Sms ch 39 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 39
நந்தன் அன்றிரவு ஸ்ரேயாவை பார்த்து பேசிவிட்டு வீட்டிற்கு வர மணி 11.30 ஆகி இருக்கும். அவன் எங்கே போயிருப்பான் என்று தன் அறையில் தூங்காமல் தீபிகா யோசித்து கொண்டிருந்தாள். மெதுவாக நடந்து வரும் சத்தம் கேட்டு கதவை லேசாக திறந்து பார்த்து நந்தன் தான் என்று உறுதி செய்து கொண்டாள். இவ்வளவு நேரம் எங்கே சென்றிருப்பான், சத்யாவை பார்க்க தானோ என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டே படுக்கையில் விழுந்தாள். ஊமை மாதிரி அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு நமக்கே இந்த சத்யா போட்டியாக வந்து விடுவாள் போலவே என்று பதபதைத்தாள். அன்று அவ்வளவு தூரம் சொல்லியும் இவனை ஏன் அவள் வீட்டிற்கு வர விடுகிறாள், அவளை மீண்டும் சந்தித்து கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
நந்தன் மறுபுறம் அவன் அறையில் சத்யாவை நினைக்க கூடாது என்று கட்டுப்படுத்தியும் மீண்டும் மீண்டும் அவள் நினைவாகவே புரண்டு படுத்தான். இத்தனை நாட்களாக வெளியே சொல்லாத வரை இவ்வளவு கஷ்டமாக இல்லை. இன்று முதல் முறையாக ஸ்ரேயாவிடம் தனக்கு சத்யா மீது இருக்கும் காதலை சொன்ன பிறகு சத்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே தோன்றியது. ஆனால் அவள் தேர்வுகள் முடிய வேண்டும், அவளை நினைத்து கொண்டே இருந்தால் பார்க்க வேண்டும் என்று தோன்றும், பார்த்தால் ஏதேதோ எண்ணங்கள் தோன்றும், மனம் விட்டு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று தோன்றும், நானே அவளுக்கு இடையூறாக இருக்க கூடாது என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு இழுத்து பிடித்து கொண்டிருந்தான்.
ஆனால் முதன் முதலாக அவளை தன் நெஞ்சில் தாங்கி நடந்தது, கலைந்து கிடந்த முடியை ஒதுக்கிவிட்டு அவள் முகத்தை பார்த்தது, மறுநாள் கோபமாக தன் உதவி வேண்டாம் என்று அவள் புறக்கணித்தது, தன்னை வராதே வராதே என்று அவள் விரட்டியது எல்லாமே அவனுக்கு மீண்டும் மீண்டும் காட்சியாக ஓடி கொண்டிருந்தன.
தருண் மீது இருந்த அன்பும் பரிவும் தான் அடிக்கடி அவள் வீட்டிற்கு தன்னை இழுத்தது என்று அவன் நினைத்தது தவறு, தருண் மீது இருக்கும் அன்பு மட்டுமல்ல, சத்யா மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பும் தான் என்று பிறகு தான் அவனுக்கு புரிந்தது. அது மற்ற பெண்களிடம் இருப்பது போல் வெறும் ஈர்ப்பு மட்டும் தானா என்று சோதிக்க வேண்டுமென்று அவளை அடிக்கடி பார்க்க செல்வதும், சில நாட்கள் பார்க்காமல் இருப்பதும் என்று தனக்கு தானே அவன் சில தேர்வுகளை வைத்துக்கொண்டு அது ஈர்ப்பு மட்டுமல்ல அதற்கும் மேல் என்று உறுதி செய்து கொண்டான்.
அவளுக்கும் தன் மேல் ஈர்ப்பு இருக்க வேண்டும் என்றும் அவன் அவளது பேச்சு, பழக்கவழக்கம் வைத்து புரிந்து கொண்டான், ஆனால் அவளுக்கு வெறும் ஈர்ப்பு மட்டும் இருக்க கூடாதே, அதையும் தாண்டி தனக்கு இருப்பது போல் அவளுக்கும் தன் மீது காதல் உணர்வு இருக்க வேண்டுமே என்று அவன் ஏங்கி தவித்த நாட்களும் உண்டு. அவன் கணிப்பின் படி அவளுக்கும் அவன் மீது அன்பு உண்டு, ஆனால் காதல் என்று அவள் உணர்வாளா? இல்லை நண்பன் என்ற முறையில் அன்பு உண்டு என்று அந்த வட்டத்தை குறுக்கி கொள்வாளா? ஒருவேளை காதல் என்று உணர்ந்தாலும் அதை அங்கீகரித்து தன்னை ஏற்று கொள்வாளா என்று பல நாட்கள் பல கேள்விகளுடன் நந்தன் வலம் வந்தது உண்டு. ஆனால் தனக்கு பிடித்த விஷயங்களை எப்படி அடைய வேண்டும் என்றும், தனக்கு பிடித்தவர்களை தன் வாழ்வில் எப்படி ஒரு அங்கம் ஆக்கி கொள்ள வேண்டும் என்றும் அவன் அறிந்து வைத்திருந்தான். அந்த தெளிவும் நம்பிக்கையும் இருந்ததால் அவனால் நெறைய விஷயங்களில் காத்திருக்கவும் முடிந்தது.
சத்யாவின் படிப்பும் தேர்வும் கூட அப்படி தான், தேர்வு முடிந்து மீண்டும் அவளை சந்திக்கும் வரை அவனால் காத்திருக்க முடியும். காதல் என்று உறுதியாகி விட்டது, அவளும் அதை உணரும் வரை காத்திருக்கவும் தயார், உணராமல் இருந்தால் அவளை எப்படி உணர வைக்க வேண்டும் என்றும் தெரியும் என்று மனதிற்குள் உறுதியுடன் இருந்தான் நந்தன்.
R&D பணிகள் சிறப்பாக நடப்பதில் திருப்தி அடைந்த நந்தனை பார்த்த தீபிகா அவன் சந்தோஷமாக இருக்கும் போதே மீண்டும் பேசி பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏன் நந்தன், ஒருவேளை நம் இரு குடும்பத்தாரும் சேர்ந்து நமக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால் என்ன சொல்வீர்கள்?”
முதலில் கோபமாக பார்த்த நந்தன் பிறகு நிதானமாகவே பேசலாம் என்ற முடிவுடன் “என் விருப்பம் இல்லாமல் என் அம்மா அப்படி ஏற்பாடு செய்ய மாட்டார்கள்” என்றான்.
“உங்களுக்கு ஏன் விருப்பமில்லை?”
“இதற்கு ஏற்கனவே பலமுறை விளக்கம் அளித்து விட்டேன்” என்றான் நந்தன் கொஞ்சம் எரிச்சலுடன்.
“அது காதல் இல்லை என்பதற்கான விளக்கம் தானே, நான் கேட்பது arranged marriage பற்றி. எத்தனையோ பேர் காதல் வராமல் arranged marriage ல் கை கோர்த்து சந்தோஷமாக வாழவில்லையா? நாம் ஏன் அப்படி திருமணம் செய்து கொள்ளக்கூடாது?”
“ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை தீபிகா, இதை பற்றி மேலும் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து விலகி நடந்தான்.
தீபிகாவால் அவனது விலகலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Database ல் இருந்து சத்யாவின் address கண்டுபிடித்து நேராக அவள் வீட்டிற்கு சென்றாள்.
“நீங்களா?” என்று வியந்தாள் சத்யா.
“நான் தான் சத்யா, அன்று உன்னை அவ்வளவு எச்சரித்தும் நீ ஏன் நந்தனுடன் பழகுகிறாய்?”
சத்யா வியப்பும் கோபமுமாக அவளை பார்த்துவிட்டு “மேடம் நான் கம்பெனிக்கு வந்தே மூன்று வாரங்கள் ஆகிறது, நான் எங்கிருந்து அவருடன் பழகுவது?”
“நீ கம்பெனிக்கு வரவில்லை என்றாலும் அவர் உன்னை தேடி அடிக்கடி வருவதும், இரவு 11 மணி வரை உன்னுடன் கூத்தடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்புவதும் எனக்கு தெரியாது என்று நினைத்தாயா? எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகப்போகிறது என்று சொல்லியும் நீ அவருடன் இரவும் பகலும் நெருங்கி பழக வெட்கமாக இல்லையா?”
“மேடம் வார்த்தைகளை அளந்து பேசுங்கள், நான் உண்டு என் படிப்பு உண்டு என்று இருக்கிறேன், நான் விடுப்பு எடுத்த பிறகு ஒரே ஒரு நாள் காலை 6 மணி போல இங்கே வந்தார், ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? என்று கூட எனக்கு தெரியாது, வந்த கொஞ்ச நேரத்தில் வாசலில் நின்ற படியே பேசிவிட்டு கிளம்பி விட்டார், இரவு 11 மணி வரை அவர் வேறு எந்த பெண்ணோடு கூத்தடித்தாரோ யாருக்கு தெரியும்? நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், இனி என் வீட்டிற்கு வருவதோ அனாவசியமாக என் மீது பழி சுமத்துவதோ வேண்டாம்”
தீபிகா ஒரு நிமிடம் குழம்பியவளாய் “பார்த்தாயா? நிச்சயதார்த்தம் என்னுடன், அவ்வப்போது உன்னை வந்து பார்க்கிறார் என்று நான் சந்தேகித்தால் இடையில் நீ இல்லாமல் வேறு ஒருத்தி இருப்பாள் போல, அதனால் தான் தினமும் இரவு அவர் வர 12 மணி ஆகி விடுகிறது, இவரை ஏன் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எனக்கே கேள்வியாக உள்ளது, லண்டனில் இவரிடம் என்னை நானே முழுமையாக இழந்துவிட்டு நான் படும் துயரம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம், தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடு, நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு தீபிகா வெளியேறினாள்.
சத்யாவிற்கு கண்கள் கலங்கின. “ச்ச இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள்? அவர் எவளுடன் இரவு 12 மணி வரை சல்லாபிக்கிறாரோ யாருக்கு தெரியும்? அதற்காக என்னை சந்தேகித்து விட்டாளே, இப்படி ஒருவனை வீட்டிற்குள் விட்டால் இப்படி பட்ட பேச்சுக்கள் கேட்க தான் வேண்டும், இந்த தீபிகா இல்லாமல் புதிதாக எவளையோ பிடித்து விட்டான் போல, அதனால் தான் தருணை பார்க்க கூட அவனுக்கு நேரமில்லை போல, தருணுக்கு ஸ்கூல் கூட லீவ் விட்டாச்சே, ஸ்கூலில் சென்றும் பார்க்க முடியாது, பார்க்க வேண்டும் என்றால் வீட்டிற்கு தான் வர வேண்டும், ஏன் வரவில்லை என்று யோசித்தேன், இப்போது தான் புரிகிறது, 12 மணி வரை யார்கூட பேசுகிறாரோ, பழகுகிறாரோ யாருக்கு தெரியும், அவர் யார்கூட பழகினால் எனக்கென்ன? லண்டனில் தன்னை முழுமையாக அவரிடம் இழந்து விட்டாளாமே, அவள் தானே உட்கார்ந்து அழ வேண்டும், நான் ஏன் அழ வேண்டும்? எனக்கென்ன சேதம்? யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன?” என்று சத்யா நந்தனை வெறுத்து தன்னை தேற்றி கொண்டாள். மீண்டும் படிப்பு ஒன்று தான் இனி நமக்கு எல்லாம் என்று படிப்பிலேயே கவனம் செலுத்தினாள்.
இன்னும் நான்கு நாட்களில் இரண்டு தேர்வுகள். முடிந்ததும் நிம்மதி என்று நினைத்து படித்துகொண்டிருந்தாள். அப்போது தான் முருகனின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. சத்யாவின் தேர்வு முடிந்ததும் போகலாம் என்று இருந்த திட்டம் மாற்றப்பட்டது. முருகனும் வள்ளியும் உடனே சென்றாக வேண்டிய கட்டாயம். சத்யா எல்லோரையுமே புறப்பட சொன்னாள். தருண் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று பிடிவாதம். சத்யாவும் தருணை அவர்களுடன் அழைத்து செல்ல சொன்னாள். அடுத்த இரண்டு தேர்வுகளும் முக்கியமானவை. முருகன், பாட்டி, வள்ளி, சின்னு அருகில் இல்லாமல் தருணை தான் சமாளிப்பதும், தேர்வுக்கு படிப்பதும் கஷ்டம், அதனால் தருணையும் அவர்களுடன் அழைத்து செல்ல சொன்னாள்.
சத்யாவை தனியாக எப்படி விட்டு செல்வது என்று மாறி மாறி தயங்கி இருந்தனர். முதலில் பாட்டி இருக்கட்டும் என்றும் பிறகு வள்ளி துணைக்கு இருப்பதாகவும் மாறி மாறி குழம்பி கொண்டிருந்தனர். ஆனால் சத்யா தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், துரைசாமியும் இப்போது இங்கே வருவதில்லை என்றும் அவர்களை புறப்பட சொன்னாள். தேர்வு முடிந்த மறுநாள் தானும் புறப்பட்டு வருவதாக சொன்னாள். சத்யா தைரியமாக புறப்பட சொன்னதால் அவர்களும் புறப்பட்டனர்.
அடுத்த தேர்வும் முடிந்தது. இன்னும் இரண்டு நாட்களில் கடைசி தேர்வு முடிந்து விட்டால் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனை செய்தது போல் தான் என்று சத்யா நினைத்தாள். கடைசி தேர்வு அன்று தான் அவளின் பிறந்த நாளும். நந்தனின் நினைவு அவளை அவ்வப்போது வந்து மிரட்டியது. அவனை நினைக்காமலும் இருக்க முடியவில்லை, நினைத்தால் அவன் நடத்தை நினைத்து மனம் சஞ்சலம் அடைந்தது. அவன் எப்படி இருந்தால் எனக்கென்ன என்று பலமுறை தன்னை தானே கேள்வி கேட்டும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை. எப்போது அவனுக்கு நிச்சயதார்த்தம் என்று தெரியவில்லையே என்று அது வேறு தனி கலக்கம். எப்படியாவது நன்றாக படித்து வேறு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள். IAS க்கு படிப்பதெல்லாம் இப்போது முடியுமா தெரியவில்லை, one step at a time என்று அருகில் இருக்கும் குறிக்கோளின் மீது மட்டும் கவனம் வைத்தாள்.
இன்று தான் கடைசி தேர்வு. காலையில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிட்டு பாட்டியும் முருகன் அண்ணனும் வாங்கி கொடுத்திருந்த இரண்டு சேலைகளில் ஒன்றை எடுத்து கட்டினாள். சிகப்பு நிற காட்டன் சேலை. அவளுக்கு மிகவும் பிடித்த நிறம், கௌஷிக் இறந்த பிறகு பெரிதாக துணிமணிகளில் அவள் கவனம் செலுத்தவில்லை, இன்று பல வருடங்கள் கழித்து அந்த நிறமுள்ள சேலையை கட்டினாள். சின்னதாக பொட்டும் வைத்துக்கொண்டாள். தருண் வாங்கி கொடுத்த கம்மலை போட்டு கொண்டாள். ஒரு பஸ் பிடித்து பெரிய சிவன் கோயிலுக்கு சென்று விட்டு தேர்வு மையத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து புறப்பட்டாள்.
மறுபுறம் நந்தன் காலையில் எழும் போதே ஏதோ கெட்ட கனவு ஒன்று கண்டு சத்யா என்று கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தான். ஏதோ கருநாகம் ஒன்று அமைந்தகரையில் சத்யா படுக்கையில் நெளிவது போலவும் சில நொடிகளில் சத்யாவை அது தீண்டிவிடும் அவளை காப்பாற்ற வேண்டும் என்பது போலவும் கனவு கண்டு எழுந்தான் நந்தன். வியர்த்து கொட்டியது அவனுக்கு. அது கனவு தான் என்று அவன் உணர ஒரு சில நிமிடங்கள் ஆகின. “இன்னைக்கு தான சத்யாவுக்கு கடைசி தேர்வு, இன்று மாலையே அவளை சந்திக்க வேண்டும்” என்று மனதிற்குள் முடிவு செய்தான். இருந்தாலும் கண்ட கனவு அவனை ஒருமனதாக இருக்க விடாமல் தொல்லை செய்தது. சிறிது நேரம் தியானம் செய்ய முயற்சி செய்து அது சரி வராமல் எழுந்து குளித்துவிட்டு சிவன் கோயிலுக்கு சென்றான்.
Comments
Post a Comment