்கள் மொத்தமாக எல்லா செயல்பாடுகளையும் முடக்க முடியும் என்று தீர்மானித்து drug lords என்று அழைக்கப்படும் போதை வியாபாரிகளின் குட்டை வெளிப்படுத்தும் வீடியோக்களை மட்டும் வெளியிட முடிவு செய்தார்கள்.

 

கவிதா சேகரித்த pen drive வீடியோக்கள் மட்டுமல்லாமல் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேகரித்த தகவல்களையும் ஒரே நேரத்தில் நெட்டில் பரவ விட முடிவு செய்தார்கள். ஒரு செய்தியை கட்டுப்படுத்த ஒரு அரசியல்வாதி முயலும் வேளையில் அடுத்த செய்தி பரவ வேண்டும், எதை முடக்குவது, எதை சமாளிப்பது என்று திக்குமுக்காடும் வேளையில் மக்கள் அனைவருக்கும் இந்த செய்திகள் சென்று சேர வேண்டும். AKIM ல் உள்ள பத்திரிக்கையாளர்களும் தங்கள் பங்குக்கு இந்த விஷயங்களை பெரிதாக்கி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். சத்யாவின் நலன் கருதி ஷ்யாம், கௌஷிக் பெயர்களை தவிர அந்த பத்திரிக்கையாளர்கள் சத்யா பெயர் வெளியிட வேண்டாம் என்றும் முடிவு செய்தார்கள்.

 

இதை எல்லாம் செய்வதற்கு முன் அவர்களுக்கு ஆதாரவாக உள்ள சில நல்ல அமைச்சர்களையும் கலந்தாலோசித்து பேசிக்கொள்ள முடிவு செய்தார்கள். இந்த கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முன் நந்தனும் ராகவனும் ஷ்யாமின் அம்மாவை பார்த்து பேச வேண்டும் என்று சொல்ல அதற்கு குழுவில் தேவையற்ற சந்திப்பு என்று ஒரு சிலரும், அந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையலாம் என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தார்கள். எது எப்படி ஆனாலும் நந்தன், ராகவன், முருகனின் நலன் கருதி ஷ்யாமின் அம்மாவை அவர்கள் வீட்டில் சந்திக்காமல் வேறு ஒரு ஹோட்டலுக்கு வர வைத்து சந்திக்க AKIM உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதற்கு நந்தனும் ராகவனும் சம்மதித்து ஷ்யாமின் அம்மாவிற்கு call செய்தார்கள்.

 

மேடம் நான் நந்தன் பேசுறேன், உங்ககிட்ட நேரில் சந்தித்து கொஞ்சம் பேசணுமே

 

பஞ்சாப் வந்து சேர்ந்து விட்டீர்களா? சொல்லுங்கள் எங்கே சந்திக்கலாம்? என் வீட்டில் வேண்டாம், இப்போது ஷ்யாம் இங்கே இல்லை என்றாலும் நீங்கள் இங்கே வருவது பாதுகாப்பாக இருக்காது

 

சாம்ராட் ஹோட்டலில் உள்ள கஃபேயில் நாளை மாலை சந்திக்கலாமா?” என்று நந்தன் கேட்க ஷ்யாமின் அம்மாவும் சம்மதம் தெரிவித்தார்கள்.

 

அழைப்பை துண்டித்துவிட்டு AKIM உறுப்பினர்களுடன் இரவு உணவை ஹோட்டலிலேயே சாப்பிட்டுவிட்டு அவர்கள் புறப்பட்டதும் நந்தன், முருகன், ராகவன் இளைப்பாறினார்கள். முருகன் வள்ளிக்கு call செய்ய வள்ளி மெதுவாக சொன்னாள். “சத்யா அறையில் தான் தூங்க போகிறேன், சத்யாவிற்கு நாள் முழுக்க நல்ல ஜுரம், இப்போது தான் மாத்திரை போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தாள், பிறகு பேசலாம் என்று அவள் சொல்ல நந்தன் காதிலும் வள்ளி சொன்ன விஷயங்கள் விழுந்தது. நந்தன் முருகனிடம் “ஒரு நிமிடம் நான் பேசலாமா?” என்று கேட்க முருகன் மொபைலை நந்தனிடம் நீட்டினான்.

 

நந்தன் மொபைலை வாங்கி “வள்ளி நலமா? சத்யா எப்படி இருக்கிறாள்?” என்று விசாரித்தான். “நல்ல ஜுரம் தான் சார், நாளை ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகு அதற்கு தகுந்தாற் போல் மருந்து ஊசியாகவோ இல்லை மாத்திரையாகவோ தருவதாக டாக்டர் சொல்லி இருக்கிறார் என்று சொல்ல “இப்போது தூங்கி விட்டாளா?” என்று நந்தன் கேட்க “ஆமாம் சார் என்றாள் வள்ளி.

 

நந்தன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “வள்ளி தப்பா நினைச்சுக்காம கொஞ்சம் whatsapp ல வீடியோ call ல் வந்து சத்யாவை காண்பிக்க முடியுமா?” என்று கேட்க வள்ளியும் வீடியோ call ல் வந்து தூங்கி கொண்டிருக்கும் சத்யாவை காண்பித்தாள். நந்தன் அவளை ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு “ok வள்ளி, நீங்கள் முருகனுடன் பேசுங்கள் என்று கூறிவிட்டு அறையின் பால்கனிக்கு சென்று இரவு நேர ஒளியில் மின்னும் சண்டிகரை பார்த்தான்.

 

சென்னையில் தன் flat ல் சத்யா தன் நெஞ்சில் சாய்ந்து தன் சட்டையை இறுக பிடித்தபடி படுத்து உறங்கிய இரவு அவனுக்கு நினைவு வந்தது. கட்டிலின் அருகே இருந்த ஜன்னலின் curtain கள் அன்று திறந்து இருக்க அவன் சத்யாவை அணைத்து அவளின் தலை முடியை கோதிவிட்ட படி சென்னையை மின்விளக்கொளியில் ரசித்த நினைவு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவளை முழுவதும் தன்னவள் ஆக்கிக்கொள்ள வாய்ப்புகளும் விருப்பமும் காதலும் இருந்தும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி கொண்டு காத்திருந்த நந்தனுக்கு இன்றைய இரவு கொடுமையாகவே இருந்தது. அவளை காதலிக்க ஆரம்பித்து முதல் முறையாக இவ்வளவு தொலைவில் இருக்கிறான், அதுவும் அவள் மனதளவிலும் உடல்நிலையிலும் சோர்ந்து போய் இருக்கும் நிலையில் அவளை தாயிடமும் அவள் தோழியிடமும் ஒப்படைத்து விட்டு இங்கே வந்து இருப்பது அவனை மிகவும் வாட்டியது. ஒரு குழந்தை போல மீண்டும் தன் சட்டையை அவள் இறுக பிடித்துக்கொண்டு தன் நெஞ்சில் சாய்ந்து அவள் துயிலும் நாளை எதிர்பார்த்து அவன் மனம் ஏங்கியது.

 

நந்தா நாளைக்கு evening ஷ்யாம் அம்மாவை பார்க்க போகிறோம் இல்லையா? அதற்கு முன்பு சுனிதாவின் அம்மாவை சந்தித்து பேசிவிட வேண்டும் எனக்கு தோன்றுகிறது என்று ராகவன் கேட்டுக்கொண்டே பால்கனி வர நந்தன் சத்யாவின் நினைவில் இருந்து வெளியே வந்தான். “ஆமாம் டா, அவங்ககிட்டயும் பேசிடுறது better, ஷ்யாம் அம்மா அன்னைக்கு நம்பர் குடுத்தப்பவே நான் ஒருவாட்டி call பண்ணி பேசிட்டேன், நாளைக்கு நேர்ல போய் பேசிடலாம் என்றான் நந்தன்.

 

மறுநாள் சுனிதா வீட்டிற்கு மூவரும் சென்றனர். “நாங்க சொல்லி இருந்தோமே, நான் தான் நந்தன், சத்யாவின் கணவர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள சுனிதாவின் அம்மா நந்தனையும் உடன் வந்திருந்த முருகன், ராகவனையும் உள்ளே அழைத்து சென்று அமர வைத்து பேசினார்கள்.

 

சொல்லுங்க அம்மா, போனில் சொன்னது போல் ஷ்யாமோட அம்மா உங்களை பற்றி சில விஷயங்கள் சொன்னாங்க, நீங்களும் கவிதா அத்தையும் செய்த சில விஷயங்களை பற்றி, நாங்கள் ஷ்யாம் மற்றும் அவன் கூட்டாளிகள், மற்ற drug mafia கும்பலை பற்றி நெட்டில் பரவ விடுவதற்கு முன் உங்களிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்தோம்

 

சொல்றேன் தம்பி, எல்லாவற்றையும் சொல்கிறேன், கௌஷிக் தம்பியும் சுனிதாவும் ஓடி போய்விட்டதாக அந்த படுபாவி ஷ்யாம் கதை கட்டி விட்டான், எனக்கு தெரியும் அவன் தான் என் மகளை ஏதோ செய்திருக்கிறான் என்று. அவளாக காதலித்து எங்களை மீறி செய்த திருமணம்  என்பதால் அவள் கஷ்டங்களை எங்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாள். இருந்தாலும் அவளுக்கு செய்ய வேண்டியதை நாங்கள் செய்து கொண்டு தான் இருந்தோம். முடிந்த அளவு நகைகளாகட்டும், இல்லை பொருட்கள் ஆகட்டும், இல்லை பேச்சு வார்த்தையாக இருக்கட்டும், எல்லாவற்றையும் செய்தேன், அவ்வப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வலிய சென்று பேசுவேன். அவள் தன் கஷ்டங்களை சொல்லாமல் மூடி மறைப்பாள். ஆனால் அவள் காணாமல் போவதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு வார்த்தை சொன்னாள், எனக்கோ இல்லை சத்யாவிற்கோ அந்த வீட்டில் ஏதேனும் நடந்தால் அதற்கு முழு காரணமும் ஷ்யாம் தான் என்று சொன்னாள். நானும் ஏன் இப்படி சொல்கிறாள் என்று துருவி துருவி கேட்டு பார்த்தேன். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் ஓடி போய்விட்டதாக இவன் கதை கட்டிவிட்ட பிறகு இரண்டு மூன்று முறை கவிதாவை பார்த்து இதை பற்றி பேச முயன்றேன், ஆனால் அவர்கள் பேச்சு கொடுக்கவில்லை. பிறகு அவர்கள் மும்பையில் அதிகமாக தங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

 

இரண்டு வருடங்கள் கழித்து கௌஷிக், சுனிதா எலும்பு கூடுகள் கிடைத்த போது தான் நான் மீண்டும் சத்யாவையும் கவிதாவையும் பார்த்தேன். மறுபடியும் அவர்களிடம் பேச முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பிறகு ஷ்யாம் அவர்கள் வீட்டில் ஏறி குதித்து சத்யாவிற்கு போதை ஊசி போடப்போனான் என்றும் அதை கவிதா தடுத்து நிறுத்தினார்கள் என்றும், அந்த வழக்கில் ஷ்யாமிற்கு தண்டனை வாங்கி கொடுத்தார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அப்போது தான் சத்யாவை மும்பைக்கு அனுப்பிவிட்டு கவிதா என்னை பார்க்க வந்தார்கள்.

 

எனக்கு ஷ்யாம் மீது இருந்த சந்தேகத்தை சொன்னேன். அவர்களும் சொன்னார்கள். தனக்கும் கௌஷிக் சுனிதாவை அழைத்து கொண்டு ஓடி இருப்பார் என்பதை முழுமையாக நம்ப முடியவில்லை என்றும், கௌஷிக் சத்யாவை உயிருக்கு உயிராக காதலித்தது தனக்கு தெரியும் என்றும், எப்போதுமே ஷ்யாம் மீது தனக்கு ஒரு சந்தேகம் இருந்ததையும் சொன்னார்கள். அதனால் தான் சத்யாவை முடிந்த அளவு ஷ்யாமை பார்க்க தனியாக அனுப்பாமல் இருந்ததாகவும் சொன்னார்கள். ஆனால் ஏன் என்னிடம் பேசவில்லை என்று நான் கேட்டதற்கு சத்யாவை முடிந்த அளவு இந்த விஷயங்களில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும், மீண்டும் மீண்டும் கௌஷிக், ஷ்யாம், சுனிதா என்று அவள் ஒடுங்கி விடக்கூடாது, அவள் கொஞ்சம் தேறிய பின் இதை பற்றி பேசலாம் என்பதற்காக தான் இவற்றை பற்றி காதில் போட்டுகொள்ளாமல் இருந்ததாகவும் சொன்னார்கள். ஆனால் எப்போது கௌஷிக்கின் எலும்பு கூடுகள் கிடைத்ததோ, என் மகள் எப்போது விதவை என்று உறுதியானதோ, ஷ்யாம் எப்போது நேரிடையாக என் மகளை குறி வைக்க ஆரம்பித்து விட்டானோ இனி கௌஷிக்கிற்கு நியாயம் கிடைக்கவும், ஷ்யாம் விஷயத்தில் சும்மா இருக்க மாட்டேன் என்றும் சொன்னார்கள்.

 

சரி என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு ஷ்யாம் தான் கௌஷிக்கை சுனிதாவை கொன்றான் என்பது உறுதியாக தெரியாது, சத்யாவிற்காக அவன் தான் செய்திருக்க வேண்டும், இருந்தாலும் இரண்டு வருடங்கள் கழித்து ஆதாரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான், ஆனால் அவன் போதை பொருள் விஷயத்திலாவது அவனுக்கு பெரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், அதற்கு அவன் வீட்டில் ஏதாவது பதுக்கி வைத்திருந்தால் அதை வீடியோ எடுத்து உரிய இடத்தில் அவனை மாட்டி விட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். சத்யாவின் வழக்கில் ஆட்களின் influence வைத்து அவன் வெளியே வருவதற்குள் அவனை மீண்டும் ஒரு போதை பொருள் வழக்கில் உள்ளே அனுப்ப வேண்டும், என்னால் முடிந்த வரை அவனுக்கு தொல்லை கொடுத்து கொண்டே இருப்பேன், என் மகளின் கணவனை கொன்றதோடு மட்டுமல்லாமல் என் மகளின் மானத்தையும் உயிரையும் பறிக்க முயன்றவன், இனி என்னால் என் சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து அவன் நிம்மதியை கெடுப்பேன் என்று சொன்னார்கள்.

 

அதற்கு முதற்கட்டமாக ஷ்யாம் ஜெயிலில் இருக்கும் சமயத்தில் ஷ்யாம் வீட்டிற்கு சென்று ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்க்க போவதாக சொன்னார்கள். நானும் உடன் வரவா என்று கேட்டதற்கு எனக்கு இளைய மகள் ஒருத்தி இருப்பதையும் அவளை ஷ்யாம் ஏதாவது செய்யக்கூடும், சத்யா மும்பை சென்றுவிட்டாள், அவளை பற்றி கவலை இல்லை, ஆனால் நாளை நாம் மாட்டிக்கொண்டால் அந்த ஷ்யாம் உங்கள் இளைய மகளை ஏதாவது செய்யக்கூடும், அதனால் நீங்கள் விலகியே இருங்கள் என்று சொல்லி அவர்கள் மட்டும் ஷ்யாம் வீட்டிற்கு சென்றார்கள். ஏற்கனவே சுனிதாவிற்கும் சத்யாவிற்கும் பழக்கத்தில் இருந்த ஒரு வேலைக்காரியின் உதவியோடு அவன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் வீட்டிற்குள் சென்று அவன் அறைக்குள் சென்று சில ஆதாரங்களை திராட்டினார்கள். அவன் கம்ப்யூட்டரில் சில ஆதாரங்களை அவர்கள் திரட்ட முயற்சி செய்யும் போது தான் ஷ்யாம் அம்மாவின் குரல் கேட்டு திரும்பினார்களாம்.

 

அங்கே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது தம்பி, ஆனால் கவிதா திரும்பி வந்து சொன்னார்கள். ஷ்யாம் அம்மா என்னை பார்த்துவிட்டார்கள். ஆனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் நலன் கருதி எல்லா விஷயங்களையும் பேச முடியாது என்றும் ஆனால் கௌஷிக், சுனிதாவிற்கு நியாயம் கிடைக்க வழி கிடைத்து விட்டதாகவும், தான் பஞ்சாபில் இருந்து ஏதாவது செய்தால் அது தன்னையும் பாதிக்கும், மும்பை சென்று சில பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்துவிட்டு தான் ஷ்யாமை பிடிக்க ஏற்பாடு செய்யபோவதாகவும் சொன்னார்கள். ஏதோ பெரிய பெரிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சொன்னார்கள். என் கணவரும் நானும் எங்கள் இரண்டாம் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு கவிதா கொடுத்த அறிவுரை படி விலகி இருப்பதாக சம்மதித்தோம்.

 

ஆனால் அதன் பிறகு கவிதாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவர்கள் வீட்டை விற்கவில்லை என்று தெரியும், ஒருநாள் இல்லை ஒருநாள் திரும்பி வருவார்கள் என்று காத்திருந்தோம், ஆனால் வரவே இல்லை, ஒருவேளை ஷ்யாம் அவர்களையும் ஏதாவது செய்து விட்டானா? இல்லை ஷ்யாம் அம்மா ஏதாவது செய்து விட்டார்களா? இல்லை எதற்கு வம்பு என்று மும்பையில் சத்யாவுடன் நிம்மதியாக வாழ்கிறார்களா என்றெல்லாம் நாங்கள் நினைத்ததுண்டு. ஆனால் நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன் call செய்து சொன்ன பிறகு தான் தெரியும், அவர்கள் மும்பை செல்லும் வழியில் heart attack வந்து ரயிலில் இறந்து விட்டார்கள் என்று. இப்போது நீங்கள் என்ன தம்பி செய்யப்போகிறீர்கள்? ஏதோ கவிதா விட்டுசென்ற பையில் இருந்து நெறைய ஆதாரங்கள் கிடைத்ததாக சொன்னீர்களே, அவை எல்லாம் வைத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லி சுனிதாவின் தாயார் கேட்க நந்தன் பதில் சொன்னான்.

 

என்ன திட்டம் என்று வெளிப்படையாக சொல்ல முடியாது அம்மா, ஆனால் அந்த ஷ்யாம் எலிப்பொறியில் மாட்டிய எலி போல் தவிப்பான், இன்று மாலை ஷ்யாமின் அம்மாவை நாங்கள் சந்திக்க போகிறோம், அவர்களிடமும் பேசிவிட்டு எங்கள் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்

 

அவங்கள நம்பலாமா தம்பி, கவிதா அவங்ககிட்ட மாட்டிகிட்ட பிறகு என்ன நடந்துச்சுன்னு சொல்லல, இருந்தாலும் நெறைய ஆதாரங்கள் கிடைத்ததாக மட்டும் சொன்னார்கள், அவர்கள் தான் ஒருவேளை கவிதாவை ஏதாவது செய்து விட்டார்களோ என்று கூட எனக்கு சந்தேகமாக உள்ளது, நீங்கள் அவர்களை பார்ப்பது சரியான செயல் தானா என்று யோசித்து செயல்படுங்கள் தம்பி

 

அவங்க தான் ஷ்யாம் சத்யாவை பார்க்க சென்னை வந்த போது துரைசாமிக்கு தகவல் கொடுத்தவர்கள், எனக்கென்னவோ அவர்களை நம்பலாம் என்று தான் தோன்றுகிறது, அதோடு மட்டுமல்லாமல் எங்கள் பாதுகாப்புக்கு சிலர் அங்கே மாற்று உடையில் இருப்பார்கள், அதனால் பயம் தேவை இல்லை, சரிம்மா ரொம்ப நன்றி என்று நந்தன் கைக்கூப்ப சுனிதாவின் தாயார் கண்ணீருடன் கைக்கூப்பினார்கள்.

 

கோர்ட்டில் போய் என் மகளுக்கு நியாயம் கிடைக்க என்னால் போராட முடியவில்லை, ஆள் பலமும் பண பலமும் கொண்ட அவனிடம் என் மகளை தூக்கி கொடுத்துவிட்டு கோழையாக உட்கார்ந்து விட்டேன், என் மகள் வாழும் போதும் நல்ல வாழ்க்கை வாழவில்லை, இறப்பிலும் ஓடுகாலி என்ற பெயருடன் போய்விட்டாள், கவிதா அளவுக்கு கூட என் மகளுக்காக நான் எந்த முயற்சியும் செய்யவில்லை, என் மகளை கொன்றவனுக்கு யாராவது தண்டனை வாங்கி தரமாட்டார்களா என்று ஒவ்வொரு நாளும் ஏங்குவதை தவிர, வேண்டுவதை தவிர நான் வேறு ஒன்றும் செய்யவில்லை தம்பி என்று சுனிதாவின் தாய் கண்ணீருடன் புலம்ப நந்தன் அவர்களின் கூப்பிய கைகளை பிடித்து “பெரிய பெரிய போலீசார், அரசியல்வாதிகளால் கூட இது போன்றவர்களை ஒன்றும் செய்ய இயலுவதில்லை அம்மா, இருந்தாலும் உங்கள் வேண்டுதலும், தாயின் வலியும் போதும் அவன் கண்டிப்பாக தண்டனையை அனுபவிப்பான், உங்கள் இளைய மகளின் வாழ்க்கை தான் இப்போது உங்களுக்கு முக்கியம், சுனிதாவின் ஆன்மா கூட உங்கள் இளைய மகளின் நலத்தை தான் விரும்பும், அதனால் நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள், அப்புறம் டிவி பார்ப்பது போல் அவ்வப்போது கவலை இன்றி இனி ஷ்யாம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். ராகவனும் முருகனும் கூட அவனுடன் விடைபெற்றனர்.

 

அன்று மாலை நந்தன், ராகவன், முருகன் மூவரும் ஷ்யாமின் அம்மாவை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த மற்றொரு ஹோட்டலில் சந்திக்க சென்றார்கள். சந்திப்பு தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் சத்தியமூர்த்தி வீட்டு செக்யூரிட்டி மேல் வெளியே பைக்கில் வேகமாக சென்ற ஒருவனால் ஒரு காகித உருண்டை வீசப்பட்டது. அதை பிரித்து படித்த செக்யூரிட்டி அவசர அவசரமாக மற்றொருவரை காவலுக்கு வைத்துவிட்டு சத்தியமூர்த்தி வீட்டிற்குள் சென்றார். அப்போது தான் காற்றாட நடந்து வருவோம் என்று வெளியே தோட்டத்திற்கு வந்திருந்த சத்யாவும் வள்ளியும் அவசரமாக ஓடிவந்த செக்யூரிட்டி பார்த்து அவரை பின் தொடர்ந்தனர்.

 

செக்யூரிட்டி உள்ளே சென்று காகித துண்டை சத்தியமூர்த்தியிடம் நீட்ட அதை படித்த சத்தியமூர்த்திக்கு வியர்த்தது. சத்யா அதை கொடுக்க சொல்லி கேட்க சத்தியமூர்த்தி மறுத்தார். சத்யா பிடிவாதமாக வாங்கி படித்தாள்.

 

சத்யா, உன் புது கணவன் சென்னையிலேயே இருந்து இருந்தால் ஒருவேளை மன்னித்து விட்டிருப்பேன், ஆனால் அவன் ஏதோ பெரிய திட்டத்தோடு தான் பஞ்சாப் சென்றுள்ளான், என் அம்மாவை பார்த்து பேசிக்கோண்டிருக்கிறான், இனி நான் அவனை உயிரோட விட மாட்டேன், ஒழுங்காக அவனை எல்லாவற்றையும் கைவிட்டு உடனே சென்னைக்கு திரும்ப சொல் என்று எழுதி இருந்தது.

 

சத்யா பாதி ஜுரத்தில் புரியாமல் வியர்த்து நடுங்கி குழம்பினாள். “அத்தை இது ஷ்யாமாக தான் இருக்க வேண்டும், ஆனால் அவர் மும்பைக்கு தானே சென்றிருப்பதாக சொன்னீர்கள், பஞ்சாப் என்று எழுதி இருக்கிறானே, என்னிடம் என்ன மறைக்கிறீர்கள்? ஏற்கனவே அவர் உயிருக்கு என்னை திருமணம் செய்த காரணத்தால் எப்போது ஆபத்து வருமோ என்று நான் பயந்து கொண்டிருக்கிறேன், இப்போது இவர் ஏதோ அவனை பிடிக்க பெரிய திட்டத்தோடு சென்றுள்ளார், அது அந்த நாய்க்கு தெரிந்து விட்டது, அவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் நான் உயிரோடு இருக்க மாட்டேன், உடனே அவருக்கு call செய்து வர சொல்கிறேன் என்று அவள் நடுங்கும் கைகளால் மொபைலை எடுத்து call செய்தாள். ஆனால் நந்தனின் மொபைல் switch off என்று வந்தது.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018