Sms ch 55 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 55
நந்தனின் கதையை கேட்ட சத்தியமூர்த்தி “இருந்தாலும் படித்து கொண்டிருக்கும் பெண்ணை அவ்வளவு அவசரப்பட்டு திருமணம் செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது, அதுவும் அந்த ஷ்யாம் குடும்பத்தில் தான் கௌஷிக் இருக்கிறார் என்றால் கொஞ்சம் விசாரித்து செய்திருக்கலாம்” என்று சொல்ல “அப்பா வெளியே இருந்து பார்க்கும் போது ஷ்யாமின் கெட்ட குணம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதோடு இல்லாமல் நீங்கள் கௌஷிக்கை பார்த்ததில்லை, நான் போட்டோவில் தான் பார்த்தேன், பார்க்கும் போதே தெரிந்தது, அவர் ஒரு நல்ல மனிதர் என்று, பார்க்கவும் நன்றாக இருப்பார், அத்தை என்ன நினைத்து இருப்பார்கள்? தன் மகளை மனதார விரும்புகிறார், மகளுக்கும் பிடித்துள்ளது, இந்த மொட்டை கடுதாசிகள் வேறு, மாமாவும் உயிருடன் இல்லை, சொந்த பந்தங்கள் யாரும் பக்கத்தில் இல்லை, அப்படி இருக்கும் போது அத்தை எடுத்த முடிவு புரிந்து கொள்ளக்கூடிய முடிவாக தான் என் மனதிற்கு படுகிறது” என்று வாதடினான் நந்தன்.
“சரிப்பா அந்த கௌஷிக் தம்பிய வீட்டோட மாப்பிள்ளையாக வைத்திருக்கலாமே, அந்த ஷ்யாம் கருநாகம் என்றாயே, அவன் இடத்தில் சத்யா என்ன பாடு பட்டாளோ? நினைக்கவே பயமாக உள்ளது” என்று கமலா அம்மா முகத்தில் பயத்துடன் கேட்க நந்தன் பதில் சொன்னான். “அம்மா கவிதா அத்தைக்கு தான் அப்போது ஷ்யாம் பற்றி தெரியாதே, இருந்தும் கௌஷிக்கை வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க சொல்லி இருக்கிறார்கள், ஆனால் வளர்த்த நன்றியை மறந்து அந்த அம்மா அப்பாவை விட்டு விலகாமல் இருந்து உள்ளார் கௌஷிக்”.
“ஹ்ம்ம் நல்ல பையன் தான் போல அந்த தம்பி, சரிப்பா அப்புறம் என்ன தான் ஆச்சு?”
“கௌஷிக், சத்யா தருணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் ஏதோ பிசினஸ் டென்ஷனில் கௌஷிக் சத்யாவிடம் கோபப்பட சத்யா கோபித்து கொண்டு தருணை அழைத்து கொண்டு அம்மா வீட்டிற்கு வந்து இருக்கிறாள், அதன் பிறகு கௌஷிக் காணாமல் போய்விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது, எங்கெங்கோ தேடியும் கௌஷிக் கிடைக்கவில்லை, இரண்டு வருடங்கள் கழித்து அவரின் எலும்புக்கூடு மட்டும் ஒரு மலைப்பகுதியில் இருந்து கிடைத்துள்ளது, dna தருணுடன் மேட்ச் ஆனதை வைத்து அது கௌஷிக் தான் என்று உறுதி செய்துள்ளார்கள்” என்று சொல்ல சத்யா தன் கண்ணீரை போராடி கட்டுப்படுத்தி கொண்டாள்.
“அச்சோ அந்த தம்பிக்கு இந்த நிலைமை வந்திருக்க வேண்டாம், என்ன தான் ஆச்சு? அந்த ஷ்யாம் தான் ஏதாவது செய்து விட்டானா?”
“ஆமாம் அம்மா அவன் தான் சத்யா மீது இருந்த ஆசையில் ஏதோ செய்திருக்க வேண்டும், அது வரை சத்யாவிற்கும் அவன்மேல் சந்தேகம் இல்லை, ஆனால் கௌஷிக் இறந்த பிறகு ஒருநாள் அத்தையின் வீட்டில் இரவு நேரத்தில் புகுந்து சத்யாவிற்கு போதை ஊசி போட வந்திருக்கிறான், அத்தை நல்ல நேரத்தில் சத்யாவின் அறைக்கு வந்து காப்பாற்றி இருக்கிறார்கள், அப்போது தான் அவன் எவ்வளவு கெட்டவன் என்று சத்யா உணர ஆரம்பித்து இருக்கிறாள், அவன் மீது case போட்டு ஜெயிலில் அடைத்து உள்ளார்கள்” என்றான் நந்தன்.
“சரி அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்க “சத்யா நீயே சொல்லு” என்று நந்தன் மீதி விஷயங்களை சத்யாவை சொல்ல சொன்னான். சத்யாவும் பழைய நினைவுகளால் ஏற்பட்ட கண்ணீரை துடைத்து கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
“கௌஷிக் காணாமல் போன சமயம் மும்பையில் யாரோ அவரை பார்த்ததாக சொல்ல நாங்கள் அவரை தேடும் பொருட்டு அவ்வப்போது மும்பையில் தங்கி இருந்திருந்தோம், கௌஷிக்கின் remains கிடைக்கவும் பஞ்சாப் சென்றிருந்தோம், அப்போது தான் ஷ்யாம் இது போல் நடந்து வீட்டை உடைத்து வந்து மாட்டிக்கொண்டது, மறுபடியும் அவன் எதுவும் செய்ய வாய்ப்புள்ளது, மும்பைக்கே எல்லோரும் சென்று விடலாம் என்று சொல்லி முதலில் என்னையும், தருணையும், பாட்டி, வள்ளி, முருகன், சின்னுவுடன் அம்மா மும்பைக்கு அனுப்பிவிட்டு முடிந்தால் பஞ்சாபில் உள்ள வீட்டை விற்றுவிட்டு ஒரு வாரத்தில் வருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு வாரத்திற்கு பின் அழைப்பு, மெசேஜ் என்று எதுவும் இல்லை, அவர்களை நேராக சென்று பார்த்து அழைத்து வரலாம் என்று flight ல் டிக்கெட் புக் செய்து விட்டு திரும்பி வரும் போது...........” என்று சத்யா தயங்கி நிறுத்தி நந்தனை பார்த்தாள்.
நந்தன் தொடர்ந்தான். “அப்போது தான் ஷ்யாம் தனக்கு தெரிந்த ஒரு அரசியல் புள்ளியின் மகனை வைத்து சத்யாவை கடத்தி கொண்டு போய் மும்பை ரெட் லைட் ஏரியாவில் வைத்து சத்யாவிற்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்துள்ளான்”.
“அடப்பாவி, இப்படி கூட செய்வார்களா என்ன?” என்று சத்தியமூர்த்தி குடும்பம் அதிர்ச்சியாய் கேட்க “ஆமாம் அம்மா, அந்த ஷ்யாம் மிகவும் கொடூரமானவன், இந்த விஷயத்தை நான் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் அவனை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், சத்யா அதன் பிறகு பாட்டி, வள்ளியுடன் சென்னை வந்துவிட்டாள், அந்த ஷ்யாமும் எப்படியோ மோப்பம் பிடித்து வந்து மீண்டும் சத்யாவிற்கு ஊசி போட்டான், நல்லவேளை அன்று நான் சென்றதால் சத்யாவை காப்பாற்ற முடிந்தது, இனியும் சத்யா வெளியே இருந்தால் பாதுகாப்பு இல்லை என்று எண்ணி தான் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்ய எண்ணி இருந்த என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு சத்யாவின் கழுத்தில் தாலி கட்டினேன்” என்று முடித்தான்.
“அந்த ஷ்யாமை பிடிச்சாச்சா நந்து?” என்று சத்தியமூர்த்தி கேட்க “இல்லப்பா ராகவன் முயற்சி செய்கிறான், ஆனால் அந்த ஷ்யாமிற்கு நெறைய அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கும் போல, ராகவனுக்கும் இந்த கேசை கைவிட கோரி நெறைய pressure, ஆனால் இன்று இந்த பிரச்னையை கைவிட்டால் சத்யாவை போன்று பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்க படலாம், அதனால் ராகவன் இந்த கேசை விடுவதாக இல்லை”
“நம் வீட்டிற்கு காவல் போட்டதின் உண்மையான காரணம் கூட இது தானோ?”
“ஆமாம்ப்பா இந்த காரணம் தான்”
“சரிப்பா அந்த ஷ்யாமிற்கு சில அரசியல்வாதிகளை தெரியலாம், நமக்கும் சில முக்கிய புள்ளிகளை தெரியும், நாம் நம் பக்கம் உள்ள புள்ளிகளை தொடர்பு கொள்ளலாம்” என்றார் சத்தியமூர்த்தி ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடியே.
“எனக்கு பயமாக உள்ளதே நந்து” என்று கமலா அம்மா கவலையுடன் கூற “பயப்படாதீர்கள் அம்மா, யாருக்கும் எந்த ஆபத்தும் வர நான் விடமாட்டேன், அந்த ஷ்யாமிற்கு தண்டனை வாங்கி தரும் வரை நான் ஓய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு சத்யாவின் கையை விலக்கி விட்டு நந்தன் எழுந்து நின்றான்.
“சரி வாங்க டிபன் வேலையை பார்ப்போம்” என்று கூறி கமலா அம்மா நடக்க எல்லோரும் அவர் பின்னால் சென்றனர். சத்யா நந்தனை பார்த்து ஏதோ சொல்ல முயல “முருகன் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், வாங்களேன்” என்று முருகனை அழைத்து கொண்டு நந்தன் செல்வதை பார்த்துக்கொண்டே நின்றாள்.
நந்தன் முருகனிடம் பேசினான். “திரும்ப மும்பை சென்று வேலை செய்யலாம் என்று எண்ணி இருக்கிறீர்களா முருகன்?” கேட்டான் நந்தன்.
“இல்லை சார், திரும்ப மும்பை எல்லாம் வேண்டாம் என்று வள்ளி சொல்லிவிட்டாள், சம்பாரித்து சேர்த்து வைத்த காசு கொஞ்சம் உள்ளது, பிசினஸ் செய்யலாமா என்று நினைத்தேன், ஆனால் சிறுவயதில் இருந்தே விவசாயம் செய்து பிழைத்தவன், சேலத்தில் மறுபடியும் விவசாயம் பார்க்கலாம் என்று தோன்றுகிறது” என்றான் முருகன்.
“நிலம் எல்லாம் இருக்கா?”
முருகன் சிறு தயக்கத்துடன் “அப்பாவோட பேர்ல இருக்கறது பங்கு பிரிக்கணும், நீ அப்பாவை விட்டுட்டு போயிட்ட, நாங்க தான் அவரை கடைசி காலத்தில் வைத்து பார்த்தோம், உனக்கு பங்கு கிடையாது என்று என் அண்ணன்கள் சொல்கிறார்கள், அப்பாவை நான் பக்கத்தில் இருந்து பார்க்க முடியவில்லை என்பது உண்மை தான், ஏதோ வேகத்தில் வடநாட்டில் சம்பாரித்து பிழைத்து கொள்ளலாம் என்று சென்றேன், சாம்பாரித்த வரை அப்பாவிற்கு மாதா மாதம் பணம் அனுப்பி இருக்கேன் சார், ஷெண்பகத்தின் மறைவு, கவிதாம்மா மறைவு என்று வாழ்க்கையில் பல இழப்புகள், தடுமாற்றங்கள், அதனால் நான் கொஞ்சம் நிலையாக கால் ஊன்ற முடியாமல் போய்விட்டது, ஆனால் அதற்காக நான் அனுப்பிய காசை எல்லாம் இல்லை என்று சொல்ல முடியுமா? எப்படியும் பஞ்சாயத்து கூட்டி பேசியாவது என் பங்கை வாங்கி விடுவேன்” என்றான் முருகன்.
நந்தன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு “நான் ஒன்று சொல்கிறேன், யோசித்து பாருங்கள், வள்ளி பாட்டியிடம் கூட கலந்தாலோசித்து முடிவு சொல்லுங்கள், ஒரு 5 நிமிடம் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு சத்தியமூர்த்தி, கமலா அம்மாவிடம் சென்று பேசிவிட்டு நந்தன் திரும்பி வந்தான்.
“முருகன், பஞ்சாயத்து கூட்டி பங்கு பெறுவது, case போட்டு பங்கு பெறுவதெற்கெல்லாம் வருட கணக்கு கூட ஆகிவிடும், எனக்கு ஒரு யோசனை, சென்னையின் outskirts ல் எங்களுக்கு விளை நிலம், தோட்டம், பண்ணை வீடு என்றெல்லாம் உள்ளது. அதை இயற்கை விவசாயத்திற்கு குத்தகைக்கு விட்டிருந்தோம், ஆனால் அந்த குடும்பம் இப்போது தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்கள், நீங்கள் ஏன் அதை எடுத்து நடத்த கூடாது, இது ஏதோ தானம், உதவி என்று தவறாக நினைத்து வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள்.
எங்களுக்கு விவசாயம் தெரிந்த ஒருவர், உண்மையான ஒருவர் வேண்டும், நீங்கள் ஒரு தொகையை கொடுத்து குத்தகைக்கு எடுத்து கொள்ளுங்கள், விளையும் விளைச்சளில் எங்களுக்கு ஒரு பங்கு கொடுத்து விடுங்கள், மற்றவற்றை நீங்கள் விற்பனைக்கு கொடுக்கலாம், ஆள் வைத்து செய்வது, நீங்களே களத்தில் இறங்கி செய்வது என்பதெல்லாம் உங்கள் சுதந்திரம், ஆனால் இயற்கை விவசாயமாக இருக்க வேண்டும், தோட்டத்தில் காய்கறிகள் போட்டு தர வேண்டும், நாங்கள் அவ்வவப்போது பண்ணை வீட்டில் வந்து தங்குவோம், பண்ணை வீட்டிற்கு அருகிலேயே ஒரு ஓட்டு வீடும் உள்ளது, நீங்கள் அதில் வசித்து கொள்ளலாம்.
உங்கள் பங்கு பிரிவினை சேலத்தில் கிடைத்தால் விருப்பமிருந்தால் நீங்கள் சேலத்திற்கு போகலாம், நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்றோ இல்லை போக வேண்டும் என்றோ எந்த கட்டாயமும் இல்லை, என் அத்தை குடும்பத்திற்கு நீங்கள் எல்லோரும் காலத்திற்கும் செய்த உதவிக்கு உங்களுக்கு நாங்கள் எந்த விதத்திலாவது நன்றி சொல்ல விரும்புகிறோம், உங்களுக்கும் என் கம்பெனியில் வேலை, வள்ளிக்கும் ஏற்கனவே வேலை உள்ளது, அப்படியே இங்கேயே outhouse ல் தங்க வைக்கலாம் என்று தான் நான் முதலில் நினைத்தேன், ஆனால் நீங்கள் எல்லோரும் மிகவும் தயங்குவதால் இந்த இயற்கை விவசாயம் யோசனை வந்தது, யோசித்து முடிவு சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு முருகனிடம் விடைபெற்று நந்தன்
அன்று ஜோசியரை வர வைத்து சாந்தி முஹூர்த்ததிற்கு நேரம் குறித்தனர். கமலா அம்மா, சகுந்தலா, பாட்டி மட்டும் அங்கிருந்தனர். நாளை இரவு நேரம் நன்றாக இருக்கிறது என்று சத்யாவின் பிறந்த தேதி, நேரம் மற்றும் நந்தனின் ஜாதகம் வைத்து குறித்தார் ஜோசியர்.
சத்யா நந்தனிடம் பேச எவ்வளவோ முயற்சித்தும் சரியான சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை. நந்தன் எல்லோர் முன்னிலையிலும் சத்யாவுடன் இயல்பாக நடந்து கொண்டாலும் தனிமையில் அவளை தவிர்த்தான்.
அன்றிரவு தருணுக்கு கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு லேசாக கண் அயர்ந்தவனிடம் அவன் படுத்திருந்த பக்கம் வந்து நின்று சத்யா பேச முயன்றாள். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“எனக்கு தூக்கம் வருது, நாளைக்கு ஆபீஸ் போகணும், என்ன விஷயம்னு சீக்கிரமா சொல்லு” கொஞ்சம் கடுகடு என்று சொன்னான் நந்தன்.
சத்யாவின் முகம் வாடியது. “என்மேல கோவமா? நேத்து நான் தெரியாமல் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.
நந்தன் அமைதியாக அவளை பார்த்தான். சத்யா மனதிற்குள் “ஏன் புன்னகையும் இல்லாமல் கோபமும் இல்லாமல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இப்படி பார்க்கிறான்” என்று புரியாமல் தவித்தாள்.
“நீ உண்மையிலேயே தெரியாமல் பேசியது போல் எனக்கு தோன்றவில்லை” என்று சொல்லிவிட்டு நந்தன் திரும்பி தருணின் மேல் கைகளை போட்டு படுத்து கொண்டான்.
“இதென்ன வம்பா போச்சு, இவ்வளவு நாளும் என்னை சுற்றி சுற்றி வந்துவிட்டு இப்போது நான் மன்னிப்பு கேட்டால் கூட அதை பொருட்படுத்தாமல் இப்படி பேசுகிறார், இந்த ஆண்களே இப்படி தான் போல” என்று நினைத்தவள் கோபமாக அவனின் கையை பிடித்து உலுக்கி “நான் தெரியாம பேசிட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேக்கும் போது நீங்க இப்படி பேசினா என்ன அர்த்தம்? அதான? தாலி கட்டியாச்சுல்ல, இனிமேல் இப்படி தான் இருக்கும், நீங்கள் ஏதோ பெரிய மகாராஜா மாதிரியும் நான் ஏதோ உங்களுக்கு சாமரம் வீசும் பணிப்பெண் மாதிரியும் தான் இருக்கும் வாழ்க்கை, இதனால் தான் உங்களை தடுத்தேன், தடுக்காமல் என்னை முழுவதுமாக உங்களிடம் இழந்திருந்தால் சுத்தம், என்னை கொஞ்சம் கூட மதிக்க மாட்டீர்கள், இப்போதே உங்களை கேள்வி கேட்கவோ, விளக்கம் கேட்கவோ எனக்கு உரிமையும், தகுதியும் இல்லாதது போல் நடந்து கொள்கிறீர்கள், நாளை என்னை அடைந்த பின் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள், எப்படி வேண்டுமானாலும் இருப்பீர்கள், எந்த பெண்ணுடன் பேசுகிறீர்கள், எவளுடன் ஊர் சுற்றிவிட்டு வருகிறீர்கள் என்று கூட கேட்க முடியாது.....” என்று அவள் திறந்து விட்ட மடை நீரை போல கொட்ட நந்தன் அவளை திரும்பி பார்த்து தூங்கி கொண்டிருக்கும் தருணையும் பார்த்துவிட்டு எழுந்து அவளின் கையை பிடித்து இழுத்து வந்து பால்கனியில் நிறுத்தி “இப்போ எவ்வளவு பேசணுமோ பேசு, நானும் தருணும் தூங்க வேண்டும்” என்று மீண்டும் வந்து படுத்து கொண்டான். அங்கேயே சிலை போல் நின்ற சத்யாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“நான் உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று தானே எண்ணுகிறேன், என் சந்தேகங்களை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறேன், ஏன் என்னை புரிந்து கொள்ளாமல் இப்படி நடத்துகிறீர்கள்” என்று அழுதபடியே பால்கனியில் இருந்த சோஃபாவில் படுக்க அழுது கொண்டே தூங்கிப்போனாள்.
நள்ளிரவு போல் நந்தன் எழுந்து சோஃபாவில் தூங்கி கொண்டிருந்த சத்யாவை தூக்கி வந்து தருணுக்கு மறுபக்கம் கட்டிலில் படுக்க வைத்தான். கண்ணீரின் வரிகள் ஓடிய அவளது கன்னத்தை வருடினான். மென்மையாக அவளுக்கு முத்தமிட்டுவிட்டு கட்டிலின் இன்னொரு பக்கம் சென்று தானும் படுத்து தூங்கினான்.
Comments
Post a Comment