Sms ch 40 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 40
நந்தன் சிவன் கோயிலுக்கு சென்று அவன் எப்போதும் வாங்கும் ஒரு பாட்டியிடம் இருந்து ஒரு அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு உள்ளே சென்றான். இன்று கூட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. நந்தன் அர்ச்சனை தட்டை ஐயரின் கையில் தர அவர் நந்தனை பார்த்து “வணக்கம், வாங்கோ, என்ன இன்னைக்கு காலைல வந்திருக்கேள்? சாயங்காலம் பிரதோஷம் வழிபாடு இருக்கே?” என்றார்.
“ஓஹ் இன்னைக்கு பிரதோஷமா?” என்றான் நந்தன் சிறிது யோசனையுடன்.
“சரி என்ன இன்னைக்கு அர்ச்சனை தட்டோட வந்திருக்கேள்? யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்?” என்றார் புன்னகையுடன்.
“சத்யாங்குற பேருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க சாமி”
“நட்சத்திரம்?” என்றார்.
“அதெல்லாம் தெரியல சாமி, பேருக்கு அர்ச்சனை பண்ணினா போதும்”
“சரி ஷேமமா பண்ணிடலாம்” என்று மந்திரங்களை ஓதிய படியே மற்றவர்களின் அர்ச்சனை தட்டுக்களையும் வாங்கி கொண்டு உள்ளே செல்ல நந்தன் கண்களை மூடி வேண்டிக்கொண்டான். “கடவுளே சத்யா நல்லமுறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும், அவளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் அவளுக்கு துணையாக இருந்து நீங்கள் காக்க வேண்டும்” என்று வேண்டியபடியே கண்களை திறந்து இறைவனை தரிசனம் செய்ய பின்னாலிருந்து ஒருவர் நந்தனின் தோள்களில் கை வைத்தார்.
“ஹலோ நந்தன், என்ன பொதுவாக உங்களை நான் இங்கே மாலையில் பார்ப்பது தான் வழக்கம், இன்று காலையிலேயே கோயிலுக்கு வந்துள்ளீர்கள், எப்படி உள்ளீர்கள்?”
“நல்லா இருக்கேன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பேசிய படியே அவருடன் அம்மன் சந்நிதி நோக்கி நடக்க ஆரம்பித்தான் நந்தன். அவர்களுக்கு பின்னால் இருந்த கூட்டம் முன்னேறி வந்து அர்ச்சனை தட்டுக்களை நீட்டி பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர். நந்தனை கவனியாமல் அவனுக்கு பின்னால் இருந்த கூட்டத்தில் ஒருத்தியாக நின்றிருந்த சத்யாவும் முன்னேறி வந்து ஒரு அர்ச்சனை தட்டை நீட்டி தருணின் பெயரில் அர்ச்சனை செய்ய சொன்னாள்.
இப்போது கூட்டம் இன்னும் அதிகமாகி இருந்தது. இரண்டு ஐயர்கள் மாறி மாறி அர்ச்சனை தட்டுக்களை வாங்குவதும் பூஜை செய்வதுமாக இருந்தனர். அர்ச்சனை முடிந்து ஒரு இளம் ஐயர் அவரவர் அர்ச்சனை தட்டுக்களை திருப்பி கொடுத்து கொண்டிருக்க பிரகாரத்தின் உள்ளே இருந்த ஐயரிடம் கேட்டார். “இந்த தட்டு யாரோடது?” என்று. “சத்யாங்குற பேர்ல அர்ச்சனை செய்ய சொன்னாரே அவர்கிட்ட குடுத்துடு” என்று உள்ளே இருந்து பதில் சொல்ல அந்த இளம் ஐயரும் வெளியே வந்து “சத்யாங்குற பேர்ல அர்ச்சனை பண்ணினவர் யாரு?” என்று கேட்டு முடிப்பதற்குள் சத்யா என்ற பெயரை கேட்டதும் தன்னையும் அறியாமல் “நான் தான்” என்று சத்யா கையை உயர்த்தினாள். அந்த இளம் ஐயரும் அவளிடம் தட்டை கொடுத்தார். சத்யா அப்போது தான் தன் தவறை உணர்ந்து “மன்னிக்கவும் என் பெயரை நீங்கள் கூறியதும் நான் தான் என்று சொல்லிவிட்டேன், நான் தருண் என்ற பெயரில் தான் அர்ச்சனை செய்தேன், இது என்னுடைய அர்ச்சனை தட்டு இல்லை” என்று திருப்பி தர முயன்றாள். அப்போது பிரகாரத்தின் உள்ளே இருந்து வந்த பெரிய ஐயர் “அதனால என்னம்மா? வாங்கின தட்டை திருப்பி தராதே, சத்யாங்குற பேருக்கு அர்ச்சனை பண்ண சொன்ன தம்பிய எனக்கு தெரியும், அந்த தம்பி ஒன்றும் தவறாக நினைக்க மாட்டார், இப்படி தட்டு மாறுவது நல்ல அறிகுறி தான், இதை நீயே வைத்துக்கொள்” என்றார்.
“சரி” என்று தலை அசைத்துவிட்டு கோயிலை சுற்றி வர நடந்த சத்யா மனதிற்குள் நினைத்து கொண்டாள். “நம் பெயரில் இன்னொரு சத்யாவிற்கு பிறந்த நாளோ, திருமண நாளோ இருக்க வேண்டும் போல, அவளுக்கு வேண்டியவர்கள் அவள் பெயரில் அர்ச்சனை செய்துள்ளார்கள் போல” என்று நினைத்தவளாய் கோயிலை சுற்றி வந்தாள்.
ஒரு சுற்று முடிந்து வந்தவள் அங்கே நந்தனும் ஐயரும் நின்று பேசிகொண்டிருப்பதை பார்த்து நந்தனின் கண்ணில் படாதவாறு பின்தங்கி மறைந்து நின்றாள். அந்த ஐயர் நந்தனிடம் ஏதோ சிரித்து பேசி சத்யாவின் அர்ச்சனை தட்டை நந்தனின் கையில் கொடுத்து கொண்டிருந்தார். “ஒருவேளை......ஒருவேளை நந்தன் தான் நம் பெயரில் அர்ச்சனை செய்திருப்பாரோ?” என்று வியந்தாள். “இன்று நம் பிறந்தநாள் என்று அவருக்கு எப்படி தெரிந்து இருக்கும்? இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? Database ல் பார்த்திருப்பார். பார்த்திருந்தால் கூட இப்படி ஞாபகம் வைத்திருந்து எதற்கு நம் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்? நம் மீது அவருக்கு என்ன அன்பு, அக்கறை?” இப்படியே யோசித்து குழம்பி கொண்டிருந்தவள் நந்தன் அந்த இடத்தை விட்டு சென்றதை கூட கவனிக்கவில்லை.
“ப்ச்ச் நாம் போய் அவருடன் பேசி இருக்கலாமோ?” என்று யோசித்தவள் அடுத்த நொடியே “எதற்கு பேச வேண்டும்? அந்த தீபிகா அவ்வளவு கேவலமாக பேசிய பிறகு இவருடன் நான் எதற்கு போய் பேச வேண்டும், அவரும் தான் வீட்டிற்கு வருவதோ பேசுவதோ இல்லை, நான் மட்டும் அவரை பார்த்ததும் ஓடி போய் பேச வேண்டுமா? நான் ஒன்றும் அவ்வளவு இறங்கி போய் விட மானம் கெட்டவள் இல்லை, பிறந்த நாள் என்று தெரிந்து இருந்தால் ஒரு call செய்து wish பண்ணி இருக்கலாம் அல்லவா? அதெப்படி call செய்வார்? கொஞ்ச நாட்கள் நான் அவரது வலையில் விழுந்து விடுவேன் என்று நினைத்து வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தார், என்னை அப்படி எல்லாம் வீழ்த்த முடியவில்லை என்று தெரிந்ததும் இந்த பழம் புளிக்கும் என்று விலகி விட்டார், அப்புறம் ஏன் எனக்கு வாழ்த்து சொல்ல போகிறார்? ஆனால்...பிறகு ஏன் அர்ச்சனை மட்டும்?” என்று அதே இடத்தில் நின்று குழம்பி கொண்டிருந்தாள்.
அப்போது “ஹலோ...” என்று யாரோ அவள் காதில் சொல்வது போல் உணர்ந்து திடுக்கிட்டு திரும்பினாள். நந்தன் அவளுக்கு பின்னால் அவளின் சவுகரியத்திற்கு இடையூறாக வெகு அருகில் நிற்பதை கண்டு அவனை நிமிர்ந்து பார்த்து வேகமாக பின்னாடி நகர்ந்தாள்.
“பாத்து பாத்து மெதுவா, என்கிட்ட இருந்து தள்ளி நிக்கிறேன்னு கீழ விழுந்துடாத” என்றான்.
சத்யா எதுவும் பேசாமல் அவனை பார்த்துவிட்டு பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
நந்தன் அவளை ஏற இறங்க பார்த்தான். புது சேலை, தருண் வாங்கி கொடுத்த கம்மல், தலைக்கு குளித்து ஈரத்துடன் தளர்வாக போட்ட பின்னல், சின்னதாக பொட்டு, அதன் மேல் திருநீறு, தோளில் ஒரு கைப்பை, கையில் தான் வாங்கிய அர்ச்சனை தட்டு, கண்களில் சின்னதாக பயம், கோபம், கலக்கம் என்று நந்தன் இதுவரை அவளை இப்படி பார்த்திராத, ஒருவிதமான அழகாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு.
“இன்னைக்கு என்ன விசேஷம்?” என்றான் புன்னகையுடன்.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி நடந்தாள்.
நந்தன் ஒரு நிமிடம் குழம்பிவிட்டு இரண்டடியில் அவளை தாண்டி வழி மறித்து நின்றான். “ஹேய் நில்லு, நான் ஒருத்தன் பேசிட்டு இருக்கேன் இல்லை? கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் போனால் என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்கவும் சத்யா அதிர்ந்தாள்.
“இப்போ எதுக்கு இவ்வளவு கோபம் இவனுக்கு” என்று மனதில் நினைத்தவளாய் “இல்லை exam க்கு time ஆகிடுச்சு, அதான்” என்று தயங்கி தயங்கி தரையையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்து சொன்னாள்.
நந்தன் கொஞ்சம் அமைதியாகி அவளை ஆழமாக பார்த்துவிட்டு “சரி வா, போகலாம்” என்றான்.
“எங்க?” என்றாள்.
“Exam க்கு time ஆகிடுச்சி சொன்னியே, வா உன்னை கூட்டிட்டு போய் தேர்வு மையத்தில் விட்டு விடுகிறேன்”
சத்யா மீண்டும் தயங்கி நின்றாள்.
“என்ன time ஆகிடுச்சுன்னு சொன்னதெல்லாம் சும்மாவா? அப்படின்னா வா, அங்க உக்காந்து பேசிட்டு போலாம்” என்றான் அவளை தீவிரமாக பார்த்தபடி.
“என்ன இவன் நம்மை விட மாட்டான் போலவே” என்று எரிச்சலும் குழப்பமுமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தீவிரமாக பார்ப்பதை உணர்ந்து கண்களை தாழ்த்தி கொண்டு எப்படி அவனை தவிர்ப்பது என்று செய்வதறியாமல் குழம்பி நின்றாள்.
“ப்ச்ச் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா மா, தேர்வுக்கு நன்றாக படித்துள்ளாய் தானே?”
“ம்ம்ம்... “ என்று தலை அசைத்தாள்.
“Good, இப்போ என்ன பண்ணலாம் சொல்லு, இங்க கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு exam hall போகலாமா, இல்லன்னா இப்பவே கிளம்பலாமா?” என்றான்.
“எப்படி பார்த்தாலும் இவன் நம்மை விட மாட்டான் போல, உனக்கு அறிவே இல்லை சத்யா, அவன் மீது இருக்கும் கோபம் எல்லாம் இப்போது எங்கே சென்று ஒளிந்து கொண்டுள்ளதோ தெரியவில்லை, அவனை பார்த்தால் ஒன்று பேந்த பேந்த முழிக்கிறாய், இல்லை என்றால் வாயை திறக்க முடியாமல் திணறுகிறாய், ஊரில் உள்ள பெண்களை எல்லாம் வளைத்து போட்டு உல்லாசமாக இருப்பவன் எவ்வளவு தைரியமாக பேசுகிறான் பார், அவனை பார்த்து கற்றுக்கொள் எப்படி தைரியமாக மிரட்டுவது போல் பேசுவது என்று அவள் மனதிற்குள் உரையாடல் நிகழ்த்தி கொண்டிருக்க நந்தனுக்கு அவளை பார்க்கும் போது கொஞ்சம் கோபமும் கொஞ்சம் சிரிப்புமாக இருந்தது. “இவளுக்கு என்ன ஆயிற்று?” என்று யோசித்து கொண்டிருந்தான்.
ஏதோ ஐடியா கிடைத்துவிட்டது போல் சத்யா கூறினாள். “நான் கோயிலை ஒருமுறை தான் சுற்றி வந்தேன், நான் போய் இன்னும் இரண்டு முறை சுற்றி வருகிறேன்” என்று வேகமாக நடந்தாள். அவனும் கூடவே நடந்தான். “நீங்க ஏன் சுற்றுகிறீர்கள்?” என்றாள்.
“ம்ம்ம் வேண்டுதல்” என்றான் முகத்தில் லேசான கோபத்துடன்.
நந்தன் ஒருமுறை சுற்றிவிட்டு “ஓகே நான் மூன்று முறை சுற்றிவிட்டேன், உன் bag ஐ கொடுத்துவிட்டு நீ இன்னும் ஒருமுறை சுற்றி வா” என்றான்.
“நான் வேகமாக சுற்றிவிட்டு உடனே வந்துவிடுவேன், வெயிட் பண்ணுங்க” என்று ஓட பார்த்தாள்.
நந்தன் “bag ஐ கொடுத்துவிட்டு போ” என்று கைகளை நீட்டினான்.
அவள் “தப்பிக்க முடியாது போல” என்று நினைத்துக்கொண்டே தன் கைப்பயை கழட்டி அவனிடம் கொடுத்து விட்டு மீதி இருந்த ஒரு சுற்றை சுற்றிவிட்டு மெதுவாக வந்தாள்.
“இப்படி உட்கார்” என்று அவன் அருகில் அவளை உட்கார சொன்னான்.
அவளும் உட்கார்ந்தாள். “ம்ம்ம் இப்போ சொல்லு, என்னை ஏன் avoid பண்ற?” என்றான் சிறிது வருத்தத்துடன்.
அவன் வருத்தமான முகம் அவளை பாதித்தது. “avoid எல்லாம் பண்ணல” என்றாள் தலையை குனிந்த படி. “பாத்தா அப்படி தெரியலையே, என்மீது ஏதாவது கோபமா?” என்றான். அவள் அமைதியாக அவனை பார்த்துவிட்டு “ஆமாம்” என்றாள்.
“என்ன கோபம்?”
“ஒன்றும் இல்லை, பிறகு சொல்கிறேன்”
“ஏன் இப்போது சொன்னால் என்ன?”
“இப்போ அதை பற்றி பேசும் அளவு நேரம் இல்லை, அதோட இல்லாமல் தேர்வு நேரத்தில் ஏன் வீண் குழப்பம், தேர்வு முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம்”
நந்தன் உடனே உற்சாகமடைந்து “அப்படின்னா நானே உன்னை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு அழைத்து வருகிறேன், அப்போது பேசிக்கொள்ளலாம் சரியா?”
“இவன் ஏன் இவ்வளவு சந்தோஷம் அடைகிறான், ச்ச அவனோடயே போய் திரும்பும் படி ஒப்புக்கொள்ள வைக்கிறானே” என்று நினைத்தவள் அதற்கு மேலும் அவனை தவிர்க்க முடியாமல் “சரி” என்றாள்.
“ஹ்ம்ம் சரி என்னோட அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு போனவள் நீ தானா?” என்றான் கிண்டலாக குற்றம் சாட்டுபவன் போல.
“உங்களோட அர்ச்சனை தட்டா?”
“ஆமாம் நான் எப்போதும் வாங்கும் பாட்டி தான் இந்த நிறத்தில் அர்ச்சனை தட்டை கொடுப்பார்கள், ஐயர் சொன்னார் தட்டு மாறிவிட்டது என்று, ஆனால் உன்னிடம் தான் வந்துள்ளது”
சத்யா ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“சரி போகலாமா?” என்று எழுந்தான்.
அவளும் எழுந்து அவனுடன் நடந்தாள். பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவளை மேலும் நன்றாக பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான். “இன்னைக்கு என்ன விசேஷம்?” என்று கேட்டேனே.
“அப்படின்னா கண்டிப்பா நம்ம பிறந்தநாள் தெரியவில்லை, பிறகு எதற்கு அர்ச்சனை? அப்படி என்ன நம் மீது அன்பு?” என்று யோசித்தவள் “ஒரு விசேஷமும் இல்லையே, ஏன் மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறீர்கள்?” என்றாள்.
“இல்லை இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகா இருக்கியே, அதான்” என்றான் புன்னகையுடன்.
சத்யாவின் கன்னங்கள் சூடேறின. “ஏதாவது படுதா கிடைத்தால் முகத்தை மூடி கொள்ளலாம், கன்னங்கள் ஏதாவது சிவந்து என் மானத்தை வாங்க போகிறது” என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள். அடுத்த நிமிடமே “ஓவரா சந்தோஷ படாதே சத்யா, அளவுக்கு அதிகமாக வெட்க படாதே, இதே மாதிரி எத்தனை பெண்களுடன் உரையாடினானோ? நேற்று மாலை கூட எவளுடன் சல்லாபித்தானோ? அவனை நம்பாதே” என்று தன்னை தானே திட்டிக்கொண்டாள்.
நந்தன் அவள் முக மாற்றங்களை கவனித்து கொண்டிருந்தான். பாட்டியிடம் சத்யாவின் கையில் இருந்த அர்ச்சனை தட்டை கொடுத்து ஒரு காகித பையில் அர்ச்சனை பொருட்களை அந்த பாட்டி மாற்றி கொடுக்க அதை வாங்கி சத்யா கையில் கொடுத்துவிட்டு ஷூவை அணிந்து கொண்டு நடந்தான். “உன்னோட காலணிகள் எங்கே?”
“அதோ அந்த கடை அருகில்” என்று சொல்லி நடந்து அவள் காலணிகளை அணிந்து கொண்டு வந்தாள்.
“இந்த பக்கம் வா” என்று ஒரு ஹோட்டலை நோக்கி நடந்தான்.
“எங்க போறீங்க?” என்றாள்.
“சாப்பிட வேண்டாமா?”
“நான் எனக்கு டிபன் வச்சிருக்கேன்”
“ரொம்ப சந்தோஷம், நான் என்ன சாப்பிடுவது?”
“நீங்கள் வேண்டுமானால் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள், நான் இங்கே காத்திருக்கிறேன்”
நந்தன் அவளை முறைத்துவிட்டு “வா போகலாம்” என்று காரை நோக்கி நடந்தான்.
அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. காருக்கு சென்று கதவை திறந்து அவளை அமர சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு சென்றான். அவன் காரை ஸ்டார்ட் செய்யும் முன் அவசர அவசரமாக தன் கைப்பயை திறந்து டிபன் பாக்ஸ் ஐ திறந்து அவனிடம் சாப்பிட சொல்லி கொடுத்தாள்.
அதுவரை கோபமாக இருந்த அவன் முகத்தில் இப்போது புன்னகை வந்தது, ஆனால் அதை மறைத்து லேசாக முகத்தை கடுகடுவென்றே வைத்துக்கொண்டான். நான்கு இட்லியும் கொஞ்சம் சட்னியும் இருந்த அந்த டிபன் பாக்ஸ் ஐ பார்த்துவிட்டு “நீ சாப்பிடு, எனக்கு பசி போய் வயிறு நிறைந்துவிட்டது” என்றான் கொஞ்சம் கோபமாக.
“நீங்க அழைத்தால் நான் உடனே ஹோட்டலுக்கு வந்து உங்களுடன் சாப்பிட வேண்டுமா? அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு கோபம் வந்துவிடும், அப்படி தானே, எனக்கு என்று எந்த சொந்த விருப்பு வெறுப்பு, ஆமாம் இல்லை, வேண்டும் வேண்டாம் என்று இருக்க கூடாதா?” என்று கோபமாக பொரிந்தாள். காருக்கு வெளியே இவ்வளவு நேரம் சத்தமே வராமல் ஓரிரு வார்த்தைகள் சத்தமே வராமல் பேசிய சத்யா காருக்குள் ஏறியதும் யாருக்கு கேட்க போகிறது என்பது போல் சத்தமாக பொரிந்து கொட்டியது நந்தனுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் இன்னொரு பக்கம் அவள் அவனுடன் சண்டையிடுவது போல் பேசுவது மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு “exam எழுத போற, நாலு இட்லில நான் பங்கு போட்டு சாப்பிட்டால் அரை வயிறும் கால் வயிறுமாக போய் சாப்பிடுவாயா?” என்றான் அமைதியாக.
சத்யா “நான் ஏன் திடீரென்று இவ்வளவு கோபம் அடைந்தேன்” என்று யோசித்தவளாய் “சரி அப்படின்னா வாங்க, ஹோட்டலில் போய் சாப்பிட்டுவிட்டே கிளம்பலாம்” என்றாள்.
“பரவாயில்ல நீ சாப்பிட்டுகொண்டு இரு, நான் இப்போது வருகிறேன்” என்று சொல்லி பக்கத்து ஹோட்டலில் இருந்து தனக்கும் இட்லி வாங்கி வந்து இருவரும் காரிலேயே அமர்ந்து சாப்பிட்டார்கள். கையை கழுவிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான். சத்யாவிற்கு வள்ளியிடம் இருந்து போன் call வந்தது. “Thanks அக்கா, முருகன் அண்ணா எப்படி உள்ளார்? எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? நான் நன்றாக படித்துள்ளேன், தருண் சேட்டை செய்யாமல் இருக்கிறானா?” என்றெல்லாம் பேச நந்தனுக்கு கேள்விகள் அதிகமாகின. அவள் அழைப்பை துண்டித்ததும் “எல்லாரும் எங்க போயிருக்காங்க?” என்றான். சத்யா முருகன் அண்ணன் தந்தை இறந்ததை பற்றியும் எல்லோரும் அங்கே சென்றிருப்பதை பற்றியும் கூறினாள். “அப்படி என்றால் நான்கு நாட்களாக தனியாகவா இருக்கிறாய்?” என்றான் ஆழ்ந்த சிந்தனையுடன். “நான் தனியாக இருந்தால் இவன் ஏன் இவ்வளவு யோசிக்கிறான்?” என்று நந்தன் முகத்தில் ஏற்பட்ட திடீர் மாறுதல் புரியாமல் சத்யா விழித்தாள்.
Comments
Post a Comment