மாடியில் ஒரு வெண்ணிலா
அது அழகிய காலை பொழுது என்பது அவளை தொட்டு எழுப்பிய சுகமான அந்த தென்றலும் அந்த ஜன்னலை தாண்டி வந்து அவள் முகத்தில் லேசாக சூடேற்றிய ஒளி வெளிச்சமும் உணர்த்தியது. பல நாட்களுக்கு பிறகு நன்றாக உறங்கி எழுந்த உணர்வு. லேசாக சோம்பல் முறித்து எழுந்த அவள் அப்போது தான் தான் எந்த ஆடை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். ஒரு சின்ன பதட்டம் அவளை பற்றியது. தான் எங்கே இருக்கிறோம்? எப்படி இங்கே வந்தோம்? எப்படி இப்படி ஒரு வேட்டி துணியை மட்டும் உடுத்தி இருக்கிறோம்? ஒரு நிமிடம் அவள் தலை கிறுகிறுவென்று சுற்றியது. என்ன நடந்தது என்பதை யோசிக்க அவளால் முடியவில்லை, முடியவில்லையா அல்லது பல நாட்களுக்கு பிறகு கிடைத்த அந்த அமைதியை களைத்து கொண்டு யோசிக்க அவள் முயலவில்லையா? கொஞ்சம் பசியும் தெரிய ஆரம்பித்தது. எழுந்து தரையில் கால்களை பதித்தவளுக்கு முந்திய இரவு நடந்த சில விஷயங்கள் நினைவலைகளில் கண் முன்னே வந்து சென்றது. ஆனால் அவற்றை கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு மாடியில் குடிசை போல் இருந்த அந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தாள். தான் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்கிறோம் என்பதை உறுதி படுத்திக்கொண்ட போது கொஞ்சம் தைரியம் வந்தது. இப்போதைக்கு இந்த உடை பரவாயில்லை என்று நினைத்து கொண்டு குளியலறை நோக்கி சென்றாள். அது பார்க்க சின்ன வீடு போல் இருந்தாலும் நவீன கால வசதியுடன் இருந்தது. Attached western toilet, bathroom என்று வீட்டை கட்டியவனுக்கு மனதிற்குள் ஒரு சின்ன பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொண்டு குளித்து விட்டு கட்டியிருந்த வேட்டியையே மீண்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
படுக்கையின் அருகே இருந்த சின்ன மேஜையின் மீது இருந்த துண்டு சீட்டை எடுத்து படித்து பார்த்தாள். "வேலைக்கு கிளம்பி விட்டேன், பசித்தால் சாப்பிட bread, jam இருக்கிறது, சமைத்து வேறு ஏதாவது சாப்பிட விரும்பினால் சாப்பிடவும், நான் மாலை 4 மணிக்கு மேல் வருவேன், அது வரை என் வீட்டில் நீங்கள் இருந்தால் சந்திக்கிறேன்" - சக்தி கணேஷ். ஒரு பெரு மூச்சுடன் சீட்டை மடித்து வைத்து விட்டு, கட்டிலை ஒட்டி இருந்த ஜன்னலை லேசாக திறந்து பார்த்தாள். தன்னுடைய ஆடைகள் மொட்டை மாடியில் வெளியே காய்வதை பார்த்தாள். முந்திய மாலை நடந்த பெண் அழைப்பு விழாவிற்காக தன்னுடைய தந்தை 5 லட்ச ரூபாய் செலவில் designer வைத்து பட்டும் வைர இழைகளும் இழைத்து வடிவமைத்த ஆடை. இந்நேரம் அவளுக்கு திருமணம் முடிந்து இருக்க வேண்டியது. ஒரு பக்கம் தந்தை தன்னை காணவில்லை என்று என்ன பாடுபடுவாரோ என்று மனம் வருந்திய போதும், மறுபுறம் ஒரு வழியாக அந்த திருமணத்தில் இருந்து தப்பி விட்டோம் என்ற நம்ப முடியாத வியப்பும், நிம்மதியும் மனதை நிரப்பியது. வெளியே இருந்து தெளிவாக பார்க்க முடியாத படி உயர்ந்த தென்னை மரங்களும், கொன்றை மரங்களும் அந்த மொட்டை மாடியை சூழ்ந்து கொண்டு தான் இருந்தன. அதனால் மெதுவாக நடந்து சென்று தன்னுடைய ஆடைகள் காய்ந்து விட்டனவா என்று தொட்டு பார்த்தாள், எப்படி காயும்? இரவு முழவதும் அடித்த மழை நின்று இருந்தாலும் காற்றில் இன்னும் ஈரப்பதம் இருக்க தானே செய்கிறது. மதியம் முழுவதும் வெயில் அடித்தால் காய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நல்ல எடையுள்ள ஆடைகளாயிற்றே.
மீண்டும் உள்ளே திரும்பி வந்தவள், இடது கை பக்கம் இருந்த அடுப்படியை பார்த்தாள். ஏதோ bread-jam இருக்கிறது என்று சொல்லி இருந்தானே, நன்றாக பசிக்க வேறு செய்கிறது. சாப்பிடலாம் என்று தேடி பார்த்தாள். அடுப்புக்கு பக்கத்திலேயே இருந்தது. அங்கே ஒரு சீட்டும் இருந்தது. "Coffee, tea வேண்டும் என்றால் வலது கை மேலே உள்ள அலமாரியில் அனைத்தும் இருக்கிறது, பால் fridge-ல் உள்ளது - சக்தி கணேஷ்". எவ்வளவு தேவை உணர்ந்து எழுதி வைத்துள்ளான் என்று அவன் மீது ஒரு மதிப்பு வந்தது. bread-jam சாப்பிட்டு விட்டு திவ்யமாக காபி போடலாம் என்று துணிந்தவளுக்கு எப்படி போட வேண்டும், முதலில் காபி தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவேண்டுமா? அல்லது பாலை சுட வைத்து காபி தூளை போட வேண்டுமா? எவ்வளவு தூள் போட வேண்டும்? ஒன்றும் தெரியாதே. கிருஷ்ணன் அண்ணன் கையாலேயே காபி குடித்து பழக்கம். ஒரு நாளும் அடுப்படி பக்கம் கூட சென்றது இல்லை. தன்னை நொந்து கொள்ள நினைத்தவளுக்கு இதில் ஏதாவது சமைத்து சாப்பிட தோன்றினால் சாப்பிடவும் என்று அவன் எழுதி இருந்தது நினைத்து குபுக்கென்று சிரித்து விட்டாள். சரி ஒரு வேளை காபி குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று மனதை தேற்றி கொண்டாள். அந்த அரக்கன் பிடியில் மாட்டி தவித்த இந்த சில நாட்களில் நடந்த நல்ல விஷயம் பணத்திலும் வசதியிலும் பிறந்து வளர்ந்தவள் பல விஷயங்களில் வசதியின்மையை சந்தோஷமாக ஏற்று கொண்டது தான். அந்த அரக்கனுக்கு வசதியின்மை எவ்வளவோ தேவலாம் என்று நினைக்க தொடங்கினாள்.
கட்டிலின் முன் இருந்த அலமாரியை திறந்து ஆராய ஆரம்பித்தாள். வேறு ஒரு நல்ல cotton வேட்டியும், நல்ல சட்டையும் கிடைத்தது.எதுவும் நினைக்க மாட்டான் தானே என்று ஒரு நிமிடம் தனக்குள்ளயே கேட்டு கொண்டவள், அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டான், இரவு அவன் தானே இந்த வேட்டியையே கட்டி விட்டிருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு உள்ளூர ஒரு பயமும் நடுக்கமும் தோன்றியது. ஆம் இரவு அவன் தான் கட்டி இருக்க வேண்டும், எப்படி தனக்கு உடை மாற்றி விட்டிருப்பான்? ஏதாவது பார்த்திருப்பானா? எல்லாமே பார்த்திருப்பானே, கையும் கால்களும் அவளுக்கு நடுங்க ஆரம்பித்தது, பார்த்ததோடு விட்டிருப்பானா? அல்லது...கடவுளே, வியர்க்க விறுவிறுக்க தளர்ந்து அப்படியே கட்டிலின் மேல் இறுக உட்கார்ந்தாள். மேலும் யோசிக்கவோ, நினைவுகளை கிளறி பார்த்து என்ன தான் நடந்தது என்று ஆராயவோ அவளுக்கு பயமாக இருந்தது. எடுத்த வேட்டியையும், சட்டையையும் இறுக பற்றிக்கொண்டு அப்படியே கட்டிலில் படுத்து கொண்டாள்.
Excellent writing ����
ReplyDelete