Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 34 - 23/10/2018

காலை மணி 6 இருக்கும். லேசாக வெளிச்சம் வரத் தொடங்கி இருந்தாலும், மழையினால் கொஞ்சம் மேக மூட்டமே அதிகமாக இருந்தது. மகேஷினால் சரியாக தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்து பார்த்தான். கட்டிலின் மெத்தையில் உறங்கியவனுக்கு, கட்டாந்தரையில் உறக்கம் வரவில்லையா? இல்லை வேறு ஏதும் நினைவா? இருக்கலாம். உறங்க முடியாதவனின் நினைவுகள் தன் இளம் மனைவி பூர்ணாவையே சுற்றி வந்தது. கடந்த சில நாட்களாக தினமும் அவளுடன் பேசி பழகி வந்த அவனுக்கு, நேற்றைய இரவு அவளுடன் பேச முடியாதது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் தன்னை பற்றி நினைத்து பார்த்திருப்பாளா? மகேஷ் கடந்த சில மாதங்களை அசை போட ஆரம்பித்தான். எப்படி எல்லாம் இருந்த தான் எப்படி எல்லாம் மாறிவிட்டோம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

பல இன்னல்களுக்கும், துரோகங்களுக்கும் இடையில் நடந்த திருமணம் என்பதால் மகேஷ் ஒரு கணவனுக்கு உரித்தான எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இல்லாமல், அதே சமயம் பூர்ணாவுக்கு ஒரு நல்ல நண்பனாக, ஒரு வழிகாட்டியாக அவளது அடுத்த அடியை (அது அவள் தன்னை பிரிந்து செல்வதாக இருந்தால் கூட) எடுத்து வைக்க எல்லா வகையிலும் உறுதுணையாகவே இருக்க விரும்பினான். அதனால் தொடக்கத்தில் பூர்ணாவின் கோபங்கள் அவனை பெரிதாக பாதிக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் ஒரு சிறு குழந்தையின் இயலாமையின் வெளிப்பாடாகவே பூர்ணாவின் கோபத்தை அவன் பார்த்தான். திருமணத்திற்கு முன்பு வரை பூர்ணாவின் மீது பெரிதாக எந்த அபிப்பிராயமும் இல்லமால் தான் இருந்தான். தனக்கு அண்ணியாக வரப்போகிறவள் என்று கூட அவன் பெரிதாக எண்ணியது இல்லை. குடும்பத்தில் நல்லதோ, கெட்டதோ தன் கடமையை மகேஷ் செய்தாலும் தனக்கென ஒரு உலகத்தையும் அவன் ஏற்படுத்தி கொண்டான். அதிலேயே அவன் பெரும்பான்மை நேரத்தை செலவு செய்ததில் பல குடும்ப விஷயங்களில் அவன் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் தள்ளி நின்றே கவனித்து வந்தான். அதனால் பூர்ணா மீது அவனுக்கு அபரிமிதமான அன்போ, இல்லை வெறுப்போ அவனுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த திருமணம் அவன் வாழ்க்கையை மட்டும் அல்ல, அவனையே திருப்பி போட்டது. பூர்ணாவை புரிந்து கொள்ள அவன் முயன்ற முயற்சியில் அவன் தன்னை பற்றி அறியாத பல விஷயங்களை புரிந்து கொண்டான் என்பதே உண்மை. பூர்ணாவின் வலியை, கண்ணீரை, வெறுப்பை காணும் போது தான் இவள் திருமணத்திற்கு முன்பு எப்படி எல்லாம் இருந்தாள் என்று யோசிக்க ஆரம்பித்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவளுக்கு தன் குடும்பத்து ஆண்களை தவிர வேறு எந்த ஆண்களும் நெருக்கம் இல்லை என்பதை உணர்ந்தான். தாய் மாமனாக தன் தந்தை, காலம் முழுவதும் கட்டி காப்பாற்ற போவதாக கணவனாக உருவகித்த தன் அண்ணன், சிறு பிள்ளைகளை போல் வம்பு வளக்கவே தானும் திருநாவும் இவர்களை தவிர வேறு ஆண்களின் வழிகாட்டுதலோ, அன்போ இல்லாமல் வளர்ந்தவள் என்பதை உணர்ந்தான்.

சிட்டு குருவியாய் சிறகடித்து பறந்து திரிந்த பூர்ணாவை தன் மனக்கண்ணின் முன்னே கண்டான். அப்படி பட்ட பூர்ணா கோபமும், வேதனையும், வெறுப்பும், பழி வாங்கி தன் வலியை தனக்கு துரோகம் செய்தவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற வெறியுடன் முடங்கி கிடக்கும் பூர்ணாவையும் தன் கண்முன்னே கண்டான். 25 வருடங்களாக கண்டும் காணாமலும் இருந்த பூர்ணாவை கண்டான்,  திருமணத்திற்கு பின் முதல் முறையாக கண்டான். வாழ்க்கையில் ஜாலியாக சுற்றி திரிந்த மகேஷை பூர்ணாவின் கடந்த கால சிட்டு குருவி வாழ்க்கையும், நிகழ் கால வலியும் வேதனையும் அவனை ஒரு இடத்தில் நிற்க வைத்தது, சிந்திக்க வைத்தது. முதல் முறையாக ஒரு பெண் ஒருவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இந்த அளவுக்கு ஒடிந்து போவாள் என்பதை கண்கூடாக கண்டான். பூர்ணாவின் வலியை காணும் போது அவள் அன்பின் ஆழம் மகேஷிற்கு புரிந்தது. அந்த அன்பு எப்படி பட்டதாக இருந்திருக்கும், அதை அனுபவிக்க என்ன பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என்று அவனை யோசிக்க வைத்தது. அது தனக்கு கிடைக்குமா என்று அவனை ஏங்க வைத்தது. தனக்கு கிடைக்கா விட்டாலும், அவளின் வலியை குறைக்க தன்னால் முடியுமா என்று யோசிக்க வைத்தது. அவள் அழுது கண்கள் காய்ந்து இருந்த போதெல்லாம் அவள் கண்களை மெல்ல வருடி முத்தமிட நினைத்தது. அவள் கோபத்தில் இறுக்கத்தோடு அமர்ந்து இருந்த போதெல்லாம் அவளை அள்ளி அணைத்து அவளின் இறுக்கத்தை போக்கி விட முடியாதா என தவிக்க வைத்தது. மீண்டும் அவளை சிட்டுக்குருவியாய் பறக்க வைக்க முடியாதா என சிந்திக்க வைத்தது. அவளுடன் சிறகோடு சிறகாய் தானும் பறக்க மாட்டோமா என யோசிக்க வைத்தது. அவளின் துன்பத்தை துடைக்க பல வழிகளை மகேஷ் யோசிக்கும் போது தன்னையும் அறியாமல் மகேஷ் பூர்ணாவிடம் காதலில் விழுந்தான் என்பதே உண்மை. பல நாட்கள் கழித்து அவன் அதை உணர்ந்த போது அவன் மனதில் மகிழ்ச்சியும், பயமும் ஒருங்கே வந்தது. மகிழ்ச்சியின் காரணம் முதல் முறையாக காதல் எப்படி இருக்கும் என்பதை அவன் உணர்ந்ததால், பயத்தின் காரணம் அந்த காதலை அவளுடன் பகிர்ந்து உறவாட முடியுமா, முடியாதா என்ற நிலையில்லாத சூழலினால்.

ஆனால் அவனே எதிர்பாராத விதமாய் அவனுடைய அன்பு பூர்ணாவை இலகுவடைய செய்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவனுடைய அணைப்பை, நெருக்கத்தை அவள் அனுமதித்து இருந்திருக்க மாட்டாள். எவ்வளவு அழகான தருணங்கள். மகேஷ் எழுந்து அந்த மலையின் சாரலை அனுபவித்த படியே நடக்க ஆரம்பித்தான். சுற்றி இருந்த உயரமான மரங்களும், மரங்களுக்கிடையே தஞ்சம் புகுந்து கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்த பறவைகளும், மந்திகளும், இந்த இயற்கையின் அழகும் அவன் மனதை வருடிச்சென்றன. பூர்ணா வலியை மறக்க அவனுடைய அன்பு உதவி இருக்க வேண்டும். அதில் மகேஷுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் பூர்ணா தன்னை உண்மையாகவே மனமார ஏற்றுக்கொண்டாளா? ஏற்றுக்கொள்ள மாட்டாளா? என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவள் வலியை போக்கினாலே போதும் என்று தான் அவன் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் காதல் படுத்தும் பாடு என்றுமே இது போதும் என்று நின்றுவிடுவதில்லை. எனக்கு இருப்பது போல் அவளுக்கும் என் மீது அன்பு இருக்குமா? இருந்தால் நல்லா இருக்கும். இன்னும் வேண்டும், அவள் மனம் வேண்டும், எனக்கே எனக்கு மட்டும் வேண்டும், 100 ஆண்டுகள் வேண்டும், ஜென்ம ஜென்மங்களாய் வேண்டும், இது தான் காதல் படுத்தும் பாடு. காதல் சுயநலம் அற்றது என்று சொல்வது எந்த அளவிற்கு உண்மை? பல விஷயங்கள் மகேஷின் மனதில் தோன்றி மறைந்தது. இந்த இயற்கை அழகு அவனை பூர்ணாவிற்காக ஏங்க வைத்தது. 5 நாட்கள் ஆனாலும் பேசாமல் அவளால் இருக்க முடியும். ஒரு நாள் இரவு நான் பேசவில்லை என்று அவள் தவித்து போக மாட்டாள். அந்த அளவிற்கு அவள் என்னை மனதளவில் நெருங்கி விட்டாள் என்று நான் நினைத்தால் அது முட்டாள் தனம் தான். ஆனால் அவளிடம் நெறைய மாற்றங்களை பார்த்து கொண்டு தானே இருக்கிறேன். ஒரு வேளை அவள் மனதளவில் என்னை நெருங்கி இருப்பாளா? எப்போது என்னிடம் சொல்வாள்? இதெல்லாம் சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியுமா? சொல்லமாலே எனக்கு புரியாதா? என் அடி மனதில் இருந்து யோசித்தால் அவள் என்னை மனதளவில் எப்போதோ ஏற்று கொண்டாள் என்று தான் தோன்றுகிறது. சொல்லப்போனால் அவள் ஏற்று கொண்டதின் விளைவு தான் என் அணைப்பை அவள் அனுமதித்தது என்றும் தோன்றுகிறது. ஆனால் பாழாய் போன மனம் சில சமயம் சான்றும் கேட்கிறதே. எதுவாயினும் என் பூர்ணா சந்தோஷமாக இருக்க வேண்டும், என்னுடைய உணர்வுகள் அடுத்த பட்சம் தான். அவள் முன்னாடி மாதிரி வேதனை அடைந்தால் என்னால் கண்டிப்பாக அதை தாங்கி கொள்ள முடியாது. அது மட்டும் நான் என் மனதை பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளேன். 

ஆதிவாசி குழுவினை சேர்ந்த ஒருவர் மலை மேல் ஏறி வருவதை மகேஷ் பார்த்தான். 

ஆ: "வணக்கம் தம்பி, என்ன காலைலயே எழுந்துடீங்க போலவே! எப்படி இருக்கு நம்ம மலை? ரொம்ப ரசிச்சுட்டு இருக்க மாதிரி தெரியுதே!

மகேஷ்: "ஆமாம் அண்ணா, இந்த மலையும் காடும் இந்த சாரலில் அழகா தெரியுது."

ஆ: இருக்காதா தம்பி? கடவுள் குடுத்தது. சரி வாங்க. இந்த குச்சியை வச்சு பல்லு துலக்கிக்குங்க. என் குடிசைக்கு போகலாம். என் பொண்ஜாதி ரொம்ப நல்லா சுக்கு காபி போடுவா தம்பி, இந்த சாரலுக்கு குடிச்சா ரொம்ப தெம்பா இருக்கும். 

மகேஷ் பல் துலக்கி வாய் கொப்பளித்தான். அந்த அண்ணனின் குடிசைக்கு சென்றான். அவருடைய இரண்டு பிள்ளைகளும் தூங்கி எழுந்து அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு நின்று கொண்டிருந்தனர். 

ஆ: இந்தா பிள்ளை குழலி. நம்ம பட்டணத்து தம்பிக்கு சுட சுட நல்லா ஒரு சுக்கு காபி போட்டு குடு.

குழலி: தோ போட்டு தாரேன் மச்சான். 

மகேஷை பார்த்து வெட்கப்பட்டு ஒதுங்கி நின்ற பிள்ளைகளை மகேஷ் இழுத்து அணைத்து முத்தமிட்டு விளையாட ஆரம்பித்தான். அவனுக்கு ஏதோ எண்ணங்கள் தோன்றின. 

ஆ: என்ன தம்பி, உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?

ம: ஆச்சுங்கண்ணே. 

ஆ: பிள்ளைங்க இருக்கா?

ம: ஐயோ அண்ணே, கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆச்சு.

ஆ: அதான் பிள்ளைங்களை பாத்ததும் தம்பிக்கு நினைப்பு வேற எங்கயோ போய்டுச்சு போல. 

குழலி: அட குடிசைக்கு வந்தவங்கள உரண்ட இழுக்காதீங்க மச்சான். தம்பி கோச்சிக்கிட்டு நேரா பொண்ஜாதியை பாக்க போய்ட போகுது. 

களுக்கென்று சிரித்தாள் குழலி. மகேஷ் யோசித்தான். இந்த அண்ணனை கிண்டல் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த அக்கா நம்மை கிண்டல் செய்வது போல இருக்கே. 

ஆ: ரொம்ப யோசிக்காதீங்க தம்பி. குழலி சொன்ன மாதிரி விட்டா இப்பவே பொஞ்சாதியா பாக்க போயிடுவீங்க போல இருக்கே. மழை பெஞ்சு மண்சரிவா இருக்கே. பொறுமையா தான் போயாகணும்.

ம: என்ன அண்ணா சொல்றீங்க? எங்க எல்லாம் மண்சரிவு? பூம்பாறைக்கு போக முடியும் தான? 

ஆ: அட நீங்க வேற தம்பி, பூம்பாறைக்கும் போக முடியாது, கோடைக்கும் போக முடியாது. 

மகேஷ், அவன் colleagues, தலைவர் அனைவரும் யோசித்தனர். தலைவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார். இந்த மழை மண்சரிவில் மலையில் நீங்கள் நடப்பது ஆபத்தானது என்று. மகேஷ் கவலை எல்லாம் ஒரு வேளை பூர்ணா தன்னை நினைத்து பயந்து விட்டால் என்ன செய்வது. அதனால் தான் பாதுகாப்பாக இருப்பதை அவளிடம் தெரியப்படுத்த வேண்டும். "அய்யா வீட்டுல எல்லாரும் தேடுவாங்க, பயப்படுவாங்க."

"அப்டியா? சரி நம்ம ஆளு ஒருத்தரும், driverum போய் மோயர் பாய்ண்டுக்கு போய் தகவல் சொல்லிட்டு வாங்க."

மகேஷ் கொஞ்சம் நிம்மதியடைந்தான்.

Comments

Popular posts from this blog

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 27 - 05/10/2018

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 40 - 28/02/2019

Azhagu serial - Magesh - Poorna fan fiction - Episode 24 - 22/09/2018