Sms ch 54 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 54
சத்யாவிற்கு இரவு நெருங்க நெருங்க கொஞ்சம் பயமாக இருந்தது. தருணை அருகிலேயே வைத்து கொண்டாள். எல்லாரும் அம்மாவை பத்தியே பேசிகிட்டு இருக்க கூடாதா? ஏன் திடீர்னு பேச்சை நிறுத்திட்டாங்க? இன்னைக்கு first night அது இதுன்னு ஏதாவது ஏற்பாடு பண்ணிடுவாங்களோ என்றெல்லாம் நினைத்து தவித்தாள்.
எல்லோருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. கமலா அம்மா பாட்டியிடம் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். சாந்தி முஹூர்த்ததிற்கு நல்ல நேரம் குறிக்க வேண்டும் என்று. சத்யாவிற்கு இந்த விஷயம் தெரியாததால் பாட்டி, வள்ளி தன்னுடேனே இருக்க கூடாதா என்று ஏங்கினாள். ஏனோ நந்தனை தனியாக சந்திக்க அவளுக்கு பயமாக இருந்தது.
கண்ணப்பன் வள்ளி குடும்பத்தாருக்கு துணையாக அவரும் outhouse ல் படுத்து கொண்டார். எல்லோரும் அவரவர் ரூமிற்கு செல்ல கமலா அம்மா சத்யாவையும் தருணையும் அழைத்து கொண்டு போய் நந்தனின் அறையில் விட்டார்கள். தருணை உள்ளே அனுப்பிவிட்டு சத்யாவிடம் “நாளைக்கு ஜோசியரை வரை சொல்லி நல்ல நேரம் எல்லாம் பாக்கணும், நாளைக்கு நெறைய வேலை இருக்கு, நீ சீக்கிரமா படுத்து தூங்கு மா” என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு சென்றார்கள். அதுவரை பயத்தில் இருந்த சத்யாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இன்றைக்கு எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்று பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டாள்.
தருண் அலுப்பில் சீக்கிரமே தூங்கிவிட சத்யா அந்த அறையை படுத்துக்கொண்டே நன்றாக பார்த்தாள். “எவ்வளவு பெரிய அறை, அமைந்தகரை வீட்டின் மொத்த அளவை விட பெரிதாக உள்ளதே, இதை எல்லாம் காட்டிகொள்ளாமல் எவ்வளவு இயல்பாக அமைந்தகரையில் நந்தன் பழகினான் என்று அவனை பெருமையாக நினைத்தாள். மாமா மகனா அவர்? என்னை பற்றி தெரிந்து இருந்தும் ஒன்றுமே சொல்லவில்லை. அவர் பெற்ற தாய், தந்தை பற்றியும் ஒன்றுமே சொல்லவில்லை. அவர் வந்ததும் சண்டை பிடிக்க வேண்டும். ஆனால் எந்த விஷயத்திற்காக சண்டை பிடிப்பது என்று தெரியாமல் அயர்ந்தாள்.
தீபிகா விஷயத்திற்காக சண்டை பிடிப்பேனா? அல்லது இந்த உறவு முறைகளை மறைத்து பழகினாரே என்று சண்டை பிடிப்பேனா? ச்ச இவ்வளவு நேரம் அந்த தீபிகாவின் நினைவு இல்லாமல் நிம்மதியாக இருந்தேன், மீண்டும் அவள் நினைவு, அவளை நினைத்தாலே இவரை பிடிக்காமல் போகிறது, நேற்றைய முன்தினம் இருவரும் ஒன்றாக இருந்தார்களாமே. அதற்கு இந்த குடும்பமே சாட்சி என்று சொன்னாளே, அதனால் தான் நிச்சயம் ஏற்பாடு செய்ய பட்டிருக்க வேண்டும், ஆனால் இவர் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டார், அவள் சொன்னது உண்மை என்றால் பாவம் தானே தீபிகா, அத்தை ஏதோ அவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக சொன்னார்களே, இவர் சத்யாவை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதாக சொன்னார்களே. யார் சொல்வதை நம்புவது என்று புரியாமல் சத்யா குழம்பினாள்.
கீழே “நீயும் போய் தூங்கு நந்து” என்று கமலா அம்மா சொல்ல “இல்லம்மா நீங்க போய் தூங்குங்க, நான் அப்படியே தோட்டத்துல ஒரு சின்ன walk போய்ட்டு வந்துடுறேன்” என்றான்.
“சரிப்பா கொஞ்சம் சீக்கிரமா ரூமுக்கு போ, சத்யாவிற்கு புது இடம் அல்லவா, நீ அருகில் இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருப்பாள்”
“சரிம்மா கொஞ்ச நேரத்துல மாடிக்கு போயிடுறேன்” என்று சொல்லி தோட்டத்திற்கு சென்றவன் நேராக செக்யூரிட்டி அறைக்கு சென்றான். “அண்ணா, இன்று சந்தேக படும்படியாக யாரும் வந்தார்களா?” என்று கேட்க “இல்லைங்களே தம்பி, உங்க கல்யாணத்துக்கு வந்தவங்களோட சரி” என்று சொல்ல “சரி அண்ணா கவனமாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு முழு தோட்டத்தையும் ஒரு முறை வலம் வந்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.
நந்தன் வந்தால் என்ன செய்யலாம் என்று பலவாறு யோசித்து வைத்திருந்தவள் நந்தன் வருவதற்கு முன்பே தருணை விட்டு நகர்ந்து கட்டிலில் இருந்து கீழே இறங்கி ஒரு பெட்ஷீட்டை விரித்து தரையில் படுத்து இருந்தாள். நந்தன் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள்.
நந்தன் படுக்கையில் அவளை காணவில்லை என்று எட்டி பார்த்தவன் கீழே அவள் படுத்திருப்பதை பார்த்துவிட்டு அப்படியே திரும்பி தன் அறையின் பாத்ரூமிற்கு சென்று refresh செய்து கொண்டு வந்தவன் நேராக சத்யா அருகில் சென்று உண்மையிலேயே தூங்குகிறாளா என்று பார்த்தான். தூங்குவது போல் நடிக்கிறாள் என்று தெரிந்தது. நந்தன் சத்யாவின் முதுகில் ஒரு கையும், கால்களின் கீழே ஒரு கையும் என்று சத்யாவை தூக்க அவள் அதற்கு மேல் தூங்குவது போல் நடிக்க முடியாமல் கண் விழித்து பார்த்தாள்.
“ம்ம்ம் தூங்குற மாதிரி நடிச்சுட்டு தான இருந்த?” என்று நந்தன் அவளை தூக்கியபடியே கேட்க சத்யா தருணை திரும்பி பார்த்துவிட்டு “தருண் எந்திரிச்சிக்க போறான், கீழே இறக்கி விடுங்கள்” என்று அவன் பிடியில் இருந்து திமிறி இறங்க முயன்றாள். ஆனால் நந்தனின் பிடியில் இருந்து இறங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக தெரியவில்லை. இறங்க முடியாமல் தவித்து மீண்டும் அவனிடமே விண்ணப்பம் வைத்தாள். “ப்ச்ச் விடுங்க, தருண் முழிச்சிக்க போறான்” என்று பாதி கலக்கமும், பாதி எரிச்சலுமாக கெஞ்சினாள்.
நந்தன் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு தன் அறையின் விசாலமான பால்கனி சென்றான். குறைவான வாட்ஸ் உள்ள லைட்டை on செய்துவிட்டு அவளை தூக்கி கொண்டே ஒரு சோஃபா அருகில் சென்றான். சத்யா மீண்டும் மீண்டும் அவன் விரல்களை தள்ளுவது, கையை பிடித்து தள்ளுவது என்று போராடி கொண்டிருந்தாள்.
“நீ இப்படி முரண்டு பிடிச்சுகிட்டே இருந்தா எவ்வளவு நேரம் ஆனாலும் உன்னை நான் இறக்கி விடமாட்டேன்” என்று நந்தன் சொல்ல “சரி நான் முரண்டு பிடிக்கல, நீங்களாகவே இறக்கி விட்டு விடுங்கள்” என்று அழாத குறையாக சத்யா கெஞ்ச நந்தன் அந்த பெரிய சோஃபாவின் ஒரு மூலையில் உட்கார்ந்து சத்யாவை தன் மடியில் படுக்க வைத்து கொண்டான். சத்யா எழுந்திரிக்க முயல நந்தன் அவளை எழ அனுமதிக்கவில்லை.
சத்யா தன் போராட்டத்தை கைவிடுத்து கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டு படுத்து இருந்தாள் அவன் மடியில். நந்தன் அவளை சீண்டி கோபப்படுத்திய பெருமையுடன் கேட்டான். “ம்ம்ம் இவ்வளவு நேரம் ஆச்சு மேடம கொஞ்சம் தனியா பாத்து கொஞ்ச” என்று அவள் தலையை கொதிவிட்டுக்கொண்டே சொன்னான்.
சத்யா அவனை தாறுமாறாக கேள்வி கேட்டு மடக்க நினைத்திருந்த எண்ணம் எல்லாம் எங்கேயோ ஓடிப்போய் ஒளிந்து கொள்ள இவன் நம்மை விட்டால் போதும், ஏதாவது செய்து விடுவானோ என்று பயமாக உள்ளது என்று உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தாள்.
“உன்னை என்ன செய்யலாம்” என்று நந்தன் யோசனையுடன் கேள்வி கேட்டுக்கொண்டே அவளை நோக்கி குனிய அவள் விருட்டென்று எழுந்து “அத்தை நேரம் எல்லாம் பாக்கணும்னு சொன்னாங்க, என்னை கூட சீக்கிரமா தூங்க சொன்னாங்க, நான் போய் தூங்க போறேன்” என்று சொல்லி ஓட எத்தனித்தவளை அவள் கைகளை பிடித்து வேகமாக இழுக்க விழாத குறையாக நந்தனின் மடியில் வந்து அமர்ந்தவளை தன் இரு கைகளாலும் அவளின் இடுப்பை வளைத்து அணைத்து கொண்டான் நந்தன்.
“இது கூட நல்லா இருக்கே, இப்படி ஓடி பிடித்து விளையாடுவது” என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளை சத்யாவின் வயிற்றில் படரவிட்டவன் அவளின் பின்னலை ஒதுக்கி முன்னால் போட்டு அவளின் கழுத்து, முதுகு என முத்தமிட்டான் நந்தன்.
சத்யாவின் கோபம் தலைக்கேற பல்லை கடித்து கொண்டு மெதுவாக சொன்னாள். “எப்போ பாரு இதே விளையாட்டு தானா? நான் உங்களிடம் நெறைய பேச வேண்டும், அதன் பிறகு இதெல்லாம் வைத்து கொள்ளலாமே” என்று சொல்ல “வாழ்க்கை முழுக்க பேசத்தானே போகிறோம்” என்று அவன் முத்த தேடலை தொடர “எனக்கு உங்க மேல உள்ள சந்தேகங்கள் தெளிவானா தான் இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியும், அதுவரை முழு மனதாக என்னால இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையாக என் சந்தேகங்களை தீர்த்து வையுங்களேன்” என்று அழாத குறையாக பின்னாலிருக்கும் அவனை திரும்பி பார்க்க முயற்சித்துக் கொண்டே கேட்டாள்.
“ப்ளீஸ் சத்யா, நீ பயப்படும் அளவு நான் மோசமானவன் இல்லை, உன் சந்தேகங்களை எல்லாம் பொறுமையாக கேள், இப்போது என்னை தடுக்காமல் இரு, ஏன் என்றால் நீ தடுக்க தடுக்க எனக்கு வேகம் அதிகமாகிறது, அப்புறம் முத்தத்துடன் முடிய வேண்டிய இந்த தேடலை உன்னை முழுவதும் அடையும் தேடலாக மாற்றி விடாதே, சித்தப்பா வேறு நல்ல நாள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்” என்று அவளை விடாமல் அவன் பேச்சும் முத்தமுமாக தொடர “சித்தப்பா வேறு சொல்லி இருக்கிறாரா? இவர் இன்னும் ஒரு நிமிடம் இப்படி தொடர்ந்தால் நானும் என் கட்டுப்பாட்டை இழந்து இவருடன் தேடலில் இணைந்து கொள்வேன், இவரை எப்படி நிறுத்துவது?” என்று மனதில் நினைத்தவள் விரக்தியுடன் “என் உணர்வுகளை எல்லாம் மதிக்க மாட்டீர்களா? எப்போ பார்த்தாலும் இந்த மாதிரி, ச்ச, தருண் வேறு இருக்கிறான், நீங்கள் நடந்து கொள்வதை பார்த்தால் நீங்கள் சரியான sex addict மாதிரி……..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் நந்தனுக்கு முகம் சுருங்கியது. எல்லாவற்றையும் நிறுத்தியவன் ஒரு சிறு அமைதிக்கு பின் அவளை விடுவித்தான். நேராக எழுந்து கட்டிலுக்கு சென்று தருணை அணைத்தவாறு படுத்து கொண்டான்.
சத்யாவிற்கு உடனே மனம் கலங்கியது. “கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டோமா? கொஞ்சம் நிதானமாக பேசி இருக்கலாமோ? ஆனால் எப்போது பார்த்தாலும் என்னை பேச விடாமல் இப்படி முடக்கினால் நான் என்ன தான் செய்வது? என் எதிர்ப்பை எப்படி தான் காட்டுவது? அத்தை வேறு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், நான் தடுக்கவில்லை என்றால் இவர் வேறு என்ன எல்லாம் செய்து இருப்பாரோ? அப்புறம் பெரியவர்கள் மனம் புண்படாதா?” என்று தனக்குள் ஏதேதோ சமாதானம் சொல்ல முயன்றாலும் முடியாமல் நந்தனின் வாடிய முகம் நினைவு வந்து அவள் மனசாட்சி அவளை குற்றம் சாட்டியது.
வெகு நேரமாக தூங்காமல் பிறகு தூங்கிய சத்யா காலையில் எழுந்து பார்த்த போது அங்கே நந்தனோ தருணோ அறையில் இல்லை. ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ என்று எழுந்து நேரத்தை பார்த்தவள் மணி 7 ஆகிவிட்டது என்பதை உணர்ந்து வேக வேகமாக குளித்துவிட்டு கீழே சென்றாள்.
கமலா அம்மா, சகுந்தலா, ஸ்ரீஜா அனைவரும் கிட்சேனில் இருந்து அவரவர் கணவருக்கு coffee, tea என்று கொடுத்து கொண்டிருக்க சத்யா தயங்கி தயங்கி அடுப்படி சென்றாள். “வா மா சத்யா, என்ன சாப்பிடுற? காபியா, டீயா இல்ல வேற ஏதாவது?” என்று கமலா அம்மா கேட்டுக்கொண்டே வேலை செய்ய சத்யா “நானும் ஏதாவது வேலை செய்றேன் அத்தை” என்று என்ன வேலை செய்வது என்று அடுப்படியில் பார்வையை பரவ விட “செய்யலாம் மா என்ன அவசரம், எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செய்ய ஆரம்பி, இப்போ காலைல ஏதாவது குடி” என்று காபி கலந்து கொடுத்தார்கள்.
“நந்தனும் தருணும் எங்கே என்று தெரியவில்லையே, இவர்களிடம் கேட்டால் நன்றாக இருக்காது” என்று யோசித்துக்கொண்டே காபியை குடித்தாள்.
“அமுதா இந்த காபியை கொண்டு போய் வள்ளி குடும்பத்தாரிடம் கொடுத்து வா” என்று பணிக்க அமுதாவுடன் சத்யாவும் சென்றாள். அங்கேயும் நந்தனையும் தருணையும் காணவில்லை. கண்ணப்பன் உதவியுடன் தாத்தா wheelchair ல் அங்கே வர “அம்மா உங்களுக்கு கவிதாவை எத்தனை வருடங்களாக தெரியும், கவிதா நல்ல வாழ்க்கை வாழ்ந்தாளா? இல்லை ரொம்ப கஷ்டப்பட்டாளா?” என்று பாட்டியிடம் கேட்க ஆரம்பித்தார்.
எல்லோரும் outhouse முன்பு இருந்த மரத்தடி நிழலிலும் அங்கே இருந்த பெஞ்ச்களிலும் உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தனர். கமலா அம்மா, மற்றவர்களும் இணைந்து கொண்டனர். சத்யா மட்டும் தோட்டத்தையே சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள். பிறகு “அம்மா...” என்ற குரல் கேட்க மொட்டை மாடியில் நந்தனும் தருணும் நின்று கொண்டிருந்தனர்.
சத்யா தருணை பார்த்து புன்னகைத்துவிட்டு நந்தனை பார்க்க அவன் முகத்தில் புன்னகை எதுவும் இல்லை. இருவரும் இறங்கி வந்து மற்றவர்களுடன் கலந்து கொண்டனர். தருண் சத்யாவின் மடியில் அமர்ந்து கொண்டு சொன்னான். “அம்மா அங்கிள் எனக்கு யோகா சொல்லி குடுத்தாரு” என்று சொல்ல சத்யாவின் அருகில் அமர்ந்த நந்தன் “தருண் அப்பான்னு சொல்லணும்னு சொன்னனா இல்லையா?” என்று செல்லமாய் மிரட்ட தருண் “ஆமாம் ஆமாம் அப்பாவோட யோகா பண்ணினேன்” என்றான் தருண்.
சத்யா மீண்டும் அவனை புன்னகையுடன் பார்க்க அது வரை புன்னகையுடன் இருந்த நந்தனின் முகம் புன்னகை மறைந்து இறுகியது. “இன்னும் நம் மீது கோபமாக தான் இருக்கிறார் போல, நான் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னேன், அது ஒரு குற்றமா? ஒழுங்காக என்னை பேச விட்டிருந்தால் நான் ஏன் அவரை sex addict போல என்று சொல்ல போகிறேன்? இவர் மட்டும் நெறைய பெண்களுடன் பழக்கம் வைத்து கொள்ளவில்லையா? நான் சொன்ன வார்த்தையை ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும், ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன் என்று எடுத்து கொள்ளக்கூடாதா?” என்று ஏதேதோ சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தாள்.
பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்கள் “கவிதாம்மா ஒரு நல்லவரை தான் தேர்ந்து எடுத்து இருந்தார்கள், எங்கே போவது என்று தெரியாமல் ஷெண்பகத்தையும், வள்ளியையும் வைத்து கொண்டு விழித்து தவித்து கொண்டிருந்த எங்களுக்கு ஐயா தான் தெய்வமாக வந்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றார், கவிதாம்மாவும் பரந்த மனதுடன் எங்களுக்கு அடைக்கலம் தந்தார்கள், ஷெண்பகத்தையும் வள்ளியையும் அவர்கள் சத்யாவை போலவே பாசம் காட்டி பராமரித்தார்கள், கவிதாம்மாவிற்கு சொந்தமாக தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை, அதற்கு ஐயா முழுக்க முழுக்க துணையாக இருந்தார்கள்” என்று பாட்டி சொல்ல சத்தியமூர்த்தி பெருமையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
“தொழில் வேலைகளில் கவிதாம்மா பிஸியாக இருக்கும் சில சமயம் சத்யாவின் தேவைகளை நான் கவனித்து கொண்டேன், ஆனால் சத்யா கண்ணுக்கு தன் அம்மாவுடன் எல்லா நேரமும் செலவழிக்க ஆசை, அப்படி செலவழிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சில சமயம் அம்மாவின் அன்பு புரியாமல் சண்டை போடுவாள், இந்த ஒரு விஷயத்தை தவிர கவிதாம்மாவிற்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை, அந்த அளவிற்கு உங்கள் மாப்பிள்ளை அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொண்டார்” என்று பாட்டி சொல்லி நிறுத்த “பரவால்ல, எங்க எப்படி கஷ்டப்படுறாளோ, நம்பி போனவன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் நாங்கள் தவிக்காத நாளில்லை, சரி சத்யாவை பற்றி மேலும் சொல்லுங்கள்” என்று சத்தியமூர்த்தி கேட்க “சத்யா நன்றாக படிப்பாள், சின்ன வயதில் வெகு சுட்டி, அவள் அம்மாவுடன் சண்டை போடுவதை தவிர அவளிடம் வேறு எந்த குறையும் சொல்ல முடியாது, ஷெண்பகம் வள்ளி மேல் ரொம்ப பாசம், நன்றாக படிப்பு, சுட்டி தனம், தைரியம் என்று நன்றாக தான் வளர்ந்து வந்தாள், அப்பப்போ சட்டுன்னு கோபப்பட்டுடுவா, ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டு வர மாட்டா ரெண்டு நாள் ஆனாலும், அப்படி ஒருமுறை அவள் கோபித்து கொண்டு வராத நேரம் தான், அவள் அப்போது ஸ்கூல் படிப்பை முடித்திருந்தாள், டெல்லிக்கு செல்லவிருந்த ஐயா சத்யாவிடம் சொல்லிவிட்டு புறப்பட அழைத்தார், ஆனால் சத்யா கோபத்தில் கதவை திறக்கவில்லை, அன்று தான் ஐயாவை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விட கவிதாம்மா காரை ஒட்டிக்கொண்டு சென்றார்கள், accident ஆகி….” என்று பாட்டி சொல்ல சத்யா, வள்ளி, முருகன் கண்களில் கண்ணீருடன் கேட்க “சொல்லுங்க அம்மா, என்ன ஆச்சு?” என்று கமலா அம்மா பதட்டத்துடன் கேட்க “ஐயா அங்கேயே இறந்துவிட்டார், கவிதாம்மா பிழைத்ததே பெரிய விஷயம், அப்போது தான் ஐயா வருமானத்திலும், கவிதாம்மா உழைத்து சேர்த்து வைத்த சொத்துக்களையும் விற்று கவிதாம்மாவை காப்பாற்றினோம், நன்றாக படித்து கொண்டிருந்த சத்யாவின் படிப்பும் கொஞ்சம் தடை பட்டது, அதுவரை எப்போதும் சுட்டியாக தைரியமாக வலம் வந்த சத்யா அந்த சம்பவத்தின் பிறகு தான் கொஞ்சம் தைரியத்தை இழந்தாள், IAS ஆவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிப்போனது” என்று சோகமாக பாட்டி ஏதோ நினைவில் ஆழ்ந்தார்கள்.
கவிதாவை அன்புடனும், மரியாதையுடனும் வாழ வைத்த மாப்பிள்ளை accident ல் இறந்ததையும், கவிதாவின் உயிருக்கு போராடி பிழைத்த கதையையும் கேட்டு அனைவரும் கண்ணீர் வடித்தவர்கள் கண்களை துடைத்து கொண்டு அதன் பிறகு சத்யாவின் வாழ்க்கை எப்படி மாறியது என்பது போல் கேள்வியாய் பார்த்தார்கள். அடுத்து பாட்டி பேச ஆரம்பிப்பதற்குள் நந்தன் சொன்னான்.
“அடுத்தது என்ன ஆச்சுன்னு சத்யா என்னிடம் சொல்லி இருக்கிறாள், அதனால் நான் சொல்கிறேன் பாட்டி மீதி கதையை” என்று நந்தன் சொல்ல சத்யா அவனை கேள்வியாக பார்த்தாள், மற்றவர்களும் நந்தனை ஆர்வத்துடன் பார்த்தார்கள். “கண்ணப்பன் அண்ணா தருணையும் சின்னுவையும் தோட்டத்தில் விளையாட அழைத்து செல்லுங்கள்” என்று பணித்துவிட்டு நந்தன் தொடர்ந்தான்.
“சத்யா படிப்பு தடைப்பட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிச்சா, நல்லா படிச்சுட்டு இருக்கும் போது சத்யாவின் மேல் ஒரு கருநாகத்தின் பார்வை பட்டது” என்று சொல்லி நந்தன் சத்யாவை பார்க்க சத்யா குழம்பினாள். “கௌஷிக்கை எப்படி இவன் கருநாகம் என்று சொல்லலாம்?” என்று உள்ளுக்குள் கோபமடைந்தாள். “அவனை இப்படி சொல்ல அனுமதிக்க கூடாது, இன்று இவன் என் கணவனாக இருக்கலாம், கௌஷிக்கிற்கு சுனிதாவுடன் தொடர்பு இருக்கலாம், இல்லாமல் போகலாம், ஆனால் ஒரு காலத்தில் அவன் என்னை விரும்பியது உண்மை, நான் அவனை விரும்பியது உண்மை, அவன் தான் தருணின் தந்தை, அவனை கருநாகம் என்று சொல்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது” என்று தடுக்க நினைத்து சத்யா தன் கையை தூக்கி ஏதோ சொல்ல முயல நந்தன் அவள் கையை பிடித்து “நீ டென்ஷன் ஆகாத சத்யா, நான் சொல்றேன்” என்று அவள் கையை இறுக்கி பிடித்தான். சத்யா கோபமும் குழப்புமாக உட்கார்ந்திருக்க நந்தன் தொடர்ந்தான்.
“அந்த கருநாகத்தின் பெயர் ஷ்யாம்” என்று சத்யாவின் குழப்பமான பார்வையை கவனித்துக்கொண்டே அவள் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டே சொன்னான். “அந்த ஷ்யாம் சத்யாவின் காலேஜில் சீனியர், drug dealing, பெண்கள் தொடர்பு என்று எல்லா கெட்ட பழக்கமும் உண்டு, அவன் நினைக்கும் பெண்ணை அவன் அடைந்து விட வேண்டும், ஆனால் அவனுடைய நோக்கம் சத்யாவிற்கு தெரியாது, அவன் சத்யாவிற்கு சில மொட்டை கடிதங்களை எழுதி அவள் புத்தகங்களில் வைத்திருந்தான், ஷ்யாம் தான் எழுதி இருக்கிறான் என்று சத்யாவிற்கு தெரியாது, இதை ஒரு நாள் கவிதா அத்தை பார்க்க நேர்ந்தது, சத்யாவிடம் விசாரிக்க சத்யாவிற்கும் யார் என்னவென்று தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறாள், ஆனால் அத்தைக்கு சத்யாவை நினைத்து கவலை அதிகமாகியது, இந்த கடிதங்கள் எழுதியவன் யார் என்று தெரியவில்லை, ஆனால் சத்யாவை சுற்றி ஆபத்து உள்ளது என்பதை மட்டும் அத்தை நன்றாக புரிந்து கொண்டார்கள்” என்று சொல்ல பாட்டி, வள்ளி, முருகன் என்று எல்லோருமே குழப்பத்துடன் நந்தனை பார்த்து கொண்டிருந்தார்கள்.
நந்தன் மேலும் தொடர்ந்தான். “அப்போது தான் ஷ்யாம் வீட்டில் வளர்ந்த கௌஷிக், அவரும் சத்யாவின் காலேஜில் சீனியர், அவருடைய பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் ஷ்யாம் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார், ஷ்யாம் கெட்டவனாக இருந்தாலும் கௌஷிக் ரொம்ப நல்லவர், அவருக்கும் சத்யாவை பிடித்து இருந்து இருக்கிறது, ஷ்யாமின் நோக்கம் அறியாத கௌஷிக் ஒரு பக்கம் சத்யாவை விரும்பி உள்ளார், நேர்மையாக அத்தையிடம் சென்று பெண் கேட்டுள்ளார், அத்தைக்கும் கௌஷிக்கின் நேர்மையான நல்ல குணம் பிடித்து இருந்திருக்கிறது, அது மட்டுமல்லாமல் காலேஜ் படிப்பை முடித்து சொந்தமாக தொழிலும் செய்து நல்ல வருமானம் ஈட்டி கொண்டிருந்திருக்கிறார் கௌஷிக், சத்யாவிற்கும் அவரை பிடித்து இருக்கிறது என்று அத்தை புரிந்து கொண்டார்கள், ஆனால் சத்யாவின் படிப்பை மனதில் வைத்து பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கிடையில் சத்யாவிற்கு காலேஜில் யாரோ ஐஸ்கிரீமில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார்கள், ஆனால் சத்யா சுதாரித்து முழுவதும் சாப்பிடாமல் தப்பித்து கொண்டாள், வீட்டிற்கும் call செய்து உன் பெண்ணை நான் அடையாமல் விடமாட்டேன் என்று ஷ்யாம் மிரட்டி உள்ளான், இதனால் பயந்து போன அத்தை ஒரு பக்கம் போலிசில் கம்பளைண்ட் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் பயத்திலேயே இருக்க இனிமேலும் தாமதிக்க வேண்டாம் என்று கௌஷிக்கிற்கு சத்யாவை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை, அந்த மொட்டை கடிதங்களை எழுதியவன் அந்த வீட்டில் தான் இருந்துள்ளான் என்பது, ஆனால் கௌஷிக் சத்யாவை கண்ணும் கருத்துமாக அன்புடன் கவனித்து கொண்டார், அவரின் அன்பின் விளைவு தான் தருண்” என்று அவன் நிறுத்த இப்போது சத்யா கண்களில் கண்ணீருடன் நந்தன் கையின் மேல் தன்னுடைய இன்னொரு கையை வைத்து கண்களால் நன்றி தெரிவித்தாள்.
Comments
Post a Comment