Sms ch 8 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 8
சத்தியமூர்த்தி குடும்பத்தில் அனைவரும் ஆதி ஜெகன்னாத பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டனர்.
நந்தன் கமலா அம்மாவுடன் முதலில் போய்கொண்டிருந்தான்.
கோயிலை பற்றிய விஷயங்களை நந்தன் கேட்க கமலா அம்மாவும் சொல்லிக்கொண்டே நடந்தார்கள். “ராமர் சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக தர்பை புல்லின் மேல் அமர்ந்து சமுத்திரராஜனிடம் வழி விடுமாறு தவம் செய்த ஸ்தலம் என்று ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. தனக்கு பிள்ளை வரம் வேண்டி தசரதன் பூஜை செய்த இடம் என்றும் வரலாறு சொல்லப்படுகிறது. இங்கு ஒரு பாயசம் கொடுப்பார்களாம், அதை வாங்கி தசரதன் தன் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க அதன் பின் தான் ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்ருகனன் பிறந்தார்களாம்.”
“ம்ம்ம் அதனால் தான் சுவேதாவுக்கு அந்த பாயசம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தீர்களா சென்னையில் இருந்து கிளம்பும் முன், அப்படியானால் சுவேதா ஏன் வரவில்லை?”
“ஆமாம்ப்பா, அதுக்காக சுவேதாவை வர சொன்னோம், ஆனால் பெருமாள் அருளால் அவள் சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுவாள் போல, அதனால் தான் பயணம் செய்ய வேண்டாம் என்று நானும் சகுந்தலாவும் அவளிடம் சொல்லிவிட்டோம்”
“ஓ நல்லது, வேண்டுமானால் நாம் அந்த பாயசத்தை வாங்கி சென்று கொடுத்தால் என்ன?”
“இல்லப்பா, அப்படி வாங்கிக்கிட்டு போக முடியாதாம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து ஜெகன்னாத பெருமாளையும் பத்மாசினி தாயாரையும் வணங்கி விட்டு காலை 11 மணிக்குள் பாயசம் கொடுக்கும் இடத்திற்கு சென்று உட்கார்ந்து விட வேண்டுமாம், ஐயர் எல்லோருக்காகவும் வேண்டி கொண்டு டம்ளரில் கொடுப்பாராம், பாயசத்தை குடித்து விட்டு அவரிடம் டம்ளரை திருப்பி கொடுத்து விட வேண்டுமாம், எதுவாகினும் சுவேதாவிற்காக நாம் தான் வேண்டிக்கொள்கிறோமே, இந்த முறை அவளுக்கு உறுதியாகி நல்லபடியாக குழந்தை பிறக்கட்டும், அதன் பிறகு அவள் குழந்தையுடன் வந்து தரிசனம் செய்யட்டும், அந்த பெருமாள் அருள் புரியட்டும்”
“ம்ம்ம் சரி தான் மா”
கோயிலில் தரிசனம் முடிந்து அந்த மாலை பொழுதில் எல்லோரும் கோயிலை சுற்றி அந்த ஊரில் ஒரு நடை போய் வரலாம் என்று நடந்தார்கள். இளையவர்கள் ஒன்றாக நடக்க ப்ரீத்தி நந்தனுடன் பேசிக்கொண்டே பின் தங்கினாள்.
“என்ன ப்ரீத்தி? மெதுவா நடக்குற? Tired ஆ இருக்கியா?”
“ஆமாம் அத்தான் கொஞ்சம் tired ஆ இருக்கு” என்று சொல்லிவிட்டு ஒரு சிறு அமைதிக்கு பின் “அத்தான் நீங்கள் அடிக்கடி இப்படி வேட்டி கட்ட வேண்டும்” என்றாள் ப்ரீத்தி.
நந்தனுக்கு ப்ரீத்தி ஏன் மெதுவாக நடந்து தன்னையும் பின் தங்க வைத்தாள் என்று இப்போது புரிந்தது. அவன் எதுவும் பதில் சொல்லவில்லை.
ப்ரீத்தியே மீண்டும் பேசினாள்.
“ஏன் அத்தான், நீங்கள் யாரையாவது லவ் பண்றீங்களா?”
“ஹாஹா என்ன ப்ரீத்தி, இந்த கேள்வியை நீயும் எத்தனையோ முறை கேட்டுவிட்டாய், நானும் பல முறை பதில் சொல்லிவிட்டேன்”
“சொல்லுங்க அத்தான், காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது இல்லையா? நான் கேட்ட மறுநாளே கூட நீங்கள் ஒரு பெண்ணை சந்தித்திருக்கலாம், லவ் வந்திருக்கலாம்”
நந்தன் புன்னகைத்து விட்டு சொன்னான். “எனக்கு அப்படி லவ் எதுவும் இன்னும் வரவில்லை, இனிமேலும் வரும் என்று தோன்றவில்லை”
“Never say never அத்தான், எது எப்போது எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, இது முடியவே முடியாது, நடக்கவே நடக்காது என்று நாம் சொல்லும் பல விஷயங்கள் நேரம் காலம் மாறும் போது அவைகளும் மாறி நடந்து விடும்”
“உண்மை தான் ப்ரீத்தி”
“லவ் இல்லை என்று சொல்கிறீர்கள்.... ஆனால்....” ப்ரீத்தி தயங்கினாள்.
நந்தன் கேள்விக்குறியுடன் அவளை நோக்கினான். “ஏதோ கேட்க வேண்டும் நினைக்கிறாய், அப்புறம் என்ன தயக்கம்? கேட்டுவிடு”
“இல்லை.....அது வந்து......லவ் இல்லை, எனக்கு லவ் எல்லாம் வராது என்கிறீர்கள், ஆனால் நீங்கள் சில பெண்களுடன்........சில பெண்களுடன் சுற்றுகிறீர்கள் என்று கிரிஷ், பிரவீன் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள், அது உண்மையா? அது என்ன மாதிரியான உறவு அத்தான்?”
நந்தன் மீண்டும் புன்னகைத்தான், ஆனால் பதில் சொல்லவில்லை.
“சொல்லுங்க அத்தான், அவங்க சொல்றதெல்லாம் உண்மை தானா? உண்மை என்றால் லவ் செய்யாத பெண்ணுடன் நீங்கள் ஏன் சுற்றுகிறீர்கள்?” என்றாள் தலையை நிமிர்த்தாமல்.
“ப்ரீத்தி நீ சின்ன பெண், இதெல்லாம் உனக்கு புரியாது, உனக்கு தேவை இல்லாத விஷயங்களும் கூட, என்னை பற்றி சிந்திப்பதை விட்டு நீ உன் படிப்பில் கவனத்தை செலுத்து” என்று கொஞ்சம் தீர்க்கமான குரலிலேயே சொல்லவும் ப்ரீத்தி பயந்துவிட்டாள். “அத்தான் கோச்சிக்கிட்டாரோ? என்மேல கோவமா? வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம அவர கஷ்டப்படுத்திட்டனோ?” என்று ப்ரீத்தி கலக்கமுற்றாள்.
நந்தன் அவளின் குனிந்த தலையையும், கலக்கமுற்ற முகத்தையும் பார்த்து விட்டு பேசினான். “இப்படி நேருக்கு நேராக கேள்வி கேட்பது என்னை பொறுத்த மட்டில் நல்ல விஷயம் ப்ரீத்தி, என்னை பற்றி என் முதுகுக்கு பின்னால் புறம் பேசி கற்பனை செய்து கொள்ளாமல் நேராக கேட்கிறாயே, அது பாராட்டப்பட வேண்டிய விஷயம், இதனால் எனக்கு உன்மீது கோபமோ, வருத்தமோ இல்லை, மதிப்பு தான் வருகிறது. நெருங்கிய உறவினர்கள் என்ற முறையில் உனக்கு என்னிடம் கேள்வி கேட்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் சில விஷயங்களை என்னால் எல்லோரிடமும் திறந்து பேச முடியாது, என் தனிப்பட்ட விஷயங்களை என்னுடன் மட்டுமே வைத்து கொள்ள எனக்கும் உரிமை இருக்கிறது, அதை புரிந்து கொண்டு என் உரிமையை நீயும் மதிப்பாய் என்று நினைக்கிறேன்?” என்ற கேள்வியுடன் நின்று ப்ரீத்தியை திரும்பி பார்த்தான்.
“கண்டிப்பாக மதிக்கிறேன் அத்தான், நான் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்”
“மன்னிப்பு எல்லாம் வேண்டாம், நீ எப்போதும் போல் துறுதுருவென்று வளையம் வந்தால் போதும் முகத்தை சோகமாக வைத்து கொள்ளாமல்” என்று புன்னகைத்தான்.
ப்ரீத்தியும் கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்.
இன்னொரு முறை ராமேஸ்வரம் செல்லலாம் என்று அனைவரும் வற்புறுத்தியும் ராமலிங்கம் பிடிவாதமாக செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். கல்யாண வேலைகள் ஒரு பக்கம், நந்தனின் அலுவலக வேலைகள் ஒரு பக்கம் என்றிருக்க இது என்ன தாத்தாவோட வம்பா போச்சே என்று அனைவரும் சோர்ந்திருந்தனர். நந்தன் கொஞ்சம் யோசனைக்கு பின் தான் தாத்தாவுடன் ஒரு கார் வைத்து ராமேஸ்வரம் அழைத்து செல்வதாகவும், மற்ற அனைவரையும் வேனில் சென்னைக்கு திரும்பும் படியும் ஆலோசனை கூறினான்.
“ஆனால் உன் அலுவலக வேலைகள்?” என்றார் சத்தியமூர்த்தி.
“ரோஹித் பார்த்து கொள்வான், அம்பத்தூர் கிளையை மது பார்த்து கொள்வாள், இரண்டு நாட்கள் தானே, ரோஹித் உனக்கு ஒன்றும் சிரமம் இல்லையே?”
“எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை நந்தா”
“அப்போ சரி நீங்க எல்லாம் சென்னைக்கு கிளம்புங்க, நாங்க ராமேஸ்வரம் போய்ட்டு வரோம்” என்றான் நந்தன்.
அவன் ஆலோசனைப்படியே அனைவரும் சென்னை புறப்பட்டனர். நந்தன், ராமலிங்கம், கண்ணப்பன் மூவரும் வாடகைக்கு பிடித்த காரில் ராமேஸ்வரம் புறப்பட்டனர். நந்தன் மதுவுக்கு கால் செய்தான்.
“ஹலோ மது, sorry Sunday அன்னைக்கு கால் பண்ணிட்டேன்”
“பரவால்ல sir, சொல்லுங்க, anything urgent?”
“Nothing urgent, நான் ஆபீஸ்க்கு Thursday தான் வருவேன், ரோஹித் important matters எல்லாம் பாத்துப்பான், அம்பத்தூர் branch உங்களுக்கு தான் பரீட்சையம், அதோட affairs எல்லாம் நீங்க deal பண்ணிப்பீங்க இல்லையா? ஏதாவது issue னா, just call me”
“sure sir, no problem”
“thank you, will see you on Thursday”
“sure sir, thanks”
நந்தன் மொபைலை வைத்து விட்டு தாத்தாவை பார்த்தான்.
“தாத்தா ஒன்னும் அசவுகரியமா இல்லையே?”
“அதெல்லாம் ஒரு அசவுகரியமும் இல்லப்பா”
தாத்தா கொஞ்ச நேரம் நந்தனை பார்த்தார்.
“என்ன தாத்தா, ஏன் அப்படி பாக்குறீங்க?”
“ஒன்னும் இல்லப்பா, நீ பார்க்க உன் அப்பா மாதிரி உயரமாக அடர்ந்த கேசம், கண்களில் ஒரு சிரிப்பு, வசீகரம் என அத்தனையும் உன் அப்பன மாதிரி தான். உன் அப்பாவும் இப்படி தான் என்மேல் அக்கறையாக இருப்பான், என்ன நேரமோ? யாரோ ஒரு பெண்ணை திடீரென்று திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான், காதல் அது இது என்று, நம் குடும்பத்தில் அது தான் முதல் முறை, ஜாதி சடங்கு சம்பிராதாயம் பார்க்காமல் பெரியவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல், கோபத்தில் உன் அம்மா, அப்பாவை வாசலிலேயே நிறுத்தி சபித்து அனுப்பி விட்டேன், ரோஷத்தோட போய்ட்டான், அதுக்கப்புறம் அவன் எங்க இருக்கான், எப்படி இருக்கான்னு ஒரு தகவலும் இல்லை, நீ தான் கிடைச்ச, சத்தியமூர்த்தி கூப்டுட்டு வந்தான், உன் அம்மாவும் அப்பாவும் இறந்துட்டதா நீயும் சத்தியமூர்த்தியும் சொன்னீங்க, ஆனா எப்படி இறந்தாங்கன்னு எதுவுமே சத்தியமூர்த்தி சொல்லல, அத பத்தி பேசினா நந்தன் வருத்தப்படுவான், பேச வேண்டாம் என்றான். ஆனால் என் மகனுக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளாமல் என்னால் எப்படி இருக்க முடியும், சத்தியமூர்த்தியை தனியாக அழைத்து பல முறை விசாரிப்பேன், ஒரு நாள் சொன்னான், ஏதோ சொந்தமாக தொழில் செய்ய கடன் வாங்கி தொழிலில் நஷ்டம் அடைந்து கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று. இவ்வளவு வசதி இருந்தும் என் மகன், மருமகள் கடன் தொல்லையால் தற்கொலையா? எல்லாமே என்னால் தான், நான் அவனை திட்டி, சாபம் விட்டதால் தான் என்று மனம் உடைந்து விட்டேன். என் மகள் கவிதாவும் காதலித்து ஓடிவிட்டாள், வீட்டிற்கு வந்தால் தானே சாபம் விடுவாய் என்று வீட்டிற்கு கூட வரவில்லை, எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று அவ்வப்போது நினைத்து பார்ப்பேன், என் மகன், மருமகள் போல் அவளும் போய் சேர்ந்திருப்பாளோ என்று பயப்படுவேன், ஆனால் அவளும் மாரடைப்பில் போய்விட்டாள். எல்லாமே என்னோட பிடிவாத குணத்தால் ஏற்பட்ட இழப்புகள் தான். பெத்த தகப்பன் குத்துகல்லாட்டம் உட்கார்ந்து அவர்களை விழுங்கி விட்டேன் என்று கண்கலங்கினார்.
நந்தனுக்கும் தன் தாய், தந்தையை நினைத்து கண்கலங்கியது. “அம்மா அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் தாத்தா இன்னும் உடைந்து விடுவார், உயிரையே கூட விட்டு விடுவார், அவருக்கு அது தெரியாமலயே இருக்கட்டும், அத்தையும் பாவம், கமலா அம்மா அத்தையை தன் மகள் போல எவ்வளவு செல்லமாக வளர்த்ததாக சொல்வார்கள், கடைசியில் கேட்பாரற்று அனாதை போல போய்விட்டார்கள், குறைந்த பட்சம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குங்களாவது செய்ய முடிந்தது.”
“தாத்தா இப்போது இதை எல்லாம் நினைத்து ஏன் உடல் நலனை கெடுத்து கொள்கிறீர்கள்?”
“இல்லப்பா ஏனோ தெரியல, எல்லாமே மனசுல ஓடிட்டே இருந்துச்சு, இன்னைக்கு உன்கிட்ட புலம்புறேன், அவ்வளவு தான், ஏன் நந்தா, நீ யாராவது பெண்ணை விரும்பினாலும் பரவாயில்லை, நாங்கள் முழு மனதாக சம்மதிக்கிறோம், திருமணம் செய்து கொள்ளப்பா”
“தாத்தா நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா?”
“ஏதோ நப்பாசையில் கேட்டேனப்பா” என்றார் விரக்தியாக.
நந்தனுக்கு சங்கடமாகி விட்டது.
“தாத்தா இது வரை எந்த பெண்ணிடமும் எனக்கு காதல் என்ற ஒன்றோ, திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ தோன்றியதில்லை. எதிர்காலத்தில் எந்த பெண்ணிடமாவது அப்படி ஒரு எண்ணம் தோன்றினால் சிறிதும் தாமதிக்காமல் திருமணம் செய்து கொள்கிறேன், போதுமா?”
“ம்ம்க்கும் இன்னும் ஒரு வருடம் கழித்து கேட்டாலும் எந்த பெண்ணிடமும் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை என்று சொல்வாய், போ டா” என்று செல்லமாக கோபித்து கொண்டார் ராமலிங்கம்.
“தாத்தா பாருங்கள் உங்களுக்கே நம்பிக்கை இல்லை, பிறகு ஏன் இதற்கெல்லாம் ஆசைப்படுகிறீர்கள்?” என்றான் நந்தன் கிண்டலாக.
தாத்தா முகத்தை திருப்பி கொண்டார். நந்தன் ஒரு புன்னகையுடன் “தாத்தா தாத்தா நீங்கள் கோபித்து கொள்ளும் போது அழகாக இருக்கிறீர்கள்” என்று அணைத்து கொண்டான்.
“போ டா, என்னை இறுக்கி அணைத்து எலும்புகளை உடைத்து விடாதே, விடு என்னை, விடு” என்று விரட்டினார்.
“விட மாட்டேன் தாத்தா, விட மாட்டேன்” என்று மேலும் இறுக்கி அணைத்து கொண்டான்.
“கண்ணப்பா, காப்பாத்து இந்த பொல்லாதவனிடம் இருந்து” என்று தாத்தா விளையாட்டாக கத்தினார்.
டிரைவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணப்பன் சிரித்து கொண்டே “மன்னித்து விடுங்கள் அய்யா, தாத்தா பேரனுக்கு நடுவில் நான் வரமாட்டேன்” என்றார்.
“பார்த்தீர்களா தாத்தா, உங்களை காப்பாற்ற நான் மட்டுமே உள்ளேன்” என்றான் நந்தன் சிரித்து கொண்டே.
“விடு டா, உனக்கு ஒரு பெண்ணிடம் காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்து திருமணம் என்று ஒன்று நடந்தால் அந்த பெண் பாவம் தான்” என்றார் தாத்தா.
“ஏன் தாத்தா அப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் கூட என்னை நல்லவன் என்று நம்பவில்லையா?” என்றான் முகத்தை சோகமாக வைத்தபடி.
“நல்லவன் தான், ஆனால் இப்படி இறுக்கி அணைத்தால் அந்த பெண் பாவம் தானே?” என்று சிரித்தார்.
“தாத்தா இந்த வயதில் உங்களுக்கு இந்த கிண்டல் எல்லாம் தேவையா?” என்று நந்தன் செல்லமாக கோபித்து கொண்டான்.
“என் அருமை பேராண்டி, உன்னை கட்டிக்கொள்ள எவள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறாளோ? எவ்வளவு சோகமாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் அந்த சூழலை மாற்றி சிரிக்க வைத்து விடுவாய்” என்றார் நந்தனை அணைத்தபடி.
Comments
Post a Comment