Sms ch1 சேற்றில் முளைத்த செந்தாமரையோ
அத்தியாயம் 1
பாலத்தின் ஒரு பக்கத்தில் அந்த கார் நின்று கொண்டிருந்தது. மாலையில் ஆரம்பித்த மழை ஒரு வழியாக நின்றிருந்தாலும் காரின் வைப்பர்கள் டக் டக் என்று தூரலில் விழும் நீரை கடமையே கண்ணாக தள்ளி கொண்டிருந்தன. நந்தன் ஸ்டீயரிங் வீலில் இருந்து தலையை தூக்கி நிமிர்ந்து பார்த்தான். நாள் முழுதும் இருந்த இறுக்கம் அந்த தூக்கத்திற்கு பிறகு குறைந்ததாகவே உணர்ந்தான். தன் மணிக்கட்டை திருப்பி வாட்சில் நேரத்தை பார்த்தான். இரவு 10.30. க்ளோவ் பாக்ஸில் இருந்த தனது கைபேசியை எடுத்து ஒரு நிமிட யோசனைக்கு பின் switch on செய்தான். ஸ்ரேயாவிடம் இருந்து பல மெசேஜ்கள், அழைப்புகள். PA, அம்மா, அப்பா, ரோஹித் என்று வரிசையாக இன்னும் பல அழைப்புகள். எந்த உணர்ச்சி பிரதிபலிப்பும் இன்றி மீண்டும் மொபைலை க்ளோவ்பாக்ஸில் வைத்துவிட்டு மியூசிக் பிளேயரை on செய்து ஏதோ பாடலை இசையவிட்டான். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தினத்தை அவன் ஒரு பெண்ணுடன் செலவழிப்பது தான் வழக்கம். விவரம் தெரியாத வயதில் பண்ணை வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தான். இன்றும் ஸ்ரேயாவை சந்தித்து அவளுடன் இரவை செலவிடுவதாக தான் அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால் நாள் முழுக்க ஏற்பட்ட அலுவலக சிக்கல்களும், அவற்றிற்கு தீர்வு காணும் முயற்சிகளும், மாலையில் அடித்த மழை, தன் போக்கில் இந்த பாலத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று அவன் காரை நிறுத்தியது, தூக்கம் இப்படியே போனதில் அவன் திட்டங்கள் செயல்படாமல் போயின, அல்லது செயல்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை என்று கூட சொல்லலாம். இன்னது தான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை அவனால். ஆனால் ஒன்று நிச்சயம். கடந்த சில வருடங்களை போல் இன்று ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் என்று எந்த வேகமும் அவனுள் எழவில்லை. வீட்டிற்கு செல்லவும் தோன்றவில்லை. அந்த பாலமும், அடித்த மழையில் கொஞ்சம் வேகமாகவே ஓடிய நதியும், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று தூவும் தூரலும், அந்த இருளும், அதற்கே உரித்தான அமைதியும் இன்று அவனை அங்கேயே இருக்க வைத்தன. சீட்டில் சாய்ந்து ஸ்டீயரிங் வீலில் விரல்களால் இசைக்கு தாளமிட்டு தன் முன்னால் நீண்டிருந்த பாலத்தை பார்த்து கொண்டிருந்த போது தான் அந்த சிறுவனை பார்த்தான். கையில் ஊன்றுகோலுடன் ஒரு காலை தெத்தி தெத்தி யாரையோ தேடுவது போல் தலையை எல்லா திசையிலும் திருப்பி திருப்பி பார்த்து பயந்து பதட்டத்துடன் நடந்த வரும் அந்த சிறுவனை. மிஞ்சி போனால் 7 வயது இருக்கும் அவனுக்கு. அவன் காரின் அருகே வரும் போது நந்தன் கதவை திறந்தான். சிறுவனும் நின்று நந்தனையும் காரின் உள்ளேயும் கலக்கமாக பார்த்தான்.
நந்தன்: யார் தம்பி நீ? இந்த நேரத்துல வெளில யாரை தேடுற?
சிறுவன் நந்தனை அண்ணாந்து பார்த்து விட்டு மீண்டும் கலக்கத்துடன் அந்த பாலத்தின் முன்னும் பின்னும் தேடினான்.
நந்தன்: உன்ன தான் பா கேக்குறேன், யாரை தேடுற? முடிஞ்சா நானும் உன்கூட சேந்து தேடுறேன்
சிறுவன் கொஞ்சம் யோசித்து விட்டு கூறினான். "என் அம்மாவை தான் சார் தேடுறேன்".
நந்தன்: எப்படி இருப்பாங்க சொல்லு, வேலைக்கு போயிட்டு திரும்பி வரலையா? இல்ல அப்பாவோட ஏதாவது சண்டை போட்டு கோச்சிக்கிட்டு போனாங்களா?
சிறுவன் எதுவும் பதில் சொல்லவில்லை. பாலத்தின் மறுபுறத்தில் கார் ஒன்று வேகமாக செல்வதை பார்த்து ஓட முயன்று நிலை தடுமாறி கீழே விழுந்தான். நந்தன் விரைந்து சென்று அவனை தூக்கினான்.
நந்தன்: அடி ஏதாவது பட்டுடுச்சா? பாத்து போறதில்லையா தம்பி?
சிறுவன் கார் சென்ற திசையயே கலக்கமாக பார்த்து கொண்டிருந்தான். "அந்த காரை உனக்கு தெரியுமா?" கேட்டான் நந்தன்.
"தெரியும் சார்"
"யாரோடது?"
பதில் எதுவும் இல்லை.
"சரி என்கூட வா, ரெண்டு பேரும் சேந்து உன் அம்மாவை தேடலாம்"
சிறுவன் அந்த கார் சென்ற திசையை பார்த்து கொண்டே நந்தனின் காரில் ஏறினான். நந்தன் காரை எடுத்து திருப்பும் போது சிறுவன் தேடிய கார் மீண்டும் இவர்களை கடந்து சென்றது. "சார் எங்க அம்மா" என்று சிறுவன் சுட்டி காண்பித்தான். காரிலிருந்து சிறுவனின் அம்மா நந்தனின் காரை எட்டி பார்த்தார்கள். நந்தன் வேகமாக அந்த காரை தொடர்ந்தான்.
"எங்க வீட்டு சைடு தான் போறாங்க சார்"
ஒரு வீட்டின் முன் நின்ற காரிலிருந்து அந்த பெண் தள்ளிவிடப்பட்டாள். "அம்மா..." சிறுவன் அலறினான்.
நந்தனும் பிரேக் போட்டுவிட்டு காரிலிருந்து இறங்கி ஓடினான். சிறுவனும் பின் தொடர்ந்து சென்று அம்மாவின் அருகில் அமர்ந்து அம்மா, அம்மா என்று அழுதான். அந்த பெண் நெற்றியில் லேசாக அடிபட்டு ரத்தம் எட்டிப்பார்த்தது. அவள் அரை மயக்கத்தில் இருப்பதாக தோன்றியது. மழையில் வேறு நனைந்து இருப்பாள் போல. நந்தன் மெல்ல அவளை தூக்கி நிறுத்த முயற்சி செய்தான். அவள் துவண்டு விழப்போனாள். நந்தன் அவளை விழவிடாமல் மீண்டும் தூக்கி நிறுத்தி தன் மீது சாய்த்து கொண்டான். அவளிடம் இருந்து மதுவின் வாடை தென்பட்டது. சிறுவனை பார்த்து கேட்டான். "தம்பி உங்க வீடு பக்கத்துல தானா? நடந்தே போய்டலாமா? இல்லை காரில் போகலாமா?"
"நடந்தே போய்டலாம் அங்கிள், இந்த வீட்டுக்கு பின்னாடி தான் எங்க வீடு, இந்த சந்து வழியாவே போய்டலாம்"
நந்தன் அவளை தாங்கியவாறு சிறுவனை பின் தொடர்ந்து சென்றான். யாரோ ஒரு பெண்மணி "கருமம் கருமம் இவளோ நாளா ஒருத்தன் வந்து போக இருந்தான், இப்போ இன்னொருத்தனா? கொஞ்சமாவது ஒரு பையனை வச்சிருக்கோம், அடக்க ஒடுக்காம இருப்போன்னு இருக்காளா? கலிகாலம்".
நந்தனுக்கு என்னவோ செய்தது. கால்கள் வேகம் குறைந்தன. சிறுவன் ஒரு வீட்டின் முன் நின்று "இது தான் அங்கிள், வாங்க"
"வாங்க அங்கிள், ஏன் அங்கேயே நிக்கிறீங்க?"
நந்தன் சுதாரித்து கொண்டு அவளை தாங்கியவாறு அழைத்து சென்றான்.
சிறுவன் பூட்டை திறந்து உள்ளே அழைத்து சென்று ஒரு அறையில் உள்ள படுக்கையை காண்பித்து "அம்மாவை இங்க படுக்க வச்சிடுங்க அங்கிள்" என்றான். ஒரு kitchen ம், ஒரு படுக்கை அறை மட்டுமே கொண்ட சிறிய வீடு அது.
நந்தனும் அவளை படுக்க வைத்தான். நெற்றியில் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் நன்றாகவே வரத்தோடங்கியது.
"இரு பா, என் காருல முதலுதவி பெட்டி இருக்கு, எடுத்துட்டு வந்துடுறேன்"
"சரிங்க அங்கிள்"
நந்தன் சந்து வழியாக அடுத்த தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்து முதலுதவி பெட்டியை எடுத்து கொண்டு திரும்பி வந்தான். சற்று முன் சிறுவனின் அம்மாவை கீழே தள்ளிய கார் சிறுவனின் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருப்பதை பார்த்தான். வீட்டின் வாசலில் சென்று நின்றான் நந்தன். உள்ளே கிட்சேனில் இருந்து குரல் கேட்டது.
"என்னடா பொடிப்பயலே, உங்க அம்மாவை உள்ள பூட்டி வச்சுக்கிட்டியா? இப்போ நீயா கதவை தொறக்க போறியா இல்ல நான் கதவை உடைச்சுடட்டுமா?"
"முடியாது அங்கிள், நானும் கதவை திறக்க மாட்டேன், உங்களையும் திறக்க விட மாட்டேன்"
"என்னடா புதுசா ஒருத்தன பிடிச்சாச்சுங்குற திமிரா?" என்றபடியே சிறுவனின் உச்சந்தலை முடியை பிடித்து குலுக்கினான். நந்தன் உள்ளே சென்றான். "சார் யார் நீங்க? யாரா இருந்தாலும் ஒரு சின்ன பையன்கிட்ட இப்படி தான் நடந்துக்கரதா? விடுங்க சார்" என்று நந்தன் அந்த குடிகாரனின் கையை தட்டிவிட்டு விட்டு சிறுவனை இழுத்து தன் கைக்குள் அணைத்து கொண்டான்.
"ஏன்டா புதுசா வந்த உனக்கு அவ்ளோ திமிரா?" என்று நந்தனை அடிக்க கை ஓங்கினான் அந்த குடிமகன். நந்தன் அவன் கையை தடுத்து நிறுத்தி லேசாக தள்ளிவிட்டான்.
குடிகாரன் தடுமாறி கீழே விழுந்து, சமாளித்து ஒரு வழியாக எழுந்து நின்று நந்தனை முறைத்து விட்டு, சிறுவனை பார்த்து சொன்னான் "ஏன்டா பொடிப்பயலே, என்ன பத்தி தெரியுமில்ல உனக்கு, எவன் வந்தாலும் போனாலும் உன் அம்மாவை நான் சும்மா விட மாட்டேன்" என்று மிரட்டி விட்டு சென்றான்.
அவன் வெளியே சென்றதும் சிறுவன் கதவை இறுக்கி மூடி பூட்டு போட்டு கொண்டான்.
"உன் பேர் என்னனு சொல்லவே இல்ல பாரு" என்றான் நந்தன் சிறுவனை பார்த்து.
"தருண் அங்கிள்"
"Nice name, சரி வா, உன் அம்மாவுக்கு முதலுதவி செய்ய வேண்டும்"
அந்த பெண்ணின் நெற்றியில் கலைந்து கிடந்த முடியை ஒதுக்கி விட்டான் நந்தன். வியர்வையும், மழை துளியுமாய் அவள் முகத்தில் இருந்த நீரை ஒரு துணியை கொண்டு ஒத்தி எடுத்து துடைத்தான். அவள் முகத்தை இப்போது நன்றாக பார்க்க முடிந்தது. கலைத்து போயிருந்த அவளது முகம் அவனுள் ஏதோ இனம்புரியாத கலக்கத்தை ஏற்படுத்தியது. கீழே குனிந்து என்னவோ யோசித்தான். "என்னாச்சு அங்கிள்".
நந்தன் மீண்டும் நினைவு வந்தவனாய் நிமிர்ந்து பார்த்தான். "ஒன்னும் இல்ல"
அவள் நெற்றி காயத்திற்கு மருந்து போட்டுவிட்டான். "சரி தருண், நான் கிளம்புறேன், அம்மாவுக்கு பயப்பட ஒண்ணுமில்ல, பாத்துக்கோ, நான் வரேன்".
"அங்கிள் ப்ளீஸ், இன்னைக்கு ராத்திரி மட்டும் இங்கயே இருங்களேன், நீங்க இப்படி வெளில போனதும் அந்த மொரட்டு அங்கிள் வந்துடுவான்"
"இல்ல தருண், அது..." நந்தன் தயங்கினான்.
"ப்ளீஸ் அங்கிள், ஏற்கனவே அம்மாவை கூட்டிட்டு போய் அடிச்சிருக்கான், திரும்ப வந்தா? பயமா இருக்கு அங்கிள், இங்கயே இன்னைக்கு மட்டும் இருங்க அங்கிள்"
நந்தன் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தயங்கினான்.
"உங்க அம்மா தேடுவாங்களா அங்கிள், போன் பண்ணி குடுக்குறீங்களா? நான் அவங்ககிட்ட permission கேக்குறேன்"
நந்தன் நமட்டு சிரிப்பு ஒன்று சிரித்தான். அவன் மனதில் "என் அம்மா என்னை இன்று தேட மாட்டார்கள், இந்த நாளில் ஒரு பெண்ணோடு தான் இருப்பான் என்று விரக்தியோட உட்கார்ந்திருப்பார்கள்" என்று நினைத்து கொண்டான்.
"சொல்லுங்க அங்கிள், ப்ளீஸ் அங்கிள்"
"சரி இருக்கேன்"
"Thanks அங்கிள்"
"சரி என்ன யாருன்னே தெரியாது, என்ன தங்க சொல்றியே, நானும் உன்னையோ இல்ல உன் அம்மாவையோ hurt பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்? " என்றான் நந்தன்.
"உங்கள பாத்தா எனக்கு பயமாவே இல்ல அங்கிள் "
"ஏன் அப்படி "
"தெரியல அங்கிள்"
"சரி நீ சாப்டியா?"
"இல்ல அங்கிள் "
"சரி நான் ஆர்டர் பண்றேன், சாப்டுட்டு தூங்கலாம், சரியா?"
நந்தன் ஆன்லைனில் டிபன் ஸ்னாக்ஸ் என்று ஆர்டர் செய்து சிறுவனை சாப்பிட வைத்தான்.
"அங்கிள் அம்மாவை எழுப்பட்டுமா சாப்பிட?"
"வேண்டாம் தருண், she is not feeling well, தூங்கட்டும் "
"சரிங்க uncle"
"சரி நீயும் அம்மாவும் இங்க படுத்துக்கங்க, நான் கிட்சேன்ல படுத்துகிறேன்"
"இல்ல அங்கிள், அங்க மழையினால ஓடு எல்லாம் ஒழுகும், நீங்களும் இங்கயே படுத்துக்கோங்க"
"இல்ல தருண், அது வந்து...."
"அதெல்லாம் இல்ல, நான் அம்மாவோட கட்டில்ல படுத்துகிறேன், நீங்க கட்டில் பக்கத்துல கீழ படுத்துக்கோங்க"
நந்தன் ஒரு புன்னகையுடன் சரி என்றான். தருண் அன்புடன் அளித்த தலையணை, பாய், போர்வை என்று கச்சிதமாக தான் இருந்தது நந்தனின் படுக்கை இன்று. பெரிய பஞ்சு மெத்தையும், பட்டு விரிப்பாண்களும் அவன் வீட்டில் காத்துக்கிடந்தன. ஒவ்வொரு வருடமும் இந்த நவம்பர் 5 வந்தால் அவனுக்கு டென்ஷன், மன அழுத்தம், கலக்கம் அனைத்தும் வந்து சேரும். எப்படி டா தள்ளப்போகிறோம் என்று ஒரு பெண்ணை தேர்வு செய்து அவளுடன் அந்த நாளை கழிப்பான். இந்த வருடம் நவம்பர் 5 அவன் எதுவுமே திட்டமிடாமல் அமைந்தகரையில் கூவம் ஆற்றின் ஓரமாக இருந்த ஒரு ஓட்டு வீட்டில் இலகுவாகவே சென்றது. அவனுக்கே வியப்பாக தான் இருந்தது.
Comments
Post a Comment