Sms ch 7 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 7
சத்தியமூர்த்தி எல்லோரையும் அவசரப்படுத்தினார். “ம்ம் சீக்கிரம் கிளம்புங்க, அங்க எப்படியும் கூட்டம் இருக்கும், நாம சீக்கிரம் போனா தான் மதியத்துக்குள்ள திதி எல்லாம் குடுத்துட்டு திரும்பி வர முடியும், அங்க போய் கடல்ல முங்கி எந்திரிக்கணும், அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ நந்தா”.
“எல்லாம் சரியா எடுத்து வச்சுட்டோம், நீங்க டென்ஷன் ஆகாம கிளம்புங்க” என்றார்கள் கமலா அம்மா.
ஒரு வழியாக எல்லோரும் ஜீயர் மடத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் வந்த வேன் தயாராக இருந்தது. சேதுக்கரை திருபுல்லாணியிலிருந்து 4 கிமீ தொலைவில் இருந்தது. ஒரே சாலை தான், பசுமையாகவும் கிராமப்புறமாகவும் இருந்தது. கடலை நெருங்குவதற்கு அறிகுறியாகி நெடுந்தூரத்திற்கு சாலையின் எதிரே நீல வானத்தை தவிர வேறு எதுவும் கண்ணுக்கு படவில்லை. வலது பக்கம் மட்டும் ஏதோ ஆறு போல் ஒன்று தோன்றியது. கடல் உள்ளே ஆறு போல் வந்திருக்க வேண்டும். கடற்கரையை நெருங்கியதும் தர்ப்பணம் செய்யும் இடத்தில் ஐயரிடம் பேசிவிட்டு சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. நந்தன் தான் திதி கொடுத்தான். ஒவ்வொரு மந்திரமும் சொல்லி முடித்ததும் ஐயர் அதனை தமிழில் விளக்கினார். சர்ப ராஜா முதல் பட்சிகள் வரை அனைத்திடமும் ஐயர் சொல்ல சொல்ல நந்தன் மன்னிப்பு கேட்டான். எந்த ஜென்மத்திலோ நாமோ நமது மூதாதையரோ வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைத்திருக்கலாம், அதன் அழுகுரல் சாபமாகி நமது வம்சத்தை ஆட்டி படைக்கலாம். எல்லாவற்றுக்கும் எங்களை மன்னித்து விடுங்கள் என்று ஐயர் சொல்ல நந்தனும் மன்னிப்பு கேட்டான். எல்லோருக்கும் அந்த ஒரு நிமிடம் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்கள் கலங்கின. எல்லாம் முடிந்து நந்தன் வெள்ளை வேட்டியுடனும், மேலே வெள்ளை துண்டையும் போர்த்திக்கொண்டு ஈரத்தலையுடன் கடலிலிருந்து குடும்பத்தாரை நோக்கி வந்து கொண்டிருந்தான். கமலா அம்மா அவனுக்காக எடுத்து வைத்திருந்த சட்டையை எடுத்து கொடுத்து விட்டு துண்டை வாங்கி தலையை துவட்டினார். “பரவால்ல மா, நான் துவட்டிக்கிறேன்” என்றான் நந்தன்.
“பரவால்லப்பா, ஜலதோஷம் பிடிச்சிட கூடாதுல்ல, நான் துவட்டி விடுறேன்”
சட்டையை அணிந்து கொண்டு நந்தன் கடலை திரும்பி பார்த்தான். இன்று தான் அவன் மனம் நிறைந்திருந்தது. தன் தாய் தந்தைக்கு அவர்கள் நினைவு தினத்தன்று வருஷா வருஷம் வீட்டில் படைப்பார்கள், ஆனால் இப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும், அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று நந்தன் எத்தனையோ நாட்கள் நினைத்ததுண்டு, ஆனால் அவர்களை பற்றி அவன் வெளியில் அதிகமாக பேசுவதில்லை என்பதால் இதை பற்றியும் பேசியதில்லை. எல்லோரும் கரையில் கிழக்கு நோக்கி கடலை பார்த்து இருந்த வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று விட்டு கோயிலின் வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அலைகளை ரசித்து கொண்டிருந்தனர். நந்தன் கேட்டான் “அம்மா, அப்பா ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் இல்லையா?” என்று.
கமலா அம்மா “கண்டிப்பாக நந்து, அதுவும் இல்லாமல் இந்த சேதுக்கரையில் வந்து தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் ஆத்மா கண்டிப்பாக சாந்தி அடையும் என்று ஒரு நம்பிக்கை, அந்த ராமச்சந்திர மூர்த்தியே தன் தந்தை தசரதனுக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகள் செய்ய முடியாத நிலை அவர் வனவாசம் சென்று விட்டதால், அந்த பாவத்தை போக்க அவர் இங்கு தான் தன் தந்தை தசரதனுக்கு திதி கொடுத்தாராம்”.
“ஓ ராமர் இங்கு வந்தாரா?” ப்ரீத்தி வியப்புடன் கேட்டாள்.
“என்ன ப்ரீத்தி? ராமர் இங்கு வந்தாரா என்று கேட்டுவிட்டாய்? இங்கிருந்து தான் அவர் இலங்கைக்கு பாலம் கட்டினார் என்று சொல்லப்படுகிறது, அதோ தெரிகிறது பார் மேடு மாதிரி, அது தான் பாலம், படகுகளில் சென்று பார்த்தால் நன்றாக தெரியும், இங்கிருந்து 1 கிமீ தொலைவு தான் இருக்கும்”
“woww interesting பெரியம்மா” என்றான் கிரிஷ்.
“ஆமாம் கிரிஷ், இங்கு தான் இராவணனின் தம்பி விபீஷணன் ராமரிடம் வந்து சரணாகதி அடைந்தாராம், அது மட்டுமில்லை சுனாமி வந்த போது இங்கு கடல் உள்ளே சென்று விட்டதாம், மக்கள் எல்லோரும் நடந்தே சென்று பாலத்தை தொட்டு பார்த்து விட்டு திரும்பினார்களாம்”
“எப்படி பெரியம்மா உங்களுக்கு மட்டும் இவ்ளோ விஷயம் தெரியுது?”
“ஆன்மீக தலம் வந்துவிட்டால் போதுமே, என் மனைவி encyclopedia வை திறந்துவிடுவாள்” என்று கேலி செய்தார் சத்தியமூர்த்தி.
“பாரு நந்து உன் அப்பாவை, என்னை எப்படி கிண்டல் செய்கிறார் என்று” கமலா அம்மா கோபித்து கொண்டார்கள்.
“அப்பா அம்மாவை கிண்டல் செய்யாதீர்கள், அம்மா நீங்கள் சொல்லுங்கள், வேறு என்ன சுவாரஸ்யமான தகவல்கள் வைத்துள்ளீர்கள் இந்த தலத்தை பற்றி?”
“ம்ம்ம் கம்பன் பாடினாராம் கம்பராமாயணத்துல. ராமர் இங்க தர்ப்ப சயன ராமரா படுத்திருந்தாராம், “கருணையங்கடல் கருங்கடலை நோக்கி கிடந்தான்” னு. “அப்படி பட்ட கருணைக்கடலான ராமர்கிட்ட இங்கு தான் விபீஷணனும் சரணாகதி அடைந்தான், சமுத்திரராஜனும் சரணாகதி அடைந்தான், இங்கு ராமரை சரணாகதி அடைந்தால் நம் பாவம் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் பாவமும் காணாம போகும்னு நம்பிக்கை, ராமர் சீதையை மீட்டு கொண்டு வரும் போது இந்த இடத்தை சீதா தேவிக்கு காண்பித்தாராம் இங்கிருந்து தான் உன்னை மீட்க பாலம் கட்ட ஆரம்பித்தோம், விபீஷணனும் வந்தான்னு எல்லாம் காண்பித்து கொண்டே அழைத்து சென்றாராம், சீதா தேவியும் இந்த இடத்தை ஆர்வதோடு பார்த்து ரசித்து வந்தார்களாம்”.
“ஆனாலும் ராமர்னு சொன்னாலே அவர் சீதா தேவியை சந்தேக பட்டது தான் ஞாபகத்துக்கு வருது” என்றாள் ப்ரீத்தி.
“சீதா தேவி இருந்த இடமும் சூழலும் அப்படி, சந்தேகம் வருவது இயல்பு தானே” என்றான் கிரிஷ்.
“அப்படியே அடிச்சேன்னா தெரியும், அதிகப்பரசங்கி மாதிரி பேசாதே, இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம், ஆனால் பேசும் வார்த்தைகளில் கவனம் இல்லை, ஒரு பெண் இருக்கும் இடத்தையும் சூழலையும் மட்டுமே வைத்து சந்தேகிப்பது தவறு” என்று சகுந்தலா கிரிஷை கண்டித்தாள்.
“விடு சகுந்தலா, சின்ன பையன் தானே, கடவுள் அவதார புருஷராக பூமியில் பிறக்கும் போது மனிதர்களுக்கு அவர்கள் வழியிலேயே சோதனைகளை வைத்து பாடங்களை சொல்லி கொடுக்கிறார், சீதா தேவி தூய்மையானவள் என்று அந்த கருணைக்கடலுக்கு தெரியாதா என்ன? ஆனால் சாதாரண மனிதர்களுக்கு புரிய வைக்க சில விஷயங்களை செய்ய வேண்டியதாகிறது” என்றார்கள் கமலா அம்மா.
நந்தன் கடலை பார்த்துக்கொண்டு எல்லாவற்றையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.
“சரி சரி வாங்க கிளம்புவோம்” என்றார் சத்தியமூர்த்தி.
ப்ரீத்தி நந்தனை பார்த்தாள், மனதிற்குள் “இந்த வேட்டி, சட்டை, கொஞ்சம் ஈரம் நிறைந்த கேசம், அத்தான் சும்மா ஜம்முன்னு இருக்காரு, நமக்கு இல்லன்னு தெரிஞ்சும் சைட் அடிக்காம இருக்க முடியல” என்று பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு அனைவரையும் பின்தொடர்ந்தாள்.
அமைந்தகரையில் சத்யா ஒரு தீர்மானத்துடன் இருந்தாள். இன்று அவன் வந்தால் இனி வராத மாதிரி பேசி அனுப்ப வேண்டும் என்று. தருணை கொண்டு போய் சின்னு வீட்டில் விட்டுவிட்டு சின்னுவின் சித்தி வள்ளியுடன் வெளியே வந்தாள். இருவரும் ஒன்றாக வேலைக்கு சென்றார்கள்.
“சத்யா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”
“புதுசா ஒருத்தன் வரானே, அவனை பத்தி தானே?”
“ஆமாம் யார் அவர்? பார்த்தால் பணக்காரராகவும், நல்லவராகவும் தெரிகிறது, ஏதாவது கேட்டால் கோபித்து கொள்வாயோ என்று தான் கேட்பதில்லை”
சத்யா லேசாக புன்னகைத்து விட்டு சொன்னாள். “பேர் நந்தனாம், அன்னைக்கு துரைசாமியோடு போனேன் அல்லவா, தருண் கூட உங்களை உதவிக்கு அழைக்காமல் என்னை தேடிக்கொண்டு வந்து விட்டானே, அன்று தருணை மீட்டு என்னையும் மீட்டு உதவி செய்தவர், தருண் வேண்டுகோளுக்காக அன்றிறவு வீட்டில் தங்கி இருக்கிறார், நான் மயக்கத்தில் இருந்ததால் மறுநாள் காலை தான் புரிந்தது, கொஞ்சம் முகம் கொடுக்காமல் பேசி அனுப்பி விட்டேன், ஆனால் தருணை பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வருகிறார். எனக்கு தெரியாதா சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று “
“ஆமாம் உனக்கு எல்லாம் நல்லா தெரியும்”
“ஏன் அக்கா, ஒரு மாதிரியாக பேசுகிறீர்கள்?”
“பின்ன என்னவாம்? நல்லதுக்கு ஏதாவது சொன்னால் கேட்கிறாயா? அந்த துரைசாமியை விட்டு தொலை என்றால் கேட்கிறாயா? யாராவது நல்ல ஆண்மகனை பார்த்து திருமணம் செய்து கொள் என்றால் செவி சாய்க்கிறாயா? எல்லாம் உன் இஷ்டப்படி தான் நடந்து கொள்கிறாய், எப்படி வளர்ந்த பெண் நீ, இப்போது எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாய்? சரி எதிர்காலத்திற்கு நல்வழியை ஏற்படுத்தி கொள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறாய்” என்று வேகமாக கொட்டி முடித்தாள் வள்ளி.
சத்யா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.
“கோபமா?” என்றாள் வள்ளி.
“இல்லைக்கா, என் மீது அன்பு காட்டவோ, கோபப்படவோ என் கடந்த கால வாழ்க்கையில் இருந்து உங்களை தவிர வேறு யார் இருக்கிறார்கள்?” என்று சாலையை வெறித்த படியே நடந்தாள் சத்யா.
“சத்யா, அந்த துரைசாமியை விட்டு தொலை முதலில்”
“என்ன அக்கா, தெரியாத மாதிரி பேசுகிறீர்களே, என்னை பற்றிய விஷயங்கள், அம்மா கடைசியாக என்னிடம் ஒப்படைக்க எண்ணிய விஷயங்கள் எல்லாம் அவனிடம் தானே இருக்கின்றன, அவைகள் அவனிடம் இருக்கும் வரை என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?”
“சரி தான்மா ஆனா அதை நீ வாங்க வேண்டும் என்று அவனுடன் இணைந்து போவது போல் போகிறாய், அதனால் உன் பேர் தானே கெட்டு போகிறது, தருண் மனமும் பாதிக்கப்படுகிறது”
“அக்கா என் பேர் எப்போதோ கெட்டு விட்டதே, இனி கெடுவதற்கு என்ன இருக்கிறது? நான் ஒன்றும் நல்லவள் இல்லையே, ஊரார் பேசும் பேச்சுக்கள் எனக்கு தேவை தானே?”
“அப்படி எல்லாம் சொல்லாதே சத்யா, துரைசாமி பொய்யான விஷயங்களை காண்பித்து இந்த தெருவில் உள்ளவர்கள் மனதில் உன்னை பற்றி தவறான எண்ணங்களை விதைத்து இருக்கிறான், இவர்கள் பேசும் பேச்சுக்களும் ஏச்சுக்களும் உனக்கு பொருத்தமற்றவை, நீ நல்லவள்”
சத்யா ஒரு நிமிடம் திரும்பி வள்ளியை பார்த்துவிட்டு களுக்கென்று சிரித்தாள். “அக்கா பேசும் இடம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் நான் மும்பையில் இருந்த போது தவறானவள் தானே, அங்கே செய்த தவறுக்கு இங்கே தண்டனை அனுபவிக்கிறேன்”.
“சத்யா ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறாய்? முதலில் ஊரார் பேசுவது இருக்கட்டும், நீயே உன்னை பற்றி தவறானவள் என்று சொல்லாதே”
“இதை பற்றி பேசி காலைலயே ஏன் நாம் இருவரும் அப்செட் ஆக வேண்டும்? வேறு ஏதாவது பேசலாமே?”
“சரி அந்த சூப்பர்வைசர் உன்னை டையிங் டிபார்ட்மென்ட் மாற்றியதில் இருந்து உன்னை அதிகமாக பார்த்து பேச கூட முடிவதில்லை, கிடைக்கும் நேரத்திலாவது சண்டை போடாமல் இருப்போம்”
“ஆமாம் அக்கா, டையிங் டிபார்ட்மென்டில் ஏன் பெண்களே இல்லை? என் ஒருத்தியை தவிர மற்ற அனைவரும் ஆண்கள் தான்”
“நீ அந்த சூப்பர்வைசரிடம் spinning மில்லில் ஒரு மெஷின் பிரச்சனை பண்ணுவதை பற்றி அடிக்கடி சொன்னாயே, அந்த கடுப்புல மாற்றி இருக்கிறான்”
“மது மேடம் வரும் போது அவர்களிடம் சொல்லி மீண்டும் மாற்றி கொள்ளவேண்டும்”
“ஆமாம் அவர்கள் தானே நம்மை வேலையில் சேர்த்தார்கள்”
“அக்கா, முருகன் அண்ணா எப்போது வருகிறாராம், அவர் இருந்தால் எனக்கும் தெம்பாக இருக்கும்”
“தெரியல மா, இப்போதைக்கு லீவ் இல்லையாம், நானும் சொன்னேன் நீங்கள் இருந்தால் துரைசாமி அடங்கி இருப்பான், இப்போது அடிக்கடி வந்து மிரட்டுகிறான் என்று. லீவில் வரும் போது அவனை பார்த்து கொஞ்சம் தட்டி வைக்கிறேன் என்றார், சரி உனக்கு exams எப்போது? படிக்க நேரம் கிடைக்கிறதா?”
“எங்க அக்கா? வீட்டிற்கு வந்தால் tired ஆகி விடுகிறது, ஏதோ அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறேன்”
“அதெல்லாம் நீ படித்து விடுவாய் சத்யா, எல்லாவற்றிலும் first mark வாங்குவாயே, ஞாபகம் இருக்கிறதா?”
“ஹ்ம்ம்..” என்று விரக்தியோடு புன்னகைத்தாள் சத்யா.
இருவரும் பஸ் ஏறி அம்பத்தூரில் இருந்த தொழிற்சாலையை அடைந்து யூனிபோர்ம் pant, shirt, mask, gloves போட்டு கொண்டு அவரவர் டிபார்ட்மென்ட் நோக்கி நடந்தார்கள். “சரி சத்யா, டையிங் பிரிவில் பார்த்து வேலை செய், இன்று மாலை உனக்காக காத்திருக்கட்டுமா?”
“வேண்டாம் அக்கா, சின்னு, தருண் இருவரும் காத்திருப்பார்கள், துரைசாமி வந்தால் பாட்டியால் மட்டும் சமாளிக்க முடியாது, எனக்கும் இங்கு வேலைப்பளு அதிகம், நீங்கள் புறப்படுங்கள், நான் வந்துவிடுவேன்”
“சரி சத்யா, வீட்டில் சந்திக்கலாம்”
சத்யா டையிங் பிரிவு சென்றதும் அங்கிருந்த சூப்பர்வைசர் அவளுக்கு பயிற்சியை தொடங்கினார்.
Comments
Post a Comment