Sms ch2 சேற்றில் முளைத்த செந்தாமரையோ அத்தியாயம் 2
அத்தியாயம் 2
ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் ஹார்ன் ஒலி, ஜன்னலை
கீறி கொண்டு வந்து விழுந்த
வெளிச்சம் நந்தனை எழுப்பி விட்டன.
கட்டிலில் தருணும் அவன் தாயும்
இன்னும் தூங்கி கொண்டிருந்தார்கள். நந்தன்
வாட்சை பார்த்தான். மணி 7.30. அவர்களை எழுப்பலாமா?
வேண்டாமா? என்று அவன் யோசித்து
கொண்டிருந்த பொழுது தருணின் தாய்
கண்ணை கசக்கி கொண்டு எழுந்தாள்.
ஒரு கையால் நெற்றியை
அழுத்தி விட்ட படி அங்கே
முந்திய நாள் இரவு காயத்திற்காக
போடப்பட்ட மருந்து நனைத்த பஞ்சை
தொட்டு பார்த்து குழப்பம் அடைந்தாள்.
அது வரை அங்கே
நின்று கொண்டிருந்த நந்தனை அவளும் கவனிக்கவில்லை,
நந்தனும் தன்னை தெரியப்படுத்திகொள்ளவில்லை. ஒருவாராக அவள்
நிமிர்ந்த பொழுது நந்தனை பார்த்து
பயந்து எழுந்தாள்.
"நீ... நீங்கள் நீங்கள் யார்?
எப்படி உள்ளே வந்தீர்கள்?" பதட்டத்துடன் கேட்டாள் தருணின் தாய்.
"பொறுங்கள் பொறுங்கள், பயப்பட வேண்டாம், நேத்து
யாரோ ஒருத்தர் உங்கள கார்ல
இருந்து கீழ தள்ளிட்டு போய்ட்டாரு.
அப்போ நான் தான் உங்கள
தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்.
தருணுக்கு தெரியும். தருண் தான்
நீங்க இன்னைக்கு நைட் இங்கயே
இருங்க அங்கிள் னு சொன்னான்,
அதான்...."
தருணின் தாய் நெற்றியை அழுத்தி
பிடித்து யோசித்தத்தில் நேற்று பாலத்தில் காரில்
செல்லும் போது தருண் ஓடி
வந்து விழுந்ததையும், துரைசாமியிடம் தருணிடம் அழைத்து செல்ல
சண்டை போட்டு காரை திருப்பி
கொண்டு வந்ததையும், அப்போது தருண் ஒரு
காரில் அமர்ந்திருப்பதை கண்டதையும் நினைவு கூர்ந்தாள். அதன்
பிறகு நடந்ததெல்லாம் சரியாக அவளுக்கு நினைவு
வரவில்லை.
"ஞாபகம் வந்துடுச்சா?" கேட்டான் நந்தன்.
"தருண் பாலத்தில விழுந்தது, ஒரு
கார்ல உக்காந்து இருந்தது எல்லாம்
ஞாபகம் வந்துடுச்சு. மத்ததெல்லாம் சரியா ஞாபகம் இல்லை"
"மீதிய தருண் கிட்ட கேட்டு
தெரிஞ்சுக்கோங்க, நான் கிளம்புறேன்"
நந்தன் படுக்கை அறை கதவை
திறந்து கிட்சனுக்கு வந்தான். தருணின் தாயும்
பின்னாடி வந்தாள். நந்தன் மீண்டும்
ஒரு முறை படுக்கை
அறையில் தூங்கும் தருணை எட்டி
பார்த்துவிட்டு அவன் தாயிடம் திரும்பினான்.
சிறிது நேர யோசனைக்கு பின்
"உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?"
என்று கேட்டான்.
அவளும் ஒரு நொடி யோசித்துவிட்டு “இல்லை தேவைப்படாது, நன்றி” என்றாள் சுருக்கமாக.
ஏனோ அது நந்தனை கொஞ்சம் இடித்தது.
“அப்டின்னா இன்னைக்கு குடிக்காம பையனை பாத்துப்பீங்க இல்ல?” என்றான் அவளுக்கு அது உரைக்கவேண்டும் என்றே.
தருணின் தாய் துணுக்குற்றாள். கொஞ்சம் உடலை நேராக்கி நிமிர்ந்து “நேற்று தங்கள் உதவிக்கு நன்றி, இப்போது நீங்கள் செல்லலாம்” என்றாள்.
அவள் பேச்சும், உடல் மொழியின் தோரணையும், அதில் இருந்த திமிரும் அவனை மேலும் சீண்டி பார்த்தன. ஒரு பக்கம் “இவளிடம் ஏன் வாக்குவாதம்? நமக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கிறது” என்று அவன் மனம் சொன்னாலும் இன்னொரு புறம் நேற்று நாம் உதவி செய்யாவிட்டால் இவளுக்கும் இவள் மகனுக்கும் என்ன வேண்டுமானால் ஆகி இருக்கலாம் அல்லவா? குறைந்தபட்சம் அந்த நன்றி உணர்ச்சி வேண்டாமா பேசும் போது என்று நெருடியது. சரி அந்த சின்ன பையனுக்காக இவளை மன்னித்து விடலாம் என்று அங்கிருந்து புறப்பட தயாரானான். அவன் வெளியே வந்ததும் அந்த தெருவில் இருந்தவர்கள் அவர்கள் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு இவனை பார்த்தார்கள். ஒரு சில பேர் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். நந்தன் ஒரு முறை தருணின் தாயை திரும்பி பார்த்தான். அவளுக்கு இந்த பார்வை, பேச்சுக்கள் எல்லாம் பழகி இருக்கும் போல. முகத்தில் எந்த சலனமும் இன்றி அவனை பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை மூடிகொண்டாள்.
அதற்கு பிறகு அங்கு நந்தனுக்கு வேலை இருப்பதாக தோன்றவில்லை. வேகமாக நடந்து காருக்கு சென்றான்.
தருண் தூங்கி எழுந்ததும் நந்தனை தேடினான். “அம்மா அந்த அங்கிள் எங்க மா?”
“தருண் போய் பல் விலக்கி குளிச்சுட்டு ஸ்கூல்க்கு கிளம்பு”
“கிளம்புறேன் மா, ஆனா அந்த அங்கிள் எப்போ மா போனாரு? என்கிட்டே bye சொல்லவே இல்லையே?”
“உனக்கு இட்லி வச்சிருக்கேன், மதியமும் இட்லி தான், சமத்தா சாப்பிடணும், படிக்கணும், ஆட்டோ அண்ணா வீட்டுல விட்டதும் கதவை மூடிட்டு வீட்டுலயே இருக்கணும், சரியா?”
“அம்மா நான் கேக்கறதுக்கு ஏன் மா பதிலே சொல்ல மாட்டேங்குற?”
“ஏன்னா அது உனக்கு தேவை இல்லாத விஷயம், எவ்ளோ நேரம் ஆனாலும் நான் வீட்டுக்கு வந்துடுவேன், நீ வெளில வரக்கூடாதுன்னு சொல்லியும் நேத்து என்ன தேடிட்டு பாலம் வரைக்கும் வந்துட்ட, அந்த ஆளு உன்ன தூக்கிட்டு போயிருந்தா என்னாகுறது?”
“உன்ன அந்த துரைசாமி அங்கிள் அடிக்கிறாரு, நீ அவர் கூட கார்ல போற, எனக்கு பிடிக்கல, எத்தனை டைம் சொன்னாலும் நீ கேக்குறியா? நேத்து கூட அந்த ஆளு உன்ன தள்ளிவிட்டுட்டான், ஆனா அந்த அங்கிள் தான் ஹெல்ப் பண்ணினாரு”
“தருண் நீ சின்ன பையன், உனக்கு சில விஷயங்கள் சொன்னாலும் புரியாது. இந்த கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், அது வரைக்கும் நீ அம்மாவை நினச்சு பயப்படாம தைரியமா இருக்கணும், அம்மா பேச்சை கேட்டு நடக்கணும், யாருன்னே தெரியாதவங்கள எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வர கூடாது, காலையில் அந்த ஆளோட காரை பார்த்தேன், பெரிய பணக்காரன் போல, துரைசாமி மாதிரி ஆளுங்களை கூட நம்பிடலாம், ஆனால் நீ அங்கிள் என்கிறாயே அந்த ஆளைப்போன்ற பணக்காரர்களை நம்பவே கூடாது, சரியா?”
“போ மா, நான் சொல்றத நீ கேக்க மாட்ட, ஆனா நீ சொல்றத நான் கேட்கணுமா? எனக்கு அந்த அங்கிள் நல்லவர்னு தான் தோணுது, எனக்கு இட்லி வேண்டாம்” என்று தருண் வேகமாக ஸ்கூல் பேக்கை எடுத்து கொண்டு ஓடியே விட்டான். தருணின் தாய் சத்யாவின் கண்களில் நீர் எட்டி பார்த்தது. துடைத்துக்கொண்டு இட்லியை இரண்டு டப்பாக்களில் போட்டுக்கொண்டு புறப்பட்டாள்.
நந்தனின் கார் அந்த பெரிய கதவை தாண்டி இரண்டு பக்கமும் பூச்செடிகளும், மரங்களும் நிறைந்த அந்த
drive way யில் சென்று ஒரு பெரிய போர்ட்டிக்கோவின் கீழ் வந்து நின்றது. கொஞ்சம் முகத்தையும், கேசத்தையும் கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டு வீட்டிற்குள் சென்றான். அம்மாவும் அப்பாவும் ஹாலில் இருப்பதை கண்டும் காணாதது போல் வேகமாக படிகளில் ஏறி தன் அறையை அடைந்தான். வேகமாக குளித்துவிட்டு டிரஸ் செய்துகொண்டு கீழே வந்தான். அவன் தாயார் டைனிங் டேபிளில் அவனுக்கு டிபன் எடுத்து வைத்தார்கள். அவர்களை நேருக்கு நேர் பார்க்க ஏனோ அவனுக்கு தயக்கமாக இருந்தது. அவனுடைய தாயார் அவன் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு அதிகமாக அவனை கேள்வி கேட்டதில்லை. அப்படியே ஏதேனும் கேட்டால் உண்மையை சொல்லாவிட்டாலும் அவன் பொய் சொன்னதில்லை. சில விஷயங்களில் நான் இப்படி தான், என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விடுவான். அதற்கு மேலும் அவனை வற்புறுத்தவது நந்தனின் தாய் கமலாவுக்கு உடன்பாடில்லாத விஷயம். வளர்க்கும் போது நன்றாக வளர்த்தோம், வில்லை வளைக்கலாம், உடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக நிற்பவள்.
நந்தன் சாப்பிட்டு முடித்ததும் கேட்டாள். “இன்னைக்கு முகூர்த்த பட்டு, அப்புறம் எல்லாருக்கும் கல்யாண ஜவுளி எடுக்க போகணும், நீயும் வரணும்”.
“வரணும்” என்று சொன்ன பிறகு மறுத்து பேச நந்தனுக்கு விருப்பமில்லை. சரி என்று தலை ஆட்டிவிட்டு ஆபீஸ்க்கு புறப்பட்டான். “நந்தா, ஒரு நிமிஷம்” என்று நந்தனின் தந்தை அவனுடன் வெளியே வந்தார்.
“ஆபீஸ் வரீங்களா பா?”
“உன்கூட பேசணும், அப்டியே ஆபீஸ்ல சில விஷயங்களையும் பாத்துடலான்னு”
“சரி வாங்க”
தந்தையும் மகனும் காரில் ஏறி புறப்பட்டார்கள். “நந்தா, உன் அம்மா உன்கிட்ட அதிகபட்சமா ஆசைப்பட்டு கேட்ட ஒரு விஷயம்... “
“அப்பா....” நந்தன் குறுக்கிட்டான்.
“நெறைய முறை இதைப்பற்றி நாம் பேசி ஆகிவிட்டது, எத்தனை முறை பேசினாலும் என் பதில் மாறப்போவதில்லை”
“இதனால் தான் இப்போதெல்லாம் உன் அம்மாவும் இதைப்பற்றி பேசுவதில்லை, ஆனால் யாராவது ஒருவர் பேசி தானே ஆக வேண்டும், நீ நம் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு, உனக்கு பிறகு பிறந்த ரோஹித்க்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் மகன் இருக்கிறான், ஸ்வேதாவுக்கும் திருமணம் ஆகி விட்டது, இப்போது கிருஷ்க்கு, எல்லோரின் திருமண வேலைகளையும் குடும்பத்தின் முதல் ஆண்மகனாக முன்னின்று நடத்துகிறாயே தவிர உன் திருமணத்தை பற்றி யோசிக்கவும் மாட்டேன் என்கிறாய், எங்களை பேசவும் விட மாட்டேன் என்கிறாய். சரி ஒரு காலத்தில் தாத்தாவுக்கு பயந்து மரியாதை கொடுத்து காதல் திருமணத்தை நாங்கள் ஆதரிக்கவே இல்லை, உனக்கே தெரியும், ஆனால் அதனால் இழந்த உறவுகளை நினைத்து தாத்தாவும் இப்போதெல்லாம் உடைந்து விடுகிறார். நந்தன் ஏதாவது பெண்ணை விரும்பினால் அவளையே கூட திருமணம் செய்து வைத்து விடலாம் என்று தாத்தாவே சொல்ல ஆரம்பித்துவிட்டார். சொல்லு பா உன் மனதில் அப்படி யாராவது இருந்தால்....”
நந்தன் புன்னகைத்தான். “அப்பா அப்படி ஏதாவது இருந்திருந்தால் மறைப்பேன் என்று நினைக்கிறீர்களா? வீட்டில் நீங்கள் எல்லாம் எதிர்த்தால் கூட நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றிருப்பேன். எனக்கு அப்படி ஒரு எண்ணம் எந்த பெண்ணை பார்த்தும் வந்ததில்லை அப்பா” என்றான் சாலையில் கவனம் வைத்து காரை ஓட்டிக்கொண்டே.
“ஆனால் உன் நடவடிக்கை ஒன்றும்...” என்று தயங்கினார் சத்தியமூர்த்தி.
நந்தன் மீண்டும் ஒரு புன்னகையயே பதிலாக அளித்தான்.
ஏதேதோ கேள்விகள் கேட்டு நந்தனை மடக்கி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று தான் சத்தியமூர்த்தி காரில் ஏறினார். ஆனால் நந்தனின் வைராக்கியமும், அளவாக பேசி ஒரு புன்னகையை வீசி எதிராளியை பேச விடாமல் செய்து விடுவான் என்பதும் அவர் அறிந்ததே.
“என்னப்பா இப்படி போகிறாய்?” என்றார் சத்தியமூர்த்தி.
“எப்படி?” என்று கேள்வியுடன் கொஞ்சம் சாலையை சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ஹேரிங்டன் சாலையில் திரும்பிவிட்டாயே?”
ஏன் அந்த திசையில் திரும்பினோம் என்று நந்தன் குழப்பம் அடைந்தான். நேற்று ஓய்வெடுத்த அந்த பாலத்தையும், தருண் வீட்டிற்கு திரும்பும் வீதியையும் பார்த்துவிட்டு நேற்று வந்த ஞாபகத்தில் வந்துவிட்டோம் போல என்று மனதிற்குள் சமாதானம் கூறிக்கொண்டு தந்தைக்கு பதில் அளித்தான். “நீங்களே பாத்தீங்களே பா, அந்த சைடு செம traffic, அதான்”.
தந்தையும் மகனும் ஆபீஸ் வந்தடைந்து வேலைகளில் கவனம் செலுத்தினர். நந்தனை தனது chair யில் உட்கார்ந்து சத்தியமூர்த்தி பெருமையுடன் கவனித்து கொண்டிருந்தார். ஆபீஸ் வந்துவிட்டால் மதிய உணவு இடைவேளை தவிர மற்ற நேரங்களில் கருமமே கண்ணாக உழைப்பது தான் நந்தனின் குணம். இல்லையென்றால் அவன் தாத்தா வைத்திருந்த சின்ன துணிக்கடையை, அவன் அப்பாவால் முன்னேற்றப்பட்டு உண்டான துணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடுவில் நஷ்டம் கண்ட தொழிலை இன்று பன்மடங்காகவும், பன்முகம் கொண்ட தொழிலாகவும் நந்தனால் மாற்றி இருக்க முடியுமா? அப்பாவுடன் பிறந்த மீதி சித்தப்பா, அத்தை பிள்ளைகளுக்கும் தாத்தா சொத்தில் பங்கு உண்டு என்றாலும் எல்லோரும் நஷ்டத்தில் படுக்க போகிறது, விற்று விடலாம் என்று கூறினார்களே தவிர நந்தனை போல் தைரியமாக இறங்கி நம்பிக்கையுடன் வேலை செய்யவில்லையே. வேலையும் செய்து முன்னேற்றியும் காட்டி குடும்பத்தார் நன்மதிப்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் தாத்தாவின் செல்லப்பிள்ளையாகவும் மாறிவிட்டானே. சித்தப்பா மகன், மகள், அத்தை மகன், மகள் என்று அவர்கள் வீட்டில் யாருடைய திருமணம் என்றாலும் நந்தனின் ஆலோசனைக்கு குடும்பத்தார் அனைவருமே மதிப்பு கொடுத்தார்கள். வயதில் சின்னவன் என்றாலும் நேர்கொண்ட சிந்தனையும், தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலும் நந்தனை அவர்கள் மதிப்பாகவே பார்த்தார்கள். வயது 30 ஆகிவிட்டது. நல்ல உயரமும், அதற்கேற்றார் போல எடையும், அடர்த்தியான கேசமும், கண்களிலே ஒரு வசீகரமும், முகத்தில் ஒரு புன்னகையும், பெண்கள் இவனை திருமணம் செய்து கொள்ள queue ல் நிற்பார்களே. நிற்கிறார்களே. ஆனால் இவன் வேண்டாம் என்கிறானே. சத்தியமூர்த்தி தன் எண்ண ஓட்டதிலிருந்து வெளியே வந்து பெருமூச்சு விட்டார்.
நந்தன் அவர் இருக்கையின் பக்கம் திரும்பி “அப்பா உங்களை வேண்டுமானால் வீட்டில் சென்று விட சொல்லட்டுமா? கொஞ்சம் ஓய்வெடுத்து கொள்ளுங்களேன்”.
“நீ பொறுப்பேற்ற பிறகு ஓய்வை தவிர வேற என்ன பெருசாக செய்து விடுகிறேன்? வீட்டில் ஒரு பேரனோ, பேத்தியோ இருந்தால் வீட்டிற்கு செல்ல தோன்றும். சதா சர்வகாலமும் பகவத் கீதையும், ராமாயணமும் படிக்கும் உன் அம்மாவிடம் சென்று நான் என்ன செய்ய?” என்று விரக்தியடைந்தார்.
“ஒரு வழியாக அம்மா என் திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்தி கொண்டாலும் நீங்கள் நிறுத்த மாட்டேன் என்கிறீர்களே.” சிரித்தான் நந்தன்.
மாலை ஆபீஸ் முடிந்ததும் இருவரும் புறப்பட்டார்கள்.
“வீட்டுக்கு போயிட்டு போறோமா? இல்லை நேரா ஜவுளிக்கடைக்கு போலாமா?” என்றான் நந்தன்.
“நேரா ஒரு ஹோட்டல் போய் வாய்க்கு ருசியா டிபன் சாப்பிட்டுவிட்டு ஜவுளிக்கடைக்கு போகலாம்” என்றார் சத்தியமூர்த்தி.
“அப்பா என்னோடு வந்தாலும் ஸ்வீட் அதிகம் சாப்பிட விடமாட்டேன். நினைவு இருக்கட்டும்.” என்று விளையாட்டாக மிரட்டினான் நந்தன்.
“உன்னைப்பற்றி எனக்கு தெரியும் நந்தா” என்று கண் சிமிட்டினார் தந்தை.
இருவரும் காரில் ஏறி புறப்பட்டார்கள்.
காலையில் தெரியாமல் தான் பாலம் இருக்கும் சாலையில் தன்னிச்சையாக காரை திருப்பினான் நந்தன். ஆனால் இப்போது வேண்டுமென்றே அதே பாலத்தின் வழியாக சென்றான். சத்தியமூர்த்திக்கு கொஞ்சம் குழப்பம் தான் என்றாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“இந்நேரம் தருண் எப்படி இருப்பான்?” காலையில் தருண் நினைவு பெரிதாக இல்லை நந்தனுக்கு. ஆனால் இந்த மாலை நேரம், மீண்டும் மழை பெய்யும் போல தோன்றிய மேகமூட்டம் அனைத்தும் தருணை அவனுக்கு நினைவூட்டின. “பாவம் இந்த சின்ன வயதில் காலை தெத்தி தெத்தி நடந்து கொண்டு தாயை தேடும் நிலை”. அவன் எண்ண அலைகள் தருணை தேடின. Cross road signal ல் காரை பிரேக் போட்டு மெதுவாக்கினான். காரின் கண்ணாடியை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திரும்பினான்.
“ஹாய் அங்கிள்” தருண் தான். முதுகில் ஸ்கூல் பேக். கையில் ஊன்றுகோல். சத்தியமூர்த்தி முகத்தில் குழப்பம். நந்தன் முகத்தில் பரவசம். சிக்னல் வேறு பச்சைக்கு மாறப்போகிறது.
“ஹாய் தருண்” சொல்லிக்கொண்டே நந்தன் சிக்னலை பார்த்தான்.
“தருண் பின் கதவை திறந்து காரில் ஏறிக்கொள்.”
“இல்லை அங்கிள், வேண்டாம் அம்மா திட்டுவார்கள், உங்களுக்கு ஹாய் சொல்லத்தான் கூப்பிட்டேன்”
பின்னாடி இருந்த வாகனங்கள் ஹாரனை அழுத்தினார்கள்.
“தருண் உன் அம்மாவிடம் நான் பேசிக்கொள்கிறேன், நீ முதலில் காரில் ஏறு”
“இல்லை அங்கிள், வேண்டாம்”
இதென்னடா வம்பு என்று சத்தியமூர்த்தி பார்வையாளராக வியப்புடன் யோசித்து கொண்டிருந்தார்
“அப்பா கதவை திறந்து அந்த பையனை உள்ளே இழுத்து உங்கள் மடியில் உட்கார வைத்து கொள்ளுங்கள்”
“இதென்னப்பா வம்பு? அவன் தான் வரவில்லை என்கிறானே, விட்டுவிடேன், என்னை கடத்தல்காரனாக்கி விடுவாய் போலிருக்கிறதே இந்த வயதான காலத்தில்”
நந்தன் சிரித்து கொண்டே “அப்பா ப்ளீஸ்” என்றான்.
சத்தியமூர்த்தியும் கதவை திறந்து அந்த பையனை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து கொண்டார். நந்தன் காரை செலுத்தினான். ஓரிரு நிமிடங்கள் ஆகி இருக்கும், நந்தன் கேட்டான். “ஏன் தருண், நான் அழைத்தால் வரமாட்டாயா? என்மீது நம்பிக்கை இல்லையா?”.
“உங்க மேல நெறைய நம்பிக்கை இருக்கு அங்கிள், ஆனால் அம்மா காலையில் உங்களை போன்றோரை நம்பக்கூடாது என்று சொல்லி திட்டினார்கள்.”
நந்தனின் கைகள் ஸ்டீயரிங் வீலை இறுக்கி பிடித்தன. முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. “அது என்ன? எங்களை போன்றவர்கள் என்றால்?” என்று முடிந்த வரை இயல்பாக கேட்டான்.
“துரைசாமி அங்கிள கூட நம்பலாமாம், உங்களை மாதிரி பணக்காரர்களை நம்பக்கூடாதாம்” என்றான் தருண் குழந்தைகளுக்கே உரித்தான அறியாமையுடன்.
“நான் பணக்காரன் என்று உன் தாய் எதை வைத்து முடிவு செய்தார்கள்?”
“உங்கள் காரை பார்த்தாலே தெரிகிறதாம், சரி அங்கிள், எங்க வீட்டுக்கு அந்த சைடு போகணுமே” என்றான் தருண்.
“போகலாம் தருண், எங்களுடன் முதலில் டிபன் சாப்பிடு, பிறகு உன்னை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன்”.
Comments
Post a Comment