Sms ch3 சேற்றில் முளைத்த செந்தாமரையோ

அத்தியாயம் 3

நந்தன் காரை அவர்கள் வழக்கமாக செல்லும் ஒரு ரெஸ்டாரண்ட் முன் நிறுத்தினான். மூவரும் உள்ளே செல்லவும் ஒரு வெயிட்டர் எதிர்கொண்டு வரவேற்றார்.


“வாங்க சார், வணக்கம், என்ன கொஞ்ச நாளா இந்த பக்கம் உங்கள காணும்?” என்றார்.


“சுகர் பேஷண்ட், ஹோட்டல் போனால் ஸ்வீட் கேட்பேன் என்றே என்னை வெளியே செல்ல விடமாட்டேன் என்கிறார்கள்.” போலியாக அங்கலாய்த்து கொண்டார் சத்தியமூர்த்தி.


“அதனால என்ன சார், ஸ்வீட் இல்லாமல் நல்ல டிபன் சாப்பிட்டால் ஆச்சு”


“அட நீ வேற பா, போ போய் முதலில் என்னோட favourite குளோப் ஜாமுன், ராஸ்மலாய் எல்லாம் கொண்டு வா” என்று அந்த வெயிட்டரை விரட்டினார்.


இவர்களை அமர வைத்து கையில் மெனு கார்டு கொடுத்து விட்டு “இதோ வந்து விடுகிறேன் சார்” என்று விடை பெற்றான் அந்த வெயிட்டர்.


“தருண் உனக்கு என்ன ஸ்வீட் வேண்டும் சொல்லு” என்றார் சத்தியமூர்த்தி.


“எனக்கு ஒன்னும் வேண்டாம் தாத்தா”

சத்தியமூர்த்திக்கு வியப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது தாத்தா என்று அவன் அழைத்ததும்.


“ஏன் பா வேண்டாம் என்கிறாய்? சரி ஸ்வீட் வேண்டாம், வேறு என்ன சாப்பிடுகிறாய்? இங்கே பார், எல்லாமே கிடைக்கும், இட்லி, தோசை, இடியாப்பம், என்ன வேண்டுமோ சொல்” என்று மெனு கார்டை காண்பித்து கொண்டே கேட்டார் சத்தியமூர்த்தி.


“இல்லை தாத்தா, இது எதுவுமே எனக்கு வேண்டாம்”

குறுக்கிடாமல் மெனு கார்டு காண்பது போல் நந்தன் நடித்தாலும் சத்தியமூர்த்தி, தருணின் மீது தான் அவன் கவனம் முழுவதும் இருந்தது.


“இது எதுவுமே வேண்டாம்” என்று தருண் சொல்வதை கேட்டு நிமிர்ந்தவன் ஒரு முறை தருணை உற்று நோக்கி விட்டு மௌனத்தை கலைத்தான்.


“இது எதுவும் வேண்டாம் என்றால் pizza, burger, noodles போன்று ஏதாவது சாப்பிடுகிறாயா?”


“ம்ஹ்ம்ம் எனக்கு வேண்டாம்”


“உன்னை வலுக்கட்டாயமாக கூட்டி வந்துவிட்டோம் என்று கோபமா?”


“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல அங்கிள், காலைல அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு சாப்பிடாம வந்துட்டேன், லஞ்ச்யும் வீட்டுலயே வச்சுட்டு வந்துட்டேன், அம்மா அப்புறமா ஸ்கூல் வாட்ச்மன் அங்கிள் கிட்ட குடுத்துட்டு போயிருக்காங்க”


“ஓ அதனால் என்ன? அத நினச்சு கஷ்டமா இருக்கா? அதான் சாப்பிட மாட்டேன் என்கிறாயா?”


“ஆமாம் அங்கிள், கஷ்டமா இருக்கு, ஆனா அதனால மட்டும் சாப்பிட மாட்டேன்னு சொல்லல”


“பிறகு? வேறு என்ன?”


“நேத்து நைட் நான் தான உங்கள எங்க வீட்டுல இருக்க சொன்னேன், காலைல என்கூட bye கூட சொல்லாம கிளம்பிட்டீங்களே, அது தப்பு தான? இதை கேக்க போய் தான் அம்மா கூடயும் சண்டை” என்று நந்தனை குற்றம் சாட்டினான் தருண்.


நந்தன் இப்போது தருணை சமாளிப்பதா? இல்லை என்றால் நேற்று இரவு இவர்கள் வீட்டில் தங்கினாயா என்று ஆயிரம் கேள்விகள் நிறைந்த துளைத்தெடுக்கும் பார்வையில் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தன் தந்தையை சமாளிப்பதா? என்று ஒரு நிமிடம் தடுமாறினான்.


“தருண் காலையில் உன்னை எழுப்ப மனமில்லை. நேற்று இரவு தான் உன்னையும் உன் தாயையும் முதல் முறை சந்தித்தேன், உங்களை ஒரு ரவுடியிடம் இருந்து பாதுகாக்க உன் விருப்பப்படி உன் வீட்டில் தங்கினேன், ஆனால் காலையில் என் அலுவலகம் செல்ல வேண்டும் என்று நீ எந்திரிக்கும் வரை காத்திருக்க முடியாமல் புறப்பட்டு விட்டேன், உன்னிடம் சொல்லாமல் சென்றதுக்கு சாரி, சரியா?”


“பரவாயில்லை அங்கிள்”


“இப்போது உனக்கு பிடித்ததை ஆர்டர் செய்யலாமா?”


“ஆனா ஒரு கண்டிஷன்”


தருணுக்கு பதில் சொல்வது போல் நமக்கும் புரிய வைத்து விட்டானே, உள்ளுக்குள் இன்னும் சில கேள்விகள் இருந்தாலும் நந்தனின் சாமர்த்தியத்தை மெச்சி கொண்டிருந்த சத்தியமூர்த்தி கண்டிஷன் என்பதை கேட்டு நிமிர்ந்தார்.


“கண்டிஷனா? அது என்ன?” என்றார் சத்தியமூர்த்தி. 


“நீங்க நான் குடுக்குற இட்லிய சாப்பிடணும், அப்போ தான் நீங்க வாங்கி தரர்த நான் சாப்பிடுவேன்” என்றான் தருண்.


சத்தியமூர்த்தியும் நந்தனும் ஒருவரை ஒருவர் புருவம் நிமிர புன்னகையுடன் பார்த்து வியந்தார்கள்.


“ஆனால் நீ இட்லி சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னாயே?” என்றான் நந்தன்.


“அம்மா நெறைய குடுத்தாங்க. அது எல்லாத்தையும் என்னால சாப்பிட முடியல. இன்னும் ரெண்டு இட்லி இருக்கு. நீங்க ஒன்னு, தாத்தா ஒன்னு சாப்பிடுங்க” என்று தருண் டிபன் பாக்சை திறந்து குடுத்தான். இருவரும் ஒரு புன்னகை செய்துவிட்டு சாப்பிட்டார்கள். 


“சரி இப்போ சொல்லு, நீ என்ன சாப்பிடுகிறாய்?”


“நான் இடியாப்பம் சாப்பிடுறேன் அங்கிள்” என்றான் தருண் உற்சாகத்துடன்.


சத்தியமூர்த்தி இட்லி, வடை, குலாப் ஜாமுன் வாங்கினார். குலாப் ஜாமுனை தருணிடம் கொடுத்து சாப்பிட சொல்லி ரசித்தார். நந்தன் தோசையும், தந்தைக்காக அவருக்கு பிடித்த ராஸ்மலாயும் ஆர்டர் செய்து அதை அனைவரும் பகிர்ந்து உண்டார்கள்.

தருணை அவன் வீட்டில் விட்டுவிட்டு ஜவுளிக்கடைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து முதலில் தருண் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் நந்தன்.


“உன் அம்மா, அப்பா பேர் என்ன, அப்பா என்ன work பண்றாரு தருண்?” கேட்டார் சத்தியமூர்த்தி.


“அப்பா பேரு கவுஷிக், அம்மா பேரு சத்யா, அப்பா எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போதே சாமிகிட்ட போய்ட்டாராம்” என்றான் தருண் பெரிதாக உணர்ச்சி ஏதுமின்றி.


“ஓ..” என்பதுடன் அந்த பேச்சை முடித்து கொண்டார் அவர்.


“நீ எந்த கிளாஸ் படிக்குற தருண்? எந்த ஸ்கூல்?” கேட்டான் நந்தன்.


“நான் சென்னை தொடக்கப்பள்ளியில இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் அங்கிள்”


“எங்க இருக்கு அந்த ஸ்கூல்?”


“நெல்சன் மாணிக்கம் ரோட்ல தான் அங்கிள்”


“சரி அம்மா work பண்றாங்களா?”


“ஆமாம் அங்கிள்”


“எங்க?”


“S&N அம்பத்தூர் ல work பண்றாங்க”

சத்தியமூர்த்தியும் நந்தனும் ஒரு பார்வை பார்த்து கொண்டார்கள்.


தருணின் வீடு நெருங்கும் வேளையில் தருண் “அங்கிள் என்னை இங்கயே இறக்கி விட்டுடுங்க, உங்ககூட வரர்த பாத்தா அம்மா திட்டுவாங்க” என்றான்.


“தருண் கவலைப்படாதே, அம்மாவிற்கு தெரிந்தால் அவர்களிடம் நான் பேசிக்கொள்கிறேன், அவர்களுக்கு தெரியாமல் செய்தது போல் ஆக வேண்டாம்” என்றான் நந்தன்.

வீட்டின் வாசலிலேயே தருணின் தாய் சத்யா நின்று கொண்டிருந்தாள்.


“அப்பா ஒரு நிமிஷம் காரில் இருங்கள், தருணை அவன் தாயிடம் விட்டுவிட்டு வருகிறேன்” என்றான் தருண்.


நந்தன் தருணின் கையை பிடித்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். சத்யாவின் முகத்தில் கோபம் கொந்தளித்தது.


“தருண் என்ன இது?” என்று தருணுக்கு நேராக முட்டி போட்டு அவன் இரண்டு கைகளையும் பிடித்து கோபமாக உலுக்கினாள்.


“ஒரு நிமிஷம்” என்ற நந்தன் தருணை அவள் பிடியிலிருந்து விடுவித்து “தருண் நீ உள்ள போய் யூனிபோர்ம் கழட்டிவிட்டு வேறு டிரஸ் போட்டுக்கிட்டு கை கால் எல்லாம் கழுவிட்டு வா” என்றான்.

தருண் அவன் தாயை பயத்துடன் பார்த்தான்.


“அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன், நீ போ தருண்” என்றான் நந்தன்.

தருண் பயத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.


“சாரி நானும் அப்பாவும் சென்று கொண்டிருக்கும் போது வழியில் தருணை பார்த்தேன், அவனையும் எங்களோடு அழைத்து கொண்டு போய் டிபன் சாப்பிட்டோம், நீங்கள் திட்டுவீர்கள் என்று தருண் மறுக்க தான் செய்தான், ஆனால் நாங்கள் தான் அவனை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று சாப்பிட வைத்தோம், ஏதாவது கோபப் பட வேண்டுமென்றால் என்னிடம் கோபப்படுங்கள், தருணை மன்னித்து விடுங்கள்” என்று நந்தன் தன்மையாக பேசி மன்னிப்பு கேட்டான்.


“இப்படி தெரியாத ஒருவருடன் சென்று உண்பதை நான் கண்டிக்காமல் மன்னித்து விட்டால் நாளை வேறு ஒருவரை இப்படி நம்பி சென்று அவர் மூலமாக அவனுக்கு ஆபத்து ஏற்படலாம் அல்லவா?” என்று நேருக்கு நேராக தீர்க்கமும் அமைதியும் நிறைந்த குரலில் கேட்டாள்.


“நியாயமான கேள்விதான், தருணிடம் சொல்லுங்கள், நந்தன் அங்கிள் நல்லவர், அவரை நம்பலாம், அவரை நம்பி காரில் ஏறலாம், ஹோட்டல் செல்லலாம், சாப்பிடலாம், ஆனால் வேறு யாரையும் இப்படி நம்பக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி விடுங்கள்” என்று சத்யாவின் கோபம் நிறைந்த பார்வையை அலட்சியப்படுத்தி புன்னகைத்தான்.


தருண் வெளியே வந்தான். “தருண் அம்மாவிடம் சொல்லிவிட்டேன், அவர்களும் புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் உன்னிடம் கொஞ்சம் கண்டிப்புடன் இருப்பார்கள், அதற்காக நீ வருத்தப்பட கூடாது, சரியா? இது என்னோட மொபைல் நம்பர் உனக்கோ இல்லை அம்மாவுக்கோ ஏதாவது பிரச்னை என்றால் தயங்காமல் எனக்கு call பண்ணு சரியா? இப்போ நான் கிளம்புறேன், போய்ட்டுவரேன் சத்யா, தருணிடம் கோபப்படாதீர்கள், bye தருண்” என்று வேகமாக நடந்து காரில் பறந்தேவிட்டான் நந்தன்.


சத்யா கொஞ்ச நேரம் கோபத்தினாலோ வேறு எதனாலோ ஒன்றும் புரியாமல் அங்கேயே அசையாமல் நின்றாள்.


தருணும் அவளை பார்த்துவிட்டு நம்மை திட்டுவதற்குள் நாம் வீட்டிற்குள் சென்று விடலாம் என்று வீட்டினுள் சென்று ஹோம் ஒர்க் செய்ய ஆரம்பித்தான்.


சத்யா உள்ளே வந்து ஹோம் ஒர்க் செய்யும் தருணை ஒரு சில நிமிடங்கள் பார்த்து விட்டு நிதானமாகவே பேச ஆரம்பித்தாள்.


“தருண் இப்படி முன்னபின்ன தெரியாதவங்க கூட எங்கயும் போகவோ, சாப்பிடவோ கூடாதுன்னு சொல்லிருக்கேன் இல்லையா? பிறகு ஏன் இப்படி செய்தாய்? இப்போதெல்லாம் அம்மா பேச்சை நீ கேட்பதே இல்லை” என்று சோகமானாள்.


“சாரி மா, நான் வரலன்னு தான் சொன்னேன்  ஆனா நந்தன் அங்கிள் அவங்க அப்பாகிட்ட சொல்லி என்னை உள்ள இழுத்து உக்கார வச்சுக்கிட்டாங்க. எனக்கு என்னவோ அந்த அங்கிள பிடிச்சிருக்கு. அதனால நானும் கத்தலை. சாரி மா, நீ feel பண்ணாத, ப்ளீஸ் மா” என்று தருண் கெஞ்சினான்.


சத்யா சமாதானம் ஆனாள். “சரி யாரெல்லாம் ஹோட்டல் போனீர்கள்?”

“நான், நந்தன் அங்கிள், அங்கிளோட அப்பா”


“ஓஹோ, சரி என்ன சாப்பிட்டீர்கள்? என்ன பேசினீர்கள்?”


“எனக்கு பிடித்ததை ஆர்டர் பண்ண சொன்னார்கள், நீங்கள் இட்லி சாப்பிட்டால் நானும் நீங்கள் வாங்கி தருவதை சாப்பிடுகிறேன் என்று சொன்னேன்.”


“சமத்து, அது சரி, அப்படியானால் நீ இன்று முழுவதும் இட்லி சாப்பிடவில்லையா?”


“சாப்பிட்டேன் மா, ஆனா நெறைய குடுத்துட்ட, ரெண்டு மீந்து போச்சு, அதில ஒன்ன அந்த தாத்தாவுக்கும், இன்னொன்ன அங்கிளுக்கும் சாப்பிட குடுத்தேன்”


“சாப்பிட்டார்களா?”


“ம்ம் சாப்டாங்க, சாப்டுட்டு தக்காளி சட்னி சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க”


“சரி நீ என்ன சாப்பிட்ட?”


“நான் இடியாப்பம் சாப்பிட்டேன் மா” என்றான் குதூகலமாக.


“உனக்கு நான் இடியாப்பம் செய்து தருவதே இல்லை” என்று சத்யா முகம் வாடினாள்.


“பரவால்ல மா, உனக்கு டைம் கிடைச்சா செஞ்சு குடுத்துருப்ப இல்ல, பரவால்ல”


“ஹ்ம்ம் சரி வேறு என்ன பேசினீர்கள்?”


“உன் அம்மா, அப்பா பேர் என்ன, அப்பா என்ன ஒர்க் பண்றாங்கன்னு கேட்டாங்க”


“கேட்டது யார்?”


“அந்த தாத்தா தான் மா”


“நீ என்ன சொன்ன?”


“உன் பேரும் அப்பா பேரும் சொன்னேன், அப்பா சாமிகிட்ட போய்ட்டாருன்னு சொன்னேன், அப்புறம் நீ ஒர்க் பண்றத பத்தி கேட்டாங்க, என் ஸ்கூல் பத்தி கேட்டாங்க” என்று அனைத்தையும் ஒப்பித்தான் தருண் ஏதோ படம் வரைத்து கொண்டே.


“எல்லாத்துக்கும் கரெக்டா பதில் சொல்லிட்டியா?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்டாள். 


அவள் கோபத்தை கவனியாமல் படத்தை வரைந்து கொண்டே “ம்ம்ம் எல்லாத்துக்கும் கரெக்டா பதில் சொல்லிட்டேன் மா” என்றான் தருண்.


கோபத்துடன் அவனை கண்டிக்க வேண்டும் என்று வந்த வேகத்தை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு “சரி இப்போ சாப்பிட வரியா? இல்ல அங்க சாப்பிட்டதே வயிறு fulla இருக்கா?” என்று கேட்டாள்.


“இல்ல மா, எனக்கு எதுவும் வேண்டாம்”


கோபமாக அங்கே இருந்து சென்று அடுப்படியில் ஏதாவது சமைக்கலாமா என்று யோசித்துவிட்டு எதுவும் செய்ய தோன்றாமல் போய் படுத்துக்கொண்டாள்.


“யார் இவன்? எங்கிருந்து வந்தான்? ஒரே நாளில் எப்படி என் மகனின் மனதில் இடம் பிடித்தான்? ஒரு வேளை ரொம்ப நாளாவே நம்மளயும் நம்ம பையனையும் follow பண்ணிட்டு இருந்திருப்பானோ? தருணுக்கு என்ன பிடிக்கும்? தருணிடம் எப்படி நடந்து கொண்டால் அவனுக்கு பிடிக்கும் என்றெல்லாம் நோட்டம் விட்டு கண்டுபிடித்து இருப்பானோ? ஒரு வேளை.... ஒரு வேளை இது அவன் அனுப்பிய ஆளாக இருக்குமோ?” பயத்தில் சத்யாவின் உடல் நடுங்கியது. அந்த ஐப்பசி மாத குளிரிலும் அவள் உடல் வேர்த்து கொட்டியது. சேலை தலைப்பினால் அவள் வேர்வையை துடைத்து கொண்டாள். “ஆனால் அவனுடைய ஆள் என்றால் துரைசாமிக்கு தெரிந்து இருக்க வேண்டுமே. நேற்று இரவு அவர்கள் சந்திப்பு கூட இருவரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் சந்திப்பு மாதிரி இல்லையே தருண் சொன்னதை வைத்து பார்த்தால். ஒரு வேளை அவனுடைய ஆளாக இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அதற்கு இவன் நல்லவன் என்று அர்த்தம் இல்லையே. அவனுடைய அப்பாவோடு இருந்தானாமே. அப்பாவோடு இருந்தால் நல்லவன் என்று அர்த்தமா? அதுவும் இது போன்று அப்பா, அம்மா என்று சொன்னால் அவன் நல்லவன் என்று நம்பிவிட நான் ஒன்றும் பழைய சத்யா இல்லையே. என் அனுபவத்தை பொருத்த வரை இவன் நல்லவன் இல்லை. அப்படியே நல்லவனாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். தருண் அவனுடன் திரும்ப பழக வாய்ப்பு அளிக்க கூடாது” என்று உறுதி பூண்ட பிறகு தான் அவள் மனது அமைதியுற்றது.


தருணை அவன் வீட்டில் விட்டுவிட்டு ஜவுளிக்கடை செல்லும் வழியில் தன் தந்தை விசாரணையை தொடங்குவார் என்று நந்தன் எதிர்பார்த்தான். ஆனால் சத்தியமூர்த்தி எதுவுமே பேசாமல் ஏதோ நினைவில் அமைதியாக வந்தார்.


“அப்பா என்ன ஒரு மாதிரி இருக்கீங்க, என்மேல ஏதாவது கோபமா?”


ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தார். “எதுக்கு பா உன்மேல கோவம்?”


“இல்ல தருணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது உங்களுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்தேன்”


“ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒன்றுமில்லை l”


“அப்பறம் ஏன் ப்பா அமைதியா வரீங்க?”


“தெரியல ப்பா என்னமோ மனசே சரி இல்ல”


நந்தனுக்கு நம்மால் தான் அப்பா வருத்தப்படுகிறார்களோ என்று கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் அவரை மேலும் குடையாமல் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018