Sms ch 50 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 50
ஹாஸ்பிடலில் இருந்து சென்றதில் இருந்து சத்யா மதுவுடன் பேசவில்லை, சாப்பிடவில்லை, தலையை வலிக்கிறது என்று சொல்லி போர்வையை போர்த்தி கொண்டு படுத்துக்கொண்டாள். மதுவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. நந்தன் ராகவனுடனேயே இருக்கிறேன் என்று சொல்லியும் ராகவன் அவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்ப முயன்றான். ராகவன் “அப்பா பாத்துக்குவாரு, நீ செய்ய வேண்டிய வேலைகள் நெறைய இருக்கும்” கிளம்பு என்றான்.
நந்தனும் அன்று மாலை வீட்டிற்கு வந்தான். அதுவரை டென்ஷனாக இருந்த எல்லோரும் அவனை பார்த்த பிறகு பெருமூச்சு விட்டனர். “சாப்பிட என்னம்மா இருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே நந்தன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். “இட்லி இருக்கு, சாப்பிடுறியா? இல்லை வேற ஏதாவது செய்ய சொல்லட்டுமா?” என்று கமலா அம்மா கேட்க “இட்லி போதும் மா” என்று சொல்லி சாப்பிட்டான்.
“ராகவன் எப்படிப்பா இருக்கிறான்? என்ன ஆச்சு?”
“two wheeler ல போகும் போது tyre skid ஆகி விழுந்துட்டான், கைல மட்டும் கொஞ்சம் fracture, மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை”
“நல்ல வேளை, நல்லா இருக்கனும்”
நந்தன் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு செல்ல கொஞ்ச நேரத்தில் கமலா அம்மா வந்தார்கள். “நந்து நாளைக்கு என்னை தலை குனிய வச்சிடாதேப்பா” என்றார்கள்.
நந்தன் அவர்களின் இரு தோள்களையும் பிடித்து புன்னகைத்தான். “நீங்க டென்ஷன் இல்லாம இருங்க அம்மா” என்றான்.
“உனக்கு பிடிக்காதத பண்றோம்ன்னு ஒரு பக்கம் கஷ்டமா இருக்கு, ஆனா இன்னொரு பக்கம் உன்னை இப்படியே விட முடியாது நந்து, ஊர் சுற்றாமல் மனைவி, குழந்தை என்று நீ வாழ வேண்டும், தீபிகா உன்னை விரும்புகிறாள், உனக்கு நல்ல மனைவியாக இருப்பாள், அதனால் மனதில் எந்த கசப்பும் இல்லாமல் நீ சந்தோஷமாக நாளை நிச்சயதார்த்ததில் பங்கு பெற வேண்டும்”
நந்தன் பதில் எதுவும் சொல்லாமல் “ம்ம்ம்” என்பது போல் தலை அசைத்தான்.
“உனக்கும் தீபிகாவிற்கும் நாளைக்கு அணிய dress வாங்கி உள்ளோம், நீயும் வீட்டில் இருந்திருந்தால் உன் விருப்பப்படியே எடுத்து இருக்கலாம், சரி அதனால் என்ன நாளை காலை dress ரெடி ஆகி விடும், காலையில் கொண்டு வந்து தருகிறேன்”
“சரி” என்று நந்தன் தலை அசைக்க கொஞ்சம் கனத்த மனதுடன் கமலா அம்மா அவன் அறையில் இருந்து விடை பெற்றார்கள்.
சத்யா அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி இருந்தது. பாத்ரூம் செல்ல மட்டுமே கட்டிலை விட்டு நகர்ந்தாள். தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரப்பி கொண்டாள். மது எவ்வளவோ சொல்லியும் சாப்பிடவில்லை.
நந்தன் மதுவிற்கு மெசேஜ் செய்தான். “How is she?”
“Very bad, crying, crying, crying, didn’t eat anything, just water”
“Good”
“Good ஆ? பாவி பாவம் டா அந்த பொண்ணு, கொஞ்சம் பேசேன், பேசி சாப்பிட வை”
“வேண்டாம் அழட்டும், கொஞ்சம் அழலாம், தப்பில்ல”
“You are so cruel”
நந்தனிடம் இருந்து பதில் இல்லை அதற்கு மேல்.
சத்யா 100வது முறையாக நினைத்து பார்த்தாள்.
“அன்பாக பார்த்து கொள்வானாம், கையை பிடிப்பானாம், அணைப்பானாம், முத்தம் கொடுப்பானாம், ஆனால் தீபிகாவுடன் நிச்சயதார்த்தம், நான் back up ஆம், போகட்டும் அவளையே கட்டிக்கொண்டு அழட்டும், நாளைக்கு அங்கே போய் எதற்கு இந்த கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டும், பெரிய தொழிலதிபர் வாழ்க்கையில் சல்லாபத்திற்கு பல பெண்கள், society முன் பெருமையாக காட்டிக்கொள்ள தனக்கு நிகரான ஒரு பணக்கார பெண் மனைவியாக, இதெல்லாம் இவர்கள் வாழ்க்கையில் சகஜம் தானே, நான் ஏன் இவனை நினைத்து அழ வேண்டும்” என்று யோசித்து மீண்டும் மீண்டும் அழுதாள்.
“பெண்கள் விஷயத்தில் சந்தேக படுகிறேன் என்றால் என்ன செய்ய வேண்டும், நான் அப்படிப்பட்டவன் இல்லை சத்யா என்று சொல்லலாம், இல்லை என்றால் உனக்காக மற்ற பெண்களை விட்டுவிட்டேன் என்று சொல்லலாம், அதெல்லாம் சொல்ல மாட்டாராம், நான் மட்டும் இவரை நம்பி திருமணம் செய்ய வேண்டுமாம், ஷ்யாமால் பிரச்சனை என்றால் அவனை கைது செய்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லலாம், இல்லை அவனை நினைத்து பயப்படாதே என்று சொல்லலாம், அதெல்லாம் சொல்லி என்னை தேற்றி சம்மதிக்க வைக்க மாட்டாராம், தீபிகாவுடன் நிச்சயதார்த்தமாம், நான் வந்து அவர் மீது காதல் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமாம், வேற வேலை இல்லை, ச்ச என்ன மனிதர்களோ?” என்று விரக்தியடைய “ஷ்யாம் மிரட்டல் பற்றி நீ என்று நந்தனிடம் சொல்லி இருக்கிறாய், அவர் உன்னை தேற்ற” என்று மனசாட்சி கேள்வி கேட்க “போ போய் தூங்கு, எனக்கு இருக்கும் கோபத்தில் உன் நியாய, தர்மத்தை கொண்டு வராதே” என்று மனசாட்சியை மிரட்டினாள்.
மறுநாள் காலை சத்தியமூர்த்தி குடும்பம் பரபரப்பாக இருந்தது. நந்தன் காலையிலேயே தலைக்கு குளித்து விட்டு கீழே இறங்கி வந்தான். ஆங்காங்கே நெறைய அலங்காரங்கள், இரவு முழுவதும் அலங்காரம் செய்திருப்பார்கள் போல என்று எல்லாவற்றையும் நோட்டம் விட்டவன் கமலா அம்மாவிடம் coffee கேட்டான். நந்தன் எந்த பதட்டமும் இல்லாமல் இயல்பாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, பயப்படுவதா என்று அங்கு யாருக்கும் புரியவில்லை. கமலா அம்மா coffee கொடுக்க அதை குடித்துவிட்டு “எத்தனை மணிக்கு மா function?” என்று கேட்க “10 மணியில் இருந்து நல்ல நேரம் தான்ப்பா, அப்பவே நிச்சய பத்திரத்தை படித்து தாம்பாலம் மாற்றி மோதிரம் மாற்றி கொள்ளலாம்” என்றார்கள்.
“Ok, சரிம்மா நான் கோயிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்”
கமலா அம்மாவிற்கு தடுப்பதா, இல்லை அனுப்பலாமா என்று புரியவில்லை. “நேரத்திற்கு வந்துடுவ இல்லையா? உனக்கு எடுத்து வைத்த Dress நீ போட்டு கொள்ள வேண்டும்”
“ஏன் மா, இந்த வேஷ்டி சட்டை நல்லா தானே இருக்கு, இதையே போட்டுக்கிறேன்” என்று சொல்லி வேகமாக நடந்து வெளியேறினான்.
மாலினி குடும்பத்தார், ஸ்வேதா குடும்பத்தார் அனைவரும் வந்து சேர்ந்தனர். மாலினியும், ப்ரீத்தியும் கமலா அம்மாவின் அறைக்கு சென்றார்கள். “வா மாலினி, வா பிரீத்தி” என்று கூற “அண்ணி எனக்கென்னவோ இது ஒன்னும் சரியா படல” என்றார் மாலினி.
“மாலினி ப்ரீத்தியை நந்தனுக்கு கொடுக்க முடியவில்லை என்று வருத்தம் இருக்கலாம், ஆனால் அதை எல்லாம் இப்போது பேச வேண்டாம்” என்று கமலா அம்மா சொல்ல “அண்ணி எனக்கு அந்த வருத்தம் இருப்பது உண்மை தான், ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல, எனக்கென்னவோ அந்த பொண்ணு தீபிகாவை பிடிக்கவில்லை, நந்தனுக்கும் விருப்பமில்லை, அப்புறம் ஏன் இந்த நிச்சயம் எல்லாம்? எனக்கென்னவோ பிடிக்கவில்லை அண்ணி” என்றார் மாலினி.
கமலா அம்மா பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு “உனக்கு எப்போது இருந்து நந்தன் மேல் இவ்வளவு பாசம்?” என்றார்.
“எனக்கு எப்போதுமே அவன் மீது பாசம் உண்டு, என் அண்ணன் மகன் தானே, பாசம் இல்லாமல் போய் விடுமா? எல்லோரும் அவனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது பிடிக்காது, என் மகள் ப்ரீத்தியை வேறு வேண்டாம் என்று சொல்லிவிட்டான், அந்த கோபம் வேறு, மற்றபடி அவன் குணத்தில் என்ன குறை? ப்ரீத்தி சின்ன வயதில் இருந்து அத்தான் அத்தான் என்று சுற்றி வந்திருக்கிறாள், எல்லா வாய்ப்பும் வசதியும் இருந்தும் ஒரு நாளாவது அவளிடம் தவறாக நடந்து இருப்பானா? கிடையாதே, ஊரில் அவனை பற்றி அப்படி இப்படி என்று சொல்ல கேட்டிருக்கிறோம், ஒரு நாளாவது நாம் பார்த்திருக்கிறோமா? நமக்கு தெரிந்து தவறு செய்திருக்கிறானா? இல்லையே, அப்படி இருக்கும் போது நம் வீட்டில் தங்கி இருக்கும் பெண்ணிடம் அப்படி தவறாக நடந்து கொள்வானா? இந்த தீபிகா விஷயத்தில் அவன்மேல் தவறு இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை அண்ணி” என்று சொல்லி முடித்தாள் மாலினி.
“ஆமாம் அத்தை, எனக்கும் அந்த பொண்ணு தீபிகாவை பிடிக்கல, அது யாரு சத்யாவா? அத்தானுக்கு அந்த பெண்ணை பிடித்திருந்தால் அவர்களுடனேயே நிச்சயம் செய்யுங்கள் அத்தை” என்றாள் ப்ரீத்தி.
“இல்லை பிரீத்தி எல்லாம் கை மீறி போய் விட்டது, இனி மாற்ற முடியாது” என்று முடித்தார்கள் கமலா அம்மா.
“எனக்குமே நந்தன் மேல சந்தேகப்பட தோணல அக்கா” என்று சகுந்தலாவும் சேர்ந்து கொள்ள “சகுந்தலா நீயுமா? எனக்கு மட்டும் நந்தன் விருப்பதிற்கு மாறாக இதை நடத்தி வைக்க ஆசையா? முன்னாடியே அந்த பெண் சத்யாவை திருமணம் செய்ய விருப்பம் என்று சொல்லி இருக்கலாம், தீபிகாவை அவனுடன் அந்த கோலத்தில் பார்த்தபின் எப்படி நாம் தீபிகாவை அதோகதியாக விட முடியும், அவளின் பாவம் நம் வீட்டு பெண்களை வாழ விடுமா? அவனுக்கும் ஒரு கால் கட்டு போட்டு தானே ஆக வேண்டும், நந்தனின் மேல் ஆசை வைத்ததை தவிர தீபிகா என்ன தவறு செய்தாள், விடுங்கள், கண்டிப்பாக தீபிகா அவனை மாற்றி நல்வாழ்க்கை வாழ்வாள், அவன் ஒழுக்கமாக மனைவி குழந்தை என்று வாழ்ந்தால் போதும்” என்று கூறி தாம்பல தட்டை தயார் செய்ய சென்றார்கள்.
நந்தன் மதுவிற்கு மெசேஜ் அனுப்பினான். “சத்யாவிற்கு blouse தைத்து கொண்டு வந்துள்ளார்கள். கதவு வழியாக அந்த பெண்கள் தானா என்று செக் பண்ணிட்டு அவற்றை வாங்கி சத்யாவிடம் கொடுத்து விடு”
மதுவும் ஓரம் அடித்து வந்த சேலைகளையும், blouse களையும் வாங்கி சத்யாவிடம் கொடுத்தாள். சத்யா இரவெல்லாம் அழுதது அவள் முகத்தில் தெரிந்தது.
“சத்யா நீ ஏன் அழுகிறாய்? இன்று நாம் அங்கு போக வேண்டாம், நந்தனை நினைத்தால் எனக்கே கோபமாக வருகிறது, வீணாக அங்கே போய் நாம் அழுது வடிந்த முகத்தோடு நின்றால் அந்த தீபிகாவிற்கும் குதூகலமாக இருக்கும்” என்று சொல்ல “இல்லை மது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர் 100 வயது நலமோடு வாழட்டும், அது தான் எனக்கு வேண்டும், நாம் அங்கு செல்லலாம்” என்று கூறி குளிக்க சென்றாள். மது நந்தனுக்கு மெசேஜ் செய்தாள். “She will be there”.
நந்தன் மெசேஜ் பார்த்துவிட்டு கடவுளிடம் வேண்டிக்கொண்டான். “சத்யாவிற்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாம் நடக்க போகிறது, எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன், எப்போதும் துணையாக இருந்து நீங்கள் தான் காக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். தோட்டத்தில் ஒரு பக்கம் சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது. நந்தன் செக்யூரிட்டியை அழைத்து சொன்னான். “அண்ணா உங்களுக்கு மது, ராகவன் எல்லாம் தெரியும் இல்லையா? அவர்களையும் அவர்கள் உடன் வருபவர்களையும் உள்ளே விடுங்கள், அதே போல் இன்னும் சில பேர் வருவார்கள், அவர்களை வீடியோ call ல் காட்டி என்னிடம் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே விடுங்கள், மற்றபடி என் அனுமதி அல்லது குடும்பத்தாரின் அனுமதி இல்லாமல் யாரையும் உள்ளே விட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தான்.
ரோஹித் நந்தனிடம் சென்றான். “என்னடா இதெல்லாம், உனக்கு பிடிக்கலைன்னா ஏன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிற? நீ தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், ஆனா வேற ஒரு பொண்ண love பண்ணும் போது எதற்கு இதை எல்லாம் நடக்க விடுகிறாய்” என்று கேட்க “நான் அன்றிரவு பேச முயற்சி செய்தேன், யாருமே என்னை பேசவிடவில்லை, சரி இந்த ஆட்டமும் எவ்வளவு தூரம் தான் போகிறது என்று பார்ப்போம் என்று நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன்” என்றான்.
வீட்டின் அந்த பெரிய ஹாலில் சோஃபாக்கள் எல்லாம் நகர்த்தி போட்டு ஜமுக்காலம் விரிக்கப்பட்டு தாம்பாள தட்டுக்கள் நிரப்ப பட்டன. தாத்தா ஒரு பக்கம் அமைதியாக உட்கார்ந்திருக்க சத்தியமூர்த்தியும் தீபிகாவின் தந்தையும் சில வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
எல்லோரும் ஒன்று கூடி அமர ஆரம்பித்தார்கள். செக்யூரிட்டியிடம் இருந்து call வந்தது. “இங்க ஒரு குடும்பம் வந்து இருக்காங்க தம்பி, கூடவே போலீசும் வந்து இருக்காங்க” என்று சொல்லி வீடியோவில் காண்பிக்க அவர்களை உள்ளே விடுமாறு நந்தன் பணித்தான். வள்ளி, முருகன், பாட்டி, சின்னு, தருண் அனைவரும் அந்த பெரிய வீட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தனர். நந்தன் வாசலுக்கு சென்று அவர்களை வரவேற்றான். தருண் நந்தனை பார்த்ததும் “அங்கிள்” என்று அணைத்துக்கொள்ள நந்தன் அவனை தூக்கி கொண்டு “வாங்க, உள்ள வாங்க” என்று எல்லோரையும் அழைத்து வந்தான். சத்தியமூர்த்தி குடும்பம் அவர்கள் யார் என்பது போல் பார்க்க நந்தன் அவர்களை கமலா அம்மாவிடம் அறிமுக படுத்தினான்.
“அம்மா இவங்க எல்லாம் நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க, யார் என்ன என்று பிறகு சொல்கிறேன், இது சத்யாவின் மகன் தருண்” என்று தன் கைகளில் தூக்கி வைத்திருந்த தருணை காண்பித்தான். கமலா அம்மாவிற்கு ஒரு பக்கம் திக் திக் என்று இருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் தருணின் கன்னத்தை தடவி கொடுத்துவிட்டு “எல்லோரும் உட்காருங்கள்” என்று உட்கார வைத்தார்கள்.
நந்தனின் செய்கைகள் எல்லாம் எல்லோருக்கும் புரியாத புதிராக இருந்தது. “இவர்களை எல்லாம் ஏன் அழைத்திருக்கிறான்?” என்று குழம்பினார்கள். தீபிகா இவர்கள் வந்ததை கேள்விப்பட்டு வயிற்றில் புளியை கரைக்க உட்கார்ந்து இருந்தாள். நந்தன் தருணை தன் அறைக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்து அழைத்து வந்தான்.
ராகவனும் தன் தந்தை உதவியுடன் கைகளில் கட்டுடன் வந்தான். ஐயரும் வந்து உட்கார்ந்து இரு வீட்டின் பெரியவர்கள் எல்லாம் இப்படி உட்காருங்கள் என்று இருபுறமும் உட்கார வைத்து, நந்தனையும், தீபிகாவையும் எதிர் எதிராக அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் உட்கார வைத்தார்கள். ராகவன் நந்தன் அருகில் ஒரு சோஃபாவில் உட்கார்ந்து இருக்க தருண் நந்தனின் மடியில் உட்கார்ந்து இருந்தான்.
ஐயர் “ஆரம்பிச்சுடலாமா?” என்று கேட்க பெரியவர்கள் சம்மதமாக தலையை அசைத்தனர். இரு வீட்டாரின் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று பெயர்களை வாங்கி எழுதி கொண்டிருந்தார். அதே போல் திருமணத்திற்கும் நாள் குறித்து ஒரு பேப்பரில் நிச்சயதார்த்த வரைவோலை எழுதி கொண்டிருந்தார்.
மதுவும் சத்யாவும் வந்து சேர்ந்தார்கள். வாங்கிய சேலைகளில் நல்ல சேலை ஒன்றை கட்டி இருந்தாள் சத்யா. சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்று கஷ்டப்பட்டு புன்னகைத்தாள். அவள் வருவதை பார்த்த நந்தனுக்கு முதல் முறையாக வியர்த்தது. சத்யா நந்தனின் மடியில் இருந்த தருணை பார்த்து ஆச்சர்யமடைந்தாள். கீழே வள்ளி அக்கா, பாட்டியை பார்த்தும் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் புன்னகைத்தாள். தருணை தன்னிடம் வரும் படி கையால் சைகை செய்தாள். அதுவரை நந்தனை அவள் பெரிதாக பார்த்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. நந்தன் தருணை சத்யாவிடம் போகும் படி அனுப்பினான். சத்யா முட்டி போட்டு தருணை ஆரத் தழுவினாள். அப்போது தான் கமலா அம்மா சத்யாவை நன்றாக பார்த்தார்கள். தருணை அணைக்கிறாள் என்றால் இவள் தான் சத்யாவாக இருக்க வேண்டும். சிறிது நேரம் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள். ஐயர் ஏதோ கேட்க தன் கவனத்தை திருப்பினார்கள். ஐயர் சொன்ன பொருளை எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் சத்யாவை பார்த்துவிட்டு சத்தியமூர்த்தியிடம் காதோடு காதோக ஏதோ சொல்ல அவரும் சத்யா இருந்த திசையை பார்த்தார். கமலா அம்மாவும் சத்தியமூர்த்தியும் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.
ஜெனியும் பட்டு புடவையில் வந்தாள். தீபிகா யோசித்தாள். நிச்சயதார்த்தம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இவன் என்ன ஊரில் உள்ள எல்லோரையும் வர வைத்துள்ளான், இதில் ஏதோ சதி உள்ளது என்று கலக்கமாக அமர்ந்திருந்தாள்.
“மணப்பெண்ணுக்கு சேலை, மோதிரத்தை எல்லாம் எடுத்து இப்படி வையுங்கள்” என்று ஐயர் சொல்ல மோதிரமும், மணப்பெண் சேலையும் எடுத்து வைக்க பட்டன. சத்யா உணர்ச்சிகள் ஏதுமின்றி கண்கள் மட்டும் தாம்பல தட்டை பார்த்துக்கொண்டிருக்க அவள் எண்ணம் முழுவதும் வேறு எங்கோ இருந்தது.
“நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை படித்து விடலாமா?” என்று ஐயர் கேட்க பெரியவர்கள் எல்லோரும் சரி என்று தலை அசைக்க நந்தன் மட்டும் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி சட்டை பையில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டே சத்யா அருகில் சென்றான். எல்லோரும் கேள்வியாய் பார்க்க நந்தன் தன் சட்டை பையில் இருந்து தாலி சரடுடன் கூடிய மஞ்சள் கயிறை எடுத்து சத்யாவின் கழுத்தில் கட்ட ஆரம்பித்தான். சத்யா திகைத்து விலக முயல அவன் இரு கைகளும் அவள் கழுத்தை வளைத்து பிடித்து இருந்தன. எல்லோரும் அதிர்ச்சியில் எழுந்து நின்றனர். சத்யா அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் நின்றாள், கண்களில் கண்ணீர் மட்டும் திரண்டு நின்றது.
நந்தன் மூன்று முடிச்சு போட்டுவிட்டு திரும்பியவன் கீழே தாம்பாள தட்டில் இருந்து குங்கும சிமிழை எடுத்து குங்குமம் எடுத்து சத்யாவின் நெற்றியில் வைக்க திரண்டிருந்த கண்ணீர் இப்போது கன்னங்களில் வழிந்தது. நந்தன் அவள் முகத்தை தாங்கி இரு கன்னங்களிலும் கண்ணீரை தள்ளிவிட்டு அவள் உச்சியில் முத்தமிட்டான். இளைஞர் பட்டாளம் எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தாலும் நந்தன் சத்யாவிற்கு முத்தம் இடுவதை பார்த்து ஒரு புன்னகையுடன் நின்றனர் தீபிகாவையும், அவள் தங்கையையும் தவிர.
தீபிகாவின் தந்தை “என்ன நடக்கிறது இங்கே?” என்று ஆவேசமாக கேட்டுக்கொண்டே நந்தன், சத்யா அருகில் வர அதுவரை எந்த உலகத்தில் இருக்கிறோம் என்று உணர்ச்சிகள் மறத்து போய் நின்ற சத்யா திடுக்கிட்டாள். நந்தன் அவளை பாதுகாப்பது போல் அவள் கையை பிடித்து அவளை தன் பின்னால் மறைத்து நின்றவன் “அங்கிள் உணர்ச்சி வசப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், நான் உங்ககிட்டயும் ஆன்ட்டிகிட்டயும் நெறைய பேச வேண்டும், ஆனால் அதற்கு முன் ஒரு சில விஷயங்களை சரி செய்துவிட்டு பேசுகிறேன்” என்றான்.
அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே தீபிகா “சத்யா உன்னிடம் எவ்வளவு முறை சொன்னேன், இவனை நம்பாதே என்று, நேற்று முன்தினம் இரவு கூட என்னுடன் ஒன்றாக இருந்தான், அதற்கு இந்த குடும்பமே சாட்சி, கேட்டுப்பார், நீ அப்பாவி, உன்னை கட்டிக்கொண்டால் அவன் இஷ்டம் போல் ஊர் சுற்றி வரலாம், நீ கேள்வி கேட்கமாட்டாய், அதனால் தான் இப்படி செய்துள்ளான், அந்த தாலியை நீயே கழட்டி போட்டுவிடு” என்று தீபிகா சத்யாவின் கழுத்தில் இருந்த தாலியில் கை வைக்க சத்யா மீண்டும் உணர்ச்சிகள் மறத்து சிலை போல நின்றாள்.
தீபிகா அந்த தாலியை கழட்ட முயல வள்ளி, மது, ப்ரீத்தி என்று எல்லோரும் பதறி அவள் அருகே வர நந்தன் தீபிகாவின் கையை சத்யாவின் கழுத்தில் இருந்து விலக்க முயன்றான். ஆனால் தீபிகா நிமிடத்திற்கு ஒருமுறை ஆவேசம் அதிகமாக சத்யாவின் கழுத்தையே பிடித்து உலுக்க ஆரம்பித்தாள். நந்தன் கோபமாக அவளை விலக்கி அறைந்தான்.
தீபிகாவின் அம்மா, அப்பா, தங்கை எல்லோரும் “இது என்ன அநியாயம்?” என்று பதறி வந்து தீபிகாவை பிடித்து தாங்கி நின்றனர். அப்போது செக்யூரிட்டி call செய்தார். “தம்பி யுகி என்று ஒருவர் வந்துள்ளார்” என்று வீடியோ call ல் காண்பிக்க அவரை உள்ளே அனுப்பும் படி சொன்னான் நந்தன்.
யுகியை பார்த்ததும் தீபிகாவிற்கு வியர்த்து கொட்டியது. நந்தன் சொன்னான். “ஆண்ட்டி, உங்க கோபம் புரிகிறது, நீங்க தீபிகாவை அழைத்து கொண்டு என் அறைக்கு செல்லுங்கள், நான் எல்லாவற்றையும் விளக்குகிறேன்” என்று சொல்ல “எதுவா இருந்தாலும் இங்கயே பேசு, இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் போலிசுக்கு call செய்ய போகிறேன்” என்று தீபிகாவின் தந்தை சொல்ல நந்தன் தீபிகாவையும் யுகியையும் பார்த்துவிட்டு கேட்டான். “என்ன தீபிகா இங்கயே சொல்லட்டுமா?” என்று.
தீபிகா பதறி போய் “இல்லை நாங்கள் உங்கள் அறையில் காத்து இருக்கிறோம்” என்று சொல்லி வேகமாக நந்தனின் அறைக்கு சென்றாள். “அம்மா, சித்தி, வள்ளி, ஜெனி நீங்களும் வாங்க” என்று கூறிவிட்டு நந்தன் ப்ரீத்தியை அழைத்து “ப்ரீத்தி சத்யாவையும், பாட்டி, முருகன் அண்ணா எல்லோரையும் நம்ம outhouse க்கு அழைத்து செல்” என்று சொல்லிவிட்டு அவள் காதருகில் சொன்னான். “சத்யாவை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள், அவளை தனியாக விடாதே” என்றான். “நான் பார்த்துக்கொள்கிறேன் அத்தான், you don’t worry” என்று புன்னகையுடன் சத்யாவின் கையை பிடித்து அழைத்து சென்றாள் ப்ரீத்தி. சத்யா சிலை போல் நடந்தாள்.
அவளை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு “நீங்க வாங்க அம்மா” என்று கமலா அம்மா, சகுந்தலா, ஜெனி, வள்ளியை அழைத்துக்கொண்டு யுகியையும் பார்த்து “வாங்க” என்று சொல்லி மாடிக்கு தன் அறைக்கு அழைத்து சென்றான்.
ஸ்ரீதிகா கிரிஷை பார்த்து கேட்டாள்.
“உங்கள் அண்ணன் செய்யும் அநியாயங்களை தட்டி கேட்க மாட்டிர்களா?” என்று. அதற்கு கிரிஷ் அவள் காதருகில் “என் அண்ணன் கரெக்ட்டா தான் செய்வாரு, உன் அக்கா ஏதோ தவறு செய்திருக்கிறாள்” என்றான்.
நந்தன் அழைத்து வந்தவர்களை தன் அறையில் உட்கார வைத்துவிட்டு பேச தொடங்கினான். “நான் ஏன் யுகியை தவிர வேறு எந்த ஆணையும் அழைத்து வரவில்லை தெரியுமா?” என்று கூறி தன் லேப்டாப்பில் ஒரு வீடியோவை play செய்தான். அதில் நந்தனின் அறைக்கு தீபிகா யாருக்கும் தெரியாமல் வந்து பால்கனி பக்கமாக இருந்த சுவற்றில் மாட்ட பட்டிருந்த curtain பின்னால் மறைந்து நின்றாள். நந்தன் தன் அறைக்கு வந்து refresh செய்து கொண்டு 10.30 மணி போல இரவு விளக்கை மட்டும் on செய்து தூங்க சென்றான். பிறகு வீடியோவை speed up செய்து கொஞ்சம் விலகி சென்று நின்றான் நந்தன்.
மணி 11.50 என்று காட்டியது. தீபிகா curtain பின்னால் இருந்து வெளியே வந்தாள். தன் ஆடைகளை கலைந்தாள். எல்லோரும் பார்க்க முடியாமல் கண்களை பாதி மூடியும் மூடாமலும் பார்த்தனர். தீபிகாவிற்கு மானம் போய் தலை குனிந்து தன் தாயை ஓரக்கண்ணால் பார்த்தாள். தன் தாயின் முகத்தில் கோபமும் அவமானமும் பொங்கி வருவதை பார்த்து நடுங்க ஆரம்பித்தாள். மீண்டும் வீடியோவை பார்த்தாள். வீடியோவில் நந்தன் அருகில் சென்று படுத்தாள். பிறகு அவள் பேசியது, குடும்பத்தார் surprise என்று உள்ளே வருவது, தீபிகாவின் தாய் அவளை அடித்துவிட்டு வெளியே செல்வது மீண்டும் தீபிகா பேசும் அனைத்தும் ஒலி, ஒளி வடிவாக பதிவாகி இருந்தன.
“என்னடி இதெல்லாம்? என் மானத்தை வாங்க வேண்டும் என்றே என் வயிற்றில் வந்து பிறந்தாயா?” என்று தீபிகாவின் தாய் அவளை அடித்துவிட்டு அழுதார்கள்.
“ஆண்ட்டி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாக இருங்கள்” என்று கூறிவிட்டு யுகியை அழைத்து “இவர் யார் என்று தெரிகிறதா தீபிகா?” என்று கேட்க தீபிகா மீண்டும் தலை குனிந்தாள்.
“இவர் தான் லண்டனில் தீபிகாவின் முன்னாள் காதலன், தீபிகா வேறு ஒருவருடன் உறவில் இருக்கிறாள் என்பதை அறியாமல் அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றேன், எனக்கு அப்போது அதெல்லாம் தவறாக தெரியவில்லை, அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆண்ட்டி, ஆனால் காதல் திருமணம் என்று எந்த நம்பிக்கையையும் நான் தீபிகாவிற்கு கொடுக்கவில்லை, அவளை நான் எந்த விதத்திலும் வற்புறுத்தவும் இல்லை, மணி விடியகாலை 3 மணி இருக்கும், இவர் தீபிகாவிற்கு call செய்தார், தீபிகா தூங்கி கொண்டிருந்தாள், என் மொபைல் என்று நினைத்து நானும் தூக்க கலக்கத்தில் இவர் அழைப்பை ஏற்றேன், இவர் தீபிகா என்று நினைத்து பேசினார், தன்னை மன்னித்து விடும் படியும், இனிமேல் சண்டை போட வேண்டாம் என்றும், எங்கிருந்தாலும் தானே வந்து அழைத்து வருவதாகவும், அப்போது தான் என் தவறை உணர்ந்து நான் தீபிகாவை விட்டு விலகி சென்றேன், ஆனால் தீபிகாவிற்கு இப்படி ஒரு காதலன் இல்லை என்றாலும் நான் விலகி தான் சென்றிருப்பேன், ஏன் என்றால் எனக்கு தீபிகா மீது எந்த காதல் உணர்வும் வரவில்லை, ஆனால் தீபிகா அன்றில் இருந்து என்னையே நினைத்து இருப்பதாகவும், திருமணம் செய்தால் என்னை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இருப்பதாகவும் சொன்னாள், உங்கள் எல்லோரையும் நம்ப வைத்தாள். எனக்கு ஜுரம் வந்து நான் ஆபீஸ் போகாத அந்த 10 நாட்களில் தீபிகா என் ஆபீஸ் அறையில் இவரை மீண்டும் சந்தித்து ஒன்றாக இருந்திருக்கிறார்கள். அதற்கான வீடியோக்களும் என்னிடம் உள்ளன என்று லேப்டாப்பில் அந்த வீடியோக்களை போட முயன்றான். “நந்தன் ப்ளீஸ் அவற்றை play செய்ய வேண்டாம்” என்று தீபிகா கண்ணீருடன் வேண்டினாள். நந்தனும் play செய்யவில்லை.
நந்தன் தொடர்ந்து பேசினான்.
“தீபிகா, என் ஆபீஸ் அறை எனக்கானது, அதில் நான் யாரையும் நான் இல்லாத நேரத்தில் அனுமதிப்பதில்லை, நீ என் ஊழியர்களை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் எனக்கு விசுவாசம் ஆனவர்கள், நீ எப்படி வளைத்து மயக்கி பேசினாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது, ஜெனி எனக்கு call செய்து நீ மீட்டிங் காக ஆபீஸ் அறையின் சாவியை கேட்பதாக சொன்னாள். எனக்கு ஏதோ சந்தேகம் வர முதலில் ஜெனியை மறுப்பது போல் மறுக்க சொல்லிவிட்டு உனக்கு access கொடுக்க சொன்னேன், உனக்கே தெரியாமல் அங்கே cctv பொருத்த சொன்னேன். அப்போது ஏதோ file திருட போகிறாய், இல்லை வேறு ஏதோ தகிடதித்தோம் வேலை செய்ய போகிறாய் என்று தான் நினைத்தேன், இதை நான் எதிர்பார்க்கவில்லை, கவலைப்படாதே, நீங்கள் இருக்கும் வீடியோக்களை நானோ ஜெனியோ முழுமையாக பார்க்கவில்லை, just தொடக்கமும் முடிவும் தான். இதை பற்றி கேட்டு நான் உன்னை என்றுமே அசிங்க படுத்த நினைத்ததில்லை.
என் ஆபீஸ் அறை எனக்கு கோயில் மாதிரி, அதில் இப்படி நடந்து கொண்டாயே என்று வருத்தப்பட்டேனே தவிர உன்னை நான் judge செய்யவில்லை, உன்னை இதைப்பற்றி கேட்டு கஷ்டப்படுத்தவும் நான் நினைக்கவில்லை, நீ சத்யாவை குழப்புகிறாய் என்று தெரிந்த போது கூட உன்னை சத்தமில்லாமல் இந்த வீட்டை விட்டு அனுப்ப தான் நினைத்தேனே தவிர இதை பற்றி பேசி உன்னை மனம் கலங்க செய்ய நினைக்கவில்லை, ஏன் என்றால் என்னை போல் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை, பலவீனம், தேவை, தேடல் இருக்கும், யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைக்கும் அளவிற்கு எனக்கு உரிமையும் தகுதியும் இல்லை.
என் அம்மா சொல்லி எங்கள் வீட்டில் தங்கி உள்ளாய், நாளை இந்த பையனால் உனக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது, உன்னை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பையனை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன், அதனால் இவன் வந்து போகும் சமயங்களில் ஜெனியிடம் சொல்லி அவனை கவனிக்க சொன்னேன், ஜெனியும் அவன் கார் நம்பர் கொடுத்தாள், அதை வைத்து யுகியின் முகவரி கண்டுபிடித்து அவனை சந்தித்து பேசினேன், அவனுக்கு உன்மீது இருக்கும் காதலை புரிந்து கொண்டேன், ஆனால் ஒரு பக்கம் அவனுடன் நீ இருந்தாலும் இன்னொரு பக்கம் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாயே என்று குழப்பத்தில் இருந்தேன், அது மட்டும் எனக்கு புரியவில்லை தீபிகா.
நீ இவ்வளவு பிரச்சனை செய்யவில்லை என்றால், சத்யாவிற்கு இடையில் ஆபத்துகள் ஏற்படாமல் இருந்திருந்தால் உன்னிடமும் யுகியிடமும் பேசி உங்களை இணைத்து வைக்க எண்ணி இருந்தேன், எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டாய், ஏன் இப்படி எல்லாம் செய்தாய் என்று எனக்கு தெரியவில்லை, இனி அதை தெரிந்துகொள்ள எனக்கு விருப்பமும் இல்லை, என் வாழ்க்கையில் குறுக்கிடாத வரை நான் நல்லவனாக இருப்பேன், இல்லை என்றால் என் மறுபக்கத்தை காண்பிப்பேன், அதற்கான sample தான் இது.
ஆண்ட்டி என் அம்மாவை நம்பி தீபிகாவை அனுப்பி வைத்தீர்கள், அவர்கள் பெயருக்கு எந்த இழுக்கும் வரக்கூடாது என்று தீபிகாவை நான் பாதுகாக்க தான் நினைத்தேன், இந்த விஷயங்களை சபையில் சொல்லி தீபிகாவை அசிங்க படுத்த எனக்கு விருப்பமில்லை, அதனால் தான் இங்கே சொல்லி இருக்கிறேன், தீபிகாவிடமும் யுகியுடனும் இனி நீங்கள் பேசி முடிவு எடுத்து கொள்ளுங்கள்” என்று நந்தன் பேசி முடித்தான்.
“எங்களை மன்னிச்சுடுங்க தம்பி, உங்கள் அம்மா அப்பா உங்களை நன்றாக தான் வளர்த்துள்ளார்கள், நீங்களும் எங்களை மன்னித்து விடுங்கள் சம்மந்தி அம்மா” என்று சொல்லி தீபிகாவை அழைத்து கொண்டு வெளியேறினார்கள் தீபிகாவின் தாய் குனிந்த தலையோடு வெளியேறினார்கள்.
“நானும் கிளம்புறேன் சார்” என்று யுகியும் விடை பெற்றான்.
“நந்து என்னை மன்னித்து விடு நந்து” என்று கமலா அம்மா நந்தனின் கைகளை பிடித்து அழ “அம்மா என்ன இது? நீங்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது, எதற்காகவும் அழக் கூடாது” என்று சொல்லி அணைத்துக்கொண்டான்.
“ஜெனி உங்கள் உதவிக்கு நன்றி, கீழே சாப்பிட்டுவிட்டு போகலாம்” என்று ஜெனியை கீழே அனுப்பினான்.
கமலா அம்மா, சகுந்தலா அம்மா, வள்ளியிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி அவர்களை அங்கேயே இருக்க சொன்னான் நந்தன்.
Comments
Post a Comment